கணம்தோறும் பிறக்கிறேன் 

Sunday, June 6, 2021

என் வீட்டுப் பொருள்கள் பேசினால்….புத்தகங்கள்

என் வீட்டுப் பொருள்கள் பேசினால்….புத்தகங்கள் 

வின்சென்ட் சர்சில் என்றால் சுருட்டு, நேரு என்றால் புஷ் கோட்,

தொப்பி, எம்.ஜி.ஆர் என்றால் கருப்பு கண்ணாடி, குல்லா எப்படி

எல்லோருக்கும் நினைவுக்கு வருமோ? அப்படி உன்னைத்

தெரிந்தவர்களுக்கு பானு என்றால் புத்தகங்கள்தானே நினைவுக்கு

வரும்? நீண்ட வருடங்களுக்குப் பிறகு உன்னை சந்திக்கும் உன்

உறவினர்களும், நண்பர்களும்,”சிறு வயதில் பானு எப்போதும்

புத்தகமும்,கையுமாகத்தானே இருப்பாள்?” என்றுதானே உன்னை

நினைவு கூர்வார்கள்? புஸ்தகம் ஹஸ்த பூஷணம் என்பதற்கு

இணங்க எப்போதும் கையில் என்னோடுதானே காட்சி

அளிப்பாய்?


உன் புக்ககத்து மனிதர்கள், “பொருள்காட்சிகளில் பானுவை

காணும் என்றால் தேடுவது ரொம்ப சுலபம், ஏதாவது புத்தக

ஸ்டாலில்தான் இருப்பாள்” என்பார்கள். அப்படி ஒரு புத்தக

பைத்தியம்.


ஏன் ஒரு முறை நீ புத்தக கண்காட்சியில் புத்தகங்களை வாங்கி

குவித்ததை பார்த்த உன் மகன், ”பாரதி படத்தில் பாரதியாருக்கு

அரண்மனையில் வேலை கிடைத்ததும் வீட்டிற்கு தேவையான

சாமாங்களை அவர் வாங்கி வரப் போகிறார் என்று அவர்

மனைவி நினைத்திருக்க அவர் வண்டி நிறைய புத்தகங்களை

வாங்கிக் கொண்டு வருவார். நீ கூட அப்படித்தான்” என்றானே

ஞாபகம் இருக்கிறதா?

 

அதற்கு இப்பொதென்ன? என்கிறாயா? இந்த வருடமும்

நீ புத்தக கண்காட்சிக்குச் சென்றாய், சுற்றிப் பார்த்தாய், சாருநிவேதிதாவோடு புகைப்படம் எடுத்துக் கொண்டாய், ஆனால்எத்தனை புத்தகங்கள் வாங்கினாய்? ரெண்டே ரெண்டு, கேட்டால் எனக்குப் பிறகு உன்னை யார் பராமரிப்பார்கள்? என்கிறாய். 


இந்த ஆண்ட்ராய்ட் ஃபோன் வந்தாலும் வந்தது, நீ என்னை எங்கே மதிக்கிறாய்? 
இப்போதுதான் எல்லாமே ஆன்லைனில் கிடைக்கிறதே?எல்லாவற்றையும் அதிலேயே படித்து விடுகிறாய். போதும் போதாதற்கு இந்த மத்யமர் வந்தாலும் வந்தது, என்னைத் தீண்ட உனக்கெங்கே நேரம்? புத்தகமும் கையுமாக இருந்த நீ இப்பொது என்னை எங்கே சீண்டுகிறாய்? ஒரு புத்தகத்தை தொட்டால் முடிக்காமல் கீழே வைக்க மாட்டாய், அப்படிபட்டவள் இப்போதெல்லாம் புத்தகங்களை பிரித்து, கொஞ்சம் படிக்கிறாய், புக் மார்க் வைத்துவிட்டு சென்றால்.. எப்போது தொடர்வாய் என்பது நிச்சயமில்லை. புக் மார்க்கால் என் பக்கங்கள் புண்ணானதுதான் மிச்சம்.  

என்னை உன்னிடமிருந்து யாராலும் பிரிக்க முடியாமல்  இணைபிரியா பந்தத்தோடு நாம் இருந்தோம். ஹூம் அதெல்லாம்ஒரு காலம்..!