கணம்தோறும் பிறக்கிறேன் 

Thursday, April 20, 2023

ஓடிஷா யாத்திரை – 2

ஓடிஷா யாத்திரை – 2

சாட்சி கோபால் கோவில்:



பிஜுபட்னாயக் விமான நிலையத்திலிருந்து ஏ.சி. பஸ்ஸில் ஏறி பூரி நோக்கி புறப்பட்டோம். வழியில் சாட்சி கோபால் கோவிலுக்குச் சென்றோம்.

புவனேஷ்வர், பூரி நெடுஞ்சாலையில் புவனேஷ்வரிலிருந்து கிட்டத்தட்ட 20 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது சாட்சி கோபால் கோவில். வடமொழியில் சாஷி கோபால் என்கிறார்கள். பக்தன் ஒருவனுக்காக சாட்சி சொல்ல அந்த பரந்தாமனே வந்ததால் இந்தப்பெயர்.

பூரியிலிருந்து காசிக்கு இரண்டு அந்தணர்கள் செல்கிறார்கள். அதில் ஒருவன் இளைஞன், மற்றவர் முதியவர். யாத்திரையில் அந்த முதியவரை இளைஞன் நன்றாக கவனித்துக் கொள்கிறான். அவனுடைய பணிவிடையில் மகிழ்ந்த முதியவர், ஊர் திரும்பியதும் தன் மகளை அவனுக்குத் திருமணம் செய்து தருவதாக பத்ரி நாரயணரை சாட்சியாக வைத்து உறுதி அளிக்கிறார். ஆனால் ஊர் திரும்பியதும், அந்த இளைஞனுக்கு தனக்கு இணையான அந்தஸ்து இல்லை என்பதால் பெண் கொடுக்க மருத்து விடுகிறார். அவன் அவருடைய வாக்குறுதியை நினைவூட்ட, “அந்த கிருஷ்ணனே வந்து சாட்சி சொல்லட்டும், நான் என் பெண்ணை உனக்கு திருமணம் செய்து வைக்கிறேன் எங்கிறார். உடனே அவன் மீண்டும் காசிக்குச் சென்று, எந்த கிருஷ்ணரை சாட்சி வைத்து அவர் பெண்ணைத் தருவதாக கூரினாரோ அந்த கிருஷ்ணரிடம் சென்று முறையிட்டு, தன்னோடு வரும்படி அழைக்கிறான். கிருஷ்ணரும், தான் அவனோடு வருவதாகவும், அவன் முன்னால் செல்ல, அவர் பின் தொடர்ந்து வருவதகவும் கூறுகிறார். ஆனால் முன்னால் செல்லும் அவன் எந்தக் காரணம் கொண்டும் திரும்பி பார்க்கக் கூடாது என்று ஒரு நிபந்தனை விதிக்கிறார். அதற்கு அவன் ஒப்புக் கொள்ள, இருவரும் நடக்க ஆர்ம்பிக்கின்றனர். தனக்கு பின்னால் ஒலிக்கும் சலங்ககை ஒலியைக் கொண்டு கிருஷ்ணர் தன்னை தொடர்வதை ஊர்ஜிதம் செய்து கொள்கிறான். இந்த ஊரின் மணல்மேட்டை கடக்கும் பொழுது மணலில் கால்கள் புதைவதால் சலங்கை சத்தம் நின்று விடுகிறது. கிருஷ்ணர் விதித்த நிபந்தனையை மறந்த அந்த இளைஞன் திரும்பி பார்க்க கிருஷ்ணர் அங்கேயே சிலையாகி விடுகிறார். அவனுடைய பக்தியை மெச்சிய அவ்வூர் மக்கள், அங்கே கிருஷ்ணருக்கு கோவில் எடுத்தார்கள் என்பது தல வரலாறு.



சிறிய கோவில்தான். கோவிலுக்கு வெளியே கருட ஸ்தம்பம். ஓடிசா பாணி கோபுரம். நுழை வாயிலில் இரண்டு சிங்கங்கள். உள்ளே சென்றால் நேராக கருவறை வரை செல்ல முடிகிறது. வட இந்திய கோவில்கள் போல் வெள்ளை நிற சலவைக் கல் இல்லாமல் மிக அழகான கருமை நிற குழலூதும் கண்ணன் நம் உள்ளத்தை கொள்ளை கொள்கிறான். பக்கவாட்டில் ராதை. தரிசனம் சிது விட்டு வெளியே வருகிறோம். பிரகாரத்தை வலம் வரும்பொழுது பின் புறம் கோஷ்ட்டத்தில் நரசிம்மரையும், வலது புறம் பிரம்மாவும் இருக்கிறார்கள். இடது புறம் திண்ணையில் தென் நாட்டு பாணியில் அழகான, பெரிய விநாயகர். இவரும் சலவைக் கல்லால் ஆனவர் இல்லை. சுவற்றில் நடராஜரைப் போல் சூலம், நெருப்பு எல்லாம் ஏந்தி நடனமாடும் விநாயகரின் அழகிய ஓவியம்.




கோவிலின் பக்கவாட்டுத் தோற்றம்
ஸ்தல விருட்சம்-பலா மரம்


சாட்சி கோபால்கோவில் பூரி ஜெகன்னாதர் கோவில் கட்டப்படுவதற்கு முன்னாலேயே கட்டப்பட்டதாம். மூல விக்கிரகம் தெற்கேயிருந்து கொண்டுவரப்பட்டது என்றும் கூறுகிறார்கள். டூரிஸ்டுகள் அதிகம் வரும் எல்லா கோவில்களைப் போலவே இங்கும் காசு பறிப்பதில் குறியாக இருக்கிறார்கள். அங்கு கட்டணசேவை இல்லாத போதிலும், நாங்கள் வெளி மாநிலத்திலிருந்து வந்திருப்பவர்கள் என்பதை புரிந்து கொண்டு, பத்து ரூபாய் நுழைவுக் கட்டணம் வாங்க வேண்டும் என்றார் ஒருவர். எங்கள் கைட் அவரோடு சண்டை போட்டு, எங்களை உள்ளே அழைத்துச் சென்றார். உள்ளே, “தட்சணை போடுங்கள் தட்சணை போடுங்கள்” என்று கேட்டு ஒரு பெரிய தாம்பாளத்தில் தட்சணை வசூல் செய்கிறார்கள். அதில் பத்து ரூபாய், இருபது ரூபாய் இவைகளை உட்னே அப்புறப்படுத்தி, மினிமம் ஐம்பது ரூபாய் என்பது போல ஒரு தோற்றத்தை உருவாக்குகின்றனர். இட்ஸ் ஆல் இன் த கேம்!

வழியில் மதிய உணவை முடித்துக் கொண்டு (சூப், பராத்தா, இரண்டு சைட் டிஷ், புலவ், சாதம், சாம்பார், ரசம், தயிர், ஊறுகாய், பப்படம், காய்கறி சாலட், குலாப் ஜாமூன், ஐஸ்க்ரீம்) அங்கிருந்து பூரியை சென்றடைந்தோம். நாங்கள் தங்குவதற்காக ஏற்பாடு செய்யபட்டிருந்த சக்தி ஹோட்டலில் எங்களை ஆம் பன்னா(மாங்காய்,புதினா ஜூஸ்) கொடுத்து வரவேற்றார்கள். எங்கள் அறைக்குச் சென்று கொஞ்சம் ஓய்வெடுத்துக் கொண்டு மாலை பூரி ஜகன்னாதரை தரிசிக்க புறப்பட்டோம்.

-தொடரும்   







Monday, April 17, 2023

ஒடிஷா யாத்திரை

ஒடிஷா யாத்திரை

ஸ்மார்ட் வாட்ச்சை காணோம்..:



இந்தியாவிற்குள் பார்த்தே ஆக வேண்டும் என்று நான் விரும்பும் சில இடங்களுள் ஓடிசாவில் உள்ள கோனார்க் சன் டெம்பிளும் ஒன்று. என் உறவிலும், நட்பிலும் எல்லோரையும் கேட்டுப் பார்த்தேன், ஒவ்வொருவருக்கும் ஒரு பிரச்சனை. அந்த சமயத்தில்தான் பெங்களூர் மத்யமர் மீட் ஒன்றில் சந்தித்த சரோஜா அருணாசலம் அவர்கள் தான் டூர் ஆபரேட்டர் மூலம் தனியாக சுற்றுலாக்கள் செல்வதாகவும், அவை சிறப்பாக நடத்தப்படும் என்றும், அங்கு வருபவர்கள் நண்பர்களாகி விடுவார்கள் என்றும் கூறியது சற்று தைரியம் தந்தது. அந்த சமயத்தில் முகநூலில் வந்த யாத்ரிகா டூர்(ஆபரேட்டர்கள்) விளம்பரம் என்னைக் கவர அவர்களொடு தொடர்பு கொண்டு ஒடிஷா சுற்றுலாவிர்கு புக் பண்ணிக் கொண்டேன்.

சென்னை விமான நிலையத்தில்

நான் அவர்களை தொடர்பு கொண்டபோது ஒரே ஒரு சீட்தான் இருக்கிறது என்றார்கள். 50% டிக்கெட் கட்டணம் கட்டியதுமே டிக்கெட் அனுப்பி விட்டர்கள். ஏப்ரல்7,8.9 ஆகிய மூன்று நாட்கள் பயணம். நான் 6ஆம் தேதி காலையிலேயே கிளம்பி சென்னையை அடைந்தேன். 7ஆம் தேதி காலை 9:25க்கு விமானம். 7.25க்குள் விமான நிலையத்தை அடைந்து விட்டேன். அங்கு சிறு குழுவாக நின்று கொண்டிருந்த சிலரைப் பார்த்தால் ஒடிஷா யாத்ரீகர்களாக இருப்பார்களோ என்று தோன்றியது. விசாரித்ததில் என் யூகம் சரிதான் என்று புரிந்தது. எங்களுக்கான காலை உணவை பாக் பண்ணி கொடுத்து விட்டார்கள். அதைப் பெற்றுக் கொண்டு லக்கேஜை செக் இன் பண்ணி செக்யூரிடி செக் அப்பிற்காக சென்றோம். அங்கே ஸ்மார்ட் வாட்சையும் அவிழ்த்து ஸ்கேன் பண்ண வேண்டிய சாமான்களோடு போட வேண்டும் என்றார்கள். நான் அப்படியே செய்து எக்ஸ்-ரே மிஷினுக்குள் அனுப்பி விட்டு அந்தப் பக்கத்தில் ஸ்கேன் செய்து வந்த டிரேயில் பார்த்தால் என் ஹேண்ட் பேக், செல்ஃஃபோன் இரண்டும் இருந்தன. ஸ்மார்ட் வாட்ச்..? காணோம்… பானு.. பிரச்சனை இல்லாமல் உன்னால் பயணிக்க முடியாதா?

ங்கே போயிருக்கும்? கொஞ்சம் பதட்டமாக இருந்தது. மிக சமீபத்தில் என் மகன் வாங்கித் தந்திருந்த வாட்ச். அங்கிருந்த பணியாளரிடம் தெரிவித்த பொழுது, “நீங்கள் வைத்த டிரேயில்தான் இருக்கும், சரியாக பாருங்கள்” என்றார். அந்த டிரேயைத் தேட முடியவில்லை, ஏனென்றால் அதற்கு மேல் பல டிரேகள் வந்து விட்டன.

கம்ப்யூட்டர் திரையில் ஸ்கேன் செய்யப்படும் பொருள்களை பார்த்துக் கொண்டிருந்தவரிடம் கூரியதும், அவர் செக் செய்து விட்டு, “வாட்ச் உங்கள் கைப்பையில்தான் இருக்கிறது, சரியாகப் பாருங்கள்” என்றார். “ஐயா, இது வேறு கடிகாரம், நான் தேடுவது ஸ்மார்ட் வாட்ச்” என்றதும், என்னை கொஞ்ச நேரம் காத்திருக்கச் சொன்னார். பிறகு ஒருவர் என்னை அழைத்து, “மேடம், உங்கள் வாட்ச் அந்த் டிரேயில்தான் இருந்திருக்கிறது, நீங்கள் சரியாக பார்க்கவில்லை, வந்து கொண்டிருக்கிறது” என்று சொல்லி, எக்ஸ்-ரே மிஷினிலிருந்து வெளியே வந்த ஒரு டிரேயில் இருந்த என் ஸ்மார்ட் வாட்சை எடுத்துக் கொடுத்து விட்டு, “சிலர் பதட்டத்தில் லாப் டாப்பைக் கூட விட்டு விட்டு சென்று விடுவார்கள்” என்றார்.

பிஜுபட்னாயக் விமான நிலையத்தில் ஆஞ்சனேயர்(மணல் சிற்பம்)




உள்ளே சென்று அமர்ந்து ட்ரவலர்ஸ் கொடுத்திருந்த இட்லி, ஃப்லாக்ஸ் சீட்ஸ் சத்துரண்டை இவற்றை மட்டும் சாப்பிட்டேன். கம்பு புட்டை விமானத்தில் சாப்பிடலாம் என்று நினைத்தேன். ஆனால் விமானத்தில் தூங்கி விட்டதால் சாப்பிட முடியவில்லை. உணவிற்குப் பிறகு காபி சாப்பிடலாம் என்று தோன்றியது. அங்கிருந்த காஃபிடேயில் ஒரு காபி 280 ரூபாய் என்றாள் அங்கிருந்த பெண். சீ! சீ! இந்தக் காபி கசக்கும் என்று திரும்பி விட்டோம். விமானத்தில் பேப்பர் படித்து, ஒரு குட்டித் தூக்கம் போட்டேன். குறித்த நேரத்திற்கு சற்று முன்பாகவே பிஜுபட்னாயக் விமான நிலயத்தை அடைந்தது எங்கள் விமானம். பெட்டி வருவதற்குள் அங்கு மணலில் அமைக்கப்பட்டிருந்த ஆஞ்சநேயர் முன் ஒரு புகைப்படம் எடுத்துக் கொண்டேன். வெளியே எங்களை வரவேற்ற அந்த ஊர் கைட் எங்கள் குழுவில் இருந்த அனைவருக்கும் ஒரு அழகான முத்துமாலை கொடுத்து, அடையாளத்திற்காக அதை வெளியே செல்லும் பொழுது அணிந்து கொள்ள வேண்டும் என்றார். நான் மட்டுமே அதை கடை பிடித்தேன். மற்றவர்கள் ஒரு நாள் மட்டுமே அணிந்து கொண்டார்கள்.

ட்ராவலர்ஸ் கொடுத்த முத்து மாலை

- தொடரும்