கணம்தோறும் பிறக்கிறேன் 

Showing posts with label Vairamuthu. Show all posts
Showing posts with label Vairamuthu. Show all posts

Tuesday, November 13, 2018

மசாலா சாட்

மசாலா சாட்  

பயணங்களின் பொழுது பாடல்கள் கேட்பதுண்டு. என் மகனோடு பயணிக்கும் பொழுது ஸ்டாண்ட் அப் காமெடி போடச் சொல்லுவான். எனக்கென்னவோ கெட்ட வார்த்தைகள் நிறைந்த அந்த நகைச்சுவை கேட்க பிடிப்பதில்லை. எனவே பாடல்களுக்குப் பிறகு திருச்சி கே. கல்யாணராமனின் உபன்யாசங்களை போட்டேன். நகைச்சுவையாக, ஜனரஞ்சகமாக, புது விஷயங்களையும் சொல்கிறார். அவ்வப்பொழுது தலை காட்டும் சுய பிரதாபத்தை கொஞ்சம் சகித்துக் கொள்ள வேண்டும். மற்றபடி போகும் வழிக்கும் புண்ணியம்!.




பாடல்களில் இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான், ஹாரிஸ் ஜெயராஜ், அனிருத் என்று எல்லோருடைய பாடல்களும் கேட்டோம். இளையராஜாவின் இசையில் வைரமுத்து எழுதிய சில பழைய பாடல்களையும், ஏ.ஆர்.ஆரின் இசையில் அவர் எழுதிய 'மரங்கள் கேட்டேன் வனமே தந்தனை..' பாடலையும் கேட்ட பொழுது, அதை முழுமையாக ரசிக்க முடியாமல் கடலை சாப்பிடும் பொழுது வாயில் அகப்பட்டு சுவையைக் கெடுக்கும் சொத்தைக் கடலையைப் போல 'மீ டூ' விஷயம் செய்தது.  இவ்வளவு நல்ல கவிஞரா இத்தனை சின்னத் தனமாக நடந்து கொண்டிருக்கிறார்? என்று தோன்றியது.

                                                                         


அதே நேரத்தில் கண்ணதாசனின் நினைவும் வந்தது. அவருக்கு மது மட்டுமல்ல போதை மருந்து பழக்கமும் இருந்தது என்பதை அவரே சொல்லியிருக்கிறார். பெண்கள் விஷயத்திலும் பலவீனமானவர் என்பதும் எல்லோருக்கும் தெரியும். ஆனாலும் அவர்மீது யாருக்கும் வெறுப்பு வந்ததில்லை. 

'போடா போ, காமுகனும் மாண்டான், 
கடவுள் நெறி பேசும் மாமுனியும் மாண்டான்
நம்மை நாம் பாப்போம்  நமதுடலை 
பெண் பார்ப்பாள்..'

'பட்ட கடன் தீர்ப்பதற்கு 
கட்டிக்கொண்ட பெண்களுக்கு 
கொட்டித் தந்த இன்பம் ஒரு கோடி, அதில் 
ஒட்டி வந்த ஞானம் ஒரு பாதி ..'

'ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு 
ஒரு கோல மயில் என் துணையிருப்பு..'

என்றெல்லாம் வெட்ட வெளிச்சமாக, திறந்த புத்தகமாக அவர் வாழ்ந்தது ஒரு காரணமோ?

தீபாவளிக்கு இனிப்புகள் செய்வதும், புத்தாடை அணிந்து கொள்வதும், பட்டாஸு வெடிப்பதும் மட்டுமா சம்பிரதாயம்? வீட்டிற்கு வந்திருக்கும் விருந்தினர்களை சினிமாவுக்கு அழைத்துச் செல்வதும் சம்பிரதாயம்தான். அந்த வகையில் 'பதாயி ஹோ' படம் பார்க்கச் சென்றோம். என்னைத் தவிர எல்லோருக்கும் ஹிந்தி புரியும் என்பதாலும், நகைச்சுவை படம் என்பதாலும் இதைத் தேர்ந்தெடுத்தார்கள். ஹிந்தி படங்களில் கதை என்ன என்று புரிந்து விடும். வசனங்களும் ஓரளவு புரிந்து விடும். நகைச்சுவை காட்சிகளின் பொழுதுதான் என் நிலைமை பரிதாபமாகி விடும். 'த்ரீ இடியட்ஸ்' படத்தில் அரங்கமே அதிர்ந்த ஒரு நகைச்சுவை காட்சியில் நான் மட்டும் கலந்து கொள்ள முடியாமல் பரிதாபமாக உட்கார்ந்திருந்தேன்.



திருமண வயதில் ஒரு மகனையும், பிளஸ் டூ படிக்கும் இன்னொரு மகனையும் வைத்துக் கொண்டு மீண்டும் கர்ப்பமாகும் ஒரு மிடில் கிளாஸ் தாய். முதலில் அதை ஏற்றுக்கொள்ள 
முடியாமல் அவமானத்தில் மறுகும் அந்தக் குடும்பத்தினர் பின்னர் மனம் மாறுவதுதான் திரைப்படம். நீனா குப்தா(தாய்), சுரேகா சிக்ரி(மாமியார்) போன்ற தெரிந்த முகங்கள் இருக்கின்றன.  நீனா குப்தாவின் கணவராக வருபவர் நன்றாகவே நடித்திருக்கிறார். முதல் பாதியில் நகைச்சுவை அதிகம் போலிருக்கிறது. எல்லோரும் அதிகம் சிரித்தார்கள். நான் இதை தமிழில் எடுத்தால்(நிச்சயம் எடுத்து விடுவார்கள் என்றுதான் தோன்றுகிறது) யார் யாரை போடலாம் என்று ஆலோசித்துக் கொண்டிருந்தேன். 

என் மகள் இது 'ஃபாதர் ஆஃப் த பிரைட் பார்ட் டூ' வை உல்ட்டா செய்திருக்கும்   படம் என்றாள். நான் FOB part one பார்த்திருக்கிறேன். பார்ட் டூ பார்க்க வேண்டும்.