கணம்தோறும் பிறக்கிறேன் 

Saturday, July 28, 2018

ஆனந்தமாய் சிரிக்கலாம்


☺ ஆனந்தமாய் சிரிக்கலாம்

இவையெல்லாம் எனக்கு வாட்ஸாப்பில் வந்த அந்தக்கால ஆனந்த விகடன் ஜோக்குகள். யாம் பெற்ற இன்பம் பெறுக 'எங்கள் ப்ளாக்' என்று பகிர்கிறேன்.  நகைச்சுவை துணுக்குகள் ஒரு பங்கு என்றால், படங்கள் இரு மடங்காக நமக்கு சிரிப்பை வரவழைக்கின்றன. குறிப்பாக குறிப்பாக குழந்தை பலம் பெற வேண்டும் என்பதற்காக மருந்து கொடுக்க முயலும் பெற்றோர் படம் குபீர் சிரிப்பை வரவழைத்தது.  


           Thursday, July 26, 2018

மேகங்கள் விலகும் - 2


           மேகங்கள் விலகும் - 2

வேலைகளை முடித்துக் கொண்டு படுக்க வந்த பொழுது, கணக்கு நோட்டை பிரித்து வைத்துக் கொண்டு அவள் கணவன் படுக்கையில் உட்கார்ந்திருந்தான். அவனுக்கு தினமும் கணக்கு எழுத வேண்டும்.

“கார்தால ஐநூறு ரூபாய் கொடுத்துட்டு போனேன், என்ன செலவு? எவ்வளவு மீதி?”

கொஞ்சம் யோசித்த ஸ்வர்னா, “இருபது ரூபாய்க்கு பூ வாங்கினேன்..” என்றதும் மணிகண்டனுக்கு எரிச்சல் வந்தது.

“நான் ஐநூறு ரூபாய்க்கு கணக்கு கேட்டால், நீ இருபது ரூபாய்க்கு கணக்கு சொல்ற..” 

“ரோஹித்துக்கு ஒரு நூறு ரூபாய் கொடுத்தேன்”

“நூறு ரூபாயா? டேய் ரோஹித், எதுக்குடா நூறு ரூபாய்?”

“நூறு ரூபாய் இல்லப்பா, ஐம்பதுதான் கேட்டேன், அம்மாதான், நூறு ரூபாய் கொடுத்தா, ஸ்கூல் கார்டன் போட கேட்டாங்க..” அவன் மீதி ஐம்பது ரூபாயை எடுத்து நீட்டினான்.

“ம்.. அவன் ஐம்பது ரூபா கேட்டா, நீ நூறு ரூபா கொடு, பாக்கியும் வாங்காத, உருபட்டுடுவான்.."

அவள் ஒவ்வொன்றாக நினைவுபடுத்தி சொல்லி விட்டாலும், ஒரு அருபதைந்து ரூபாய்க்கு கணக்கு வரவே இல்லை.

கணக்கு தவறாக போட்டுவிட்டு ஆசிரியரின் தண்டனையை எதிர்பார்த்து காத்திருக்கும் மாணவனை காப்பாற்றும் வகுப்பு முடிந்து விட்டதை அறிவிக்கும் மணியைப் போல அவனுடைய செல் அழைத்து அவளை காப்பாற்றியது.

அவன் பேசி முடித்து விட்டு வரும் பொழுது அவள் உறங்கியிருந்தாள். 

எரிச்சலோடு கணக்கு நோட்டை மூடி வைத்தவன், விளக்கை அணைத்துவிட்டு படுத்துக் கொண்டான்.

மறு நாள் காலை சிற்றுண்டி அருந்தும் பொழுது மீண்டும் அதே பேச்சை தொடங்கினான்.

“நீ இன்னும், அந்த அறுபதைந்து ரூபாய்க்கு கணக்கு கொடுக்கவில்லை”

“கேவலம் ஒரு அறுபத்தஞ்சு ரூபா.. நான் செலவழிக்கக் கூடாதா?”

“அறுபத்தஞ்ஜாயிரம் கூட செலவழிக்கலாம். ஆனா, எதுக்கு செலவழிக்கிறோம்னு தெரியணும். கேவலம் அறுபதஞ்சு ரூபாயா..? சம்பாதிச்சால்தான் அதன் அருமை தெரியும்.. வீட்டில் உக்கார்ந்து சாப்பிடுகிரவங்களுக்கு என்ன தெரியும்?” என்று தொடங்கியவன், “நீ ஒரு தண்ட சோறு” என்னும் ரேஞ்சுக்கு பேசி முடித்து, அலுவலகதிற்கு கிளம்பிச் சென்றுவிட, இவளுக்கு மனது விண்டு போனது.

“சே.. என்ன வாழ்க்கை இது? நானும் வேலைக்குச் சென்றிருக்க வேண்டும்., ஒரு அறுபத்தஞ்சு ரூபாய்க்கு இவ்வளவு பேச்சா? எனக்கு மரியாதை இவ்வளவுதானா?”

கோபத்தில் சாப்பிடும் நேரம் வந்த பொழுது, மாமியருக்கு மாத்திரம் தட்டு வைத்தாள்.

“அவன் ஏதோ கோவத்தில் கத்தி விட்டு போனால், நீ ஏன் சாப்பாட்டில் கோபித்து கொள்கிறாய்? ஆண் பிள்ளைகள் அப்படித்தான், சாப்பிட வா..”

“கோவம் வந்தால் என்ன வேண்டுமானாலும் பேசலாமா?”

“விடேன், இதையெல்லாம், காதுல போட்டுக்கொள்ள கூடாது, உன் ஸ்னேகிதாள பார்க்கப் போணும்னு சொன்னியே, சாபிட்டு விட்டு கிளம்பினா சரியா இருக்கும்.”

சாப்பிட்டு விட்டு, முகம் கழுவி உடை மாற்றிக் கொண்டு ரேவதி வீட்டிற்கு கிளம்பினாள்.

அங்கு அவள்தான் முதல் வரவு.

“என்னப்பா..? எப்போதும் நீதான் கடைசியா வருவ.. இப்போ, முதலில் வந்துட்ட..? ஞாபகம் இருக்கா..? ஒரு தடவ ஏதோ ஒரு அஜித் படத்திற்கு அட்வான்ஸ் புக் பண்ணிய கூப்பனை நீ வைத்துக் கொண்டு, லேட்டாக வந்தாய்.. நாங்களெல்லாம் உனக்காக தியேட்டர் வாசலில் காத்துக் கொண்டிருந்தோம்.. ப்ரபா பயங்கர டென்ஷனாயிட்டா..” 

ரேவதி பழைய கதையை அவிழ்த்து விட ஸ்வர்னா சிரித்துக் கொண்டே, “அதெல்லாம் ஏன் இப்பொ சொல்லி டாமேஜ் பண்ற?” என்றாள். பிறகு, “என் ஹஸ்பெண்ட் ரொம்ப பன்சுவல், ஆறு மணிக்கு ஒரு நிகழ்சின்னா ஐந்தே முக்காலுக்கு அங்க இருப்பார். ஸோ, நானும் மாறிட்டேன்.”

“வேற என்னவெல்லாம் மாறியிருக்கு? நல்லா வெய்ட் போட்டுட்ட..”
“நீ மட்டும் என்னவாம்?”

அவர்கள் இருவரும் பேசிக்கொண்டிருக்கும் பொழுதே, ஒவ்வொருவராக வர ஆரம்பித்தார்கள். பெரும்பான்மையோர் குண்டாகி, லேசாக நரைக்கத் துவங்கி, கண்களின் கீழ் கருவளையம் விழுந்து, சிலர் பளிச்சென்றாகி.. அந்த இடமே மாறிப்போனது.

எல்லோரும் தங்கள் வயதை மறந்து பேசி சிரித்து, பழைய நிகழ்ச்சிகளை நினைவு கூர்ந்து, உற்சாகம் கொப்பளித்தது.

கூட்டத்தின் நம்ப முடியாத அதிசயம் காயத்ரி. படிக்கும் பொழுது மீடியாக்கர் ஸ்டூடண்ட். முதல் வருடம் அரியர்ஸ் கூட இருந்தது. ஆனால் இரண்டாம் வருடத்திலிருந்து ஒரு வேகம் எடுத்து, முதல் வகுப்பில் தேறி, வங்கித் தேர்வு எழுதி, அதிலும் தேர்ச்சி பெற்று வங்கியில் சேர்ந்ததுதான் இவர்களுக்குத் தெரியும். அவள் அதற்குப் பிறகு எம்.பி.ஏ. முடித்து, தனியார் நிறுவனத்திற்கு மாறி, இன்று அதில் முதன்மை அதிகாரியாம். விடாமல் கைபேசி அழைத்துக்கொண்டே இருந்தது. நம்பத்தான் முடியவில்லை.

கல்லூரி காலத்தில் பல ரோமியோக்களை தன் பின்னால் சுற்ற விட்ட மாலா இப்போது அடையாளமே தெரியாமல் பருமனாகி, முடியெல்லாம் கொட்டி, நிறமிழந்து.. ஏதொ மெடிசன் அலர்ஜியால் இப்படி ஆகி விட்டதாம்.

ஆனால் கட்டுப்பெட்டியாக, இறுக பின்னிய தலை, பாவாடை, தாவணி என்று இருந்த பிரேமா பாண்ட், குர்தா, குட்டையாக வெட்டப் பட்ட தலை முடி, பொட்டில்லாத நெற்றி என்று ஆச்சர்யப்படுத்தினாள். பார்க்கும் எல்லோரையும் அணைத்துக் கொண்டாள்.

அடையாளமே தெரியவில்லை. நீயே இவ்ளோ மாடர்ன்னா? உன் குழந்தை..? என்று நான் ஆரம்பிக்க, ரேவதி கண் ஜாடை காட்டினாள். உடனே பேச்சை மாற்றினேன்.

எல்லோருக்கும் ஜூஸ் கொடுக்க உள்ளே சென்றவள் என்னை அழைத்து,”ப்ரேமவுக்கு குழந்தைகள் இல்லை. அடாப்ட் பண்ணிக்கத்தான் இங்கு வந்திருக்கிறாள்" என்றாள்.

"அது சரி ஏன் லக்ஷ்மி வரவில்லை?"

"அது ஒரு பெரிய ட்ராஜிடி.."

"என்னாச்சு?" என்றாள் காயத்ரி செல் போனை துண்டித்தபடி.

"ரெண்டு வருஷம் முன்னால ஒரு ரோடு ஆக்ஸிடெண்டில் அவள் கணவருக்கு அடி பட்டு, படுத்த படுக்கையா இருக்கார், அதனால லக்ஷ்மியால எங்கேயும் நகர முடியல.."

ஹாலில் சட்டென்று ஒரு அமைதி கவிந்தது.

அதை மாற்ற “ஏய்! சுதா நீ நன்னா பாடுவியே.. ஒரு பாட்டு பாடு”
இப்பொல்லாம் பாட்டு கேட்பதோட சரி, என்று கொஞ்சம் அலட்டி விட்டு பாடத்தொடங்கிய சுதா வார்தைகள் மறந்து போய் பாதியில் நிறுத்த, அதைத் தொடர்ந்து வேறு பாடலைப் பாடிய வித்யா அதையே அந்தாக்ஷரியாக மாற்றினாள். எல்லோரும் பாடிக் கொண்டிருக்கும் பொழுது, “நீங்க கண்டினியூ பண்ணுங்க, நான் கிளம்பரேன்..” என்றபடி உமா எழுந்து கொண்டாள்.

“இன்னும் ஹாஃப் அன் அவர்தானே..? எல்லோரும் கிளம்ப வேண்டியதுதான்.”

“இல்ல, என் பையன் ஸ்கூலிலிருந்து வந்துடுவான்”

அரை மணி நேரம் தனியா இருக்க மாட்டானா?

யாரோ கேட்க, அரை நொடி தாமதித்த வித்யா, “அவன் ஸ்பெஷல் சைல்ட், அதனால் தனியா விட முடியாது” என்று கூறி விட்டு எல்லாரையும் மீட் பண்ணியதில் ரொம்ப சந்தோஷம், அடிக்கடி பார்க்கலாம்” என்று கிளம்பியதும், ஒவ்வொருவராக கிளம்பத் தொடங்கினர். 

கூட்டத்தில் அதிகம் பேசாமல் உட்கார்ந்திருந்த நித்யா, “ரொம்ப தாங்க்ஸ் ரேவதி, இந்த ரெண்டு மணி நேரம் நான் ரொம்ப சந்தோஷமா இருந்தேன். அடுத்த கெட் டு கெதெர் நம்ம வீட்ல வெச்சுக்கலாம்”.

“ஷுயர்”

“ஆறு மாசம் முன்னாடி இருந்ததற்கு இப்போ, பெட்டரா இருக்கா இல்லையா?”

“ம்..ம்.., புத்ர சோகத்திலிருந்து மீள்வது அவ்வளவு ஈசியா?”

வீடு திரும்பும் பொழுது ஸ்வர்னாவின் மனசுக்குள் இந்த சந்திப்பு மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியது. என்ன என்ன துன்பங்களை ஒவ்வொருவரும் சந்திக்கிறார்கள்? குழந்தை பிறக்காத சோகம், பிறந்த குழந்தை நார்மலாக இல்லாத சோகம், அழகான குழந்தை இறக்கும் சோகம்,  வாழ்க்கையை ஒரு விபத்து புரட்டிப் போடும் சோகம். இதையெல்லாம் பார்க்கும் பொழுது நான் எவ்வளவு கொடுத்து வைத்தவள்?

வீட்டிர்க்குள் நுழையும் பொழுது, “நாலு மணிக்கு வரேன்னு சொல்லிட்டு போன, இப்போ மணி என்ன? பால் கூட குடிக்காமல் ரோஹித் டென்னிஸுக்கு போய் விட்டான், நான் இன்னும் காபி குடிக்கல..”மாமியார் கடுகடுத்தார்.

“பால், டிகாஷன் எல்லாம் இருக்கே..?”

காபி கலந்து குடிங்கோனு சொல்லிட்டு போனாயா? நீ வந்து கலந்து தருவாய்னு இருக்கேன்..உனக்கு அங்க கிடைச்சிருக்கும்.” நிஷ்டூரமாக பேசிய மாமியார் காபி குடித்தவுடன், "ராத்திரி நீங்கள் வெளியே போய் விடுவீர்கள், எனக்கு என்ன?" என்றார்.

“தோசை மாவு இருக்கு”

“வேண்டாம், நேத்திக்கும், தோசை, இன்னிக்கும் தோசையா? சாதம் வைத்து விடு, மோருஞ்சாதம் சாப்பிட்டுக் கொள்கிறேன்”

கொஞ்சம் தேங்காய் தொகையலும் அரைத்து வைத்து விடலாம் என்று ஸ்வர்னா நினைத்துக் கொண்டாள். இந்த தெளிவு சிறிது நாட்கள் இருக்கும்.

Monday, July 23, 2018

மேகங்கள் விலகும்


மேகங்கள் விலகும்


பட படவென கரகோஷம் எழ கை கூப்பி, நன்றி கூறி ஸ்வர்னா மேடையிலிருந்து இறங்கினாள்.

“எக்ஸலெண்ட் ஸ்வர்னா! இவ்ளோ நன்னா பண்ணுவனு நான் எதிர் பார்க்கவேயில்லை”. என்று அவள் உறுபினராக இருக்கும் லேடீஸ் க்ளப் தலைவி அணைத்துக் கொண்டார்.

“ஸூப்பர் மேடம்,”

“ரொம்ப நன்னா இருந்தது,” 

என்று பலரும் பாராட்ட, ஸ்வர்னா மகிழ்சியில் திக்கு முக்காடினாள்.
இது நகரின் பெரிய மகளிர் அமைப்பின் ஆண்டு விழா. இவள் சார்ந்திருக்கும் லேடீஸ் க்ளபிற்கு அழைப்பு விடுத்ததோடு, அவர்கள் அறிவித்திருந்த போட்டிகளில் எதில் பங்கேற்கிறார்கள் என்றும் கேட்டிருந்தார்கள்.

அழைப்பிதழை படித்த ப்ரசிடெண்ட் கலா சந்தர்,” நாம் எதில் கலந்து கொள்ளலாம்?” என்று கேட்க,

“க்ரூப் சாங்க், டான்ஸ், ட்ராமா, மிமிக்ரி” என்று ஆளாளுக்கு குரல் கொடுத்தார்கள்.

“க்ரூப் சாங்க் நிறைய பேர் வருவாங்க, ஸ்டில், கன்சிடர் பண்ணலாம். டான்ஸ் வேண்டாம், ட்ராமா.. சுமதி நீதானே சொன்ன? இன்சார்ஜ் எடுத்துகறயா?

“ஐயையோ, ட்ராமாவும் போடலாம்னு சொன்னேன்…” ஐடியா கொடுத்த சுமதி ஒரேயடியாக பல்டி அடித்தாள்.

மிமிக்ரி… குட் ஐடியா.. ஆனால் யாருக்கு மிமிக்ரி பண்ண வரும்?
ஸ்வர்னா தயங்கி கை தூக்கினாள்,

வாவ்! ஸ்வர்னா நீ மிமிக்ரி பண்ணுவியா? தெரியவே தெரியாதே… எங்களுக்கு ஏதாவது செஞ்சு காட்டினா, உன் பெயரையே கொடுத்துடுவேன். கலா சந்தர் கேட்க, ஸ்வர்னா தனக்கு தெரிந்த கிருபானந்த வாரியார், மேஜர் சுந்தர்ராஜன், ஹரிதாஸ் கிரி என்று செய்து காண்பித்தாள்.

இவ்வளவு டாலண்ட் வைத்துக் கொண்டு இத்தனை நாள் ஏன் வாயை திறக்கவே இல்லை? ரைட். உன்னோட பெயரையே கொடுத்து விடுகிறேன். அருணா சாயிராம் சேர்த்துக் கொள். ஒழுங்கா ப்ராக்டீஸ் பண்ணு, சொதப்பிடக் கூடாது.

வீட்டிற்கு வந்து கணவனிடம் தான் மிமிக்ரி செய்யப் போவதாக கூறியதும்,”மிமிக்ரியா? நீயா? அப்படினா என்னனு தெரியுமா?” என்று அவன் கேட்டதும், அவளின் உற்சாக பலூன் பட்டென்று உடைந்தது.
கல்லூரியில் படிக்கும் பொழுது அவள் மேடையை கலக்கி இருக்கிறாள் என்பது அவள் கணவனுக்கு தெரிந்திருக்க நியாயம் இல்லையே.

எப்படியோ போட்டியில் கலந்து கொண்டு,இதோ முதல் பரிசும் பெற்றாகி விட்டது. மிக மிக சந்தோஷமாக இருந்தது. எத்தனை வருடங்களுக்குப் பிறகு ஒரு பாராட்டு?

சமையல், வீட்டு வேலை, தூக்கம் என்ற ஒரே வட்டத்துக்குள் சுற்றி சுற்றி வருவதற்கு ஒரு மாற்று. அதிலும் பாராட்டு என்பதே மறந்து விடுமோ என்றுகூட தோன்றும்.

“என்ன இன்னிக்கு சமையல் உப்பு சப்பில்லாமல் இருக்கு?” என்று குறை சொல்லத் தெரியும் நாக்கிற்கு, நன்றாக சமைத்திருக்கும் நாட்களில் ஏன் பாராட்ட மனம் வருவதில்லை?

வாசலில் கொஞ்சம் நேரம் அதிகம் செலவழித்து கோலம் போட்டால், ஃபளாட்டில் சின்னதாக கோலம் போட்டால் போதாதா? தனி வீடா தட்டு கெட்டு போறது?” என்பார் மாமியார்.

கணவனோ, “கோலம் அழகா இருக்கே..? யார் போட்டது?” என்பான். வீட்டில் இருப்பது மொத்தம் இரண்டு பெண்கள்தான். அதில் அம்மாவால் குனிந்து கோலமெல்லாம் போட முடியாது, மனைவிதானே போட்டிருக்க வேண்டும் என்பது கூட புரியாதா? அல்லது புரிந்து கொள்ள விருப்பமில்லையா?

இதையெல்லாம் அம்மாவிடம் சொன்னால், “உங்க அப்பா என்னை பாராட்டியிருக்காரா?” என்பாள். ஏக்கங்களை முழுங்கியபடி வாழக்கற்றாள். பன்னிரெண்டு வருட ஏக்கங்களை சிதறடித்து விட்டது இந்த பரிசு.

இவள் கொண்டு வந்த பரிசுக் கோப்பையை பார்த்த மாமியார், “ கீதாவும் இப்படித்தான் காலேஜ் படிக்கும் பொழுது போட்டினு போனா பரிசு வாங்காம வர மாட்டா” என்றார்.

தபாலில் பட்டப்படிப்பை முடித்த நாத்தனார் எப்படி கல்லூரியில் பரிசு வாங்கியிருக்க முடியும்? என்ற கேள்வி எழும்பினாலும், என் மகளை விட நீ உசத்தி கிடையாது என்னும் எண்ணமே உள்ளிருப்பது என்பது புரிய மௌனமானாள்.

சென்டர் டேபிலில் வைக்கப்பட்டிருந்த ட்ராஃபியை பார்த்த மகன், “ஹை! ட்ராஃப்பி! யாரோடது?” என்றான்.

கணவனோ, “அட! நெஜமாவே வின் பண்ணிட்டயா? க்ரேட்! மொத்தம் எவ்வளவு பார்டிசிபெண்ட்ஸ்? நீ மட்டும்தானா?” என்று சிரித்துக் கொண்டே கேட்டதும், இவளுக்கு கோபம் வந்தது.

“பாராட்ட வேண்டாம், கேலி பண்ணாமல் இருக்கலாம்..”

“பாராட்டிடால் போச்சு, ரோஹித், கிவ் ஹெர் அ பிக் ஹாண்ட்”

தகப்பனும், மகனும் கை தட்டினார்கள். டி.வி. ரிமோட்டை கையில் எடுத்துக் கொண்டு சோஃபாவில் உட்கார்ந்தவன், அவள் கொண்டு வந்து தந்த காஃபியை உறிஞ்சியபடி, “ராத்திரி சாப்பிட என்ன?” என்றான்.

"தோசை"

“வெறும் தோசை மட்டும்தானா? ஸ்வீட் எதுவும் கிடையாதா?”

“ஸ்வீட் எதுக்கு?”

“என்னம்மா இப்படி கேட்டுட்ட? ட்ராஃபி வின் பண்ணியிருக்க? செலிபிரேட் பண்ண வேண்டாமா?”

“நானே வின் பண்ணுவேன், அதுக்கு, நானே ஸ்வீட் பண்ணி கொண்டாடனுமா? தேவையில்லை.”

“சே! சே! கண்டிப்பா செலிபிரேட் பண்ரோம்.. ஆனா, இன்னிக்கு இல்லை, நாளைக்கு, வெளில போய் சாப்பிடலாம்..”

“அப்பா, பிசா ஹட்பா..”

“பிசா ஹட் வேண்டாம், லிட்டில் இட்டாலி போகலாம்..”

“வாவ்! சூப்பர்!” இவளுக்கான கொண்டாட்டத்தை இவளுடைய விருப்பத்தை பற்றி கவலைப் படாமல் அவர்களே முடிவெடுத்தார்கள்.

மாலையில் கோவிலுக்குச் சென்றிருந்த பொழுது அலைபேசி அழைத்தது. அவளுடைய கல்லூரித் தோழி ரேவதி. பின்னர் அழைப்பதாக குறுந் செய்தி அனுப்பி விட்டு வீட்டுக்கு வந்ததும் அழைத்தாள். 

“நாளைக்கு என் வீட்டில் காலேஜ் ஃப்ரண்ட்ஸ்‌ ரீ யூனியன் இருக்கு. நீயும் ஜாயின் பண்ணிக்கொள், லெவென் டூ த்ரீ வந்துவிடு” என்றாள்.

“என்ன திடீர்னு?”

“ஸந்தியா யூ.எஸ்ஸிலிருந்து வந்திருக்கா, கிரிஜாவும் சிங்கபூரிலிருந்து வரா.. எல்லாரையும் மீட் பண்ண முடியுமானு கேட்டாங்க..அதுதான்..”

“ஓகே..” எல்லோரையும் பார்த்து எத்தனை நாட்களாகி விட்டன? கல்லூரி படிப்பை முடித்து திருமணம் ஆகும்வரை எல்லோருடனும் தொடர்பு இருந்தது. அவரவர் திருமணம் ஆகிச் சென்றதும் விட்டுப்போன தொடர்பு, இப்போது முகநூல் மூலம் புதுபிக்கப்பட்டிருக்கிறது.

ரேவதியின் வீட்டிற்கு டூ வீலரில் சென்றால் அரை மணி நேரத்தில் சென்று விடலாம். காலை சாப்பாட்டை முடித்துக்கொண்டு சென்றால் மாலை நாலு மணிக்குள் திரும்பி விடலாம்.

- தொடரும்