கணம்தோறும் பிறக்கிறேன் 

Wednesday, June 29, 2022

மனதில் நின்ற வரிகள், வசனங்கள்.அ

மனதில் நின்ற வரிகள், வசனங்கள்.

சமீபத்தில் மத்யமரில் Post of the week வாங்கிய என்னுடைய பதிவு இது. சிலவற்றை எழுதும் பொழுதே மனதிற்கு ஒரு திருப்தி வரும். அப்படிப்பட்ட பதிவு என்பதால் இங்கும் பகிர்ந்து கொள்கிறேன். 

லௌகீக வாழ்க்கையில் (material life) வெற்றி பெற்றவர்களைத்தான் திறமைசாலிகள் என்று கருதுகிறோம். அப்படி வெற்றிக் கனியை எட்டிப் பிடிக்க முடியாதவர்களை அசடு என்று சொல்லத் தயங்குவதில்லை. ஆனால் அசோகமித்திரன் ஒரு கதையில் (கதை பெயர் மறந்து விட்டது) என்ன சொல்கிறார் தெரியுமா? 

"கெட்டிக்காரத்தனம், அசட்டுத்தனம் என்றெல்லாம் கிடையவே கிடையாது. நாம் செய்யும் ஒரு காரியம் வெற்றி அடைந்து விட்டால் அதுதான் கெட்டிக்காரத்தனம், புத்திசாலித்தனம். அந்த காரியம் தோல்வி அடைந்து விட்டால் அதுவே அசட்டுத்தனம், முட்டாள்தனம் ஆகி விடும். How true! 

இதே வெற்றி, தோல்வி பற்றி ஜெயகாந்தனுடைய கருத்தையும் மறக்க முடியாது. 'ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்' படத்தில் வரும் "நடிகை பார்க்கும் நாடகம் இதில் ரசிகர் எல்லாம் பாத்திரம்..." என்ற பாடலில்

"நன்மை என்பதும், தீமை என்பதும்

நாமணிந்திடும் வேடமே இதில்

வெல்வதென்னடி, தோல்வி என்னடி

மேடையில் ஒர் விளையாடலில் நாம்

மேடையில் விளையாடலில்" 

என்னும் வரிகளை மறக்கவே

முடியாது. 

ஜெயிக்கறதாவது? தோற்கறதாவது? All crap, just live the life என்று அனாயாசமாக கூறிவிட்டு சென்றுவிட்டார்.

லா.ச.ரா. அவருடைய பாற்கடல் அல்லது சிந்தாநதி இந்த இரண்டு நூல்களுள் ஏதோ ஒன்றில் 

"சிறு வயதில் கஷ்டப்படுவது பூண்டு வைத்த பாத்திரம் போல, எத்தனை தேய்த்து அலம்பினாலும் அந்த வாடை போகாது" என்று எழுதியிருந்ததையும். 

அவருடைய 'தரிசனம்' சிறுகதையில் கன்யாகுமரியை  

'அபிஷேக சுந்தரியாய் அவளின் அந்த சகிக்க முடியாத சௌந்தர்யம்!" என்று வர்ணித்ததையும்... அடடா! எப்படி மறக்க முடியும்?

சுஜாதாவின் 'சிவந்த கைகள்' கதையில் 

"பொய் சொல்லுவதற்கு அசோக்கின் இரண்டு விதிகள்

பொய் சொல்லாதே

பொய் சொன்னால் அதை உண்மையாக்கிவிடு"

எனக்கு பொய் சொல்ல வேண்டும் என்ற நிர்ப்பந்தம் ஏற்படும் பொழுதெல்லாம் இதை நினைத்துக் கொள்வேன். பொய் சொல்ல மாட்டேன்.

தி.ஜானகிராமன் மோகமுள் கதையை 

"இந்த பிரபஞ்சத்திற்கு எதுவுமே புதிதில்லை" 

என்னும் அட்சர லட்சம் பெறும் வார்த்தைகளோடு முடித்திருந்ததை மறக்க முடியுமா?

அவரே 'அன்பே ஆரமுதே' நாவலில் 

'இல்லறத் துறவு எவ்வளவு புனிதமோ அவ்வளவு புனிதம் துறவில்லறமும்'

என்று எழுதியிருந்ததும் மனதில் பச்சக்கென்று ஒட்டிக் கொண்ட வரிகள்.


சமீபத்தில் படித்த எஸ்.ராமகிருஷ்ணனின் நாவலில் காது கேட்காத ஒருவன்தான் கதாநாயகன். அதில் அவன் ,"குளிக்கும் பொழுது தண்ணீர் கீழே விழும் சத்தம் கேட்காது" என்று சொல்வதாக வரும் வரிகள் என்னை அதிர வைத்தது. இப்படி ஒரு விஷயம் இருக்கிறதா? என்ற எண்ணம் நெஞ்சை பிசைந்தது.

எவ்வளவு முயற்சி செய்தும் நாம் விரும்பும் சில விஷயங்கள் நடக்காத பொழுது 'முத்து' படத்தில் சூப்பர் ஸ்டார் சொல்லும்

"கிடைக்கிறது கிடைக்காம இருக்காது, கிடைக்காம இருக்கறது கிடைக்காது" என்னும் வசனம்தான் ஆறுதல்.

மற்றொரு மறக்க முடியாத வசனம் விருமாண்டி படத்தில் கமல் கூறும்,

"பெரும்பாலும் நாம் சந்தோஷமா இருக்கும் பொழுது நமக்கு அது தெரிவதில்லை " 

எவ்வளவு அர்த்தமுள்ள வசனம்! 

கண்ணதாசனின் இந்த வரிகளை கூறாமல் இந்த கட்டுரை நிறைவு பெறாது.

பிறப்பில் வருவது யாதெனக் கேட்டேன்
பிறந்த பார் என இறைவன் பணித்தான்
இறப்பில் வருவது யாதெனக் கேட்டேன்
இறந்து பார் என இறைவன் பணித்தான்
மனையாள் சுகமெனில் யாதெனக் கேட்டேன்
மணந்து பார் என இறைவன் பணித்தான்
அனுபவித்தே தான் அறிவது வாழ்வெனில்
ஆண்டவனே நீ ஏன் எனக் கேட்டேன்
படைத்தவன் சற்றே அருகினில் வந்து
அனுபவம் என்பதே நான்தான் என்றான் 

Tuesday, June 28, 2022

Fingertip - தமிழ் வெப் சீரீஸ்- விமர்சனம்

Fingertip - தமிழ் வெப் சீரீஸ்- விமர்சனம் 

சோஷியல் மீடியா என்பது விரல் நுனியில் இருக்கும் விபரீதம். இதை Zee5 ல் வெளியாகியிருக்கும் ஃபிங்கர்டிப் என்னும் வெப்சீரீஸ் அலசியிருக்கிறது. 

சீசன் ஒன்றில் ஐந்து வெவ்வேறு கதைகளில் வெவ்வேறு நடிகர்கள் நடிக்க, சோஷியல் மீடியாவிற்கு அடிமையானவர்கள், நல்லவர்கள், அப்பாவிகள், இவர்களை சோஷியல் மீடியா எப்படி பாதிக்கிறது என்று சுவாரஸ்யமாக காட்டியிருக்கிறார்கள். ஆனால் தலைப்புகள் Greed, Rage, Betrayal, Lust, Vengeance என்று ஆங்கிலத்திலேயே இருப்பது சற்று நெருடலாக இருக்கிறது. எல்லா மொழிகளிலும் டப் செய்து வெளியிட சௌகரியமாக இருக்கும் என்பதாலோ?

சீசன் இரண்டு ப்ளாக் வெப்(black web) என்னும் பயங்கரத்தை டீல் பண்ணுகிறது. 

தங்கள் செல்போன்களை சர்வீஸுக்கு கொடுக்கும் பெண்களின் புகைப்படங்களை மக் பண்ணி, அவர்களை விரட்டுபவன், மார்பிங் மூலம் பிரபலங்களின் பொது வாழ்வை சீர் குலைப்பவன், தாழ்வு மனப்பான்மை கொண்ட ஃபுட் டெலிவரி செய்பவன், காஸ்மெட்டிக் சர்ஜரி மூலம் தன் மூக்கை திருத்திக் கொள்ள நினைக்கும் நடிகை, எக்லிப்ஸ் என்னும் எதிக்கல் ஹாக்கர், சி.சி.டி.வி.காமிரா பொருத்த வருபவர்கள் போல வந்து தனிமையில் இருக்கும் முதியவர்களை கொலை செய்யும் ஒரு கும்பல், அதை கண்டுபிடிக்க முயலும் போலீஸ் அதிகாரி இப்படி தனித் தனியாக இருக்கும் கதைகள் ஒரு புள்ளியில் அழகாக இணைகின்றன. இதில் அந்த நடிகையின் கதை மட்டும் கொஞ்சம் ஒட்டாது போல இருக்கிறது. எல்லா நடிகர்களும் சிறப்பாக நடித்திருக்கின்றனர். குறிப்பாக மார்பிங் செய்யும் அந்த இளைஞர், சரியான வில்லன். நல்ல திரைக்கதை மற்றும் இயக்கம். இயக்குனர் ஸ்ரீனிவாசன் ஷிவகரை விரைவில் பெரிய திரையில் எதிர்பார்க்கலாம் என்று தோன்றுகிறது.