கணம்தோறும் பிறக்கிறேன் 

Sunday, August 8, 2021

மாறும் சரித்திரங்கள்!

மாறும் சரித்திரங்கள்!

சில நாட்களுக்கு முன்பு என் சிநேகிதி அவருடைய மாமா ஒரு அட்டைப் பெட்டி நிறைய புத்தகங்கள் கொடுத்திருப்பதாகவும், அதில் எனக்கு தேவையானவற்றை எடுத்துக் கொள்ளலாம் என்றும் கூறியிருந்தார். ஆனால் அந்தப் புத்தகங்களை படித்து விட்டு திருப்பித் தர வேண்டும் என்பது நிபந்தனை. 

சென்ற வாரம் சென்னைக்கு ஒருபறவைப் பயணம் அதாங்க ஃபிளையிங் விசிட் அடிக்க வேண்டி வந்தது. திரும்பி வரும் பொழுது அந்த சிநேகிதியின் வீட்டிற்குச் சென்று சில புத்தகங்களை  தேர்ந்தெடுத்துக் கொண்டு வந்தேன். அவற்றில் நான் தேடிக் கொண்டிருக்கும் எஸ்.ஏ.பி., பி.வி.ஆரின் புத்தகங்கள் இல்லை. இனி, அவ்வப்பொழுது ஸ்ரீராமுக்கு போட்டியாக பொக்கிஷ பதிவுகள் போடலாம் என்று ஒரு எண்ணம் எட்டிப்  பார்க்கிறது.ஆனால் நினைப்பதை எல்லாம் செயல் படுத்தும் செயல் வீராங்கனை கிடையாது என்பதால் ஸ்ரீராம் தைரியமாக இருக்கலாம்.  அவற்றுள் ஒன்று ரா.கி.ரங்கராஜன் அவர்கள் அண்ணா நகர் டைம்ஸில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு புத்தகத்தின் பெயர் 'நாலு திசையிலும் சந்தோஷம்'. மிகவும் ஸ்வாரஸ்யமான கட்டுரைகள்.  


ஒரு முறை குமுதத்தில் பிரபலமானவர்களின் தொலைபேசி எண்ணை வெளியிட்டு, வாசகர்கள் அவர்களை அழைத்து அந்த பிரபலங்களோடு உரையாடலாம் என்று அறிவித்தார்களாம். அப்போது நடிகை லட்சுமி திரை வானில் ஜொலித்துக் கொண்டிருந்த நேரமாம். அவரை  தொலை பேசியில் அழைத்தால் அவர் வீட்டிலிருந்து உங்களோடு அவர் உரையாடுவார் என்று அறிவித்திருந்தார்களாம். ஆனால் லட்சுமி வீட்டின் எண்ணிற்குப் பதிலாக வேறு ஒரு எண் தவறாக அச்சாகி விட்டதாம். என்ன செய்வது என்று யோசித்த பொழுது, எஸ்.ஏ.பி. அவர்கள் ஒரு ஐடியா சொன்னாராம், அதன்படி அந்த தவறான எண்ணை தொடர்பு கொண்டார்களாம், நல்ல வேலையாக அது ஒரு அலுவலக எண்ணாக இல்லாமல் ஒரு மத்தியதர குடும்பத்தின் எண்ணாம். அவர்களிடம், "நடிகை லட்சுமி உங்கள் வீட்டிற்கு வந்து இரண்டு மணி நேரங்கள் இருந்து நேயர்களோடு உரையாடுவார், உங்களுக்கு சம்மதமா?" என்று கேட்டதும் அவர்கள்  மகிழ்ச்சியோடு ஒப்புக்கொண்டார்களாம். லட்சுமியும் அதற்கு சம்மதித்தாராம், திட்டமிட்டபடி அந்த நிகழ்ச்சி சிறப்பாக நடந்ததாம். அதற்கு பிறகு அந்த வீட்டிற்கு நடிகை லட்சுமி இருக்காங்களா? அவங்களோடு பேசணும்" என்று எத்தனை கால்கள் வந்ததோ?


எஸ்.ஏ.பி. இப்படி என்றால் வேறொரு பத்திரிகையாசிரியர் இக்கட்டை சமாளித்த விதத்தையும் சொல்லியிருக்கிறார். அதை பின்னொரு சமயம் பார்க்கலாம். இந்த கட்டுரையில் இணைப்பதற்காக இளம் வயது லட்சுமி டெலிபோனில்  பேசுவது போல் புகைப்படம் ஏதாவது கிடைக்குமா? என்று இணையத்தில் தேடினேன். கிடைக்கவில்லை. actress Lakshmi என்றுடைப்பினால் அதுவாகவே  actress Laksmi daughter என்று அடித்து அவர் மகளின் புகைப்படங்களை காட்டுகிறது. திருத்தினால் லக்ஷ்மி ராமகிருஷ்ணன், லட்சுமி ராய் இவர்கள்... காலம் இரக்கமற்றது, எப்பேர்ப்பட்ட சாதனையாளர்களையும் மறந்து விடுகிறது.

****************************************
பாரசீக கவிஞராகிய உமர் கய்யாமின் பெயர் உமர்தானாம். கய்யாம் என்றால் பாரசீக மொழியில் கூடாரம் அடிப்பவன் என்று பொருளாம். அந்த தொழில் செய்யும் குடும்பத்தை சேர்ந்தவர் என்பதால் உமர்கய்யாம் என்று அழைக்கப் பட்டாராம். ஒரு வகையில் ஜாதிப் பெயர் என்று கூறலாம். இதிலிருந்து ஜாதிப் பெயரை வைத்துக் கொள்வது உலகம் முழுமைக்கும் பொதுவானது என்பது புரிகிறது. இந்தியாவில் தமிழகத்தை தவிர பிற மாநிலங்களில் இன்னமும் ஜாதிப் பெயரை போட்டுக் கொள்கிறார்கள். தமிழகத்தில் பெயரளவில் அதை ஒழித்துவிட்டோம். 

தமிழ் நாட்டு பாடநூல் நிறுவனம் தமிழ் பாடங்களில் இடம் பெறும்  அறிஞர்களின் பெயரில் இருக்கும் ஜாதிப் பெயரை நீக்க பரிந்துரைக்க, தமிழகம் அப்படியே உத்தரவிட்டுள்ளது. அதன்படி தமிழ் தாத்தா உ.வே.சாமிநாத அய்யர், கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை, மகாவித்வான்.மீனாட்சி சுந்தரம் பிள்ளை போன்றவர்களின் பெயர்களுக்கு பின்னால் இருக்கும் ஜாதி அடையாளங்கள் நீக்கப்பட்டு விடும். இதில் ஒரே ஒரு பிரச்சனைதான்,இன்னும் 25 வருடங்களுக்குப் பிறகு ஆராய்ச்சி செய்யும் யாராவது உ.வே.சாமிநாத அய்யர் வேறு, சாமிநாதன் வேறு, இந்த சாமிநாதன்தான் தமிழ் தாத்தா, அவர் வெறும் வைதீகர் என்று கிளப்பி விடாமல் இருக்க வேண்டும். சரித்திரங்கள் இப்படித்தானே திரிக்கப்படுகின்றன.  

***************