கணம்தோறும் பிறக்கிறேன் 

Wednesday, December 20, 2017

நாங்கள் நடித்த விளம்பரப்படம்

நாங்கள் நடித்த விளம்பரப்படம் 
அப்பா இன்னிக்கு பிசா சாப்பிடலாமா? என்றான் ஏன் மகன். 

ஓ! சாப்பிடலாமே, கோவிலுக்கு போய் விட்டு வரும் பொழுது 241பிசாவுக்கு போகலாம் என்றார் என் கணவர்.

மஸ்கட்டில்  டார்செய்ட்(Darseit) கிருஷ்ணன் கோவிலுக்குச் செல்லும் வழியில் டார்செய்ட் ரவுண்ட் அபௌட் அருகில் அப்போது  241 பிசா ரெஸ்டாரெண்ட் புதிதாக தொடங்கப் பட்டிருந்தது.  அதென்ன 241பிசா? என்கிறீர்களா? அந்த கடையின் டெலிபோன் நம்பர் 241 என்று முடியும். அதையே பெயராக வைத்து விட்டார்கள். போனில் ஆர்டர் செய்ய வேண்டுமென்றால் நம்பரை நினைவில் வைத்துக் கொள்வது சுலபமாக இருக்கும் என்னும் எண்ணமாக இருக்கலாம்.

நாங்கள் கோவில் போய் விட்டு 241பிசா சென்று ஸ்டார்டர் ஆர்டர் கொடுத்து விட்டு காத்திருக்கும் பொழுது, சிலர் படப்பிடிப்பு உபகரணங்களோடு வந்து காமிரா, விளக்குகள் இவற்றை அங்கே செட் செய்ய ஆரம்பித்தார்கள். "என்ன நடக்கிறது? ஏதாவது ஷூட்டிங்கா?" என்று அங்கிருந்த பிலிப்பினோ பெண்ணை விசாரித்தோம், "அவள்," ஏதோ விளம்பர படம் என்று நினைக்கிறேன் என்றாள்.

அந்த படப்பிடிப்பு குழு கடையின் எல்லா பகுதிகளையும் படம் பிடித்து விட்டு, எங்களுக்கு பிசா வந்தவுடன் எங்கள் மேஜையை போகஸ் செய்ய ஆரம்பித்தது. அந்த சமயத்தில்தானா என் மகள் என் கையில் இருந்த முள் கரண்டியை தட்டி விட வேண்டும்..? நான் சொதப்பினாலும் பிஸாவை  ருசிப்பது படமாக்கப்பட்டு அடுத்த வெள்ளிக்கிழமை தொலைக்காட்சியிலும் ஒளி பரப்பப்பட்டது. என்ன..நாங்கள் பிராண்ட் அம்பாசிடராக இருந்து 241 பிஸாவை பிரபலப்படுத்தியதற்கு எங்களுக்கு சன்மானம் எதுவும் வழங்கப்படவில்லை. போகட்டும் என்று விட்டு விட்டோம். 

Sunday, December 17, 2017

பியூஷன் உலகம்

பியூஷன்  உலகம் 

அந்த திருமண பத்திரிகையில் முகூர்த்த நேரம் காலை 9:00 முதல் 10:30 வரை என்றுதான் போட்டிருந்தது. ஆனால் 10:30 தாண்டியும் திருமண சடங்குகள் நடந்து கொண்டே இருந்தன. காரணம் மணமக்கள் வேறு வேறு ஜாதி. 

முதலில் பெண் வீட்டு வழக்கப்படி சடங்குகள் நடத்தப்பட்டன, பிறகு பிள்ளை வீட்டு வழக்கப்படி தொடர்ந்தன. இப்போதெல்லாம் இம்மாதிரி திருமணங்கள் அதிகமாகி விட்டன. காலையில் ஹிந்து முறைப்படியும், மாலையில் சர்ச்சில் கிருத்தவ முறைப்படியும் கூட சில கல்யாணங்கள் நடக்கின்றன.  இத்தகைய திருமணங்களை பியூஷன் வெட்டிங் என்கிறார்கள்.  

இந்த பியூஷன் விஷயங்கள் திருமணத்தில் மட்டுமல்ல, வாழ்வின் பல்வேறு விஷயங்களில் பழக்கத்தில் வந்து விட்டது. கர்நாடக இசையையும், ஹிந்துஸ்தானி இசையையும் இணைத்து பாடும் ஜுகல்பந்தி என்னும் கச்சேரி ஒரு வகையில் பியூஷன் இசைதான். இதை இசை விமர்சகர் சுப்புடு," ஜாங்கிரியை மோர் குழம்பில் ஊறப்போட்டது போல" என்பார்.

இப்போது ஜுகல்பந்தியை விரும்பி கேட்காதவர்கள் கூட, கர்நாடக சங்கீதத்தை மேற்கத்திய இசையோடு இணைத்து பாடும் பியூஷன் ம்யூசிக்கை மிகவும் ரசிக்கிறார்கள். உதாரணம் ஹரிஷ் சிவராமகிருஷ்ணன் பாடியிருக்கும் 'ரெங்கபுரவிஹாரா..' பாடல். கேட்டுத்தான் பாருங்களேன். முன்பெல்லாம் பெண்களுக்கு புடவைக்கு மாட்சிங்காக பிளவுஸ் வாங்க படும் பாட்டை வைத்து நிறைய நகைச்சுவை துணுக்குகளும், ஏன் கதைகளும் கூட வந்திருக்கின்றன. இப்போது யாரும் அப்படி மேட்சிங் ஆக பிளவுஸ் அணிவதில்லை. பச்சை புடவைக்கு ப்ரவுன் நிறத்திலும், பிரவுன் புடவைக்கு மஞ்சள் நிறத்திலும், மஞ்சள் புடவைக்கு கருப்பு நிறத்திலும் கான்ட்ராஸ்டாகவோ, அல்லது கலம்காரி பிலௌசுகளோ அணிவதுதான் பேஷன். ஏன் சூடிதார் கூட மிக்ஸ் அண்ட் மேட்ச் என்று ஒரே நிற பாட்டமிற்கு வேறு வேறு நிற குர்தாக்களை அணிகிறார்கள். இவையெல்லாம் பியூஷன்தானே?

திருமண விருந்துகளில் காலை முகூர்த்தத்தின் பொழுது சம்பிரதாய சாப்பாட்டை போட்டு விட்டாலும், வரவேற்பின் பொழுது சூப்,  மன்ச்சூரியன்,சப்பாத்தி,புலாவ், பன்னீர் மட்டர் மசாலா என்று வட இந்திய உணவு, சாம்பார் சாதம், உருளை கிழங்கு கறி, ரசம், தயிர் சாதம், ஊறுகாய் என்று எல்லாவற்றையும் கலந்து பியூஷன் விருந்து  பரிமாறுகிறார்கள். 

பெரும்பாலான நவீன யுவதிகள் ஜீன்ஸ், மூக்குத்தி, மெட்டி என்று அலங்கரித்துக் கொள்கிறார்கள், அதுவும் நன்றாகத்தான் இருக்கிறது. இதை பியூஷன் செருப்பு என்று கூறலாமா?