கணம்தோறும் பிறக்கிறேன் 

Saturday, January 1, 2022

திருவெம்பாவை - 17

திருவெம்பாவை - 17


செங்கண் அவன்பால் திசைமுகன்பால் தேவர்கள்பால்
எங்கும் இலாதோர் இன்பம் நம்பாலதாக்
கொங்கு உண் கருங்குழலி நந்தம்மை கோதாட்டி
இங்கு நம் இல்லங்கள் தோறும் எழுந்தருளிச்
செங்கமலப் பொற்பாதம் தந்தருளும் சேவகனை
அங்கண் அரசை அடியோங்கட்கு ஆரமுதை
நங்கள் பெருமானைப் பாடி நலம் திகழ்ந்
பங்கயப் பூம்புனல் பாய்ந்தாடேலோர் எம்பாவாய்.

அழகான கண்களை உடைய திருமால் மீதும்,  திசைக்கு ஒரு முகம் வைத்துக் கொண்டிருக்கும் பிரம்மா மீதும், தேவர்கள் மீதும் கொண்டிருக்கும் அன்பை விட அதிகமாக நம் மீது அன்பு வைத்திருப்பவரும், நம் குற்றங்களை களைந்து நம்மை உயர்த்தும் பொருட்டு நம் மனமாகிய வீட்டில் எழுந்தருளி சிவந்த தாமரை மலர்கள் போன்ற தன் பாதங்களை காட்டி நமக்கு சேவை செய்பவரும், அழகான கண்களை உடைய அரசனும், அடியவர்களுக்கு அமுதம் போன்றவரும் நம்முடைய பெருமானுமாகிய சிவபெருமானை பணிந்து நலம் பெறும் பொருட்டு தாமரை மலர்கள் பூத்திருக்கும் அழகிய இந்த சுனையில் நீராடலாம் வாருங்கள்.

Friday, December 31, 2021

திருவெம்பாவை - 16

திருவெம்பாவை - 16

முன்னிக்கடலை சுருக்கி எழுந்துடையாள்
என்னத் திகழ்ந்து எம்மை ஆளுடையாள்
மின்னிப் பொலிந்து எம்பிராட்டி திருவடிமேல்
பொன்னம் சிலம்பின் சிலம்பித் திருப்புருவம்
என்னச் சிலை குலவி நந்தம்மை
ஆளுடையாள்
தன்னில் பிரிவிலா எம்கோமான் அன்பர்க்கு
முன்னியவள் நமக்கு முன்சுரக்கும் இன்னருளே
என்னப் பொழியாய் மழையேலோர் எம்பாவாய்

முன்னொரு பாடலில் பாவைப் பெண்கள் நீராடும் பொய்கை அவர்களுக்கு சிவபெருமானையும், பிராட்டியையும் நினைவு படுத்தியது போல இந்தப் பாடலில் மழை வருவதற்கான சூழல் அவர்களுக்கு பிராட்டியை நினைவு படுத்துகிறது.

கருநீலக்கடலை சுருங்கியது போல திரண்டிருக்கும் கார் மேகங்கள் பிராட்டியையும், மழை வரும் முன் பளிச்சிடும் மின்னல் அவளுடைய மெல்லிய இடையையும், இடியோசை அம்பிகை காலில் அணிந்திருக்கும் பொற்சிலம்பு எழுப்பும் இசையையும்,  வானில் தோன்றும் வானவில் வளைந்திருக்கும் அவளது புருவத்தையும், நினைவூட்டுவதாக கூறும் அப்பெண்கள் மழையிடம் ஒரு வேண்டுகோள் வைக்கிறார்கள். பெண்கள் பாவை நோன்பு நோர்ப்பது நல்ல கணவனை அடைந்து தங்கள் வாழ்க்கை செழிக்க வேண்டும் என்பதற்காகவும், நாட்டில் நல்ல மழை பொழிந்து சமுதாயம் செழிப்பதற்காகவும்தான். எனவே அந்த மழை எப்படி பொழிய வேண்டும் என்றால் தன் கணவனை பிரியாத பார்வதி பக்தர்களுக்கு அருள வேண்டும் என்னும் பொழுது அவருக்கு முன்னால் ஓடி வந்து அருளுவது போல எங்களுக்கு தேவையான நேரத்தில் காத்து நிற்கத் தேவையில்லாமல் பொழிய வேண்டும்.

Thursday, December 30, 2021

திருவெம்பாவை - 15

திருவெம்பாவை - 15


ஓரொரு கால் எம்பெருமான் என்றென்றே
நம்பெருமான் சீரொருகால் வாய் ஓவாள்
சித்தம் களிகூர நீரொருகால் ஓவா
நெடுந்தாரை கண்பனிப்ப பாரொருகால் வந்து
அணையாள் விண்ணோரைத் தான் பணியாள்
பேரரையற்கு இங்ஙனே பித்தொருவர் ஆமாறும்
ஆரொருவர் இவ்வண்ணம் ஆட்கொள்ளும் வித்தகர் தாள்
வார் உருவப் பூண்முலையீர் வாயார நாம்பாடி
ஏர் உருவப்பூம்புனல் பாய்ந்தாடலோர் எம்பாவாய்.

இந்தப் பாடல் குளத்தில் நீராடும் பெண்கள் தங்கள் தோழி ஒருத்தியின் பக்தியைப் பற்றி பேசுவதாக அமைந்திருக்கிறது. சாதாரணமாகவே எந்த ஒரு துறையிலும் முன்னேற விரும்புகிறவர்கள் அந்த துறையில் சிறப்பாக  விளங்குகிறவர்களின் செயல்பாடுகளை முன்மாதிரியாக கொள்வதுதானே வழக்கம்.

அழகிய ஆபரணங்கள் பூண்டிருக்கும் கொங்கைகளை உடைய பெண்களே, அதோ அங்கே வரும் நம் தோழி சிவபெருமானின் நினைவிலேயே வாழ்பவள். ஒரு முறை சிவனே என்பாள். மீண்டும் மீண்டும் பல முறைகள் எம்பெருமான் எம்பெருமான் என்றே மன மகிழ்ச்சியோடு கண்களில் நீர் வழிய உணர்ச்சி வசப்பட்டு பிச்சியைப் போல பிதற்றுவாள். இவ்வுலகை மறந்து பூமியில் கால் பாவாமல் பேரின்பப் பெருவெளியில் மிதப்பாள். அந்தப் பெண்ணை ஆட்கொண்டு இப்படிப்பட்ட நிலைக்கு ஆளாக்கிய வித்தகனாகிய சிவபெருமானின் திருவடிகளை நாமும் பாடி அழகான இந்தப் பொய்கையில் நீராடலாம் வாருங்கள்.

Tuesday, December 28, 2021

திருவெம்பாவை - 14

திருவெம்பாவை - 14

காதார் குழையாடப் பைம்பூண் கலனாடக்
கோதை குழலாட வண்டின் குழாம் ஆட
சீதப்புனலாடிச் சிற்றம்பலம் பாடி
வேதப் பொருள்பாடி அப்பொருளா மாபாடி
சோதி திறம்பாடி சூழ்கொன்றைத் தார்பாடி
ஆதி திறம்பாடி அந்தமா மாபாடி
பேதித்து நம்மை வளர்ந்தெடுத்த பெய்வளை தன்
பாதத் திறம்பாடி ஆடேலோர் எம்பாவாய்.

மற்றுமொரு அழகான பாடல். பாவை நோன்பு நோர்க்கும் பெண்களைப் பற்றிய வர்ணனை. அந்தப் பெண்கள் பொய்கையில் குடைந்து நீராடும் பொழுது அவர்கள் காதில் அணிந்திருக்கும் குழைகள் ஆடுகின்றன, உடலில் அணிந்திருக்கும் அணிகலன்கள் ஆடுகின்றன, கூந்தல் அசைகிறது, அதில் அவர்கள் சூடியிருக்கும் மலர்கள் அமைகின்றன, அந்த மலர்களை மொய்க்கும் வண்டுகளும் சுற்றிச் சுற்றி ஆடுகின்றன. இப்படி நீராடும் நாங்கள் வேதத்தின் பொருளாக விளங்கும் சிவபெருமானை துதித்து, உருவமற்ற சோதியாக உயர்ந்த அவர் நமக்காக ஒரு உருவத்தை எடுத்துக் கொண்டு கொன்றை மாலை அணிந்து காட்சியளிக்கிறாரே அவரின் திறத்தையும், நன்மை, தீமைகளை பிரித்து காட்டி நம்மை உயரச்செய்யும் உமையாளின் பாதகமலங்களையும் பாடி நீராடுகிறோம்.

திருவெம்பாவை - 13

திருவெம்பாவை - 13



பைங்குவளைக் கார் மலரால் செங்கமலப் பைம்போதால்
அங்கங் குருகினத்தாற் பின்னும் அரவத்தால்
தங்கள் மலங்கழுவு வார்வந்து சார்தலினால்
எங்கள் பிராட்டியும் எங்கோனும் போன்றிசைந்த
பொங்கு மடுவிற் புகப்பாய்ந்து பாய்ந்து
நம் சங்கஞ் சிலம்பச் சிலம்பு
கலர்ந்தார்ப்பக்
கொங்கைகள் பொங்கக் குடையும் புனல் பொங்கப்
பங்கயப் பூம்புனல் பாய்ந்தாடு ஏலோர் எம்பாவாய்.

பாவை நோன்பு மேற்கொள்ளேம் பெண்களுக்கு அவர்கள் நீராடும் குளத்தின் காட்சி சிவ பெருமானையும், பார்வதி தேவியையும் நினைவு படுத்துகிறது. 

அந்தக் குளத்தில் பூத்திருக்கும் கரு நிறம் கொண்ட குவளை மலர்கள் பார்வதி தேவியையும், சிவப்பு நிற தாமரை மலர்கள் சிவபெருமானையும், நீர் அருந்த வந்து வரிசையாக அமர்ந்திருக்கும் வெண்மை நிற குருகுப் பறவைகள் சிவ பெருமான் அணிந்திருக்கும் மாலையையும், குளத்தில் அங்கும் இங்கும் ஓடும் நீர்ப் பாம்புகள் சிவ பெருமான் அணிந்திருக்கும் நாகாபரணங்களையும், அந்த குளத்தில் நீராடி தங்கள் உடல் அழுக்குகளை கழுவிக் கொள்கிறவர்கள், சிவ நாமத்தை ஜபித்து தங்கள் ஆன்மாவை தூய்மை படுத்திக் கொள்ளும் அடியார்களையும் ஒத்திருப்பதாக தோன்றுகிறது. அப்படிப்பட்ட பொய்கையில் நம் கைகளில் அணிந்திருக்கும் சங்கு வளையல்கள் ஒலி எழுப்பவும் அதோடு சேர்ந்து பாதச் சலங்கைகள் ஒலிக்கும் வண்ணம் தாமரைகள் பூத்திருக்கும் குளத்தில் பாய்ந்து அதனால் அந்தப் பொய்கை அசைய, நம் கொள்கைகளும் அசைய நீராடுகிறோம்.

நம்மை அந்த குளக்கரைக்கு அழைத்துச் செல்லும் வண்ணம் மிக அழகான வர்ணனை. பொய்கையை‌ பார்க்கும் பொழுது சில பெருமானின் நினைவு வருகிறது என்பது பக்தியின் சிறப்பு. கோபிகைகளுக்கு பார்க்கும் அத்தனை பேரும் கண்ணனாக தெரிந்தார்கள் என்று பாகவதத்தில் படித்திருக்கிறோம். "மண்ணை இருந்து துழாவி வாமனன் மண் இது என்று சொல்லும், விண்ணைத் தொழுது அவன் மேவும் வைகுண்டம் என்று கை காட்டும்..." என்று ஆழ்வார் பாடவில்லையா? "பார்க்கும் மரங்கள் எல்லாம் நந்தலாலா நின்றன் பச்சை நிறம் தோன்றுதய்யே நந்தலாலா என்பது மஹாகவியின் வாக்கு.

Monday, December 27, 2021

திருவெம்பாவை -12

 திருவெம்பாவை -1




ஆர்த்த பிறவித்துயர் கெட நாம் ஆர்த்தாடும்

தீர்த்தன் நல் தில்லைச் சிற்றம்பலத்தே தீயாடும்
கூத்தன் இவ் வானும் குவலயமும் எல்லோமும்
காத்தும் படைத்தும் கரந்தும் விளையாடி
வார்த்தையும் பேசி வளைசிலம்ப வார் கலைகள்
ஆர்ப்ப அரவம் செய்ய அணிகுழல்மேல் வண்டார்ப்ப
பூத்திகழும் பொய்கை குடைந்துடையான் பொற்பாதம்
எத்தி இருஞ்சுனை நீராடேலோர் எம்பாவாய்

எங்கள் பிறவித் துன்பம் நீங்குவதற்காக நாங்கள் வணங்கும் சிவபெருமான் தலையில் கங்கையை கொண்டவராக கையிலே நெருப்பை ஏந்தி அந்தத் தில்லையிலே நடனமாடுகிறார். அவர் இந்த வான், மண் அதற்கு இடையில் உள்ள பொருள்கள் எல்லாவற்றையும் விளையாடுவது போல மிகவும் அனாயசமாக படைத்து, காத்து, அழிக்கவும் செய்கிறார். அவரை நாங்கள் புகழ்ந்து பேசியபடி எங்கள் கை வளையல்கள் ஒலிக்க இடையில் அணிந்திருக்கும் மேகலை சிணுங்க, தலையில் சூடி இருக்கும் வாசமுள்ள மலர்களை மொய்க்கும் வண்டுகள் ஒலி எழுப்ப இந்தப் பொய்கையில் நீராடி வணங்குகிறோம்.

Sunday, December 26, 2021

திருவெம்பாவை - 11

திருவெம்பாவை - 11


மொய்யார் தடம் பொய்கை புக்கு முகேர் என்னக்
கையால் குடைந்து குடைந்து உன் கழல்பாடி
ஐயா வழியடியோம் வாழ்ந்தோம் காண்
ஆரழல் போல் செய்யா!
வெண்ணீறு ஆடி! செல்வா!
சிறு மருங்குல் மையார் தடங்கண் மடந்தை மணவாளா!
ஐயா! நீ ஆட்கொண்டருளும் விளையாட்டில்
உய்வார்கள் உய்யும் வகையெல்லாம் உய்ந்தொழிந்தோம்
எய்யாமல் காப்பாய் எமையேலோர் எம்பாவாய்.

கொழுந்து விட்டு எரியும் நெருப்பு போல சிவந்த நிறம் கொண்டவரே, திருநீற்றிலேயே குளித்தது போல உடலெங்கும் வெண்ணீறு பூசிக் கொண்டிருப்பவரே, சிறுத்த இடையும், பெரிய கண்களும் கொண்ட பார்வதியின் மணாளனே,  வண்டுகள் மொய்க்கும் பொய்கையில் நீராடி, வழி வழியாக உன்னை வழிபடுவதால் நாங்கள் நலமாக வாழ்கிறோம். பக்தர்களை ஆட்கொண்டு அருளும் உன் திருவிளையியாடலுக்கு ஆட்பட்டதால் பல நன்மைகளை அடைந்தோம். இதிலிருந்து குறையாமல் எங்களை காப்பாயாக.