கணம்தோறும் பிறக்கிறேன் 

Thursday, December 19, 2019

குயின் (வெப் சீரிஸ்) சீசன் 1

குயின் (வெப் சீரிஸ்) சீசன் 1

Image result for queen web series

குயின் (Queen) வெப் சீரீஸ் சீசன் 1 பார்த்து முடித்து விட்டேன். உலகின் கண்களில் அரசியாக கருதப்பட்ட ஒரு பெண், அந்த இடத்தை அடைய அவள் கொடுத்த விலை, பட்ட துயரங்கள் இவற்றை மிகவும் நியாயமாகவும் துயரம் தோய்ந்த அழகோடும் படமாக்கியிருக்கிறார் கௌதம் வாசுதேவ் மேனன்.  இவருடைய சமீபத்திய படங்களை பார்த்த பொழுது மனதிற்கு கொஞ்சம் கஷ்டமாக இருந்தது. வியாபார நிர்பந்தம், ஹீரோக்களின் அடாவடி இவைகளால் இவர் கொஞ்சம் சமரசம் செய்து கொள்ள வேண்டியிருந்தது போலிருக்கிறது. ஆனால் வெப் சீரீஸில் இந்த பிரச்சனைகள் இல்லாததால் அவர் விருப்பப்படி எடுக்க முடிந்திருக்கிறது. 

சின்ன சின்ன ரோல்களில் நடித்துக் கொண்டிருக்கும் ஒரு நடிகையின் மகள். கான்வென்டில் படிக்கும் பள்ளியின் சிறந்த மாணவியான அந்த பெண்ணிற்கு நன்றாக படிக்க வேண்டும் என்று ஆசை. பொதுத்தேர்வில் மாநிலத்தில் முதலாவது மாணவியாக வரும் அவளை பெஸ்ட் அவுட் கோயிங் ஸ்டூடண்டாக தேர்ந்தெடுக்கிறார்கள். ஆனால் அந்த விருதை வாங்க முடியாமல் அவளை திரைப்படத்தில் நடிக்க அழைத்துச் சென்று விடுகிறாள் அவளுடைய தாயார். அங்கு துவங்குகிறது அவளுடைய சிதையும் கனவுகள். அதன் பிறகு தமிழ் திரையுலகின் முடி சூடா மன்னனான ஜி.எம்.ஆர். அவளை தன்னோடு நடிக்க வைக்க, அவள் விரும்பாத துறையில் அவள் உச்சத்தை தொடுகிறாள். ஜி.எம்.ஆரின் ஆளுமை அவளை பொது வாழ்வில் எப்படி உயர்த்துகிறது, தனிப்பட்ட வாழ்க்கையில் எப்படி வீழ்த்துகிறது என்பதை  நறுக்கென்று விவரித்திருக்கிறார் கௌதம். அவரே இயக்குனர் ஸ்ரீதராகவும் நடித்திருக்கிறார்.

நடிகர்கள் தேர்வு சிறப்பு. சிறுவயது சக்தியாக வரும் அங்கிதாவாகட்டும், இளம் வயது நடிகையாக வரும் அஞ்சனாவாகட்டும், அரசியல்வாதியாக வரும் ரம்யா கிருஷ்ணனாகட்டும் மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். இசையும், ஒளிப்பதிவும் துல்லியம். அரசியல் தலைவி சக்தி தொலைக்காட்சியில் பேட்டி கொடுக்கும் பொழுது வசனங்கள் இன்னும் கொஞ்சம் எளிமையாக இருந்திருக்கலாம். மற்றபடி பல இடங்களில் வெகு ஷார்ப். ஜி.எம்.ஆர். மறைந்த பிறகு ஜி.எம்.ஆர் மனைவி ஜனனி தேவியும், சக்தியும் பேசிக்கொள்வது, ஜி.எம்.ஆரும் சக்தியும் உரையாடும் சில இடங்கள். "என்னை சுற்றி இருப்பவர்களிடம் என் புத்திசாலித்தனத்தை நிருபித்துக் கொண்டே இருக்கணும், ஆனால் மக்களுக்கு நான் புத்திசாலி என்று தெரியக்கூடாது". என்று டி. வி. தொகுப்பாளினியிடம் சொல்வது போன்றவை உதாரணங்கள்.

ஜி.எம்.ஆருக்கும் சக்திக்கும் நிலவிய உறவு எப்படிப்பட்டது என்பதை சக்தியின் தாய்,"ஏன் கல்யாணம் கல்யாணம்னு அலையற? அதுதான் கல்யாணம் ஆகாமலே எல்லா கண்ராவியும் கிடைக்கிறதே? கழுத்தில் கால் பவுன் தங்கம் இல்லை.." என்று வெகு சுலபமாக சொல்லி விடுகிறாள். இதை திரைப்படமாக எடுத்திருந்தால் இது சாத்தியமாகியிருக்காது. எதையும் மறைக்கவில்லை, எதையும் போட்டு உடைக்கவுமில்லை. சொல்ல வேண்டியதை நாசூக்காக சொல்லி இருக்கிறார். படிப்பதை தவிர வேறு எதுவும் தெரியாத, வெளி உலகம் புரியாத, அப்பாவி பெண், ஆணவமும், பிடிவாதமும் கொண்டவளாக எப்படி, ஏன் மாறினாள்? என்பதை பார்க்கும் பொழுது நெஞ்சம் கனக்கிறது. பாராட்டப்படவேண்டிய நல்ல முயற்சி! ஒரு அசந்தர்பமான சூழலில் மக்கள் தலைவியாக உருவெடுக்கும் அவள், இது ஆரம்பம்தான் என்று கூறுவதோடு சீசன் 1 முடிகிறது. அடுத்த சீசனுக்கு காத்திருக்கிறோம்.








Wednesday, December 18, 2019

மார்கழி நினைவுகள்

மார்கழி நினைவுகள் 


இவர்தான் சுசித்ரா பாலசுப்பிரமணியன் -சிவானந்த விஜயலக்ஷ்மியின் பேத்தி 

கார்த்திகை, மார்கழி இரண்டுமே ஆன்மீக விஷயங்களுக்கு உகந்த மாதங்கள்தான் என்றாலும், மார்கழி இன்னும் கொஞ்சம் சிறப்பு வாய்த்தது. 
நம்முடைய ஒரு வருடம் என்பது தேவர்களுக்கு ஒரு நாள். அதில் நம்முடைய தக்ஷிணாயணம் அவர்களுடைய இரவு, உத்திராயணம் அவர்களுக்கு பகல். தை மாதம் உத்திராயணம் தொடங்கும். அதாவது இரவு முடிந்து பகல் தொடங்கும். தக்ஷிணாயணத்தின் இறுதியான மார்கழி மாதம் தேவர்களுக்கு விடியற் காலை. சாதாரணமாகவே பிரம்ம முகூர்த்தம் எனப்படும் அதிகாலை நேரத்தில் செய்யப்படும் பூஜைகள் சிறப்பான பலனை கொடுக்க கூடியவை. அதிலும் தேவர்களும் பூஜிக்கும் பிரும்ம முகூர்த்தத்தில் நாமும் இறைவனை பூஜிப்பது இன்னும் சிறப்பல்லவா. அதனால்தான் இந்த மார்கழியில் அதிகாலையில் எழுந்து  இறைவனை துதிக்க வேண்டும் என்று நம் முன்னோர்கள் வைத்திருக்கிறார்கள். 

எங்கள் அப்பா 
என் மார்கழி நினைவுகளில் முதலிடம் வகிப்பது கோலம்தான். அம்மா மிக அழகாக கோலம் போடுவாள். எங்கள் வீட்டிற்கு எதிர் வீட்டில் இருந்த மாமி என் அம்மாவிடம்,"கல்யாணி நீயே எங்காத்து வாசலுக்கும் சேர்த்து பெரிதாக போட்டு விடு நாம் தனியாக போடவில்லை" என்று இடம் தந்துவிடுவார். அம்மா போடும் பெரிய கோலத்திற்கு நடுவில் சாணி வைத்து பூசணி பூ வைப்பது எங்கள் வேலை. எங்கள் வீட்டு மாட்டு கொட்டிலை பெருக்கி, சாணி அள்ளும் ரங்கம்மா என்னும் பெண்மணிதான் பூசணி பூ கொண்டு வைத்து விட்டு போய் விடுவார். அவர் ஏழு அல்லது எட்டு பூ வைத்தால்தான் எங்களுக்கு திருப்தியாக இருக்கும். 

அடுத்தது அப்பா பாடும் திருப்பாவை. இனிமையான குரல் வளம் கொண்ட அவர் முப்பது நாளும் தப்பாமல் தானே மெட்டமைத்து பாடுவார்.   அப்பா பாடுவதை கேட்டு கேட்டு எங்களுக்கு திருப்பாவை முழுவதும் மனப்பாடமாகி விட்டது. முதலில் அதைக் கேட்டேன், பின்னர் அதன் இலக்கிய அழகு புரிந்தது, அதிலிருந்து மற்ற பாசுரங்களையும் படிக்கத் தோன்றியது. 

அதன் பிறகு மறக்க முடியாத மார்கழி அனுபவம் என்றால் மார்கழியில் வரும் வைகுண்ட ஏகாதசி உற்சவ நாட்களில் ஓடி, ஓடி அரங்கனை தரிசனம் செய்த அற்புதமான அனுபவங்கள். வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு உறவினர்கள் வீட்டிற்கு வருவார்கள். அவர்களையும் அழைத்துக் கொண்டு செல்வோம். எங்கள் வீட்டிற்கு எதிர் வீட்டில் இருந்த பங்கஜம் மாமி, தான் கோவிலுக்குச் செல்லும் பொழுது அக்கம் பக்க வீடுகளில் உள்ளவர்களையும் அழைப்பார். நமக்கு கோவிலுக்கு போக வேண்டும் என்ற எண்ணம் இல்லாவிட்டாலும் மாமி வந்து கூப்பிடும் பொழுது நாங்களும் கிளம்பி விடுவோம். "ரெங்கநாதருக்கு இன்று பாண்டியன் கொண்டை, இன்று விமான பதக்கம், இன்று வைர கீரிடம்" என்று எங்களிடம் சொல்லி அதையும் பார்க்கச் சொல்லுவார். 



வைகுண்ட ஏகாதசிக்கு முதல் நாள் மோகினி அலங்காரம். அடடா! அந்த அழகை சொல்ல முடியாது. வெள்ளைப்புடவையில், அமிர்த கலசத்தை அணைத்தபடி அமர்ந்திருக்கும் அரங்கனை பார்க்க ஒரு ஜென்மம் போதுமா? மோகினி அலங்காரத்தின் பின்னழகையும் ரசிக்க வேண்டும். அந்த நடை! எல்லா நாட்களும் கம்பீரமாக நடக்கும் அதே ஸ்ரீபாதம்தாங்கிகள்தான் பெண்ணைப் போல நளினமாக நடக்கிறார்களா? அல்லது அரங்கனே அவர்கள் நடையை அப்படி மாற்றி விடுகிறாரா?  

வைகுண்ட ஏகாதசி அன்று பரமபத வாயிலை தாண்டி ஆயிரங்கால் மண்டபத்தில்தான் பெருமாள் தரிசனம் தருவார். அங்கு எழுந்தருளுவதற்கு முன்னால் மணல் வெளியில் முன்னும் பின்னுமாக உலாத்துவதை 'பத்தி உலாத்துவது' என்பார்கள். நாங்கள் அந்த சமயத்தில் சென்று பெருமாளை சேவித்து விட்டு வந்து விடுவோம்.  மண்டபத்தில் அவரை அமர்த்தி விட்டால் க்யூ தொடங்கி விடும். அதற்கு முன் பார்த்து விட வேண்டும்.  

அதன் பிறகு ராப்பத்தின் பத்து நாட்களும் தினமும் மாலை பெருமாளை சேவிப்போம். நடுவில் ஒரு நாள் முத்தங்கி சேவையில் மூலவர் தரிசனம். தினமும் இரவு எட்டு மணி சுமாருக்கு ஆயிரங்கால் மண்டபத்திலிருந்து புறப்படும் பெருமாள் பூந்தட்டி கட்டப்பட்டிருக்கும் இடத்திற்கு கீழே நின்று   மண்டகப்படியை ஏற்றுக் கொண்டு பள்ளியறை செல்ல பதினோரு மணி ஆகிவிடும். பெருமாளுக்கு முன்பாக பாசுரம் இசைக்கும் அரையர்கள் சுற்றி இருக்கும் மக்களையோ, அவர்கள் எழுப்பும் சப்தத்தையோ கொஞ்சமும் பொருட்படுத்தாமல் பெருமாள் மீது வைத்த கண் வாங்காமல் பிரபந்தம் பாடும்  பக்தியை மெச்சாமல் இருக்க முடியாது. சுற்றி இருக்கும் கசமுசா சத்தம் நேஷனல் காலேஜில் பேராசிரியராக இருந்த ரெங்கராஜன் அவர்கள் வீணை வாசிக்கத் தொடங்கியதும் கப் சிப் என்று அடங்கி விடும். அது முடிந்ததும் பெருமாள் *சர்ப்ப கதியில் உள்ளே சென்று விடுவார். அவர் உள்ளே செல்லும் பொழுது படிகளில் பூக்களோடு பச்சை கற்பூரத்தையும் இரைப்பார்கள். பின்னர் நாங்கள் வீடு திரும்புவோம். பெரும்பாலும் தினசரி செல்வோம். பதினோரு மணிக்கு மேல் கோவிலிலிருந்து ராகவேந்திரபுரத்தில் இருந்த எங்கள் வீட்டிற்கு நடந்துதான் வர வேண்டும். பயம் எதுவும் தெரிந்ததில்லை. அவையெல்லாம் மறக்கவே முடியாத நினைவுகள்.

வைகுண்ட ஏகாதசி சமயத்தில் கோவிலுக்குச் சென்று விட்டு வரும் பொழுது
சுடச்சுட வாங்கி சாப்பிட்ட பட்டாணியையும் மறக்க முடியவில்லை. அனந்தராம தீக்ஷதர் தன் உபன்யாசத்தில்,"திருப்பதியில் மரப்பாச்சி கடை வைத்தவனுக்கும், ஸ்ரீரங்கத்தில் பட்டாணி கடை வைத்தவனுக்கும் நேரே வைகுண்டம்தான் ஏனென்றால் கோவிலுக்குச் சென்று விட்டு வரும் எல்லோரும் நேரே அங்குதான் செல்வார்கள்" என்று கூறுவாராம்.    



அதன் பிறகு திருவண்ணாமலையில் இருந்த நாட்களும் சிறப்பானவைதான். மாணிக்கவாசகர் தன்னை பெண்ணாக கருதி நாயகி பாவத்தில் திருவெம்பாவை பாடிய இடம் திருவண்ணாமலை. இங்கு கிரிவலம் செய்வது சிறப்பாக கருதப்படும் மாதங்களுள் மார்கழியும் ஒன்று. திருவாதிரைத் திருநாள் சிறப்பாக கொண்டாடப்படும். கார்த்திகை தீபத்தன்று ஏற்றிய தீபத்தின்  சுடலை மை திருவாதிரை அன்றுதான் பிரசாதமாக கிடைக்கும்.  எங்கள் மகள் திருவண்ணாமலையில் வங்கிப் பணியில் இருந்ததால் நாங்களும் அவளோடு ஒன்றரை வருடங்கள் அங்கு இருந்தோம், அதனால் அருணாச்சலேஸ்வரர் கோவில் உற்சவங்களை காணவும், சில முறை கிரிவலம் செய்யவும் பாக்கியம் கிடைத்தது. 

மற்றபடி கச்சேரிகளுக்கு அதிகம் போனதில்லை. டி.வி.யில் கேட்பதோடு சரி.   

* சர்ப்பகதி: ரெங்கநாதர் நடை அழகை சிம்மகதி என்றும் சர்ப்பகதி என்றும் இரண்டு விதமாக சொல்வார்கள். காலையில் அவர் படியில் இறங்குவது ஒரு சிம்மம் படியில் இரங்குவதைப் போல் நிதானமாக இருக்கும். இரவில் படியேறுவது பாம்பு படியில் ஏறுவதை போல் சரட்டென்று விரைவாக ஏறிச் சென்று விடுவார்.