கணம்தோறும் பிறக்கிறேன் 

Thursday, October 1, 2026

காணொளிகள் - பாட் காஸ்ட் தினம்!

  


காணொளிகள் - பாட் காஸ்ட் தினம்!


சுதா சேஷய்யன் அவர்களின் உரைகள் எனக்கு மிகவும் பிடிக்கும். சமஸ்கிருதம், தமிழ் இரண்டு இலக்கியங்களிலும் ஆழ்ந்த புலமை, அனாவசிய அரசியல், ஜோக்ஸ் போன்றவை கிடையாது. இதுவரை நாம் கேள்விப்படாத புதிய தகவல்கள் இருக்கும். சென்னையில் பிரதி மாதம் மூன்று நாட்கள் மஹாபாரதம் சொற்பொழிவாற்றுகிறார். மதுரத்துவனி என்னும் அமைப்பு ஏற்பாடு செய்திருக்கும் இன்நிகழ்ச்சியில் வியாச பாரதம், வில்லிப்புத்தூராரின் வில்லி பாரதம் இந்த இரண்டிலும் மேற்கோள் காட்டி விளக்குகிறார். அவ்வப்பொழுது நம் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இந்த பாரதக் கதையில் என்னென்ன மாற்றங்கள் என்பதையும் விளக்குகிறார். இதன் காணொளி யூடியூபில் கிடைக்கிறது.   


பாண்டவர்கள் ஐவரும் தேவர்களின் அம்சமாக பிறந்தவர்கள் என்பது மட்டுமே தெரியும். அவர்களுடைய நட்சதிரங்கள் தெரியுமா? 

யுதிஷ்டிரன் சூரியன் துலா ராசியில் இருக்கும்பொழுது அதாவது ஐப்பசி மாதத்தில் பஞ்சமி திதியில் கேட்டை நட்சத்திரத்தில் அபிஜித் முகூர்த்தத்தில் பிறந்தார். 

பீமன் அதே ஐப்பசி மாதத்தில் திரயோதசி திதியில் மகம் நட்சத்திரத்தில் பிதுர் லக்னத்தில் பிறந்தான். 

அர்ச்சுனன் பங்குனி மாதத்தில் உத்திர நட்சத்திரத்தில் பிறந்தான். பங்குனி மாதத்தில் பிறந்ததால்தான் அவனுக்கு பல்குனன் என்றும் ஒரு பெயர் உண்டு. 

காந்தாரியின் தலைமை பணிப்பெண்ணுக்கும், திருதிராஷ்டிரனுக்கும் பிறந்த யுயுத்ஸு என்பவனுக்கு துரியோதனின் செயல்பாடு பிடிக்காமல் போனதால் அவன் பாரத போரில் துரியோதனனுக்கு எதிராக பாண்டவர்களின் பக்கம் நின்று யுத்தம் செய்தான் போன்ற இதுவரை கேட்டறியாத தகவல்களை அவருடைய மஹாபாரத சொற்பொழிவில் கேட்க முடிகிறது.  

இதையெல்லாம் தெரிந்து கொண்டு நாம் என்ன செய்யப் போகிறோம்? மஹாபாரதக் கதை நமக்கு தெரிவிப்பது என்ன என்பதுதானே முக்கியம்? என்று சொன்னால் அதிலும் எந்தக் குறையும் கிடையாது. மஹாபாரதத்தின் ஒவ்வொரு நிகழ்வும் உணர்த்தும் கருத்தை அழகாக விளக்குகிறார். கேட்டுப் பாருங்கள்.  

சமீபத்தில் மிகவும் ரசித்துப் பார்த்த மற்றொரு காணொளி, சித்ரா லட்சுமணன் அவர்களின் யூ டியூப் சேனலில் அவர்  ஓய்வு பெற்ற சிறைச்சாலை டி.ஐ.ஜி. திரு ராமசந்திரன் அவர்களை  எடுத்தபேட்டி.   

சிறைச்சாலை என்பதை பற்றிய நம்முடைய பல அனுமானங்களை மாற்றுகிறது இந்த காணொளி. முன்பெல்லாம் சிறையில் இருக்கும் கைதிகளுக்கு காலை உணவு கஞ்சிதானாம். சிறைச்சாலையிலேயே விளைவிக்கப் படும் முள்ளங்கி, பாகற்காய் போன்றவற்றைத்தான் சமையலுக்கு பயன் படுத்துவார்களாம். இப்போது ஃபைவ் ஸ்டார் சாப்பாடு என்கிறார். காலை உணவு இட்லி, உப்புமா, பொங்கல் போன்றவையும் மதிய உணவிற்கு வாரத்தில் மூன்று நாட்கள் சிக்கன் உண்டாம்.   இந்த சேவை கலைஞரின் உபயம்.  

கைதிகளுக்கு வழங்கப்படும் உணவின் தரத்தை மேம்படுத்த வேண்டும் என்பது கருணாநிதியின் கைங்கர்யமாம். அவர் முதல்வராக வந்ததும்தான் கைதிகளுக்கு காலையில் உப்புமா வழங்க வேண்டும் என்று ஆணை பிறப்பித்தாராம். அதற்கு அடுத்து வந்தவர்கள் சும்மா இருப்பார்களா? வொய் ஒன்லி உப்புமா? வொய் நாட் பொங்கல்? என்று கூட்டி,இப்போது மதிய உணவில் வாரத்தில் மூன்று நாட்கள் சிக்கன் என்று வந்து நிற்கிறது. 

இந்த உணவு பிடிக்காவிட்டால் உள்ளே இருக்கும் காண்டீனில் வாங்கி சாப்பிட்டுக் கொள்ளலாமாம். கைதிகள் வாரத்திற்கு ரூ.400/- செலவழிக்கலாமாம். அதற்கான தொகையை வீட்டிலிருந்து வரவழைத்துக் கொள்ள அனுமதிஉண்டாம்.  

அதைப்போலு முன்பு பொருளாதார நிலையை கருத்தில் கொண்டு, வரி கட்டுபவராக இருந்தால், கோர்டில் விண்ணப்பித்து ஏ.கிளாசுக்கு மாற்றிக் கொள்ளலாம்.  மு.க. அதை அரசியல் கைதிகள் எல்லோருக்கும் ஏ.கிளாஸ் சிறை என்று மாற்றினாராம். வாழ்க, ஒழிக என்று கத்தி, பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவித்துவிட்டு சிறைக்குச் சென்றாலும் ஏ.கிளாஸ்தான். வெளங்கிடும்!    

சிறைக்கைதிகளுக்கு வழங்கப் படும் கவுன்சிலிங் போன்றவை திட்டமிட்டு கொலை செய்த குற்றவாளிகளுக்கும், குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளில் ஈடுபட்டவர்களுக்கும் கிடையாதாம்.  

நான் விரும்பி கேட்கத் தொடங்கியிருக்கும் இன்னும் இரண்டு காணொளிகளில் ஒன்று வேல்ராஜன் கிரைம் டைரிஸ் என்பதும், சரித்திர தகவல்களைத் தரும் சரண்யா துராடி என்னும் சீரியல் நடிகை வழங்கும் காணொளிகளும் ஆகும்.  


‘வேல்ராஜன் கிரைம் டைரிஸ்’ என்பதில் நம் நாடு மற்றும் வெளிநாடுகளில் நடந்த குற்றங்கள் எப்படி துப்பு துலக்கப் பட்டன என்பதை கதை போல சொல்கிறார். பெரும்பான்மையான குற்றங்கள் நிகழ காரணமாக பெண்ணாசையும் (ஆணாசையும்தான். முறை தவறிய உறவுகள்), பொன்னாசையும்தான் இருக்கின்றன. ஒரு சின்ன தடயத்தை வைத்துக் கொண்டு குற்றவாளியை கண்டறியும் ை காவல்துறையின் திறம்ு வியப்பாக இருக்கிறது.   

சரண்யா துராடி

சரண்யா துராடி விஜய் டி.வி. சீரியல் ஒன்றில் நடிக்கிறாராம். நான் சீரியல்கள் பார்ப்பதில்லை என்பதால் தெரியவில்லை. ஆனால் அவருடைய காணொளிகள் மிகவும் பிடிக்கும்.  சரித்திர நிகழ்வுகளையும், சரித்திர புருஷர்களையும் பற்றி அழகான குரலில் கடகடவென அவர் விவரிப்பது கேட்க ரசனையாக இருக்கிறது. மற்ற யூ டியூபர்களைப் போல அவர் என்னுடைய சேனலை லைக் பண்ணுங்க, ஷேர் பண்ணுங்க என்றெல்லாம் சொல்வது கிடையாது. அவருடைய கன்டெண்டை தயார் பண்ண எந்த எந்த புத்தகங்களை படித்தார் என்று மட்டும் சொல்கிறார்.  

இதைத்தவிர, துஷ்யந்த் ஸ்ரீதர், நித்திலன் தண்டபாணியின் காணொளிகளையும் கேட்பேன். நித்திலன் தண்டபாணியின் இறப்பிற்கு பிறகு ஆன்மாவுக்கு என்ன நிகழ்கிறது, பிரபஞ்சத்தின் ரகசியங்கள் போன்றவற்றைப் பற்றி பேசுவார்.  

ஒரே சுவையில் சாப்பிட முடியுமா? வித்தியாசங்கள் வேண்டாமா? அதனால் டாக்டர்.காந்தராஜ், கிருஷ்ணவேல் போன்றவர்களின் உளறல்களையும் கேட்க முயற்சித்து நிறுத்தி விடுவேன். சில சமயம் கோபம் வரும், சில சமயம் சிரிப்பு வரும்.  டாக்டர்.ஷாலினியின் ‘லொட்டு லொசுக்கு’ பார்ப்பதுண்டு. இப்போதெல்லாம் சினிமா வீடியோக்களை தவிர்த்து விடுகிறேன். ஜோசியம் சம்பந்தப்பட்ட காணொளிகளுக்கும் big no.  அரசியல், பொருளாதாரம் சம்பந்தப்பட்ட காணொளிகளும் கேட்பதுண்டு. இதைத்தவிர ஆடியோ புக்ஸ் கேட்பதுண்டு.  பிடித்த மற்றொரு பாட் காஸ்டர் ரம்யா வாசுதேவன். 

இவ்வளவு பாட் காஸ்ட் கேட்டால் வீட்டு வேலைகளை யார் செய்வார்கள்? என்ற சந்தேகம் சிலருக்கு வரலாம். இந்த காணொளிகளை கேட்டுக் கொண்டேதான் வேலைகள் செய்வேன். சமைக்கும் பொழுது ஆன்மீக விஷயங்கள், குளிக்கும் பொழுதும், துணி மடிப்பது, அயர்ன் பண்ணுவது போன்ற வேலைகள் செய்யும் பொழுதும் மற்ற கணொளிகள். ப்ளு டூத் ஸ்பீக்கரில் இணைத்துக்கொண்டு விடுவேன். இதைத்தவிர தொலைகாட்சியில் சினிமா, சீரீஸ் பார்ப்பது, படிப்பது, எழுதுவது, உம்மாச்சி கும்பிடுவது, வெளியே செல்வது... நான் ரொம்ப பிசி!:))

இன்றைக்கு பாட் காஸ்ட் தினமாம். இன்று இதைப் போட வேண்டும் என்ற எண்ணம் எதுவும் இல்லை, யதேச்சையாக அமைந்து விட்டது. என்னுடய இந்தப் பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் லைக் பண்ணுங்க, ஷேர் பண்ணுங்க, கமெண்ட் பண்ணுங்க.