கணம்தோறும் பிறக்கிறேன் 

Friday, September 28, 2012

இரயில் பயணங்களில்!
(டி. ஆர். பட விமர்சனம் அல்ல!)


சமீபத்தில் நிறைய பயணம் செய்தேன்! பெரும்பாலும் புகை வண்டியில்(நிலக்கரியால் ஓடி, புகையைக் கக்கி, நம் உடைகளை பாழக்கிய அந்தக் காலத்தில் புகை வண்டி என்பது சரியாக இருந்தது. இப்போதுமா புகை வண்டி? வேறு பெயர் கண்டு பிடிங்க பாஸ்)இரயில் பயணம் இப்போது மிகவும் சுலபமாகவும், வசதியாகவும் இருக்கிறது.
நம் வேலையெல்லாம் விட்டு விட்டு பயணச்சீட்டு வாங்குவதற்காக நீண்ட க்யு வரிசையில் காத்திருக்க வேண்டாம். மகனையோ, மகளையோ கெஞ்சி வீட்டில் இருந்த படியே கணினியில் பதிவு செய்து விடலாம்.  இன்னொரு நல்ல விஷயம், இப்போதெல்லாம் ரயில்கள் பெரும்பாலும் சரியான நேரத்தில்  புறப்பட்டு சரியான நேரத்தில் இலக்கை அடைகின்றன.  நம் நாட்டில் எமெர்ஜென்சி நிலவிய  பொழுது  இதைத்தான்  பெரிய  விஷயமாக  சொன்னார்கள் அதன் அதரவாளர்கள். அதைப் போலவே முன்பெல்லாம் ஒவ்வொரு
நிறுத்தத்திலும் வண்டி நிற்கும் பொழுதும் இட்லி, வடை, தயிர் சதம், வேர்கடலை, காபி, டீ இன்ன பிற சமாச்சாரங்களை சுமந்து கொண்டு கூவியபடி வண்டியின்  வேகத்தோடு ஓடிவரும்  சிறு  வியாபாரிகளைக்  காணவில்லை. எந்த எந்த  ஊரில்  என்ன என்ன  உணவு  நன்றாக  இருக்கும்  என்று சிலர் லிஸ்டே வைத்திருப்பார்கள். வண்டியிலேயே  எல்லா  உணவு  வகைகளும் கிடைத்து விடுவதால் வெளியே வாங்குபவர்கள் குறைந்து  விட்டார்கள் போலிருக்கிறது! சதாப்தி போன்ற வண்டிகளில் IRCTC நிர்வாகமே வேளா வேளைக்கு டீ, பிஸ்கெட்  முதல்  ஐஸ்ச்ரீமோடு  உணவு  வரை டான் டானென்று வழங்கி விடும் போது வெளியே ஏன் வாங்க வேண்டும்?
உபரியாக படிக்க தினசரியும் குடிக்க நீரும் வேறு..!  ஏசி  கோச்சுகளில்  கழிப்பறை நன்றாகவே பராமரிக்கப்  படுகிறது.   

ஸ்லீப்பர் கோச்சுகளில் சில்லறை சாமான்கள் விற்பவர்கள், காபி,டீ  இவற்றோடு பிச்சைக்காரர்கள், தவிர  வண்டியை  தன்  கையில்  உள்ள  துணியால் துடைத்து விட்டு  காசு  கேட்பவர்கள்  தொந்தரவு  செய்து கொண்டே இருக்கிறார்கள். இதில்  என்ன  ஆச்சர்யம்  என்றால் ஒவ்வொரு பத்து நிமிடத்திற்கும் ஒருவன் வந்து
துடைக்கிறான்  அப்பொழுதும் குப்பை வருகிறது. பொது இடத்தில் குப்பை போடுவதில் நமக்கு நிகர் நாம்தான்! 

ரயில்வே மட்டுமல்லாது infrastructure எனப்படும்  கட்டுமான  அமைப்பும் வெகுவாக வளர்ந்துள்ளதால் சாலைப் பயணமும் முன்பை விட
இலகுவாகவும், துரிதமாகவும்  இருக்கிறது. நவி மும்பையின்  வளர்ச்சி பிரமிக்க வைக்கிறது! மும்பையில் ஒரு புகைப்படம் எடுத்துக் கொண்டு வெளி நாட்டில் எடுத்தது என்றல் நம்பி விடுவார்கள்.

இவ்வளவு ஊழல், தகிடுதித்தங்களையும் மீறி இந்த தேசம் வளர்கிறதே! இறை அருள்தான் !