கணம்தோறும் பிறக்கிறேன் 

Thursday, February 25, 2021

மந்திரச்சொல்

 மந்திரச்சொல்

வேலை செய்யும் பொழுது யூ ட்யூபில் இசை,அல்லது சொற்பொழிவுகள் கேட்பது என் வழக்கம். அப்படி சுகி சிவம் அவர்களின் சொற்பொழிவை கேட்ட பொழுது, ஒரு சொற்பொழிவில் அவர் சிலர் வாழ்க்கையில் சில சமயங்களில் யாரோ ஒருவர் கூறிய சில வார்த்தைகள் அவர்கள் வாழ்க்கையையே  மாற்றி விடும் என்று கூறி விட்டு, அதற்கு உதாரணமாக திருநீலகண்ட  நாயனார்  வாழ்க்கை, அருணகிரி நாதர் வாழ்க்கை முதலியவற்றை குறிப்பிட்டார். அதைக் கேட்ட பொழுது என் வாழ்க்கையில் நடந்த இரண்டு சம்பவங்கள் நினைவுக்கு வந்தன.

என் கடைசி அக்காவுக்கு முதல் குழந்தை பிறந்திருந்த நேரம். அப்போதெல்லாம் கார்ப்பரேட் ஆஸ்பத்திரிகள் வரவில்லை. எனவே ஆஸ்பத்திரியில் இருப்பவர்களுக்கு நாம்தான்  உணவு கொண்டு போக வேண்டும். என் அக்காவுக்கு நான் சாப்பாடு எடுத்துக் கொண்டு சென்று என் அம்மாவை வீட்டிற்கு அனுப்பினேன். 

நான் அங்கிருந்த நேரத்தில் யாரோ ஒரு பெண்ணுக்கு பிரசவ வலி எடுத்து, லேபர் வார்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டார். பிரசவ வலியை பொறுத்துக் கொள்ள முடியாமல் அவர் எழுப்பிய  சத்தம் என் அக்காவின் அறை வரை கேட்டது. அதை கேட்டு விட்டு நான் என் அக்காவிடம், " பொறுத்துக் கொள்ள முடியாமல்  இப்படி கத்தும் அளவிற்கு வலிக்குமா?"  என்றதும் என் அக்கா, "அப்படி எல்லாம் இல்லடி, பொறுத்துக்கணும்னா பொறுத்துக்கலாம், கத்தறதுனா கத்தலாம்" என்றாள்.  எனக்கு அது ஒரு மந்திரச் சொல்லாகப் பட்டது. எந்த விஷயமாக இருந்தாலும் பொறுத்துக் கொள்வது என்றால் பொறுத்துக்  கொள்ளலாம், கத்தறது என்றால் கத்தலாம் என்று தோன்றும். நாம் எத்தனை பேரை பார்த்திருக்கிறோம் ஒரு சின்ன விஷயத்திற்கு கூட என்ன ஆர்ப்பாட்டம் பண்ணுவார்கள்! வெகு சிலரே பொறுமையாக சகித்துக் கொள்வார்கள். எனக்கு பிரச்சனைகள் வரும் பொழுதெல்லாம் இதைத்தான் நினைத்துக் கொள்வேன். பொறுத்துக்கொள்வது என்றால் பொறுத்துக்கொள்ளலாம், கத்துவது என்றால் கத்தலாம். 

இதைப்போன்ற இன்னொரு மந்திரச்சொல் உண்டு.

 மந்திரச்சொல் -2  

அப்போது நான் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தேன். ஒரு நாள், வாசல் போர்டிகோவில் அமர்ந்து பரீட்சைக்கு படித்துக் கொண்டிருந்த என்னிடம், பக்கத்து வீட்டு மாமி  "நீ இப்போது உன் மனதில் எதைப் பற்றி நினைத்துக்  கொண்டிருக்கிறாய்?" என்று கேட்டார். நான், "நாளைக்கு எக்ஸாம், என்ன மாதிரி கேள்விகள் வரும் என்றுதான் யோசித்துக் கொண்டிருக்கிறேன்" என்றேன். உடனே அவர், "ராமகிருஷ்ணா பரமஹம்சர், யாராவது நம்மிடம் வந்து நீ எதைப் பற்றி நினைத்துக் கொண்டிருக்கிறாய் என்று கேட்டால், நானா? ஒரு பூவைப் பற்றி நினைத்துக்  கொண்டிருக்கிறேன் என்று வெளியே சொல்லக் கூடிய  விதத்தில் நம் எண்ணம் தூய்மையாக இருக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார், அதை உன்னிடம் சோதிக்கலாம் என்று கேட்டேன்" என்றார்.  எவ்வளவு அருமையான அறிவுரை! மனது கொஞ்சம் தாறுமாறாக போகும் பொழுதெல்லாம் இதைத்தான் நினைத்துக் கொள்வேன். 

அந்தப் பக்கத்து வீட்டு மாமி யார் தெரியுமா? இந்த வருடம் கலைமாமணி விருது வாங்கியிருக்கிறாரே திருச்சி  கே.கல்யாணராமன், அவருடைய தாயார்.