கணம்தோறும் பிறக்கிறேன் 

Friday, December 31, 2021

திருவெம்பாவை - 16

திருவெம்பாவை - 16

முன்னிக்கடலை சுருக்கி எழுந்துடையாள்
என்னத் திகழ்ந்து எம்மை ஆளுடையாள்
மின்னிப் பொலிந்து எம்பிராட்டி திருவடிமேல்
பொன்னம் சிலம்பின் சிலம்பித் திருப்புருவம்
என்னச் சிலை குலவி நந்தம்மை
ஆளுடையாள்
தன்னில் பிரிவிலா எம்கோமான் அன்பர்க்கு
முன்னியவள் நமக்கு முன்சுரக்கும் இன்னருளே
என்னப் பொழியாய் மழையேலோர் எம்பாவாய்

முன்னொரு பாடலில் பாவைப் பெண்கள் நீராடும் பொய்கை அவர்களுக்கு சிவபெருமானையும், பிராட்டியையும் நினைவு படுத்தியது போல இந்தப் பாடலில் மழை வருவதற்கான சூழல் அவர்களுக்கு பிராட்டியை நினைவு படுத்துகிறது.

கருநீலக்கடலை சுருங்கியது போல திரண்டிருக்கும் கார் மேகங்கள் பிராட்டியையும், மழை வரும் முன் பளிச்சிடும் மின்னல் அவளுடைய மெல்லிய இடையையும், இடியோசை அம்பிகை காலில் அணிந்திருக்கும் பொற்சிலம்பு எழுப்பும் இசையையும்,  வானில் தோன்றும் வானவில் வளைந்திருக்கும் அவளது புருவத்தையும், நினைவூட்டுவதாக கூறும் அப்பெண்கள் மழையிடம் ஒரு வேண்டுகோள் வைக்கிறார்கள். பெண்கள் பாவை நோன்பு நோர்ப்பது நல்ல கணவனை அடைந்து தங்கள் வாழ்க்கை செழிக்க வேண்டும் என்பதற்காகவும், நாட்டில் நல்ல மழை பொழிந்து சமுதாயம் செழிப்பதற்காகவும்தான். எனவே அந்த மழை எப்படி பொழிய வேண்டும் என்றால் தன் கணவனை பிரியாத பார்வதி பக்தர்களுக்கு அருள வேண்டும் என்னும் பொழுது அவருக்கு முன்னால் ஓடி வந்து அருளுவது போல எங்களுக்கு தேவையான நேரத்தில் காத்து நிற்கத் தேவையில்லாமல் பொழிய வேண்டும்.

11 comments:

  1. கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற்று ஆங்கே
    எடுப்பதூஉம் எல்லாம் மழை

    ReplyDelete
    Replies
    1. நேற்று சென்னையில் பெய்தது மோசமான மழை.

      Delete
  2. இங்கே நேற்றில் இருந்து காற்று/மழை! மழை சொல்லிக்கிறாப்போல் பெய்யாவிட்டாலும் இன்னிக்கு சூரியனுக்கு விடுமுறை.

    ReplyDelete
    Replies
    1. சென்னை மயிலையில் மேக வெடிப்பு என்கிறார்கள்.

      Delete
    2. மேகவெடிப்பு காரணமில்லை என்று நேற்று சொன்னார்கள்.  வளிமண்டல சுழற்சி காரணம்.  அது கொஞ்சம் வேகமாக நகர்ந்து கரைக்கு வந்து விட்டதாம்.

      Delete
  3. வணக்கம் சகோதரி

    இன்றைய திருவெம்பாவை பாடலும், அதற்கான விளக்கமும் அருமை. மழை வருவதற்கான அறிகுறிகளை, அன்னை உமையாளுக்கு பொருந்தும்படி சொல்லியிருப்பது மிகவும் நன்றாக உள்ளதெனில், மழை நமக்கு வேண்டும் போது வந்து தவறாது பெய்வதை, அடியவர்களுக்கு அருள் செய்திட அன்னை தன் கணவருக்கும் முன்பே ஓடி வந்து அருள் புரிவதாகவும்,அவ்விதமே அதுவும் வர வேண்டுமென சொல்லி காட்டியிருப்பது வெகு சிறப்பாக உள்ளது. ரசித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
  4. எங்களுக்கு தேவையான நேரத்தில் காத்து நிற்கத் தேவையில்லாமல் பொழிய வேண்டும்.//

    நம் சூழலுக்கு மிகவும் பொருத்தமான பிரார்த்தனை. கூடவே, அதிகமாகவும் பொழிந்து உயிர்ச்சேதம் பயிர் சேதமில்லாமலும் பொழியவும் வேண்டுவோம்.

    துளசிதரன்

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், இந்த வருடம் தமிழகத்தில் பெய்த மழை பாதகத்தை உண்டாக்கியது.

      Delete