கணம்தோறும் பிறக்கிறேன் 

Wednesday, September 21, 2016

ஐ.ஆர்.சி.டி.சி. குழப்பங்கள்.

ஐ.ஆர்.சி.டி.சி. குழப்பங்கள்.

சமீபத்தில் கேரளாவில் வசிக்கும் என் நாத்தனாரின் கணவர் திடீரென்று காலமாகிவிட, நாங்கள் கேரளா செல்ல வேண்டிய நிர்பந்தம். ஓணம் சமயமாதலால் எந்த ரயிலிலும் டிக்கெட் கிடைக்கவில்லை. எனவே கோயம்புத்தூர் வரை  சதாப்தியில் சென்று, அங்கிருந்து இரண்டு பேருந்துகள் மாறி பெரும்பாவூர் சென்றோம். திரும்பி வரும்பொழுது தன்பாத் எக்ஸ்பிரஸில் செகண்ட் ஏ.சி.யில் டிக்கெட் கிடைத்தது. பயண நேரம் கொஞ்சம் அதிகம்தான் என்றாலும், உட்கார்ந்து கொண்டே வரவேண்டாம், படுத்துக்க கொள்ள முடியும் என்பதால் என் கணவர் அந்த ரயிலில் புக் பண்ணினார். 

திருச்சூரில் அந்த ரயில் வந்து கொண்டிருக்கிறது என்னும் அறிவிப்பு செய்த பொழுது திருவனந்தபுரத்திலிருந்து கோயம்புத்தூர், சென்னை வழியாக என்று அறிவிக்கவில்லை. இது முதல் குழப்பம். அந்த ரயிலில் திருவனந்தபுரம் டு டாட்டா நகர் என்றிருந்தது. தன்பாத் என்னும் பெயரே இல்லை. நாம் ஏற வேண்டிய ரயில் இதுதானா என்று குழப்பம், உடன் ஏறியவர்களிடம் இது தன்பாத் எக்ஸ்பிரெஸ்தானே என்று கேட்டுக் கொண்டு ஏறினோம். 
தன்பாத் எக்ஸ்பிரஸ் என்னும் பெயரை டாட்டா நகர் எக்ஸ்பிரஸ் என்று பெயர் மாற்றி கொஞ்ச நாள் ஆகி விட்டதாம். ஆனால், irctc வெப் சைட்டில் தன்பாத் என்றுதான் இருக்கிறது.

கோவையில் திருவள்ளூர் செல்ல வேண்டிய ஒரு குடும்பத்தினர் ஏறினார்கள். சேலம் வந்ததும் அந்த குடும்பத்த தலைவர் டி.டி.ஈ யிடம் இந்த வண்டி சென்னை செல்லுமா என்று கேட்டார். அதற்கு, டி.டி.ஈ., "இல்லை போகாது, சென்னை செல்பவர்கள் எல்லோரும் பெரம்பூரில் இறங்கி லோக்கல் ட்ரெயின் யில் செல்ல வேண்டும்" என்றார். நல்ல வேளை இப்போதாவது தெரிந்ததே என்று நினைத்துக் கொண்டோம்.  ஆன் லைனில் புக் செய்தவர்களுக்கு மெசேஜ் வந்திருக்கும் என்றார். (அதை யார் பார்க்கிறார்கள்?). அவர் சொன்ன பிறகுதான் மெசேஜ் செக் செய்தார் என் கணவர். வந்திருந்தது. டி.டி.ஈ. நம் டிக்கெட்டை செக் பண்ணும் பொழுது இந்த தகவலை தெரிவித்திருக்கலாமே..!

நாங்கள் பெரம்பூரில் இறங்கும் பொழுது ஒரு பெண்மணி இது எந்த ஸ்டேஷன்? என்று கேட்டார். பெரம்பூர் என்று கூறி விட்டு, என் கணவரின் ஆலோசனைப்படி அவர் எங்கு செல்கிறார் என்று கேட்க, அந்த பெண்மணி,"சென்னை, சென்னை சென்ட்ரல்.." என்றார். "சென்னை சென்ட்ரலுக்குச் செல்லாது, இங்கேயே இறங்கி விடுங்கள்." என்றதும், அட கடவுளே, இது எனக்குத் தெரியாது, ரொம்ப தாங்ஸ்ங்க" என்றபடி இறங்க ஆயத்தமானார். வேறு யாராவது தெரியாமல் விஜயவாடா போயிருப்பார்களோ என்று கவலையாக இருந்தது.

கீழே இறங்கினால் திருவனந்தபுரத்திலிருந்து டாடா நகர் செல்லும் தன்பாத் எக்ஸ்பிரஸ் சென்னை சென்ட்ரல் செல்லாது. சென்ட்ரலில் இறங்க வேண்டிய பயணிகள் இங்கே இறங்கவும் என்று ஒலி பெருக்கியில் அறிவித்துக் கொண்டிருந்தனர். ஆனால் அந்த அறிவிப்பு ஏ.சி. கோச்சில் கேட்காது.

 இரவு நேரத்தில் ஏ.சி. கோச்சில் பயணிக்கும் பொழுது எந்த ஸ்டேஷன் வந்திருக்கிறது என்பது அங்கிருக்கும் ஜன்னல் கண்ணாடி வழியே தெளிவாகத் தெரியாது. சென்னையிலிருந்து திருச்சிக்கு பல்லவன் எக்ஸ்பிரஸில் செல்லும் பொழுது, இப்படி எந்த ஸ்டேஷன் என்று தெரியாமல் அவஸ்தை படுவோம். டெக்னாலஜி எத்தனையோ வளர்ந்திருக்கிறது எந்த ஸ்டேஷன் வந்திருக்கிறது என்பதை டிஜிட்டல் டிஸ்பிலே செய்ய ஏற்பாடு செய்யலாம், அல்லது, அறிவிக்கலாம்.