குமுதம் ஆஃபிசில் கோபாலன்
ஆசிரியர் : பாமா கோபாலன்
புஸ்தகா வெளியீடு
குமுதத்தில் நிருபராக பணியாற்றிய பாமா கோபாலன் அவர்கள் தன்னுடைய அனுபவங்களை எழுதி இருக்கும் நூல் தான் குமுதம் ஆஃபிஸில் கோபாலன். இதில் அவர் ஒரு நிருபராக செய்திகளை சேகரிக்க பட்ட பாடு, அவை உதவி ஆசிரியர்களாலும் ஆசிரியராலும் எப்படி செம்மையாக்கப்பட்டன என்பதை யெல்லாம் சுவைப்படை எழுதி இருக்கிறார்.
குமுதத்தின் ஆசிரியர் திரு எஸ்.ஏ.பி. இணை ஆசிரியர் திரு ரா.கி. ரங்கராஜன், துணை ஆசிரியர்கள் ஜ.ரா. சுந்தரேசன் என்னும் பாக்கியம் ராமசாமி மற்றும் புனிதன் போன்றவர்களை பற்றியும் அதன் பிறகு சுஜாதா, மாலன் இவர்கள் ஆசிரியர்களாக இருந்த பொழுது இவர் அவர்களோடு சேர்ந்து பணியாற்றிய அனுபவங்களையும் மிகவும் சுவாரஸ்யமாக பகிர்ந்து இருக்கிறார்.
முதத்தில் வெளியான ஒவ்வொரு புது பகுதியும் ஆசிரியருக்கு எப்படி தோன்றியது என்பதை அறிவதற்கு சுவாரஸ்யமாக இருக்கிறது. அவர் படித்த ஒரு வரியில் இருந்தோ அல்லது இவர்கள் சொல்லும் விஷயங்களில் இருந்தோ இன்ஸ்பயர் ஆகி, அது குறித்து செய்திகளை திரட்டச் சொல்வாராம். ஒருமுறை மெரினா பீச்சில் இருக்கும் சிலைகள் அழுக்காக இருக்கிறதே அவற்றை சுத்தப்படுத்தலாமே என்று யாரோ ஒரு வாசகர் எழுதப் போக, சில கல்லூரி மாணவர்களை அழைத்துக் கொண்டு பீச்சிற்கு சென்று சிலைகளை சுத்தம் செய்யச் சொன்னாராம். வள்ளுவர் சிலையை முடித்து உழைப்பாளர் சிலையை அந்த மாணவர்கள் சுத்தம் செய்து கொண்டிருக்கும் பொழுது போலீஸ் வந்துவிட்டதாம். போலீசை கண்டதும் மாணவர்கள் எங்கோ கும்பலில் மறைந்து விட்டார்களாம். இவரையும் போட்டோகிராஃபரையும் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்று விசாரித்த அதிகாரி ஒரு காலத்தில் பத்திரிகையாளராக இருந்தவராம். பர்மிஷன் இல்லாமல் அரசாங்கம் செய்ய வேண்டிய வேலையை கையில் எடுப்பதில் இருக்கும் ஆபத்துகளை கூறி அனுப்பினாராம். அதே போலத்தான் பொழுது போகாத பொம்மு என்று இவர் எழுதிய ஒரு விஷயம் எப்படி வந்தது என்றும் கூறியிருக்கிறார்.இப்படி பல விஷயங்கள். குமுதத்தை ஒரு வாரம் ரா.கி. ரங்கராஜன் தயாரிப்பாராம் ஒரு வாரம் புனிதன் தயாரிப்பாராம் ஒரு வாரம் ஜ.ரா. சுந்தரேசன் தயாரிப்பாராம் இந்த மூன்று பேருடைய சிறப்பு இயல்புகள் அவர்கள் எப்படி எல்லாம் செய்தியை திரட்ட சொல்வார்கள் என்று இவர் எழுதியிருப்பது மிகவும் ரசிக்கும் படியாக இருக்கிறது.
காஞ்சி சங்கர மடத்தின் பீடாதிபதியாக இருந்த ஜெயேந்திரர் ஒரு முறை மடத்தை விட்டு வெளியேறினார். அப்போது ரா.கி.ரங்கராஜன் அவர்கள் இவரிடம் காஞ்சிபுரத்திற்குச் சென்று அங்கு "பூ விற்பவர், சாலையோர உணவு விடுதி நடத்துகிறவர்கள் போன்ற எளிய மனிதர்களிடம் பேட்டி எடுத்துக்கொண்டு வாருங்கள். மொத்தம் எட்டு பேர், நான்கு ஆண்கள்,நான்கு பெண்கள் இருக்க வேண்டும்" என்றாராம். "ஜெயேந்திரர் பற்றிய செய்தி வந்துவிடக் கூடாது என்பது நிபந்தனையாம். அதை 'என்னதான் நடக்கிறது காஞ்சிபுரத்தில்?' என்று விளம்பரம் செய்து வெளியிட்டாராம். மற்ற பத்திரிகைகள் வரிந்து வரிந்து ஜெயேந்திரரைப் பற்றி எழுத, அந்த விஷயத்தையே தொடாமல் மாற்றி யோசித்ததுதான் குமுதம். சில சமயங்களில் இவர் நீளமாக எழுதிக் கொண்டு வரும் விஷயங்களை எடிட் செய்து ரத்தின சுருக்கமாக வெளியிடுவாராம் ரா.கி.ர.
தமிழ் ஆசிரியராக இருந்த புனிதன் தயாரிக்கும் இதழில் நகைக் சுவைக்கும், தமிழ் இலக்கிய செய்திகளுக்கும் முக்கியத்துவம் தருவாராம்.ஏதாவது ஒரு விஷயத்தை சொன்னால் அதை உடனடியாக செய்து முடிக்க வேண்டும் என்பாராம். அவர் தயாரிக்கும் பொழுது குமுதம் அலுவலகமே சுறுசுறுப்பாக இருக்குமாம். இசை ஞானம் கொண்ட ஜ.ரா.சு. ஏதாவது பாடலை முணுமுணுத்துக் கொண்டேயிருப்பாராம்.
குமுதம் ஆசிரியர் எஸ்ஏபி அவர்கள் செய்யும் பொழுது அவர் நடுத்தர உயரத்தினராக இருப்பாரோ என்று எனக்குத் தோன்றும் ஆனால் சற்று குள்ளம் என்றுதான் இவர் குறிப்பிட்டு இருக்கிறார். மிகவும் மென்மையாக பேசுவாராம். டெலிஃபோனை எடுத்ததும் ஹலோ என்று சொல்லாமல், ஹரி ஓம் என்பாராம். பல இடங்களில் ரா.கி.ரங்கராஜன், ஜ்.ரா.சுந்தரேசன், புனிதன் ஆகிய மூவருமே ஆசிரியரும் மீது வைத்திருந்த மரியாதையும் அன்பும் வெளிப்படுத்தப் பட்டிருக்கிறது.
குமுதத்தில் நடிகர்கள் பாடகர்கள் போன்ற பிரபலமானவர்கள் சிறப்பு ஆசிரியர்களாக இருந்து தயாரித்த இதழ்கள் வந்ததாம் அப்பொழுது அவர்களுக்கு 20 பக்கங்கள் ஒதுக்குவார்களாம். அந்த இருபது பக்கங்களில் அந்த பிரபலம் அவர்களுக்கு பிடித்த விஷயங்களைப் பற்றி எழுதலாம், பேட்டி எடுக்கலாம், குறிப்புகள், ஆலோசனைகள் வழங்கலாம். எந்த பிரபலம் ஆசிரியராக இருந்து தயாரிக்கப் போகிறாரோ அவரிடம் பாமா கோபாலனை உதவியாசிரியர்களுள் ஒருவர் அறிமுகப்படுத்தி விடுவார்களாம் அதன் பிறகு அவர்களிடம் இருந்து விஷயங்களை சேகரித்துக் கொடுக்க வேண்டியது பாமா கோபாலனின் வேலை. அதைப் பற்றிய பல அனுபவங்கள் மிக மிக சுவாரசியமாக இருக்கின்றன.
கர்நாடக இசைப்பாடகி எம்.எல்.வசந்தகுமாரியின் இறுதி நாட்களில் இருந்தபொழுது அவர் கொடுத்த ஒரு பேட்டியை ரெகார்ட் செய்து கொண்டு வீட்டில் வந்து பார்த்தால் எதுவுமே பதிவாகவில்லையாம். கேஸ்ட்டின் அடி பாகத்தில் ஒரு சிறிய ஒட்டை இருந்திருக்கிறது. அதை அவர் மனைவி அடைத்துக் கொடுத்ததும் பதிவு செய்ய முடிந்ததாம்.
புனிதன் தயாரித்த ஒரு இதழுக்காக ஒரு கல்யாண மண்டபத்தில் யாரையும் தெரியாமல் அந்த கல்யாணத்தை அட்டென்ட் செய்து விட்டு அதைப் பற்றி எழுத வேண்டும் என்று ன்னாராம். அவரும் உடன் வந்திருக்கிறார். இவர்கள் ஒரு பரிசையும் வாங்கிக்கொண்டு அந்த மாப்பிள்ளை பையனிடம் கொடுத்துவிட்டு சாப்பிட்டு விட்டார்கள் ஆனால் திடீரென்று அந்த மாப்பிள்ளை பையன் இவரை அழைத்து நீங்கள் கொடுத்த கவரில் ஒரு புதிய நண்பன் என்று இருக்கிறது, எனக்கு யார் என்று தெர்யவில்லையே?" என்று கேட்டதும் இவர்கள் குமுதத்தில் இருந்து வந்திருக்கிறோம் என்று உண்மையைச் சொன்னார்களாம். அவர் சிரித்துக் கொண்டே நல்லது என்று விட்டு விட்டாராம்.
சுஜாதா ஆசிரியராக இருந்த பொழுது மிகவும் எளிமையாக பழகுவாராம். எளிய மனிதர்களின் ஒரு நாள் எப்படி இருக்கும் என்று அவர்கள் வீட்டிற்குச் சென்று கவனித்து எழுதச் சொன்னாராம். அவருக்கு வரும் கையெழுத்துப் பத்திரிகைகளை கொண்டு வந்து தந்து அவற்றிலிருந்த சுவையான விஷயங்களை எழுதச் சொன்னாராம். இஸ்லாமியர்கள் நடத்திய ஒரு கையெழுத்து பத்திரிகையில் 'முஸ்லிம்கள் அமாவாசையை அடிப்படையாக கொண்டுதான் அவர்களின் பண்டிகைகளை கொண்டாடுவார்கள் அதனால் அமாவாசைக்கும் அப்துல்காதருக்கும் சம்பந்தம் உண்டு' என்று வெளிவந்திருந்ததாம். அந்த செய்தியை குமுதத்தில் வெளியிட்டார்களாம்.
மாலன் ஆசிரியராக இருந்த பொழுது பாமாஜி அவர்களிடம், "உங்கள் மனைவியை ஐந்து ஒரு பக்க கதைகள் எழுத சொல்லுங்கள் அந்த ஐந்து கதைகளும் தனித்தனியாக இருக்க வேண்டும் ஆனால் ஒரு கதைக்கும் இன்னொரு கதைக்கும் தொடர்பு இருக்க வேண்டும், எந்த கதையில் இருந்து படிக்க ஆரம்பித்தாலும் அந்த கதை முற்றுப் பெற வேண்டும், கொஞ்சம் கஷ்டம் தான், ட்ரை பண்ணி பார்க்கலாமே" என்றாராம் அவருடைய மனைவியும் அந்த நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டு ஐந்து ஒரு பக்க கதைகள் எழுதினாராம். இந்த மாதிரி நாம் அறியாத அரிய விஷயங்கள் இந்த புத்தகத்தில் நிறைய இருக்கிறது.
ஒரு முறை ரா.கி.ர. இவரிடம் ஆர்.எஸ்.மனோகர் அவர் நாடங்களில் பயன்படுத்தும் கதையை குமுதத்தில் ஒரு பக்கத்தில் பிரசுரிக்கத் தோதாக புகைப்படம் எடுத்து வரச் சொன்னாராம். அந்த கதை வேறு உடைந்து இருந்ததாம். அதை எப்படியோ ஒட்டி, புகைப்படம் எடுத்து கொடுத்தால், அந்த படத்தை குமுதத்தில் 'ஆர்.எஸ்.மனோகரின் ஒரு பக்க கதை' என்று பிரசுரம் செய்திருந்தார்களாம் :)) (gathai ஐ kathai ஆக்கிய வார்த்தை விளையாட்டு)அதுதான் குமுதம்!
இவர் தகவல்களை திரட்டி கொண்டு வந்து மனைவியிடம் கொடுத்து விடுவாராம் மனைவி இரவு கண்விழித்து உட்கார்ந்து 11.30 மணியோ 12:00 மணியோ அதை டைப் அடித்துக் கொடுத்து விடுவாராம். அதைத்தவிர துணுக்குகள், ஒரு கதைகளும் குமுதத்தில் வேதா கோபாலன் எழுதிக் கொண்டிருந்தாராம். ஓரு சிறுகதைப் போட்டிக்கு வேதா கோபாலன் எழுதி அனுப்பிய கதை தேர்வானாலும், எடிட்டர், "அவரும்(வேதா கோபாலன்)நம் ஸ்டாஃப்தான்" என்று பரிசு கொடுக்கவில்லையாம்.
ஒவ்வொரு வெள்ளியன்றும் நடக்கும் லைப்ரரி மீட்டிங் பற்றிய செய்திகளும் சுவாரஸ்யம்.
பத்திரிகையுலகில் ந்ழைய விரும்பும் ஒவ்வொருவரும் இந்த புத்தகத்தை படிக்க வேண்டும். ஒரு கட்டுரையை எப்படி எழுத வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக இருக்கின்றன ஒவ்வொரு கட்டுரையும். உதாரணமாக கமலஹாசன் வீட்டிற்கு சென்றேன் என்று எழுதிவிடலாம் ஆனால் அவர் அப்படி எழுதவில்லை, 'கமலஹாசன் வீட்டிற்கு ஆட்டோவில் சென்றேன் கமலஹாசன் வீட்டிற்கு நேர் எதிரே ஆட்டோவை நிறுத்தினார். நான் இறங்கி சாலையை குறுக்கே கடந்து அங்கே சென்றேன்' என்று இத்தனை விவரமாக எழுதுகிறார் அந்த காட்சி நம் மனதிலே வருகிறது.
ரா.கி. ரங்கராஜன் தன்னோடு பேசியதை, 'ரா.கி. ரங்கராஜன் மாடிப்படி வளைவில் சாய்ந்து கொண்டு என்னோடு பேசினார்' என்றும், ஹேமமாலினி படியில் இறங்கி வந்தார் என்பதை அதிக மேக்கப் இல்லாமல் பளிச்சென்றிருந்தார். குழந்தைகளை மிஸ் பண்ணுகிறேன் என்று தோளை குலுக்கினார் என்றெல்லாம் அவர் அழகாக வர்ணித்திருக்கும் பொழுது ஒரு செய்தியை எப்படி சொல்ல வேண்டும் என்று நமக்கு புரிகிறது.
சுஜாதா ஆசிரியராக இருந்த பொழுது கட்டம் கட்டி, ஆசிரியர், இணை, துணை ஆசிரியர்கள் பெயர்களை போடும்பொழுது சிறப்பு நிருபர் என்று இவருடைய பெயரையும் போட்டாராம். சாதாரணமாக நிருபர்களின் பெயர்களை குறிப்பிட மாட்டார்களாம். முதல் முறையாக இவருக்கு அந்த கௌரவம் அளித்தாராம் சுஜாதா.
வரதராஜன் அவர்கள் எம்டியாக பொறுப்பேற்ற பிறகு ஒரு கம்பெனியை போல இந்த குமுதம் பத்திரிகையை நடத்த ஆரம்பித்தாராம். எல்லோருக்கும் அடையாள அட்டை வழங்கப்பட்டதாம். ஒவ்வொருவரும் காலை ஒன்பது முப்பதுக்கு கண்டிப்பாக வந்து விட வேண்டும் என்பராம். அதேபோல மாலை ஆறு முப்பது மணிக்கு எல்லோரும் கிளம்பி விட வேண்டும் என்பதிலும் மிகவும் கண்டிப்பாக இருந்தாராம். 6:30க்குப் பிறகு யாரும் இருப்பதை அவர் அனுமதிக்க மாட்டாராம் அப்படி சில மாறுதல்கள் கொண்டு வந்திருக்கிறார். மேலும் ஒவ்வொருவரும் அன்றைய தினம் என்னென்ன வேலைகளை முடிக்க வேண்டும் என்று ஒரு பிரிண்டட் ஷீட் கொடுக்கப்பட்டு விடுமாம். முடிக்காத வேலைகள் ஏன் முடிக்கப்படவில்லை என்பதற்கு காரணம் குறிப்பிடப்பட வேண்டுமாம்.
குமுதத்தில் ஒரு ஃப்ரீலான்ஸ்ராகப் பணியாற்றி, எடிட்டோரியில் கன்சல்டண்ட் என்ற அளவிற்கு உயர்ந்த பாமா கோபாலன் "நான் கற்ற பாடம், எந்த தகவலைத் தந்தாலும், துருவித் துருவி கேள்விகள் கேட்டு, எல்லா விவரங்களையும் சேகரித்த பின்னரே எழுதித் தர வேண்டும் என்பதுதன். இந்தமுறையில் நேர விரயமும், அலைச்சலும் குறைந்தன என்றால் மிகையில்லை." என்கிறார். குமுதத்தின் இணை ஆசிரியர்களில் ஒருவரான் புனிதன் ஒரு முறை, பேட்டி எடுப்பதை பற்றி, "கண்டிப்பாக இத்தனாம் தேதியில் இந்த பேட்டி வரும் என்று கமிட் ஆகி விடாதீர்கள், ஏதாவது காரணத்தினால் பிரசுரிக்க இயலாவிட்டால் பதில் சொல்ல வேண்டும். அடுத்த முறை பேட்டி எடுக்க முடியாமல் போய் விடும்" என்று அட்வைஸ் தந்தாராம். எத்தனை உபயோகமான அட்வைஸ்! என்கிறார். உபயோகமான புத்தகம்.
