மசாலா சாட் - 20
யார் யாரை எப்படி வணங்க வேண்டும்?
பெற்றோர்களை நாபிக்கு எதிரே கை கூப்பி வணங்க வேண்டும். காரணம் நம்மை தன் வயிற்றிலே சுமந்தவள் தாய் நமக்கு உணவளித்தவர் தந்தை.
நண்பர்களையும், பெரியவர்களையும் நம் நெஞ்சில் வைத்து போற்றுகின்றோம் என்பதை உணர்த்த நெஞ்சிற்கு எதிரே கை கூப்பி வணங்க வேண்டும்.
ஆன்மீக வழி காட்டும் குருவுக்கு, அவர் நமது ஞானக் கண்ணை திறப்பதால் நெற்றிக்கு நேரே கரம் குவித்து வணங்க வேண்டும்.
எல்லாவற்றையும் கடந்த இறைவனையோ தலைக்கு மேல் கை கூப்பி வணங்க வேண்டும்.
- அபிராமி அந்தாதி உரையில் சுகி சிவம்.
ஆண் மூலம் அரசாளும் என்கிறார்கள். இது தவறாக புரிந்து கொள்ளப்பட்ட பழமொழி. ஆனி மாதத்திலே மூலம் நட்சத்திரத்தில் பௌர்ணமி வரும். அன்று பிறப்பது சிறப்பான யோகத்தை தரும். ஆனி மூலம் அரசாளும் என்பதை,ஆண் மூலம் அரசாளும் என்று திரித்து விட்டார்கள்.
- ஜீ தமிழில் ஜோதிட சிம்மம் கண்ணன் பட்டாச்சார்யா
அதோடு நிறுத்தியிருந்தால் பரவாயில்லையே, பெண் மூலம் நிர்மூலம் என்று வேறு சேர்த்து விட்டார்களே, அதுதான் கொடுமை!
தனிஷ்க் விளம்பரத்திற்கு மதச்சாயம் பூசி அதை வாபஸ் பெற வைத்து விட்டார்கள். திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்வதை ஆதரிக்கும் தேநீர் விளம்பரத்திற்கு ஏன் எந்த எதிர்ப்பும் இல்லை?
நவராத்திரியில் லலிதா சஹஸ்ரநாம பாராயணத்திற்கு சென்ற வீட்டில் அழகாக இருந்ததால் புகைப்படம் எடுத்தேன். அங்கு கிடைத்த கிஃபிட் இது. என்னவென்று தெரிகிறதா? பாட்டில் வடிவில் zip lock bag. குளிர்சாதன பெட்டியில் ஸ்டோரிங் கன்டைனராக பயன்படுத்தலாம் என்று அமேசான் இல் பார்த்தேன்.
கடைசியாக ஒரு செய்தி. இதை கிச்சன் டிப்ஸ் என்றும் கொள்ளலாம். அமாவாசையன்று என் மகன் தர்ப்பணம் செய்து விட்டு வைக்கும் பாத்திரதில் இருக்கும் எள், தர்ப்பை போன்றவைகளை எடுத்து விட்டு தேய்க்கப் போட்டால் என்னதான் புளி, பீதாம்பரி எல்லாம் போட்டு தேய்த்தாலும், கறை போகாது. அன்றொரு நாள் இரவு மிச்சமிருந்த சாம்பார், ரசம் இவைகளை அதில் கொட்டி வைத்து விட்டு, மறுநாள் காலை அவைகளை தேய்க்க, கறை போச்சு, இட்ஸ் கான், பாத்திரங்கள் பளிச்! ஸோ,மாறல் ஆஃப் தி ஸ்டோரி: மீந்து போகும் குழம்பு, ரசத்தில் பித்தளை பாத்திரங்களை தேய்க்கலாம்.