கணம்தோறும் பிறக்கிறேன் 

Tuesday, March 26, 2013

யாமறிந்த பெண் எழுத்தாளர்களிலே ....

யாமறிந்த பெண் எழுத்தாளர்களிலே ....


மகளிர் தினத்தை ஒட்டி ஒரு பெண்கள் பத்திரிகை வெளியிட்டிருந்த சிறப்பிதழில் 'தமிழ் சினிமா கதா நாயகிகள் பற்றிய ஒரு கட்டுரை வாசித்தேன்.
உடனே 'எழுத்துலகில் பெண்கள்' குறிப்பாக பெண் கதாசிரியைகளைப்  பற்றி எழுதலாமே என்று தோன்றியது. ஆனால் தமிழில் எழுதும் எல்லோருடைய எழுத்தையும் நான் படித்ததில்லை, அதுவும் சமீப கால எழுத்தாளர்களின்  படைப்புகளை படிப்பதே இல்லை என்று கூட சொல்லலாம். இந்த நிலையில்நியாயமான மதிப்பீட்டை தர முடியுமா என்று தெரியவில்லை. எனவே நான் படித்த வரையில் பெண் எழுத்தாளர்களைப் பற்றிய என் பார்வை இது.

வை.மு.கோதைநாயகி அம்மாள்:
தமிழில் முதல் பெண் எழுத்தாளர்(கதாசிரியர்) என்றால் அது வை.மு. கோதை நாயகி அம்மாள்தான். அந்தண குலத்தில் பிறந்து, ஐந்து  வயதில்  திருமணம் செய்து கொண்டு, அதற்குப்  பிறகு  கணவரின்  தூண்டுதலால்  படித்து கதாசிரியராக பரிணமித்தவர். 115 புத்தகங்களை பிரசுரித்திருக்கிறார். ஜகன்மோகினி என்னும் பத்திரிகையின் ஆசிரியராகவும் இருந்திருக்கிறார். எழுத்தாளர், பேச்சாளர்,சுதந்திர போராட்ட வீராங்கனை,பாடகி என்ற பன்முகங்கள் கொண்டவர். ஒரு பத்திரிகையின் ஆசிரியர் குழுமத்தில் இடம் பெற்ற முதல் எழுத்தாளர். சென்சார் போர்ட் உறுப்பினராகவும் இருந்திருக்கிறார். இவருடைய  படைப்புகள்  சில  திரைப்படமாகவும்  வந்திருக்கின்றன. பிரமிக்க வைக்கும் சாதனையாளர்!

லக்ஷ்மி:

ஆனந்த விகடனின் ஆசி பெற்ற பெண் எழுதாளர்களில் முதன்மையானவர் லக்ஷ்மி! திரிபுரசுந்தரி என்னும் இயற் பெயர் கொண்ட இவர் ஒரு மருத்துவர். மெடிக்கல் காலேஜில் படிக்கும் காலத்திலேயே கதை எழுத ஆரம்பித்த இவரின் முதல் சிறுகதையான 'தகுந்த தண்டனையா'? மற்றும் முதல் நாவலான 'பவானி' இரண்டுமே ஆனந்த விகடனில்தான் வெளியாயின. பெண்களை மிகவும் கவர்ந்த நாவலாசிரியை.  இவருடைய  கதைகளில்  பவானி, மிதிலா விலாஸ்,  பண்ணையார்  மகள்  போன்றவை  பெரும்  வரவேற்பை பெற்றவை.   இவருடைய கதா நாயகிகள் அத்தனை பேருமே, "தற் காத்து, தற்  கொண்டார் பேணி, தகை சார்த்து, சொற் காத்து சோர்விலாள் பெண்" என்று  இலக்கணம் மாறாத பாரத நாரிகள். அடுத்தடுத்து துன்பங்களை அனுபவித்தாலும் இறுதியில் எல்லாம் சுபம் என்று முடியும் குடும்ப கதைகள்தான் இவருடைய களம்.


ஐம்பதுகளிலும், அறுபதுகளிலும் கோலோச்சிய பெண் எழுத்தாளர் இவர்.
இருபது வருடங்களுக்கும் மேலாக எழுதாமல் இருந்து விட்டு நீண்ட
இடைவெளிக்குப் பிறகு குமுதத்தில் இவர் எழுதிய 'அத்தை', ' என் பெயர் டீ.ஜி.கார்த்திக்' போன்ற நாவல்களும் பெரும் வரவேற்பை பெற்றது
இவருடைய எழுத்து திறனுக்கு ஒரு சான்று.

இவருடைய காஞ்சனையின் கனவும், பெண் மனமும்(இருவர் உள்ளம்) திரைப்படங்களாகவும் வந்தன. பெண் மனம், மிதிலா விலாஸ் நாவல்கள் தமிழ் வளர்சிக் கழகத்தின் பரிசினையும், 'ஒரு காவிரியைப் போல்' நாவல் சாகித்திய அகடமியின் பரிசினையும் வென்றன. இவருடைய  கதைகளுக்கென்று ஒரு பார்முலா இருக்கும், அது  சுவாரஸ்யமாகவும்  இருக்கும் என்பதுதான் விஷயம்.

சிவ சங்கரி:

அறுபதுகளின் இறுதியில் எழுத ஆரம்பித்த இவர் கிட்டத்தட்ட முப்பது வருடங்களுக்கும் மேலாக கொடி கட்டி பறந்தார். இவரை அறிமுகப்படுத்தியது கல்கி என்றாலும் மேலே தூக்கி விட்டதில் ஆனந்த விகடனுக்கும், பத்திரிகை ஆசிரியர் சாவிக்கும் பெரும் பங்கு உண்டு.

150க்கும் மேற்பட்ட சிறு கதைகள்,குறுநாவல்கள், 36 நாவல்கள், பல்வேறு கட்டுரைகள் எழுதியிருக்கிறார். இலக்கியம் மூலமாக இந்திய ஒருமைப்பாடு என்னும் பெயரில் இவர் நம் நாட்டின் எல்லா மொழிகளிலும் உள்ள சிறப்பான கதைகளை தொகுத்து வெளியிட்டிருப்பது ஒரு நல்ல முயற்சி. இவருடைய சில கதைகள் திரைப்படமாகவும், டி. வீ. சீரியல்களாகவும் வந்துள்ளன.ஆளுமை கொண்ட எழுத்து இவருடையது. 1997 ஆம்  ஆண்டு  நமது  நாட்டின் சுதந்திர பொன்விழாவின் போது ஆங்கில பத்திரிகை பெமினா
இந்தியாவை  உருவாக்கிய  ஐம்பது  பெண்மணிகளுள்  ஒருவர்  என்னும்  விருதை வழங்கியது.  1999 ஆம் ஆண்டு  அமெரிக்காவில்  உள்ள  டென்னசி  மாகாண கவர்னர் ஊக பிரிட்ஜ் நகரத்தின்  கௌரவ  பிரஜை  விருதை  வழங்கி கௌரவித்தார். இதைத் தவிர  பல விருதுகளும், கௌரவங்களும்  பெற்றுள்ளார்.

தியாகு என்பதை  த் ...யா.. கூ  என்று இவர் எழுதியதை ஒற்றெழுத்து வார்த்தையின்
துவக்கத்தில் வராது என்னும் இலக்கணம் தெரியாமல் எழுதுகிறார் என்று சிலர் கண்டித்தார்கள்.

ஒரு உயர்ந்த பீடத்தில் உட்கார்ந்து கொண்டு உபதேசம் செய்வதும்,கதையில் சமையல் குறிப்பு எழுதுவதும், கதை மாந்தர்கள் அமைப்பில் இவர் அதிகம் தெரிவதும் இவருடைய குறைகள். கதாசிரியராக தொடங்கிய  இவருடைய  பொது வாழ்க்கை சமூக  ஆர்வலராக  பரிணமித்தது.

இந்துமதி:முதலில் கணையாழி போன்ற இலக்கிய பத்திரிகைகளில் எழுதிக் கொண்டிருந்த இவர் அனந்த விகடன் மூலம் வெகுஜன பத்திரிகை உலகில் பிரவேசித்தார்.  கிடாரில் கர்நாடக சங்கீதம் வாசிப்பது போல துள்ளலும்,இளமையும், இனிமையும் கொண்டது இவருடைய எழுத்து. இவருடைய  'தரையில் இறங்கும் விமானங்கள்' மற்றும் 'வீணையில் உறங்கும் ராகங்கள்' இரண்டும் மிக நல்ல இலக்கிய படைப்புகள். என் வாசிப்பு அனுபவத்தை அடுத்த  படிக்கு  எடுத்துச்  சென்றவர்களில்  இவருக்கு முக்கிய இடம் உண்டு. இவர் எழுத்தை படித்து விட்டுதான் நான் தி.ஜானகிராமன் எழுத்துக்களை வாசித்தேன். அங்கிருந்தது கு.ப.ரா., புதுமைப்பித்தன் என்று என் வாசிப்பு விரிந்தது.

வாஸந்தி:

ஆனந்த விகடன் ஆதரவு பெற்ற மற்றொரு எழுத்தாளர். அதுவரையில் தமிழ் நாட்டை மட்டும் குறிப்பாக  சென்னையை மட்டும் சுற்றி வந்து கொண்டிருந்த தமிழ் கதையுலகை வட  இந்தியாவிற்கு கொண்டு சென்றவர். தன்னை பெமினிஸ்ட் என்று இவர் கூறிக்  கொண்டாலும் நடு நிலைமையில் நின்று எழுதக் கூடிய நல்ல எழுத்தாளர். அம்மணி போன்ற அருமையான நாவலை ஒரு பெமினிஸ்ட்டால் எழுதவே முடியாது. பெண்கள்  பிரச்சனைகளை  மட்டுமல்லாமல் பொதுவான சமூக பிரச்சனைகளையும் பற்றி எழுதியுள்ளார்.
சாதாரணமாக பெண் எழுத்தாளர்கள் தொடாத அரசியலை நிலை களனாக கொண்டு எழுதிய முதல் பெண் எழுத்தாளரும் இவர்தான்.இவருடைய 'ஆகாச வீடுகள்' நாவல் ஆங்கிலம், இந்தி, ஜெர்மன், மொழிகளில்  மொழிபெயெர்க்கப் பட்டுள்ளது. பல விருதுகளுக்கு சொந்தக்காரர். இந்தியா டுடேயின் தமிழ் பதிப்பிற்கு ஆசிரியராக இருந்திருக்கிறார். ஜெய லலிதாவைப் பற்றி பென்குயின் பதிப்பகத்திற்காக இவர் எழுதிய,
'ஜெய லலிதா எ போர்ட்ரைட்' என்னும் புத்தகத்திற்கு ஜெயலலிதா  ஸ்டே ஆர்டர்  வாங்கியதால் அப்புத்தகம் வெளியிடப் படவில்லை.

அனுராதா ரமணன்:லே அவுட் ஆர்டிஸ்ட் ஆக  பத்திரிகை உலகில் நுழைந்தவர்  'விஜயாவின் டைரி' என்னும் தன்னுடைய  வாழ்க்கை குறிப்பை எழுதியதன் மூலம் எழுத்தாளராக மாறினார். பெரும்பாலும் குடும்ப கதைகளாக எழுதினாலும்
நகைச் சுவை உட்பட பல் வேறு சுவைகளிலும் எழுதி இருக்கிறார். சாதாரண கதைகளாகவே எழுதிக் கொண்டிருப்பவர் திடீரென்று ஒரு நல்ல கதை எழுதி  விடுவார்.

ரமணி சந்திரன்:ஒரு முறை நான் லெண்டிங் லைப்ரரி சென்றிருந்த பொழுது அங்கு வந்த அத்தனை பெண்களும் ரமணி சந்திரன் நாவல்தான் வேண்டும் என்று கேட்டார்கள். (பெண் )வாசகர்கள் இடையே மிக அதிக வரவேற்பை பெறுவது  இவருடைய எழுத்து. இவருடைய எல்லா நாவல்களுமே மில்ஸ் அண்ட் பூன் பாணி அல்லது மௌன ராகம் பாணி கதைகள்தான். ஏதோ ஒரு காரணத்தால்
கணவன் மனைவி ஆகிவிடும் இருவரிடையே நடக்கும் பனிப் போர், இறுதியில்அது சுபமாக முடிவது என்று சலிக்காமல்  அவரும்  எழுதிக்  கொண்டே இருக்கிறார், அலுக்காமல்  பெண்களும்  படித்துக்  கொண்டே  இருக்கிறார்கள். எது எப்படியோ  மிக  அதிகமாக  விற்பனையாவது  இவருடைய நாவல்கள்தான்.

சீதா ரவி:
பாரம்பரியம் மிக்க பத்திரிகையான கல்கி குடும்பத்தைச் சேர்ந்தவர். அந்த பாரம்பரியம் இவருடைய எழுத்தில் வெளிப்படும். நூல் பிடித்தார் போன்ற தெளிவான நடை இவருடைய சிறப்பு. பழங்கால  எழுத்தாளரான  அனுத்தமவைப் போல என்று கூறலாம். கல்கி குழுமத்தை தாண்டியும் இவர்
வெளியே வர வேண்டும்.

மஞ்சுளா ரமேஷ்:கல்கி குழுமம் என்றால் பெண்களுக்கு நினைவுக்கு வருவது மங்கையர் மலர். மங்கையர் மலர் என்றால் நினைவுக்கு வருபவர் மஞ்சுளா ரமேஷ். இவர்
ஆசிரியராக இருந்த பொழுது மங்கையர் மலர் அடைந்த வளர்ச்சி அபரிமிதம்.
கட்டுக்கோப்பான எழுத்து இவருடையது. இவருடைய ஆன்மீக கட்டுரைகள் சிறப்பானவை. 'மஞ்சுளா ரமேஷின் சிநேகிதி', மற்றும் 'ஞான ஆலயம்' ஆகிய
இரண்டு பத்திரிகைகளுக்கு ஆசிரியராக இருக்கிறார்.

திலகவதி I.P.S.:
தமிழகத்தின் முதல் பெண் I.P.S. ஆன இவர் முன்னூறுக்கும் மேற்பட்ட சிறு கதைகளும், நிறைய நாவல்கள் மற்றும் கவிதைகள்   எழுதியிருக்கிறார். 2005 ஆம் ஆண்டு அவருடைய கல் மரம் நாவலுக்காக சாகித்திய அகடமியின் பரிசினை வென்றார்.  இவருடையதும் ஆளுமை கொண்ட எழுத்து.

ஆர்.சூடாமணி:பெண் எழுதாளர்களில் இவர் வித்தியாசமானவர். பெண்ணியம் என்னும் விலங்கை மாட்டிக்கொள்ளாமல், புலம்பாமல், சாடாமல் தனக்கென ஒரு தனி
இடம் பிடித்தவர். கலைமகள், கல்கி, அமுதசுரபி  பத்திரிகைகளில்  இவருடைய  படைப்புகள் வெளியாகும். மனித  மனத்தின்  நுட்பங்களை  நுணுக்கமாக படைப்பதில் வல்லுநர். நிறைய  பரிசுகளும்  பாராட்டுகளும்  பெற்றிருக்கிறார். மிகச் சிறந்த இலக்கிய படைப்பாளி.

இவரைப் போலவே ராஜம் கிருஷ்ணனும் சிறந்த இலக்கிய படைப்பாளி.

அம்பையும், ஜோதிர் லதா கிரிஜாவும் நல்ல எழுத்தாளர்கள்தான் என்றாலும் பெண்ணியத்தை சிலுவையாக சுமப்பதாலோ என்னோவோ அவர்கள்  எழுத்தில் கசப்பு வழியும்.

அமெரிக்காவிலிருந்து கொண்டு  எழுதும் கீதா பென்னட், துணிச்சலான எழுத்தாளர் என்றால், அமெரிக்காவின்  இன்னொரு  முகத்தை  நமக்கு  காட்டும் காஞ்சனா தாமோதரனும் ஒரு சிறந்த எழுத்தாளர். இவர்களைத் தவிர கமலா சடகோபன், விமலா ரமணி, கோமளா வரதன், ஸ்ரீரங்கம் எஸ்.பட்டமாள் போன்ற பலர் என்னைக் கவர்ந்த கதைகளை எழுதி இருக்கிறார்கள்.

ஒருமுறை எனக்குத்  தெரிந்த  ஒரு  பெண்  பத்திரிகையாளரிடம்,  "சுஜாதா ஒரு முறை சொன்னது போல பெண் எழுதாளர்களின் எழுத்து சமையலறையை தாண்டி வர மாட்டேன் என்கிறதே" என்றேன்,அதற்கு அவர், "வராது, வராது .. ஏனென்றால் நாம் அங்குதான் வாழ்கிறோம். ஒரு  கால்  சென்டரைப் பற்றி கதை  எழுத  வேண்டும்  என்றால்  ஆறு மாதமாவது  கால்  சென்டரில்  போய் வேலை செய்ய வேண்டும். எல்லாவற்றையும்  கற்பனை  செய்தே  எழுத முடியாது". என்றார்.  அதாவது எதற்கு எக்ஸ்போஷர் கிடைக்கிறதோ அதைப் பற்றிதான் எழுத முடியும் என்பது அவர் வாதம். அதே நேரத்தில் பெண் எழுதாளர்களுக்கு ஒரு குறை இருக்கிறது. "நாங்கள் புடவை கட்டி கொள்கிறோம் சரி, எங்கள்  எழுத்துக்களுக்கும்  புடவை கட்டி விடாதீர்கள்" என்கிறார்கள்.

இப்போது இருக்கும் பெண்களுக்கு எக்ஸ்போஷர் அதிகம் என்பதில் சந்தேகம் இல்லை. அவர்கள் மட்டுமல்ல அவர்களின் எழுத்தும் ஜீன்ஸ் போட்டுக் கொள்வதில் யாருக்கும் இப்போது ஆட்சேபனை இருக்காது.  தமிழில்  எழுத அவர்களுக்கு தமிழ் தெரிய வேண்டுமே என்பதுதான்
என் போன்ற வாசகர்களுக்கு கவலை.

பி.கு. இது ஒரு மீள் பதிவு.