கணம்தோறும் பிறக்கிறேன் 

Tuesday, October 19, 2021

பார்த்தேன்,பார்த்தேன்,பார்த்தேன்...

பார்த்தேன்,பார்த்தேன்,பார்த்தேன்... 

பலர் பாராட்டிய 'ஹோம்' என்னும் மலையாள படத்தை நானும் பார்த்தேன். எனக்கென்னவோ அப்படி பிரமாதமாக தோன்றவில்லை. படம் ரொ...ம்...ப... ஸ்லோ! தவிர  கட்டுக்கோப்பாக இல்லாமல் அலைகிறது. 


அடுத்து நான் பார்த்த இன்னொரு மலையாள படமான 'கோல்ட் கேஸ்' எனக்கு பிடித்தது. அமானுஷ்யம் கலந்த திரில்லர்.  அதிதி பாலன், லட்சுமி பிரியா, மற்றும் பிரித்விராஜ் நடித்திருக்கும் படம். நல்ல திரைக்கதை, மற்றும் சாதுர்யமான எடிட்டிங் படத்தின் பிளஸ்.


நேற்று 'தலைவி' பார்த்தேன். இந்தப் படம் பிரமாதம் என்று சிலரும், மஹா மட்டம் என்று சிலரும் கூறினார்கள். ஒரு முறை பார்க்கலாம்.  எம்.ஜி.ஆர். போலவும், கருணாநிதி போலவும், ஒப்பனை செய்து விட்டு, எம்.ஜே.ஆர்., கருணா, ஆர்.என்.வீ. என்று பெயரை சற்று மாற்றினால் தெரியாதா என்ன? கதாநாயகியின்  பெயர் ஜெயா. 

ஒப்பனை கலைஞரை பாராட்ட வேண்டும். எம்.ஜி.ஆரை கண்முன் கொண்டு வந்து நிறுத்தி விட்டார். கொஞ்சம் உயரம்! முதல் பாதியை விட, இரண்டாம் பாதியில் சிறப்பாக செய்திருக்கிறார் அரவிந்த்சாமி. 

ஜெயலலிதாவின் பாத்திரப் படைப்பு சரியில்லை. அவரை ஆணவம், கர்வம், திமிர், தான் நினைத்ததை சாதிக்க எந்த நிலைக்கும் செல்பவர் என்பது போல் காட்டியிருப்பது சரியா? ஆனால் அதை திறம்பட செய்திருக்கிறார் கங்கனா ரெனாவத்.  ஜெயாவின் அரசியல் ஆலோசகரான சோ எங்கே? 

தலைவி என்று பெயர் கொடுத்து விட்டதால் ஜெய லலிதாவின் அரசியல் வாழ்க்கையை மட்டும் காட்டினால் போதும் என்று நினைத்து விட்டார் இயக்குனர், ஆனால் பாத்திர படைப்பில் கோட்டை விட்டது தோல்வி. இந்தப் படத்தை பார்த்தால் ஜெயாவின் மீது அபிமானமோ, மரியாதையோ,பரிதாபமோ வராது. அவருடைய சொந்த வாழ்வில் அவர் சந்தித்த தோல்விகள், அவமானங்கள், இழப்புகள் இவை எதையும் காட்டாமல், தலைவி என்னும் இடத்திற்கு வெகு சுலபமாக வந்து விட்டது போல சித்தரித்திருக்கிறார். கங்கானாவிற்கு குரல் கொடுத்திருக்கும் சவிதாவுக்கு ஸ்பெஷல் பாராட்டுகள்!
தம்பி ராமையாவும், சமுத்திரக்கனியும் தங்கள் பங்கை செம்மையாக செய்திருக்கிறார்கள். 

ஓ.டி.டி. யை விட்டு விட்டு தொலைக்காட்சிக்கு வரலாமா? சனி, மற்றும் ஞாயிறு சன் டி.வி.யில் ஒளிபரப்பாகும் 'மாஸ்டர் செஃப் இந்தியா' - தமிழை தொடர்ந்து பார்க்கிறேன்.  ஒரு மணி நேரம் போவதே தெரியவில்லை. அதில் அவர்கள்  கொடுக்கும் சேலஞ்சுகளும், அதை போட்டியாளர்கள் திறம்பட சமாளிப்பதும் பார்க்க வெகு சுவாரஸ்யம். ஆனால் அப்படிப்பட்ட உணவுகளை வீட்டில் சாதாரணமாக செய்து சாப்பிட முடியுமா? என்று தெரியவில்லை. 

யூ டியூபில் நான் ரசிக்கும் ஒரு நிகழ்ச்சி சுபஸ்ரீ தணிகாசலம் வழங்கும் QFR(quarantine from reality). பல வருடங்களுக்கு முன்பு டிசம்பர் சீசனில் ஒருவர், கர்னாடக இசையை வளர்க்க வேண்டுமென்றால் இளைஞர்களுக்கு மியூசிக் அப்ரிசியேஷன் வகுப்பு எடுக்க வேண்டும் என்று பேசியதற்கு,விகடனில் இசையை ரசிப்பது எப்படி என்று எப்படி கற்றுக் கொடுக்க முடியும்? அது இயல்பாக வர வேண்டாமா? என்று எழுதியிருந்தார்கள். இப்போது சுபஸ்ரீ QFR நடத்துவதை பார்த்தால் அந்தக் கேள்வி வராது. அவர் ஒவ்வொரு பாட்டையும் அணு அணுவாக ரசித்து,அதை விவரிக்கும் பொழுது அட! இந்தப் 
பாட்டில் இவ்வளவு விஷயம் இருக்கிறதா? என்று தோன்றும்.