துரு துரு, திரு திரு
என் பெரிய அக்காவின் பெண் சிறு குழந்தையாக இருந்த பொழுது அவளுக்கு ராமாயணம் கதை சொல்ல ஆரம்பித்தேன். அதில் ராம ஜனன கட்டம். தசரத மகாராஜா புத்திர காமேஷ்டி யாகம் செய்த ஹோம குண்டத்திலிருந்து ஒரு யக்ஷன் கொண்டு வந்த பாயசத்தை தசரதனின் மூன்று மனைவிகளுக்கும் பகிர்ந்து கொடுத்த பிறகு மிச்சமிருந்த பாயசத்தை சுமித்திராவிற்கு இரண்டாவது தடவை கொடுத்து விட, கௌசல்யாவிற்கும், கைகேயிக்கும் ராமனும், பரதனும் பிறந்தார்கள். சுமித்ரா மட்டும் இரண்டு முறை பாயசம் சாப்பிட்டதால் அவளுக்கு லக்ஷ்மணன், சத்ருஹனன் என இரண்டு குழந்தைகள் பிறந்தன என்று நான் கூறியதும், என் அக்கா பெண், "மறுபடியும் சொல்லுங்கோ" என்றாள். நான் மறுபடியும் கூற, ஏன் அவர்கள் இரண்டு பேருக்கும் ஒரு ஒரு குழந்தை, இவளுக்கு மட்டும் இரண்டு குழந்தைகள்?" என்று கேட்டாள். நான்," அதுதான் சொன்னேனே, பாயசம் கொஞ்சம் மிச்சம் இருந்தது, அதை சுமித்ராவிற்கு கொடுத்தார்கள், அவள் இரண்டு முறை பாயசம் சாப்பிட்டதால் அவளுக்கு இரட்டை குழந்தைகள்." என்றேன். உடனே என் அக்கா மகள்," ஏன் மிச்சமிருந்த பாயசத்தை ஒருத்திக்கு மட்டும் கொடுத்தார்கள்? மூன்று பேருக்கும் ஆளுக்கு கொஞ்சம் கொடுத்திருந்தால் மூன்று பேருக்குமே இரட்டை குழந்தைகள் பிறந்திருக்குமே? என்றாள் நான் என்ன பதில் சொல்ல முடியும்? திரு திருதான். அப்புறம் மூன்று பேருக்கும் பகிர்ந்து கொடுக்க முடியாத அளவிற்கு குறைச்சலாக இருந்திருக்கும் என்று சமாளித்தேன்.
இன்னொரு முறை, என் அக்காக்களின் குழந்தைகள் மற்றும் அவர்களின் தோழர்களுக்கு தெனாலி ராமன் கதை சொல்லிக் கொண்டிருந்தேன். தெனாலி ராமனுக்கு முன் பிரசன்னமான காளி தன் இரு கைகளில் ஒன்றில் ஒரு கிண்ணத்தில் பால் சாதமும், இன்னொன்றில் தயிர் சாதமும் வைத்துக் கொண்டு அவனிடம், " இந்த இரண்டில் ஏதாவது ஒன்றைத்தான் நீ தேர்ந்தெடுக்க வேண்டும். பால் சாதத்தை சாப்பிட்டால் நீ சிறந்த அறிவாளியாக விளங்குவாய், தயிர் சாதத்தை சாப்பிட்டால் பெரிய செல்வந்தனாக விளங்குவாய், இந்த இரண்டில் எது உன் விருப்பம்?" என்று கேட்கிறாள்,என்று கூறி இந்த இடத்தில் கதையை கொஞ்சம் நிறுத்தி விட்டு, "உங்களுக்கு எதிரில் சாமி வந்து இப்படி கேட்டால், நீங்கள் எதை தேர்ந்தெடுப்பீர்கள்?" என்று கேட்டதும், சிலர் தயிர் சாதம் என்றும், சிலர் பால் சாதம் என்றும் கூறினர். என் பெரிய அக்காவின் மகன் மட்டும் எதுவும் சொல்லாமல் பேசாமல் இருந்தான். அவனிடம், "என்னடா, நீ எதுவும் கேட்க மாட்டாயா?" என்றதும் அவன், "நான் சாமிட்ட கொழம்பு சாதம்" கேட்பேன் என்றான். அவன் தயிர், மோர் வகையறாக்களை தொட மாட்டான். பால் சாதமும் பிடிக்காது. காரமான உணவுகளை விரும்பி சாப்பிடுவான், அதனால்தான் இப்படி ஒரு பதில். எனக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை. அதோடு அவன் சாதுர்யத்தையும் பாராட்டினேன்.
முன்பெல்லாம்அதாவது எழுபதுகளின் இறுதி வரை ஸ்ரீரெங்கத்தில் ஸ்ரீஜெயந்தியின் பொழுது சிறுவர்கள் சப்பரம் செய்து அதில் கிருஷ்ணன் படத்தை வைத்து ஊர்வலமாக எடுத்து வருவார்கள். அதற்கு எல்லா வீடுகளிலும் வந்து "ஸ்ரீஜெயந்திக்கு காசு" என்று கேட்பார்கள். எல்லோரும் அதிகபட்சமாக நாலணா கொடுப்பார்கள். அதைப்போன்ற ஒரு ஸ்ரீஜெயந்தியில் குரூப் குரூப்பாக சிறுவர்கள் வந்து காசு வாங்கி சென்றனர். சிறுமிகள் மட்டும் ஒரு க்ரூப்பாக வந்து ஸ்ரீஜெயந்திக்கு காசு என்று கேட்டபொழுது, நான் சற்று கேலியாக, " இது எந்த கிருஷ்ணருக்கு?" என்றதும் அதிலிருந்த ஒரு பொடிப் பெண், வெடுக்கென்று " எத்தனை கிருஷ்ணர் இருக்கார்? ஒரு கிருஷ்ணர்தானே உண்டு?" என்றதும் நான் விக்கித்துப் போனேன். ஒரு சிறு குழந்தை எத்தனை பெரிய விஷயத்தை அனாயாசமாக சொல்லி விட்டது!
என் அண்ணா கூறிய சம்பவம் இது, அவர் ஒரு பள்ளியில் மோட்டிவேஷனல் வகுப்பு எடுக்க சென்ற பொழுது, தன் உரையை முடித்து விட்டு, "உங்களுக்கு ஏதாவது சந்தேகம் இருந்தால் கேட்கலாம் என்றதும்,ஒரு பெண் குழந்தை,"அங்கிள் வொய் தி பம்ப்கின்ஸ் ஆர் ஸோ பிக்?" என்று கேட்டதாம்.
வெளிநாட்டில் வசிக்கும் என் அக்காவின் பேத்தி சமீபத்தில் விடுமுறைக்காக சென்னை வந்திருந்த பொழுது, தொலை காட்சியில் திருவிளையாடல் படம் ஓடிக்கொண்டிருந்தது. அதில் பார்வதியாக நடித்த சாவித்திரியின் உடல்முழுவதும் பச்சை வர்ணம் பூசப்பட்டிருந்ததை பார்த்து, " ஏன் இவள் பாடி க்ரீன் கலராக இருக்கிறது?" என்று கேட்டாள்? அவள் பர்வத ராஜாவின் மகள், அதாவது மலை மகள். ஒரு மலையை தூரத்தில் இருந்து பார்க்கும் பொழுது மலை எப்படி தெரியும்? மரங்கள் அடர்ந்து பசுமையாகத்தானே? அதனால்தான் பார்வதியை பச்சை நிறமாக காண்பித்திருக்கிறார்கள்" என்றேன். சரிதானே?
படங்கள் நன்றி கூகுள்.
படங்கள் நன்றி கூகுள்.


