உனக்கும் எனக்கும்
*இந்த படத்திற்கு  பொருத்தமான கதை எழுதும்படி மத்யமரில் கேட்டிருந்தார்கள். அதற்கு நான் எழுதிய கதை கீழே:
திவாகர் அன்று அலுவலகத்திலிருந்து வரும் பொழுது  கையில்  சுருட்டி எடுத்து வந்த ஒரு சுருளை   ஹாலில்   இருந்த  டீபாயில்  போட்டான். 
"என்னது?" ஜனனி கேட்டதற்கு ,"பிரிச்சு பாரேன்.." என்று அவன் சொன்னதும் பிரித்தாள். ஒரு வால் போஸ்டர். அதில் ஒரு இளம் ஆணும், பெண்ணும்  உரக்க சண்டை போட்டு கத்துவது போன்ற  படம். 
"எதுக்கு இது"
"நல்ல கேள்வி. வால் போஸ்டர் எதுக்கு வாங்குவாங்க? வீட்டில் மாட்டதான்" 
"ஏன் இப்படி ஒரு படம்?"
"ஏன் இதுக்கு என்ன குறைச்சல்? நல்லா இல்லையா?"
"அப்படி சொல்ல முடியாது,பட்... "  என்று தயக்கத்தோடு ஆரம்பித்தவள் சண்டை போட்ற படத்தை ஏன் வீட்டில் மாட்டனும்?"
"சம்திங் டிஃபரெண்ட் .. நான் தான்  உன்னோடு   சண்டை  போடுவதில்லை, நீ என்ன சொன்னாலும் அதுக்கு சரினு  சொல்லிடறேன். படத்திலாவது ஒருத்தன் தைரியமா மனைவியை  எதிர்த்து சண்டை போடறானே.." குறும்பாக சிரித்துக்  கொண்டே  அவன் கூற, 
"எப்படி? எப்படி? ரிபீட்.." என்று இடுப்பில் கை வைத்துக் கொண்டு பொய் கோபத்தோடு ஜனனி கேட்டதும் ,  சிரித்துக் கொண்டே  அவளை தன்னருகே இழுக்க, அவனிடமிருந்து விலகி காபி கலக்க உள்ளே சென்றாள்.  
"காஃபியை உரிஞ்சிக்கொண்டே இதை எங்கே மாட்டலாம்? சொல்லேன்.."
"ஹாலில் நன்றாக இருக்காது, டைனிங்  ரூம்..?"
"நோ ".. 
"யெஸ், பெட் ரூம்தான் ரைட் பிளேஸ்.." என்று முடிவு செய்து அதை அவர்கள் கட்டிலுக்கு எதிரே, இரண்டு பக்கங்களிலும் ஒட்டக்கூடிய செல்லோ டேப் கொண்டு ஒட்டி விட்டு, ஹௌ இஸ் இட்?" என்றான். 
ஜனனிக்கு இப்படி ஒரு படத்தை தங்கள் படுக்கை அறையில்  அதுவும் கண்களில் படும்படி மாட்டுவதில் விருப்பமில்லை. இருந்தாலும் அதைச்  சொல்லி அவனை வருத்தப் படுத்த அவள் விரும்பவில்லை. அதுதான் அவள் சுபாவம். யாரோடும்  விவாதங்களில் இறங்க மாட்டாள். தனக்கு ஒரு கருத்தில்  உடன்பாடு இல்லையென்றால் மௌனமாகி விடுவாள். சமயம் பார்த்துதான் சொல்வாள். திவாகருக்கு இதில் மிகவும் சந்தோஷம். அவ்வப்பொழுது அவளை சீண்டுவான், அவளும் பதில் கொடுப்பாள், இப்படி விளையாட்டு சண்டை, சின்ன  சின்ன  வாக்குவாதங்கள் வந்திருக்கிறதே ஒழிய பெரிய சண்டை  அவர்களுக்குள் வந்ததில்லை. 
அவர்கள் கண்ணே பட்டு விட்டதோ  என்னும்படி  கொஞ்ச  நாட்களாக அவர்களுக்குள் அடிக்கடி மோதல்கள் வர ஆரம்பித்தன. திவாகர் சிடுசிடுப்பதும், சாதாரணமாக பொறுமையாக இருக்கும்  ஜனனி பதிலுக்கு பதில் சொல்லி சண்டையை வளர்ப்பதும் அதிகமாயிற்று. .
அன்று காலை டிஃபன் சாப்பிட திவாகர் உட்கார்ந்தான். ரவை உப்புமாவை கொண்டு ஜனனி வைத்ததும், "ஓ! மை காட்! இன்னிக்கும் உப்புமாவா?"
"என்ன இன்னிக்கும்? இந்த மாசத்தில் இது செகண்ட் டைம்தான், தவிர உப்புமாவுக்கு என்ன குறைச்சல்?" 
"தொட்டுக்க ஒன்னும் இல்லாததுதான் குறைச்சல்."  
"எலுமிச்சங்காய் ஊறுகாய் இருக்கு, சர்க்கரை இருக்கு.." 
"சர்க்கரை தொட்டுக்கொண்டு சாப்பிட நான் ஒண்ணும்  சின்ன  குழந்தை  இல்ல, நீயே சாப்பிட்டுக் கொள் உன் உப்புமாவை"  விருட்டென்று திவாகர் எழுந்து செல்ல, ஜனனிக்கு அழுகை வந்தது. இதற்கு முன் சில சமயங்களில் வெறும் ஊறுகாயோடு  உப்புமாவை சாப்பிட்டிருக்கிறான் . இன்று என்ன வந்தது? இப்போதெல்லாம் அவனுக்கு அதிகம் கோபம் வருகிறது. என் மேலும் தப்பு. அன்னிக்கு இப்படித்தான், தோய்த்த  துணிகள்  சோஃபாவில் குப்பலாக இருப்பதைப் பார்த்து, துணியை மடித்து வைக்கவில்லையா? என்று சாதாரணமாகத்தான் கேட்டான், ஆனால் அவளுக்கு சுர்ரென்று கோபம் வந் தது, "தெரியறது தானே? நீ மடிச்சு வெச்சா என்ன?"  என்று அவள் பதிலுக்கு கேட்க, அவன் ஏதோ சொல்ல, வாய்ச்சண்டை வலுத்தது. ஏன் இப்படி ஆனது? என்று யோசித்தவள் கண்களில் பட்டது அந்த ஆணும் பெண்ணும்  சண்டை போடும் படம். இதைப் பார்த்து பார்த்து அதன் பாதிப்பில்  நமக்குள்ளும் சண்டை வருகிறதோ? ஜனனி அந்தப் படத்தை  ஜாக்கிரதையாக பிய்த்து எடுத்தாள். அந்த இடத்தில் காதல்  புறாக்கள் படம் ஒன்றை ஒட்டினாள். இனி அவர்களுக்குகள் பிணக்குகள் வராது .


