கணம்தோறும் பிறக்கிறேன் 

Thursday, October 5, 2017

மகளிர் மட்டும் (விமர்சனம்)

மகளிர் மட்டும்
(விமர்சனம்) 
ஊடகத்தில் பணி புரியும், எதிர்கால மாமியாரோடு தங்கி இருக்கும் ஒரு பெண், தனக்கு மாமியாராக வரப்போகும் பெண்மணியின் கடந்த கால வாழ்க்கையை கேட்டு, அவளின் கல்லூரி தோழிகளை சந்திக்க வைத்து, அந்த மூவரையும் மூன்று நாட்கள் தங்க வைக்க எடுத்துக் கொள்ளும் பிரயத்தனங்களும், கல்லூரி காலத்தில் டாம் பாயாக விளங்கிய அந்த பெண்களின் வாழ்வை திருமணம் எப்படி மாற்றுகிறது என்பதும்தான் கதை. மாறத் தேவை இல்லை என்கிறார்கள்.   

பெண்களின் துயரங்களை  காண்பிக்க வேண்டும் அதே சமயத்தில் ஆண்களை கொடுமைகாரர்களாக சித்தரிக்க கூடாது.  ஒரு சீரியஸ் விஷயத்தை ஜனரஞ்சகமாக சொல்ல வேண்டும். ஜோதிகா பப்லியாக தெரிய வேண்டும், கவர்ச்சி கூடாது. என்று ஏகப்பட்ட நிபந்தனைகளோடு படத்தை எடுத்திருப்பதாலோ என்னவோ ஆழமும், அழுத்தமும் இல்லை. 

படம் முழுவதும் ஜோதிகா ஆக்கிரமிக்கிறார். உடல் இளைத்து சிக்கென்று இருக்கிறார். 36 வயதினிலே போல புடவையில் வராமல் படம் முழுவதும் ஜீன்ஸில்தான் வருகிறார். என்றாலும் அந்த படத்தில்  இயல்பான நடுத்தர வயது பெண்மணியை பார்த்த திருப்தி இதில் வரவில்லை. 36 வயதினிலே பட ப்ரமோவில், "இனிமேல் என்னை கதாநாயகியாக பார்க்க முடியாது, கேரக்டர் ரோல்களில் பார்க்கலாம்" என்றார். ஆனால், உள்ளுக்குள் வாய்ப்பு கிடைத்தால் "மேகம் கருக்குது டங்கு சிக்கு, டங்கு சிக்கு" என்று ஆட்டம் போடலாம் என்ற எண்ணம் இருக்கிறது போல தோன்றுகிறது. 

தோழிகளாக வரும் ஊர்வசி, பானு ப்ரியா, சரண்யா மூவரில் கடைசி பெண்மணி நடிப்பில் முதலிடம் பிடிக்கிறார். ஊர்வசி தன் வழக்கமான நடிப்பால் கிச்சு கிச்சு மூட்டுகிறார், பானுப்ரியாவை பானுப்ரியா என்று அடையாளம் காண்பதே கடினமாக இருக்கிறது. தினசரி குடித்து விட்டு வரும் கணவன் மீது வரும் ஆத்திரத்தை அடக்கிக் கொள்வதாகட்டும், திட்டிக் கொண்டே இருக்கும் மாமியாருக்கு முகம் சுளிக்காமல் பணிவிடை செய்வதாகட்டும், சரண்யா சிறப்பாக செய்திருக்கிறார். சரண்யாவின் தொப்பியில் மற்றுமொரு சிறகு!

படத்தில் ஒரு பாடலை பாடியிருப்பது கார்த்தியாம்!! நல்ல திறமை.  பின்பாதியில் காட்டப்படும் காடும்,அருவியும் கண்களுக்கு விருந்து. 

நாசர், மாதவன் போன்றவர்கள் வந்து போகிறார்கள். ஜோதிகாவால், ஜோதிகாவுக்காக, ஜோதிகாவின் படம். ஜோ மட்டும்.

உக்காரை அல்லது ஒக்காரை

உக்காரை  அல்லது ஒக்காரை 

நவராத்திரியின் பொழுது வெள்ளிக்கிழமை அல்லது செவ்வாய் கிழமை செய்யும் இனிப்பு. சில வீடுகளில் தீபாவளி அன்று காலை இதை செய்வார்கள்.

தேவையான பொருள்கள் 
கடலை பருப்பு - 1 ஆழாக்கு/கப் 
பயத்தம் பருப்பு - 1 ஆழாக்கு/கப் 
வெல்லம்(துருவியது)  -  2 அல்லது 2 1/2 கப் 
தேங்காய் துருவல் 1 மூடி 
ஏலக்காய் - 5
முந்திரி - 10
நெய்  -  4 டேபிள் ஸ்பூன் 

செய்முறை:

முதலில் கடலை பருப்பு, பயத்தம் பருப்பு இரண்டையும் தனித்தனியாக சிவக்க வறுத்துக் கொள்ளவும். பிறகு இரண்டையும் சேர்த்து நீரில் கழுவி இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும். ஊறிய பருப்புகளை மிக்ஸியில் கரகரப்பாக அரைத்து, இட்லி தட்டில் வேக வைக்கவும். *பருப்பு கலவை வெந்ததும் அதை கொஞ்சம் ஆற விட்டு உதிர்த்துக் கொள்ளவும்.  


அது வெந்து கொண்டிருக்கும் பொழுது அடி கனமான ஒரு பாத்திரத்தில் துருவிய வெல்லம் மூழ்கும் வரை நீர் விட்டு பாகு தயாரிக்கத் தொடங்குங்கள். நல்ல முற்றிய பாகாக இருக்க வேண்டும். முற்றிய பாகு என்பதை அறிய ஒரு சிறிய கிண்ணத்தில் நீர் விட்டு, அதில் இந்த பாகை விட்டு கையால் உருட்டினால் உருட்ட வரும். பாகு தயாராகும் வேளையில் துருவிய தேங்காயை வறுத்துக் கொள்ளவும். 

பாகு ரெடியானதும் உதிர்த்த பருப்பு கலவை, வறுத்த தேங்காய் எல்லாவற்றையும் பாகோடு சேர்த்து கிளறவும்.  அடுப்பை நிறுத்தி விட்டு, பொடி பண்ணிய ஏலக்காய், வறுத்த முந்திரி இவைகளையும் சேர்த்து கிளறினால், உக்காரை ரெடி.

சிலர் உக்காரையில் கொஞ்சம் நல்லெண்ணெய் விடுவார்கள். நான் நெய் மட்டுமே சேர்ப்பேன்.

பருப்புகளோடு புழுங்கல் அரிசியும் சேர்த்து செய்வதுண்டு.

* வெந்த பருப்பு கலவையை கைகளாலும் உதிர்க்கலாம், அல்லது மிக்ஸியில் இட்டு ஒரு சுற்று சுற்றினால் பூவாக உதிர்ந்து விடும்.