ரா.கி.ரங்கராஜனின் சிறுகதையும், கத்தரிக்காய் மோர்குழம்பும், நானும்:
நான்
ஒன்பது வயதிலிருந்தே தொடர் கதைகள் படிக்க ஆரம்பித்து விட்டேன். எங்கள் வீட்டில் ஆனந்த
விகடன் வாங்குவார்கள், எங்கள் வீட்டிற்கு அருகில் இருந்த ஐயங்கார் மாமி வீட்டில் கல்கி
வாங்குவார்கள், எங்கள் வீட்டிற்கு பக்கத்தில் பிச்சா பாட்டி என்று ஒருவர் இருந்தார்.
அவர்கள் வீட்டில் குமுதம் வாங்குவார்கள். பிச்சா பாட்டியின் மாப்பிள்ளை ரமணி என்பவருக்கு
அத்தனை சின்ன வயதில் நான் புத்தகங்களை அவ்வளவு சீரியஸாக படித்தது மிகவும் ஆச்சர்யமாக
இருந்தது போல. ஞாயிரன்று குமுதம் வந்ததும், அவர், “பானு குமுதம் வந்தாச்சு"
என்று அழைப்பார். அவர்கள் வீட்டில் ஒவ்வொரு ஞாயிறும் காலையில் மசால் தோசை செய்வார்கள்.
சில நாட்கள் எனக்கும் கிடைக்கும். ஒவ்வொரு வாரமும் அவர்கள் வீட்டிற்குச் சென்று மசால்
தோசை சாப்பிடக் கூடாது என்று அம்மா திட்டுவாள்.
ஒரு
வாரம் குமுதத்தில் ரா.கி.ரங்கராஜன் கதை ஒன்று படித்தேன். அதில் பத்து வயதான பாலு என்னும்
சிறுவனின் தந்தை இறந்துவிட, அவனுடைய அம்மா ஒரு உறவினர் வீட்டில் இருக்க, அவனை அவன்
சித்தப்பா அழைத்துக் கொண்டு வருவார். அவன் வந்ததும் அவனுடைய சித்தி வேலைக்காரியை நிறுத்தி
விடுவாள். அதனால் வீட்டு வேலைகள் எல்லாம் பாலுவின் சின்னத் தலையில் இறங்கின என்று ரா.கி.ரா
எழுதியிருப்பார். ஒரு நாள் அவர்கள் வீட்டில் கத்தரிக்காய் மோர்க்குழம்பு செய்ய வேண்டி
வரும். பாலு அதற்காக கத்தரிக்காயை நறுக்கும் பொழுது, தன் விரலை நறுக்கிக் கொண்டு விடுவான்.
அதோடு மோர்க்குழம்பிற்காக தேங்காய் மற்றும் மிளகாய் வற்றலை அம்மியில் அரைக்கும் பொழுது,
வெட்டுப்பட்ட விரல் எரியும். அதை பொறுத்துக் கொண்டு பிறகு கைக்கு கட்டுப் போட்டுக்
கொள்வான். அடுத்த நாள் அவனுடைய அம்மா வருவாள். அம்மாவிற்கு எதிரே மிகவும் பாசமாக இருப்பது
போல சித்தி நடிப்பாள். அம்மாவை பஸ் ஏற்றிவிட செல்லும்பொழுது, தன் கை காயம் அம்மா கண்ணில்
பட்டுவிடக் கூடாது என்று தன் கையை ட்ரெளசர் பாக்கெட்டில் விட்டு மறைத்துக் கொள்வான்.
அவனிடம் அம்மா, பாடங்களில் எத்தனை மார்க் வாங்குகிறான் என்று கேட்பாள், தான் வாங்கிய
மார்க்குகளை கூறிய பாலு படிக்க முடிந்திருந்தால் இன்னும் அதிகம் மார்க்குகள் வாங்கியிருப்பேன் என்று நினைத்துக்
கொள்வான். இப்படிச் செல்லும் அந்தக் கதை என்னை அதிகம் பாதித்து விட்டது.
வீட்டிற்கு
வந்தால், சாப்பாட்டு நேரம். சாப்பிட உட்காரச் சொன்னார்கள். எதேச்சையாக எங்கள் வீட்டிலும்
அன்று கத்தரிக்காய் மோர்க்குழம்பு. அப்போதெல்லாம் எங்கள் வீட்டில் சமையல் காரமாக இருக்கும்.
காரமான அந்தக் குழம்பை சாப்பிட்ட எனக்கு, இதை சாப்பிடும் பொழுதே இவ்வளவு எரிகிறதே,
பாவம் அந்த பாலு, வெட்டுப்பட்ட விரலோடு, இதற்காக மிளகாயை அரைத்திருக்கிறான், அவனுக்கு
எப்படி எரிந்திருக்கும்? என்று தோன்றியது, அவ்வளவுதான், கண்களிலிருந்து பொல பொலவென்று
நீர் கொட்டியது. என் பக்கத்தில் உட்கார்ந்திருந்த என் மாமா, “ஏன் அழற?” என்றார். அம்மாவும்,”ஏண்டி
அழற?” என்றார். கதை படித்துவிட்டு அழுகிறேன் என்றால் அவ்வளவுதான், திட்டு கிடைக்கும்,
ஏற்கனவே எப்போது பார்த்தாலும் கதை புத்தகம் படிக்கிறேன் என்று திட்டு வாங்கிக் கொண்டிருந்தேன்.
அதனால் எதுவும் பதில் சொல்லவில்லை.
சமையலில்
காரத்தை குறைக்க வேண்டும் என்று பாட்டியிடம் வலியுறுத்திக் கொண்டிருந்த மாமா, மோர்குழம்பின்
காரம்தான் என் கண்களில் நீரை வரவழைத்து விட்டது என்று நினைத்து, “குழம்பு காரமா இருக்கா?”
என்று கேட்டதும் நான் ஆமாம் என்று தலை ஆட்டி விட்டேன். அவ்வளவுதான், “குழந்தை கண்ணில்
தண்ணீர் வருமளவிற்கு இப்படியா காரமாக சமைப்பீர்கள்?” என்று பாட்டியை திட்ட ஆரம்பித்து
விட்டார். அதன் பிறகு பல வருடங்களுக்கு கத்தரிக்காய் மோர்க்குழம்பு சாப்பிட நேரும்
பொழுதெல்லாம் எனக்கு அந்த பாலுவின் நினைவு வந்து தொண்டை அடைக்கும்.
ஹா.. ஹா... ஹா... நல்ல அனுபவம், நல்ல சமாளிப்ஸ்!
ReplyDelete:))
Deleteசில விஷயங்களை நினைக்கும்போது இப்படி தொடர்புடைய விஷயங்களும் நினைவுக்கு வருவது எனக்கும் நிகழும்.
ReplyDeleteநானும் சிறு வயதிலிருந்தே புத்தகங்கள் படிக்கத்தொடங்கி விட்டேன். ஹாலில் அலமாரி நிறைய புத்தகங்கள் இருந்தால் யார்தான் படிக்க மாட்டார்கள்?!
ReplyDeleteஎங்கள் வீட்டில் அப்படியெல்லாம் அலமாரி நிறைய புத்தகங்கள் இல்லை. ஊரில் தாத்தா நிறைய புத்தகங்கள் வைத்திருந்தார். அவையெல்லாம் ஆன்மீகம் சம்பந்தபட்டவை.
Deleteவணக்கம் சகோதரி
ReplyDeleteபதிவு அருமை. தங்களது சிறு. வயது அனுபவங்கள் சுவாரஸ்யமாக இருந்தது. நீங்கள் கதைகள் படித்தது வீட்டுக்குத் தெரியாமல் மோர் குழம்பில் காரம் அதிகமென சமாளித்து விட்டீர்கள். சிறு வயது நினைவுகள் இப்போதும் இப்படி நம் வாழ்க்கையோடு ஒத்து வருவது சுவாரஸ்யமான நினைவுகள்.
எனக்கும் சிறுவயதில் இந்த மாதிரி கதைகள் படிக்கும் ஆர்வம் இருந்தது. ஆனால் வீட்டில் எந்த புத்தகமும் வாங்கியதில்லை. அம்மா அவர்கள் காலத்தில் வாங்கியதில் பிரபல நாவலாசிரியர்கள் எழுதிய தொடர் கதைகளை பைண்டிங் பண்ணி வைத்து கொண்டிருந்தார்கள். அதை பொழுது போகாத சமயங்களில் எடுத்துப் படித்து கதைச் சுருக்கமாக சொல்வார்கள். பின் பள்ளி இறுதி படித்து முடித்த பின் எங்கள் அண்ணா அவருக்காக இந்த மாதிரி புத்தகங்கள் வாங்க ஆரம்பித்தார். அதில், மாலைமதியில் வரும் நாவல்கள் நிறைய படித்துள்ளேன். கதைகள் என்றாலே படிக்க இப்பவும் எனக்கு விருப்பந்தான். ஆனால் முன்பு போல படிக்க நேரங்கள் கிடைக்கவில்லை. என் மனதில் தோன்றுபவைகளை அவ்வப்போது எழுதி, (அந்த பதினாறு வயதிலிருந்தே) இப்போதும் உதிப்பதை ஏதேதோ உளறியபடி இருக்கிறேன். (பொறுத்துக் கொள்வது நம் வலையுலக நட்புகள்தானே.. என்ற ஒரு தைரியம்தான். ஹா ஹா) அருமையான பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
புத்தகங்கள் அதிகம் படித்ததில்லை என்று தி.கீதாவும் சொல்லுவார்.ஆனால் நீங்கள் இருவருமே நல்ல எழுத்தாளர்கள். நன்றி.
Deleteஓ நீங்கள் உங்கள் பதிவில் 'நான் படிச்ச கதை' + சுயசரிதை எழுதுவதில் மும்முரமாகி விட்டீர்களோ! நான் சனியன்று எங்கள் பிளாகில் உங்களை எதிர்பார்த்தேன்.
ReplyDeleteஅனுபங்களை படித்த கதையுடன் கோர்த்து தந்தது நன்றாக உள்ளது. இந்த உத்தி புதியது. தொடரட்டும் இம்முயற்சி.
Jayoakumar
நன்றி சார். சனிக்கிழமை நான் படிச்ச புத்தகம்/கதைக்கு சில பதிவுகள் எழுதி வைத்திருக்கிறேன். ஆனால் உங்களைப் போல அதைச் செய்ய முடியாது என்னும் தயக்கத்தால் அனுப்பாமல் இருக்கிறேன். பாராட்டுக்கு மீண்டும் நன்றி.
Deleteசின்ன வயது நினைவுகள் அருமை. நானும் சின்ன வயதில் கதைகள் படிக்க ஆரம்பித்து விட்டேன்.
ReplyDeleteஎங்கள் வீட்டிலும் விகடன் வாங்குவார்கள்.
நன்றி. பெயரை தெரிவிப்பதில் என்ன தயக்கம்?
ReplyDelete