கணம்தோறும் பிறக்கிறேன் 

Saturday, April 27, 2024

ரா.கி.ரங்கராஜனின் சிறுகதையும், கத்தரிக்காய் மோர்குழம்பும், நானும்

ரா.கி.ரங்கராஜனின் சிறுகதையும், கத்தரிக்காய் மோர்குழம்பும், நானும்:

நான் ஒன்பது வயதிலிருந்தே தொடர் கதைகள் படிக்க ஆரம்பித்து விட்டேன். எங்கள் வீட்டில் ஆனந்த விகடன் வாங்குவார்கள், எங்கள் வீட்டிற்கு அருகில் இருந்த ஐயங்கார் மாமி வீட்டில் கல்கி வாங்குவார்கள், எங்கள் வீட்டிற்கு பக்கத்தில் பிச்சா பாட்டி என்று ஒருவர் இருந்தார். அவர்கள் வீட்டில் குமுதம் வாங்குவார்கள். பிச்சா பாட்டியின் மாப்பிள்ளை ரமணி என்பவருக்கு அத்தனை சின்ன வயதில் நான் புத்தகங்களை அவ்வளவு சீரியஸாக படித்தது மிகவும் ஆச்சர்யமாக இருந்தது போல.  ஞாயிரன்று  குமுதம் வந்ததும், அவர், “பானு குமுதம் வந்தாச்சு" என்று அழைப்பார். அவர்கள் வீட்டில் ஒவ்வொரு ஞாயிறும் காலையில் மசால் தோசை செய்வார்கள். சில நாட்கள் எனக்கும் கிடைக்கும். ஒவ்வொரு வாரமும் அவர்கள் வீட்டிற்குச் சென்று மசால் தோசை சாப்பிடக் கூடாது  என்று அம்மா திட்டுவாள்.

ஒரு வாரம் குமுதத்தில் ரா.கி.ரங்கராஜன் கதை ஒன்று படித்தேன். அதில் பத்து வயதான பாலு என்னும் சிறுவனின் தந்தை இறந்துவிட, அவனுடைய அம்மா ஒரு உறவினர் வீட்டில் இருக்க, அவனை அவன் சித்தப்பா அழைத்துக் கொண்டு வருவார். அவன் வந்ததும் அவனுடைய சித்தி வேலைக்காரியை நிறுத்தி விடுவாள். அதனால் வீட்டு வேலைகள் எல்லாம் பாலுவின் சின்னத் தலையில் இறங்கின என்று ரா.கி.ரா எழுதியிருப்பார். ஒரு நாள் அவர்கள் வீட்டில் கத்தரிக்காய் மோர்க்குழம்பு செய்ய வேண்டி வரும். பாலு அதற்காக கத்தரிக்காயை நறுக்கும் பொழுது, தன் விரலை நறுக்கிக் கொண்டு விடுவான். அதோடு மோர்க்குழம்பிற்காக தேங்காய் மற்றும் மிளகாய் வற்றலை அம்மியில் அரைக்கும் பொழுது, வெட்டுப்பட்ட விரல் எரியும். அதை பொறுத்துக் கொண்டு பிறகு கைக்கு கட்டுப் போட்டுக் கொள்வான். அடுத்த நாள் அவனுடைய அம்மா வருவாள். அம்மாவிற்கு எதிரே மிகவும் பாசமாக இருப்பது போல சித்தி நடிப்பாள். அம்மாவை பஸ் ஏற்றிவிட செல்லும்பொழுது, தன் கை காயம் அம்மா கண்ணில் பட்டுவிடக் கூடாது என்று தன் கையை ட்ரெளசர் பாக்கெட்டில் விட்டு மறைத்துக் கொள்வான். அவனிடம் அம்மா, பாடங்களில் எத்தனை மார்க் வாங்குகிறான் என்று கேட்பாள், தான் வாங்கிய மார்க்குகளை கூறிய பாலு படிக்க முடிந்திருந்தால் இன்னும்  அதிகம் மார்க்குகள் வாங்கியிருப்பேன் என்று நினைத்துக் கொள்வான். இப்படிச் செல்லும் அந்தக் கதை என்னை அதிகம் பாதித்து விட்டது.

வீட்டிற்கு வந்தால், சாப்பாட்டு நேரம். சாப்பிட உட்காரச் சொன்னார்கள். எதேச்சையாக எங்கள் வீட்டிலும் அன்று கத்தரிக்காய் மோர்க்குழம்பு. அப்போதெல்லாம் எங்கள் வீட்டில் சமையல் காரமாக இருக்கும். காரமான அந்தக் குழம்பை சாப்பிட்ட எனக்கு, இதை சாப்பிடும் பொழுதே இவ்வளவு எரிகிறதே, பாவம் அந்த பாலு, வெட்டுப்பட்ட விரலோடு, இதற்காக மிளகாயை அரைத்திருக்கிறான், அவனுக்கு எப்படி எரிந்திருக்கும்? என்று தோன்றியது, அவ்வளவுதான், கண்களிலிருந்து பொல பொலவென்று நீர் கொட்டியது. என் பக்கத்தில் உட்கார்ந்திருந்த என் மாமா, “ஏன் அழற?” என்றார். அம்மாவும்,”ஏண்டி அழற?” என்றார். கதை படித்துவிட்டு அழுகிறேன் என்றால் அவ்வளவுதான், திட்டு கிடைக்கும், ஏற்கனவே எப்போது பார்த்தாலும் கதை புத்தகம் படிக்கிறேன் என்று திட்டு வாங்கிக் கொண்டிருந்தேன். அதனால் எதுவும் பதில் சொல்லவில்லை.

சமையலில் காரத்தை குறைக்க வேண்டும் என்று பாட்டியிடம் வலியுறுத்திக் கொண்டிருந்த மாமா, மோர்குழம்பின் காரம்தான் என் கண்களில் நீரை வரவழைத்து விட்டது என்று நினைத்து, “குழம்பு காரமா இருக்கா?” என்று கேட்டதும் நான் ஆமாம் என்று தலை ஆட்டி விட்டேன். அவ்வளவுதான், “குழந்தை கண்ணில் தண்ணீர் வருமளவிற்கு இப்படியா காரமாக சமைப்பீர்கள்?” என்று பாட்டியை திட்ட ஆரம்பித்து விட்டார். அதன் பிறகு பல வருடங்களுக்கு கத்தரிக்காய் மோர்க்குழம்பு சாப்பிட நேரும் பொழுதெல்லாம் எனக்கு அந்த பாலுவின் நினைவு வந்து தொண்டை அடைக்கும்.