சாப்பாட்டு ராமன்
ராமனுடைய வாழ்க்கையில் அவன் சாப்பிட்ட மூன்று சாப்பாடுகள் மிகவும் சிறப்பானவை. முதல் சாப்பாடு கங்கை கரையில் அவனைப் பார்க்க ஓடோடி வந்த குகன் கொண்டு வந்த தேனையும், மீனையும் அன்போடு ஏற்றுக் கொள்கிறான். தேன் அவனுடைய பக்தியின் உயர்வையும், மீன் அன்பின் ஆழத்தையும் உணர்த்துகிறது என்பது ஆன்றோர்கள் கருத்து. அந்த எளிய வேடன் அளித்த உணவை அன்போடு ஏற்றுக் கொண்டது ராமனின் எளிமை.
யுத்தம் முடிந்து அயோத்திக்கு திரும்பும் வழியில் பாரத்வாஜரின் ஆஸ்ரமத்தில் அவர்களுக்கு விருந்து உபசாரம். சமைத்த உணவை இலை போட்டு எல்லோருக்கும் பறிமாறியாகிவிட்டது ஆனால் ராமன் உண்ணத் தொடங்கவில்லை, யாருக்கோ காத்திருக்கிறான்.
வனவாசம் தொடங்கி சித்திரகூடத்தில் அவர்களை காண வந்த பரதன், தன்னால் அயோத்தி அரியணையில் அமர முடியாது என்று அண்ணனின் பாதுகைகளை வாங்கிச் சென்று அவற்றை ராமனின் பிரதிநிதியாகக் கருதி அரியணையில் வைத்து ஆட்சி புரிகிறான். அப்போது பரதன் ராமனிடம், பதினான்கு வருட வனவாசம் முடிந்த உடனேயே ராமன் அயோத்தி திரும்பி விட வேண்டும், அப்படி செய்யாவிட்டால் தான் தீ மூட்டி உயிரை மாய்த்துக் கொண்டு விடுவேன் என்று உறுதி வாங்கிக் கொள்கிறான்.
அதைப் போலவே நந்திகிராமத்தில் பதினாங்கு வருடங்கள் கழிந்த பின்னாலும் ராமன் வராததால், தீ மூட்டி, அதில் குதிக்கத் தயாரான பரதனிடம் ராமனின் மோதிரத்தைக் காட்டி, ராமனின் வெற்றியையும், அவன் விபீஷணன், சுக்ரீவன் போன்றவர்களோடு அயோத்திக்கு வந்து கொண்டிருப்பதையும், பரத்வாஜர் அளிக்கும் விருந்தை ஏற்றுக் கொள்ள அங்கு தங்கியதால் அவர்கள் வருகை சற்று தாமதமாவதையும் கூறி பரதனின் உயிரை காப்பாற்றுகிறான் ஹனுமான். பிறகு பரதனைப் பற்றிய செய்தியை கூறுவதற்காக பரத்வாஜரின் ஆஸ்ரமத்திற்கு திரும்பி வருகிறான்.
ராமனுக்கும், அவரோடு வந்த வானர சேனைகளுக்கும் விருந்தை தயார் செய்த பரத்வாஜர் எத்தனை பேர்கள் இருக்கிறார்களோ அத்தனை பேர்களுக்கு மட்டும் தலைக்கு ஒரு இலை என்று கணக்காக இலை போட்டு பறிமாறி இருக்கிறார். இலை போடும் பொழுது ஹனுமன் இல்லாததால் அவருக்கு இலை இல்லாமல் போய் விட, ராமன் தன் இலையை ஹனுமனோடு பகிர்ந்து கொண்டு அவரை, அவருடைய சேவையை கௌரவப்படுத்தினானே அது அவனுடைய பேரன்பு.
இப்படி யார் சாப்பிடக் கொடுத்தார்கள், என்ன கொடுத்தார்கள் என்று பார்க்காமல், எப்படி கொடுத்தார்கள் என்று பார்த்து சாப்பிட்டு அந்த சாப்பாட்டிற்கே கௌரவத்தை சேற்த்ததால்தான் அவன் சாப்பாட்டு ராமனோ?







