கணம்தோறும் பிறக்கிறேன் 

Saturday, March 13, 2021

மசாலா சாட் - 23

 மசாலா சாட் - 23


பெங்களூரிலிருந்து டில்லிக்கு விஸ்தாராவில் பயணப்பட்டோம். விமான நிலையம் பழையபடி ஆகி விட்டது. மாஸ்க் அணிந்திருப்பது மட்டுமே மாறுதல். விமானம் முழு கொள்ளளவில் இருந்தது. நடு இருக்கையில் அமர்ந்திருப்பவர் முழு  பாதுகாப்பு கவசம் அணிந்திருக்க வேண்டும் என்னும் விதியை என்னருகில் அமர்ந்திருருந்த பெண்மணி கடை பிடிக்கவில்லை. டில்லியில் இருக்கும் அவருடைய தாத்தாவின் 100வது பிறந்த நாளை கொண்டாட குடும்பத்தோடு (ஏறக்குறைய பதினைந்து பேர்கள்) சென்று கொண்டிருந்தார்கள். பிளேன் டேக் ஆஃப் ஆனதிலிருந்து சாப்பிட ஆரம்பித்தார்கள். எனக்கும்  உபசாரம்! 

இந்த குழு இப்படி என்றால் இன்னொரு குழு டில்லியை சுற்றிப் பார்க்கச் செல்கிறார்கள் போலிருக்கிறது.  முதல் விமானப் பயணம் என்று  தோன்றியது.  விமானத்திற்குள் நுழைவதிலிருந்து, கேபின் பேகேஜ் வைப்பது, இறங்கியதும், வாக்கலேட்டரில் நடப்பது என்று அத்தனையையும் வீடியோ எடுத்துக் கொண்டே வந்தார்கள். நிச்சயம் இன்ஸ்டாக்ராமில் பகிர்வார்கள் என்றுதான் தோன்றியது. 

டில்லியிலிருந்து சென்னை திரும்பியவுடன் கொரோனா தடுப்பூசி விஜயா ஹெல்த் சென்டரில் போட்டுக் கொண்டேன். எல்லோருக்கும் கோவிஷீல்டுதான் போடுகிறார்கள். பெங்களூரில் வசிக்கும் நான் சென்னையில் போட்டுக் கொள்ள முடியுமா? என்னும் தயக்கம் இருந்தது. டில்லியில் வசிக்கும் வெங்கையா நாயுடு சென்னையில் போட்டுக் கொண்டது ஒரு நம்பிக்கையை தந்தது. முதல் ஊசியை எங்கு போட்டுக் கொள்கிறோமோ அதே இடத்தில் இரண்டாம் ஊசியையும்  போட்டுக் கொண்டால்தான் சான்றிதழ் தருவார்களாம். எங்கள் வீட்டிலும், நட்பு வட்டாரத்திலும் ஊசி போட்டுக் கொள்ள சிலருக்கு ஏதோ தயக்கம் இருப்பது தெரிகிறது.  எங்கள் குடும்பத்தில் நான்தான் முதல் ஆளாக தடுப்பூசி போட்டுக் கொண்டிருக்கிறேன். 

சென்னையிலிருந்து திருச்சிக்கு செல்ல வேண்டியிருந்தது. மார்ச் 10,11 வேலை இருந்தது. 9ஆம் தேதி காலை காரில் பயணப்பட்டோம். அந்த டிரைவர் மாஸ்க் அணிந்து கொள்ளவில்லை. கேட்டதற்கு கொரோனாவெல்லாம் முடிந்து விட்டது மேடம் என்கிறார்.  முதலில் நாங்கள் இன்னும் இரண்டு நாட்கள் திருச்சியில் தங்கி அருகில் இருக்கும் கோவில்களுக்கு சென்று, திருச்சி பதிவர்களை சந்தித்து விட்டு வரலாம் என்று நினைத்தேன். ஆனால் இனொரு அக்காவின் மகன் சென்னை சி.ஐ.டி. காலனியில் 'பவுல்டு'(BOWLD) என்னும் உணவகத்தின் கிளையை துவங்கியதால் வியாழனன்றே திரும்ப வேண்டிய நிர்பந்தம். கிடைத்த கொஞ்ச நேரத்தில் திரு.ரிஷபன் அவர்களையும், திருமதி. ஆதி வெங்கட்டையும் மட்டும் சந்தித்தேன்.

திரு ரிஷபன் அவர்களின் எழுத்தைப் போலவே அவரும் எளிமையாக இருக்கிறார். மனைவி அருமையான டீ கொடுத்தார். அவர் தந்தையும் எங்கள் உரையாடலில் அவ்வப்பொழுது கலந்து கொண்டார். ஆதி வெங்கட் வீட்டை கண்ணாடி போல் பளிச்சென்று வைத்திருக்கிறார். அவரோடு அதிக நேரம் செலவிட முடியவில்லை. இந்த முறை கீதா அக்காவையும் பார்க்க முடியவில்லை. 

கூரத்தாழ்வார் சன்னதி

கமலவல்லி சமேத அழகிய மணவாளன் சன்னதி நுழை வாயில்

எப்போதும் செல்லும் மலைக்கோட்டை விநாயகர், திருவானைக்கோவில், ஸ்ரீரங்கம் தலங்களை தரிசனம் செய்து விட்டு, உறையூரில் இருக்கும் வெக்காளி அம்மன் கோவில், நாச்சியார் கோவில்களுக்கும் சென்றோம். எந்த கோவிலிலும் நமஸ்கரிக்க அனுமதியில்லை. பெருமாள் கோவில்களில் தீர்த்தம், சடாரி சாதிப்பது போன்றவை இல்லை. அதற்காக நாச்சியார் கோவிலில் இருந்த அர்ச்சகர்கள் இரண்டு பேரும் வெகு அலட்சியமாக கால்களை நீட்டியபடி அமர்ந்து கொண்டிருந்ததும், எங்கள் கேள்விகளுக்கு அசிரத்தையாக பதில் சொன்னதும் வருத்தமாக இருந்தது. சாதாரணமாக வைணவ கோவில்களில் தீபாராதனை காட்டும் பொழுது அங்கு உறையும் பெருமாளின் சிறப்பை எடுத்துக் கூறுவார்கள். இங்கோ பெருமாள் கையில் இருக்கும் சக்கரம் பிரயோக சக்கரம் என்பதை நான் கவனித்து, கேட்டேன் அப்போதும் அலட்சியமான பதில்தான்.. பெருமாளின் சக்கரம் பிரயோக சக்கரமாக இருக்கும் தலங்கள் மிகவும் சிறப்பானவை. 


ஏற்கனவே டி.நகரிலும், மடிப்பாக்கத்திலும் கிளைகள் உள்ள பவுல்டு என்னும் உணவகத்தின் கிளையை சென்னை சி.ஐ.டி. காலனியில் துவக்கியுள்ளார் என்னுடைய சகோதரியின் மகன். ஹோட்டல் என்றாலே நான்,பரோட்டா, மட்டர் பனீர், குருமா, பிரியாணி என்ற எண்ணத்தை மாற்றி  வீட்டில் கிடைக்கும் ஆனால் இப்போது பெரும்பாலானோர் செய்யாத மோர்க்கூழ், உப்புமா கொழுக்கட்டை, பால் கொழுக்கட்டை போன்ற ஐட்டங்களை கொடுப்பது நோக்கம். தற்சமயம் டேக் அவே ஆர்டர்களில் கவனம் செலுத்துகிறார்கள். ஸ்விகி மூலம் ஆர்டர் கொடுக்கலாம். 

ரைஸ் பவுலில் பருப்பு சாதம், ரசம் சாதம், மோர் குழம்பு சாதம், வற்றல் குழம்பு சாதம், மிளகு குழம்பு சாதம், புளியோதரை, தயிர் சாதம் போன்றவைகள் இருக்கின்றன.  ஹோட்டல் சாப்பாடு பிடிக்காத, வீட்டில் சமைக்கவும் முடியாத பெரியவர்களுக்கு மிகவும் உபயோகமாக இருக்கும்.