கணம்தோறும் பிறக்கிறேன் 

Tuesday, December 31, 2019

என்னைக் கவர்ந்த திருப்பாவை எல்லே இளம் கிளியே ...

என்னைக் கவர்ந்த திருப்பாவை 
எல்லே இளம் கிளியே ...





திருப்பாவையின் பதினைந்தாவது பாசுரம், "எல்லே இளங்கிளியே... " என்று துவங்கும் இந்த பாடல். பாவை நோன்பு நோற்க ஒவ்வொரு பெண்ணாக எழுப்பி அழைத்து வரும் ஆண்டாள் மற்றும் அவள் தோழிகளுக்கும்  இன்னும் எழுந்து வராமல் உள்ளே உறங்கிக் கொண்டிருக்கும் பெண்ணிற்கும் நடக்கும் உரையாடலை அப்படியே பாடலாக்கி இருக்கிறாள்
  
எல்லே இளங்கிளியே! இன்னம் உறங்குதியோ?
சில்லென் றழையேன்மின், நங்கைமீர்! போதர்கின்றேன்;
‘வல்லை, உன் கட்டுரைகள்! பண்டேஉன் வாயறிதும்!’
‘வல்லீர்கள் நீங்களே, நானேதான் ஆயிடுக!’
‘ஒல்லைநீ போதாய், உனக்கென்ன வேறுடையை?’
‘எல்லோரும் போந்தாரோ?’ ‘போந்தார், போந்து எண்ணிக்கொள்’
வல்லானை கொன்றானை, மாற்றாரை மாற்றழிக்க
வல்லானை, மாயனைப் பாடேலோ ரெம்பாவாய்.

வாசலில் நிற்கும் பெண்கள்,"இன்னுமா உறங்கிக் கொண்டிருக்கிறாய்"?  என்று கேட்க, "சில்லென்று பேச வேண்டாம், வந்து விட்டேன்" என்கிறாள் உள்ளே இருக்கும் பெண். வார்த்தையை கவனியுங்கள், "சில்"லென்று அழைக்க வேண்டாம்" என்கிறாள்.. சாதாரணமாக கோபமாக பேசுவதை "சுள்" என்று பேசுவது என்றுதான் சொல்வோம். ஆனால் குளிரான மார்கழி மாதத்தில் அதிகாலையில் "சுள்" என்று பேசுவதை விட, "சில்" என்று பேசுவதுதானே பொறுக்க முடியாமல் இருக்கும்?

வா.நி.பெ.: உன்னுடைய வாய் சவடால் எங்களுக்குத் தெரியும் (தெரியாதா ? என்பது உட் கிடை)அடுத்து வரும்   'வல்லீர்கள் நீங்களே, நானேதான் ஆயிடுக'  என்னும் இந்த இரண்டு வரிகளும் மிக முக்கியமானவை.

"என்னை வாய் சவடால் என்று கூறும் நீங்கள் மட்டும் என்ன?, சரி அப்படியே இருக்கட்டும்" இதுதான் சண்டையை வளர்த்தாமல், சமாதானமாக போகும் வைணவ கோட்பாட்டை விளக்குகிறது.

வா.நி.பெ.: சரி, வேறு எதையும் பற்றி எண்ணாமல் சீக்கிரம் கிளம்பேன்..

உ.இரு.பெ.: என்னை விரட்டுகிறீர்களே, மற்ற எல்லோரும் வந்து விட்டார்களா?  - இதுதானே, நம்முடைய வழக்கம். நம்மை யாராவது ஒரு நல்ல செயலுக்கு தூண்டும் பொழுது, நான் மட்டும்தான் கிடைத்தேனா? மற்றவர்கள் என்ன ஆனார்கள் என்று கேட்பதுதானே நம் பழக்கம்? 

வா.நி.பெ.: எல்லாரும் வந்தாச்சு, சந்தேகம் இருந்தால் வந்து எண்ணிக்கொள்..

குவலய பீடம் என்னும் யானையை கொன்றவனும், தீயவர்களை அழிக்கக் கூடியவனுமாகிய, மாயவனை பாட வாராய் என்று முடியும் இந்த பாடலின் ஒவ்வொரு வரியும் வைணவர்கள் கடை பிடிக்க வேண்டிய வழி முறைகளை வலியுறுத்துவதால் இது மிக முக்கியமான பாசுரம்(அத்தனை விரிவாக நாம் பார்க்கவில்லை). பாடல் வடிவில் ஒரு ஓரங்க நாடகத்தையே நம் கண் முன் நிறுத்தும் ஆண்டாளின் திறமை மனதை கொள்ளை கொள்கிறது! 

Saturday, December 28, 2019

என்ன என்ன வார்த்தைகளோ...?

என்ன என்ன வார்த்தைகளோ...?

என்னுடைய சென்ற பதிவில் காத்திருப்பதைப் பற்றி எழுதும் பொழுது சதாசிவ ப்ருமேந்திரரைப்பற்றி எழுதியிருந்தேன். "பசிக்கிறது சாப்பாடு போடு" என்று கேட்ட அவரிடம் அவருடைய தாய், "பத்துநிமிடம் பொறுத்துக் கொள்" என்று கூறிய வார்த்தை ஏற்படுத்திய தாக்கத்தையும் அதனால் அவர் வாழ்வில் ஏற்பட்ட மாற்றத்தையும் சிந்தித்த பொழுது, வேறு சில மகான்களின் வாழ்க்கையில் இப்படி ஒரு வார்த்தை, அல்லது ஒரு வாக்கியம் ஏற்படுத்திய மாற்றங்கள் நினைவுக்கு வந்தன.

சதாசிவ ப்ருமேந்திரரிடமே தொடங்கலாம். மைசூர் சமஸ்தானத்தின் ஆஸ்தான புலவராக சதாசிவம் இருந்த பொழுது, தமிழ் நாட்டிலிருந்து வரும் புலவர்களுக்கு ஒரு தலைவலியாக விளங்குகிறார். மைசூர் மகாராஜாவை சந்தித்து, அவரிடம் தங்கள் புலமையை காட்டி, பரிசுகள் பெறலாம் என்று நோக்கத்தோடு வரும் புலவர்களை மெச்சி அரசன் பரிசு கொடுக்க முன் வந்தாலும், அங்கிருக்கும் சதாசிவம் அவர்கள் இயற்றிய செய்யுளில்  குற்றம் கண்டு பிடித்து, கேள்விகள் கேட்டு, பரிசுகள் பெறவொட்டாமல் செய்து விடுகிறார். இதனால் எரிச்சலடைந்த புலவர்கள், அப்போதைய காமகோடி பீடாதிபதியிடம் சென்று, "இந்த சதாசிவத்தால் எங்கள் பிழைப்பில் மண் விழுகிறது. அரசன் பரிசு கொடுக்க தயாராக இருந்தாலும், இவன் குறுக்கே பேசி எங்களுக்கு அது கிடைக்காமல் செய்து விடுகிறான்"  என்று குற்றம் சொல்கிறார்கள். பீடாதிபதி சதாசிவம் அவர்களை அழைத்து," உன்னால் வாயை மூடிக்கொண்டு இருக்க முடியாதா?" என்று கேட்கிறார். குருவின் அந்த கேள்வியை அவருடைய கட்டளையாக பாவித்து அன்றிலிருந்து மௌன விரதத்தை மேற்கொள்கிறார். வாயால் மட்டுமல்லாமல் மனதாலும் பேசாமல், மந்திரத்தை மட்டும் ஜபித்தபடி இருக்க, அது அவருக்கு சித்தியாகிறது.



திருச்சுழியில் பிறந்து, மதுரையில் வாழ்ந்த வெங்கடரமணன் என்னும் அந்த சிறுவனுக்கு பதிமூன்று வயதாகும் பொழுது அவனுடைய பக்கத்து வீட்டுக்காரர் இறந்து விடுகிறார். மரணம் என்றால் என்ன? என்னும் கேள்வி அவனுக்குள் பிறக்கிறது. அப்பொழுது அவன் வீட்டிற்கு வந்த உறவினர் ஒருவர், "திருவண்ணாமலையிலிருந்து வருகிறேன்" என்று கூறியதை கேட்ட அந்த நொடியில், தான் திருவண்ணாமலை செல்ல தீர்மானித்து விடுகிறான். திருவண்ணாமலை எங்கு இருக்கிறது? அதற்கு எப்படி செல்ல வேண்டும்?  என்பது எதுவும் தெரியாத அந்த குழந்தை விழுப்புரம் வரை ரயிலில் வந்து, அங்கிருந்து கால்நடையாகவே திருவண்ணாமலையை அடைந்து, அருணாசலேஸ்வரர் கோவிலுக்குள் நுழைந்து, ஓடிப்போய், அந்த லிங்கத்தை,"அப்பா,வந்துட்டேன்ப்பா" என்று கட்டிக் கொண்டதாம்.  அந்த சிறுவனைத்தான் பகவான் என்றும், ரமண மகரிஷி என்றும் உலகம் கொண்டாடுகிறது. அவரை செலுத்தியது உறவினர் கூறிய "திருவண்ணாமலையிலிருந்து வருகிறேன்" என்னும் வாசகம்.



அதே திருவண்ணாமலையில் இசை வேளாளர் மரபில் பிறந்த அவன் ஆணழகன், இசையிலும், தாளத்திலும் விற்பன்னன். பெண்கள் மீது அவனுக்கும், அவன் மீது பெண்களுக்கும் மோகம் அதிகம். இளமை, செல்வம் இரண்டும் இருக்கும் வரை உல்லாசத்திற்கு குறைவில்லை. இரண்டும் குறைந்து, நோயும் வந்தவுடன் அவனை விரும்பிய அதே பெண்கள் அவனை புறக்கணிக்கிறார்கள். இதனால் மனம் வெதும்பும் அவனிடம் அவன் சகோதரி,"பெண் சுகத்திற்குத்தானே ஏங்குகிறாய்? நானும் ஒரு பெண்தான், என்னிடம் தணித்துக் கொள் உன் வேட்கையை" என்று கூற, அதிர்ந்து போகும் அவன், தன்னை வெறுத்து, உயிரை மாய்த்துக்கொள்ள துணிந்து அருணாசலேஸ்வரர் ஆலயத்தில் இருக்கும் வெள்ளாள கோபுரத்தின் மேலேறி, அதிலிருந்து குதித்து உயிரை விட துணிந்த பொழுது, முருகப் பெருமானால் காப்பாற்றப் பட்டு அருணகிரிநாதராக மலர்ந்தது நாம் அறிந்ததுதானே.

கஞ்சக்கருமியாக இருந்த பட்டினத்தாரை மாற்றியது அவருடைய மகனாக வந்த சிவ பெருமான் ஓலை நறுக்கில் எழுதி அனுப்பிய, "காதறுந்த  ஊசியும் வாராது காண் கடை வழிக்கே" என்னும் வாசகம்.

குயவரான அவர் சிவபெருமான் மீது மிகுந்த பக்தி கொண்டவர். வீட்டிலே அழகான மனைவி இருந்தாலும் மற்ற பெண்களை நாடுவதிலும் அதிக விருப்பம் கொண்டவர். ஒரு நாள் வேறொரு பெண்ணோடு இருந்து விட்டு வீட்டிற்க்கு வரும் அவரிடம் அவர் மனைவி கோபமாக,"எம்மைத் தீண்டாதே திருநீலகண்டம்" என்று சிவன் மீது ஆணையிட்டு கூறுகிறாள். அவள் என்னைத் தீண்டாதே என்று கூறியிருந்தால் தன்னை மட்டும் இனிமேல் தீண்டக்கூடாது என்று எடுத்துக் கொள்ளலாம், ஆனால், எம்மை என்று பன்மையில் கூறியதால் பெண்கள் யாரையுமே தீண்டக் கூடாது என்று அவள் கூறியிருப்பதாக கொண்டு அன்று முதல் பிரும்மச்சரிய விரதத்தை மேற்கொண்டு திருநீலகண்ட நாயனாராக உருவெடுக்கிறார்.

இதே போல வேறொருவரையும் உயர்ந்த நிலைக்கு உயர்த்தியது அவர் மனைவி கூறிய வார்த்தைதான். மனைவி மீது அதீத காதல் அவருக்கு. ஒரு நாள் கூட, அல்லது ஒரு இரவு கூட மனைவியை பிரிந்து இருக்க முடியாது. ஒரு முறை மனைவி அவருடைய பெற்றோர்களில் ஒருவருடைய திதிக்காக பிறந்த வீடு சென்றிருக்கிறார். அன்று இரவு இவர் மனைவியைத்  தேடிக்கொண்டு செல்கிறார். வழியில் ஒரு ஆற்றினைத் தாண்ட வேண்டும், நதியில் ஏதோ மிதக்கிறது,அதை மரக்கட்டை என்று நினைத்து நதியில் மிதக்கும் பிணத்தை பற்றிக்கொண்டு கடக்கிறார். அர்த்த ராத்திரியில் கதவைத்தட்டி மற்றவர்களை எழுப்ப வேண்டாம் என்று நினைத்து, ஓட்டிலிருந்து தொங்கும் பாம்பினை மரத்தின் விழுது என்று கருதி, அதை பற்றிக் கொண்டு மேல் ஏறி, ஓட்டினை பிரித்து உள்ளே குதிக்கிறார். அவரைக்  கண்ட அவர் மனைவிக்கு மிகுந்த கோபம் வந்து விடுகிறது. "சீ! ஒரு நாள் கூடவா உங்களால் நான் இல்லாமல் இருக்க முடியாது? அழியக்கூடிய இந்த உடலின் மேல் அப்படி என்ன விருப்பம்? இந்த பற்றினை பரம்பொருளான ராமன் மீது வைக்கக்கூடாதா?" என்ற அவளின் கேள்விதான் அவருடைய அகக்கண்களை திறக்கிறது.  ராம நாமத்தை விடாமல் ஜபித்து, ராமாயணத்தை ஹிந்தியில் ராம சரித மானஸ் என்னும் காப்பியமாக நமக்கு கொடுத்த துளசிதாஸரின் வாழ்க்கையை மாற்றியது மனைவியின் வசனங்கள்தான்.

மகான்களின் வாழ்க்கையில்தான் இம்மாதிரி நடக்குமா? இல்லை சாதாரண மனிதர்கள் வாழ்க்கையிலும் இம்மாதிரி சம்பவங்கள் நடந்து அவர்கள் வாழ்க்கையை புரட்டிப்போடலாம். அந்த இளம் வக்கீலுக்கு அதுதான் நிகழ்ந்தது. நாடங்களில் நடித்துக் கொண்டிருந்த அவர் திரைப்படங்களிலும் நகைச்சுவை நடிகராக தலைகாட்டிக் கொண்டிருந்தார். ஒரு முறை நண்பர்களோடு காரில் வந்து கொண்டிருந்த பொழுது அவர் அப்போதைய பத்திரிகைகளை கேலி செய்து ஏதோ கூறியிருக்கிறார். உடனே அவர் நண்பர் ஒருவர்,"எல்லோரையும் கிண்டல் செய்கிறாய். கேலி செய்வது எளிது.  இந்த அம்சங்கள் இல்லாமல் ஒரு பத்திரிகை ஆரம்பித்து, உன்னால் வெற்றிகரமாக நடத்த முடியுமா?" என்று கேட்டிட்டிருக்கிறார்.
"அப்படி நடத்தி காண்பித்தால் என்ன தருவாய்? "
"ஐம்பது ரூபாய் தருகிறேன்"
"நான் நடத்தி காண்பிக்கிறேன்" என்று நண்பரிடம் சவால் விட்டு ஐம்பது ரூபாய்க்காக ஆரம்பிக்கப்பட்ட பத்திரிகை  ஐம்பதாவது ஆண்டான பொன் விழா ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. பத்திரிகை எது என்று யூகித்திருப்பீர்களே.. ஆமாம், துக்ளக் தான் அந்த பத்திரிகை.













Tuesday, December 24, 2019

மசாலா சாட் - 14

மசாலா சாட் - 14

இந்த முறை என்ன பதிவிடலாம் என்று யோசித்த பொழுது இரண்டு பேர் அதற்கு வழி காட்டினார்கள். முதலில் திரு. வெங்கட், அவர் தன் 17,டிசம்பர் பதிவில் இனி நவம்பர் ஒன்றாம் தேதியை தமிழக தினமாக கொண்டாட தமிழக அரசு முடிவு  செய்திருப்பதை  குறிப்பிட்டிருந்தார். எனக்கு என்னவோ அது தேவையில்லாத செயல் என்று தோன்றுகிறது. ஆகஸ்ட் மாதத்தில் ஒரு நாளை 'மெட்ராஸ் டே'  என்று கொண்டாடுகிறார்கள். பிரிட்டிஷ்காரர்கள் நம்மை ஆண்ட பொழுது மெட்ராஸ் ராஜதானி என்றழைக்கப்பட்ட ஒருங்கிணைக்கப்பட்ட தமிழ் நாட்டில் தமிழகம்(அப்போதைய சென்னை), கர்னாடகா(அப்போதைய மைசூர்), கேரளா, ஆந்திரா எல்லாமே இணைந்திருந்தன. சுதந்திரத்திற்குப் பிறகு மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்ட பொழுது  ஆந்திரா, கர்நாடகா, போன்றவை தமிழகத்திலிருந்து பிரிந்து புது மாநிலமாக உருவானதால் நவம்பர் ஒன்றாம் தேதியை அந்தந்த மாநிலங்கள் கொண்டாடுவதில் ஒரு பொருள் உண்டு. நாம் அப்படியேதானே இருக்கிறோம்? எதற்கு தமிழ் நாடு தினம்? ஒரு நாள் விடுமுறை கிடைக்கும். "தமிழ்நாடு தினத்தை முன்னிட்டு உலக தொலைக்காட்சியில் முதன் முதலாக..."என்று ஏதாவதொரு போணியாகத திரைப்படத்தைப்  பார்க்கலாம். இதைத்தவிர வேறு என்ன லாபம்?  என்று யாராவது கூறுங்களேன்.



அதன் பிறகு சகோதரி கமலா ஹரிஹரன் அவர்கள் தன் 'வெண்டைக்காய் பிட்லை' பதிவில் காத்திருப்பதை பற்றி எழுதியிருந்த விஷயம் என்னை எங்கெங்கோ இழுத்துச் சென்று விட்டது.

காத்திருத்தலோடு மிகவும் சம்பந்தப்பட்டது காதல். காதலைப் பற்றி பாடியவர்கள் எல்லோரும் காத்திருத்தலைப் பற்றியும் பாடியிருக்கிறார்கள் பாரதி உட்பட.  பாலகுமாரனின்
உனக்கென்ன சாமி, பூதம்
கோவில் பூஜை
ஆயிரம் ஆயிரம்
வலப்பக்கத்து மணலை
இடப்பக்கம் இரைத்திரைத்து
நகக்கணுக்கள் வலிக்கின்றன
அடியே!
நாளையேனும் மறக்காமல் வா
என்னும் புதுக்கவிதை பெரிதும் கொண்டாடப்பட்ட ஒன்று.

இந்த அவஸ்தை எல்லாம் வேண்டாம் என்று துறவறம் பூண்ட ஒருவர் உண்டு. அவர் இளைஞராக இருந்த பொழுது ஒரு நாள் தன் அம்மாவிடம்,"பசிக்கிறது அம்மா, சாதம் போடு" என்றார். அவர் அம்மா," இப்பொழுதுதான் சாதத்தை வடித்து இறக்கியிருக்கிறேன், சாதம் உலைப்புர வேண்டும்,ஒரு பத்து நிமிடம் காத்திரு" என்கிறாள். இந்த வார்த்தைகள் அவருள் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி விடுகின்றன. " எனக்கு இப்போது பசிக்கிறது, சாப்பிட வேண்டும், ஆனால் அம்மாவோ பத்து நிமிடம் காத்திரு என்கிறாள், நான் இந்த லோகாயுத வாழ்க்கையில் தொடர்ந்து இருந்தேன் என்றால் எத்தனை விஷயங்களுக்கு எத்தனை நேரம் காத்திருக்க வேண்டும்?" என்று நினைத்த அவர் வீட்டை துறந்து சென்று விடுகிறார். அவர்தான் சதாசிவ ப்ருமேந்திரர் ஆக பரிணமித்தார் .



நம்முடைய புராணத்தில் காத்திருப்பிற்கு எண்ணற்ற உதாரணங்கள் உண்டு.
கடோபநிஷத் பிறந்ததே இந்த காத்திருப்பால்தானே? ஒரு ரிஷி குமாரனாக பிறந்த நசிகேதஸ் தன்னுடைய தந்தை அவர் செய்த யாகத்தில் பால் வற்றிய பசு போன்ற உபயோகம் அற்ற பொருள்களை தானம் செய்வதை பார்த்து, அவரிடம், "எதற்காக இந்த தானங்கள்?" என்று கேட்கிறான். அவர் "நாம் வேண்டியதைப் பெற" என்கிறார். என்னை யாருக்கு தானம் கொடுக்கப் போகிறீர்கள்?" என்று மீண்டும் மீண்டும் கேட்கிறான். எரிச்சல் அடைந்த அவர்,"உன்னை எமனுக்கு தானம் கொடுக்கிறேன்" என்று கூறி விடுகிறார். நசிகேதஸ் அவர் தந்தையை வற்புறுத்தி தன்னை எமனுக்கு தானம் கொடுக்கச் செய்கிறான்.  அவனுடைய தந்தை அப்படியே செய்ய, அவன் எமலோகம் சேர்ந்து விடுகிறான். அவனுடைய ஆயுள் முடியாததால், அவனை ஏற்றுக் கொள்ள மறுத்து விடுகின்றனர். அவனோ,தான் எமனை காணாமல் போக மாட்டேன் என்று எமனுடைய அரண்மனை வாசலிலேயே காத்திருக்கிறான். மூன்று நாட்கள் காத்திருந்த பின்னரே எமனுக்கு இந்த விஷயம் தெரிகிறது. ஒரு அந்தணச் சிறுவனை மூன்று நாட்கள் காக்க வைத்து விட்டோமே என்று பதறி ஓடி வரும் எமதர்ம ராஜா அவனுக்கு மூன்று வரங்கள் தர முன் வருகிறான். ஆனால் நசிகேதஸோ, இக லோக சுகங்களைத்தாண்டி ஆன்மா என்பது என்ன? மரணம் என்றால் என்ன? போன்ற விஷயங்களை தெரிந்து கொள்ள வேண்டும் என்பதிலேயே ஆர்வம் காட்டி அதை தெரிந்து கொள்கிறான். எமன் நசிகேதஸுக்கு செய்த உபதேசங்களே கடோபநிஷத் ஆகும். 


காத்திருந்து பயனடைந்த இரண்டு ராமாயண கதா பாத்திரங்கள் அகலிகையும், சபரியும். அகலிகையாவது தான் சாப விமோசனம் பெற வேண்டும் என்பதற்காக காத்திருக்கிறாள். சபரிக்கோ ராமன் யார் என்று தெரியாது, தன்னுடைய குருவின் வாக்கை நம்பி ராமன் ஒரு நாள் நிச்சயம் வருவான் என்று  காத்திருந்த அவளுடைய குரு பக்தியும், அசையாத நம்பிக்கையும் காத்திருத்தல் என்பதற்கு முழுமையாக நியாயம் செய்கின்றன.

இதற்கு மாறாக தன் கணவனால் தன்னிடம் அளிக்கப்பட்ட முட்டை பொரியும் வரை காத்திருக்க முடியாமல் அவசரப்பட்டு அதை உடைத்து விடுகிறாள்  காஷ்யபரின் மனைவி வினதை. அதனால் அதிலிருந்து வெளி வந்த அருணன்(சூரிய பகவானின் தேரோட்டி) என்னும் பறவை ஊனமாக பிறக்கிறது. தன் தாயாரின் அவசர புத்தியே இதற்கு காரணம் என்று கோபம் கொண்ட அருணன் அடிமையாக போகும்படி தன் தாயை சபிக்கிறார். அதன் விளைவாகவே காஷ்யபரின் மற்றொரு மனைவியாகிய கத்ருவுக்கு அடிமையாகிறாள் வினதை.


சிவன் கோவில்களில் சிவ பெருமானுக்கு முன்  அமர்ந்திருக்கும் நந்தி கூட காத்திருப்பதைத்தான் குறிக்கிறது என்பார்கள். ஜீவாத்மாவைக் குறிக்கும் நந்தி பரமாத்மாவோடு ஒன்றும் நோக்கத்தோடு ஒருமுகப்பட்ட சிந்தனையோடு காத்திருப்பதாக சொல்வதுண்டு.

நம் புராணங்களில் தவம் புரிபவர்கள் ஆயிரக்கணக்கான வருடங்கள் தவம் புரிந்தார்கள் என்று வருவது கூட, ஒரு நல்ல விஷயத்திற்காக பல வருடங்கள் காத்திருக்க வேண்டும் என்பதைத்தான் குறிக்கிறதோ?

இவை அத்தனையையும் சொல்லிவிட்டு 'THEY ALSO SERVE WHO STAND AND WAIT' என்னும் பாரடைஸ் லாஸ்டில் வரும் மில்டனின் புகழ் பெற்ற வாசகத்தை சொல்லாவிட்டால் இந்த பதிவு முடிவு பெறாது.




 





Thursday, December 19, 2019

குயின் (வெப் சீரிஸ்) சீசன் 1

குயின் (வெப் சீரிஸ்) சீசன் 1

Image result for queen web series

குயின் (Queen) வெப் சீரீஸ் சீசன் 1 பார்த்து முடித்து விட்டேன். உலகின் கண்களில் அரசியாக கருதப்பட்ட ஒரு பெண், அந்த இடத்தை அடைய அவள் கொடுத்த விலை, பட்ட துயரங்கள் இவற்றை மிகவும் நியாயமாகவும் துயரம் தோய்ந்த அழகோடும் படமாக்கியிருக்கிறார் கௌதம் வாசுதேவ் மேனன்.  இவருடைய சமீபத்திய படங்களை பார்த்த பொழுது மனதிற்கு கொஞ்சம் கஷ்டமாக இருந்தது. வியாபார நிர்பந்தம், ஹீரோக்களின் அடாவடி இவைகளால் இவர் கொஞ்சம் சமரசம் செய்து கொள்ள வேண்டியிருந்தது போலிருக்கிறது. ஆனால் வெப் சீரீஸில் இந்த பிரச்சனைகள் இல்லாததால் அவர் விருப்பப்படி எடுக்க முடிந்திருக்கிறது. 

சின்ன சின்ன ரோல்களில் நடித்துக் கொண்டிருக்கும் ஒரு நடிகையின் மகள். கான்வென்டில் படிக்கும் பள்ளியின் சிறந்த மாணவியான அந்த பெண்ணிற்கு நன்றாக படிக்க வேண்டும் என்று ஆசை. பொதுத்தேர்வில் மாநிலத்தில் முதலாவது மாணவியாக வரும் அவளை பெஸ்ட் அவுட் கோயிங் ஸ்டூடண்டாக தேர்ந்தெடுக்கிறார்கள். ஆனால் அந்த விருதை வாங்க முடியாமல் அவளை திரைப்படத்தில் நடிக்க அழைத்துச் சென்று விடுகிறாள் அவளுடைய தாயார். அங்கு துவங்குகிறது அவளுடைய சிதையும் கனவுகள். அதன் பிறகு தமிழ் திரையுலகின் முடி சூடா மன்னனான ஜி.எம்.ஆர். அவளை தன்னோடு நடிக்க வைக்க, அவள் விரும்பாத துறையில் அவள் உச்சத்தை தொடுகிறாள். ஜி.எம்.ஆரின் ஆளுமை அவளை பொது வாழ்வில் எப்படி உயர்த்துகிறது, தனிப்பட்ட வாழ்க்கையில் எப்படி வீழ்த்துகிறது என்பதை  நறுக்கென்று விவரித்திருக்கிறார் கௌதம். அவரே இயக்குனர் ஸ்ரீதராகவும் நடித்திருக்கிறார்.

நடிகர்கள் தேர்வு சிறப்பு. சிறுவயது சக்தியாக வரும் அங்கிதாவாகட்டும், இளம் வயது நடிகையாக வரும் அஞ்சனாவாகட்டும், அரசியல்வாதியாக வரும் ரம்யா கிருஷ்ணனாகட்டும் மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். இசையும், ஒளிப்பதிவும் துல்லியம். அரசியல் தலைவி சக்தி தொலைக்காட்சியில் பேட்டி கொடுக்கும் பொழுது வசனங்கள் இன்னும் கொஞ்சம் எளிமையாக இருந்திருக்கலாம். மற்றபடி பல இடங்களில் வெகு ஷார்ப். ஜி.எம்.ஆர். மறைந்த பிறகு ஜி.எம்.ஆர் மனைவி ஜனனி தேவியும், சக்தியும் பேசிக்கொள்வது, ஜி.எம்.ஆரும் சக்தியும் உரையாடும் சில இடங்கள். "என்னை சுற்றி இருப்பவர்களிடம் என் புத்திசாலித்தனத்தை நிருபித்துக் கொண்டே இருக்கணும், ஆனால் மக்களுக்கு நான் புத்திசாலி என்று தெரியக்கூடாது". என்று டி. வி. தொகுப்பாளினியிடம் சொல்வது போன்றவை உதாரணங்கள்.

ஜி.எம்.ஆருக்கும் சக்திக்கும் நிலவிய உறவு எப்படிப்பட்டது என்பதை சக்தியின் தாய்,"ஏன் கல்யாணம் கல்யாணம்னு அலையற? அதுதான் கல்யாணம் ஆகாமலே எல்லா கண்ராவியும் கிடைக்கிறதே? கழுத்தில் கால் பவுன் தங்கம் இல்லை.." என்று வெகு சுலபமாக சொல்லி விடுகிறாள். இதை திரைப்படமாக எடுத்திருந்தால் இது சாத்தியமாகியிருக்காது. எதையும் மறைக்கவில்லை, எதையும் போட்டு உடைக்கவுமில்லை. சொல்ல வேண்டியதை நாசூக்காக சொல்லி இருக்கிறார். படிப்பதை தவிர வேறு எதுவும் தெரியாத, வெளி உலகம் புரியாத, அப்பாவி பெண், ஆணவமும், பிடிவாதமும் கொண்டவளாக எப்படி, ஏன் மாறினாள்? என்பதை பார்க்கும் பொழுது நெஞ்சம் கனக்கிறது. பாராட்டப்படவேண்டிய நல்ல முயற்சி! ஒரு அசந்தர்பமான சூழலில் மக்கள் தலைவியாக உருவெடுக்கும் அவள், இது ஆரம்பம்தான் என்று கூறுவதோடு சீசன் 1 முடிகிறது. அடுத்த சீசனுக்கு காத்திருக்கிறோம்.








Wednesday, December 18, 2019

மார்கழி நினைவுகள்

மார்கழி நினைவுகள் 


இவர்தான் சுசித்ரா பாலசுப்பிரமணியன் -சிவானந்த விஜயலக்ஷ்மியின் பேத்தி 

கார்த்திகை, மார்கழி இரண்டுமே ஆன்மீக விஷயங்களுக்கு உகந்த மாதங்கள்தான் என்றாலும், மார்கழி இன்னும் கொஞ்சம் சிறப்பு வாய்த்தது. 
நம்முடைய ஒரு வருடம் என்பது தேவர்களுக்கு ஒரு நாள். அதில் நம்முடைய தக்ஷிணாயணம் அவர்களுடைய இரவு, உத்திராயணம் அவர்களுக்கு பகல். தை மாதம் உத்திராயணம் தொடங்கும். அதாவது இரவு முடிந்து பகல் தொடங்கும். தக்ஷிணாயணத்தின் இறுதியான மார்கழி மாதம் தேவர்களுக்கு விடியற் காலை. சாதாரணமாகவே பிரம்ம முகூர்த்தம் எனப்படும் அதிகாலை நேரத்தில் செய்யப்படும் பூஜைகள் சிறப்பான பலனை கொடுக்க கூடியவை. அதிலும் தேவர்களும் பூஜிக்கும் பிரும்ம முகூர்த்தத்தில் நாமும் இறைவனை பூஜிப்பது இன்னும் சிறப்பல்லவா. அதனால்தான் இந்த மார்கழியில் அதிகாலையில் எழுந்து  இறைவனை துதிக்க வேண்டும் என்று நம் முன்னோர்கள் வைத்திருக்கிறார்கள். 

எங்கள் அப்பா 
என் மார்கழி நினைவுகளில் முதலிடம் வகிப்பது கோலம்தான். அம்மா மிக அழகாக கோலம் போடுவாள். எங்கள் வீட்டிற்கு எதிர் வீட்டில் இருந்த மாமி என் அம்மாவிடம்,"கல்யாணி நீயே எங்காத்து வாசலுக்கும் சேர்த்து பெரிதாக போட்டு விடு நாம் தனியாக போடவில்லை" என்று இடம் தந்துவிடுவார். அம்மா போடும் பெரிய கோலத்திற்கு நடுவில் சாணி வைத்து பூசணி பூ வைப்பது எங்கள் வேலை. எங்கள் வீட்டு மாட்டு கொட்டிலை பெருக்கி, சாணி அள்ளும் ரங்கம்மா என்னும் பெண்மணிதான் பூசணி பூ கொண்டு வைத்து விட்டு போய் விடுவார். அவர் ஏழு அல்லது எட்டு பூ வைத்தால்தான் எங்களுக்கு திருப்தியாக இருக்கும். 

அடுத்தது அப்பா பாடும் திருப்பாவை. இனிமையான குரல் வளம் கொண்ட அவர் முப்பது நாளும் தப்பாமல் தானே மெட்டமைத்து பாடுவார்.   அப்பா பாடுவதை கேட்டு கேட்டு எங்களுக்கு திருப்பாவை முழுவதும் மனப்பாடமாகி விட்டது. முதலில் அதைக் கேட்டேன், பின்னர் அதன் இலக்கிய அழகு புரிந்தது, அதிலிருந்து மற்ற பாசுரங்களையும் படிக்கத் தோன்றியது. 

அதன் பிறகு மறக்க முடியாத மார்கழி அனுபவம் என்றால் மார்கழியில் வரும் வைகுண்ட ஏகாதசி உற்சவ நாட்களில் ஓடி, ஓடி அரங்கனை தரிசனம் செய்த அற்புதமான அனுபவங்கள். வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு உறவினர்கள் வீட்டிற்கு வருவார்கள். அவர்களையும் அழைத்துக் கொண்டு செல்வோம். எங்கள் வீட்டிற்கு எதிர் வீட்டில் இருந்த பங்கஜம் மாமி, தான் கோவிலுக்குச் செல்லும் பொழுது அக்கம் பக்க வீடுகளில் உள்ளவர்களையும் அழைப்பார். நமக்கு கோவிலுக்கு போக வேண்டும் என்ற எண்ணம் இல்லாவிட்டாலும் மாமி வந்து கூப்பிடும் பொழுது நாங்களும் கிளம்பி விடுவோம். "ரெங்கநாதருக்கு இன்று பாண்டியன் கொண்டை, இன்று விமான பதக்கம், இன்று வைர கீரிடம்" என்று எங்களிடம் சொல்லி அதையும் பார்க்கச் சொல்லுவார். 



வைகுண்ட ஏகாதசிக்கு முதல் நாள் மோகினி அலங்காரம். அடடா! அந்த அழகை சொல்ல முடியாது. வெள்ளைப்புடவையில், அமிர்த கலசத்தை அணைத்தபடி அமர்ந்திருக்கும் அரங்கனை பார்க்க ஒரு ஜென்மம் போதுமா? மோகினி அலங்காரத்தின் பின்னழகையும் ரசிக்க வேண்டும். அந்த நடை! எல்லா நாட்களும் கம்பீரமாக நடக்கும் அதே ஸ்ரீபாதம்தாங்கிகள்தான் பெண்ணைப் போல நளினமாக நடக்கிறார்களா? அல்லது அரங்கனே அவர்கள் நடையை அப்படி மாற்றி விடுகிறாரா?  

வைகுண்ட ஏகாதசி அன்று பரமபத வாயிலை தாண்டி ஆயிரங்கால் மண்டபத்தில்தான் பெருமாள் தரிசனம் தருவார். அங்கு எழுந்தருளுவதற்கு முன்னால் மணல் வெளியில் முன்னும் பின்னுமாக உலாத்துவதை 'பத்தி உலாத்துவது' என்பார்கள். நாங்கள் அந்த சமயத்தில் சென்று பெருமாளை சேவித்து விட்டு வந்து விடுவோம்.  மண்டபத்தில் அவரை அமர்த்தி விட்டால் க்யூ தொடங்கி விடும். அதற்கு முன் பார்த்து விட வேண்டும்.  

அதன் பிறகு ராப்பத்தின் பத்து நாட்களும் தினமும் மாலை பெருமாளை சேவிப்போம். நடுவில் ஒரு நாள் முத்தங்கி சேவையில் மூலவர் தரிசனம். தினமும் இரவு எட்டு மணி சுமாருக்கு ஆயிரங்கால் மண்டபத்திலிருந்து புறப்படும் பெருமாள் பூந்தட்டி கட்டப்பட்டிருக்கும் இடத்திற்கு கீழே நின்று   மண்டகப்படியை ஏற்றுக் கொண்டு பள்ளியறை செல்ல பதினோரு மணி ஆகிவிடும். பெருமாளுக்கு முன்பாக பாசுரம் இசைக்கும் அரையர்கள் சுற்றி இருக்கும் மக்களையோ, அவர்கள் எழுப்பும் சப்தத்தையோ கொஞ்சமும் பொருட்படுத்தாமல் பெருமாள் மீது வைத்த கண் வாங்காமல் பிரபந்தம் பாடும்  பக்தியை மெச்சாமல் இருக்க முடியாது. சுற்றி இருக்கும் கசமுசா சத்தம் நேஷனல் காலேஜில் பேராசிரியராக இருந்த ரெங்கராஜன் அவர்கள் வீணை வாசிக்கத் தொடங்கியதும் கப் சிப் என்று அடங்கி விடும். அது முடிந்ததும் பெருமாள் *சர்ப்ப கதியில் உள்ளே சென்று விடுவார். அவர் உள்ளே செல்லும் பொழுது படிகளில் பூக்களோடு பச்சை கற்பூரத்தையும் இரைப்பார்கள். பின்னர் நாங்கள் வீடு திரும்புவோம். பெரும்பாலும் தினசரி செல்வோம். பதினோரு மணிக்கு மேல் கோவிலிலிருந்து ராகவேந்திரபுரத்தில் இருந்த எங்கள் வீட்டிற்கு நடந்துதான் வர வேண்டும். பயம் எதுவும் தெரிந்ததில்லை. அவையெல்லாம் மறக்கவே முடியாத நினைவுகள்.

வைகுண்ட ஏகாதசி சமயத்தில் கோவிலுக்குச் சென்று விட்டு வரும் பொழுது
சுடச்சுட வாங்கி சாப்பிட்ட பட்டாணியையும் மறக்க முடியவில்லை. அனந்தராம தீக்ஷதர் தன் உபன்யாசத்தில்,"திருப்பதியில் மரப்பாச்சி கடை வைத்தவனுக்கும், ஸ்ரீரங்கத்தில் பட்டாணி கடை வைத்தவனுக்கும் நேரே வைகுண்டம்தான் ஏனென்றால் கோவிலுக்குச் சென்று விட்டு வரும் எல்லோரும் நேரே அங்குதான் செல்வார்கள்" என்று கூறுவாராம்.    



அதன் பிறகு திருவண்ணாமலையில் இருந்த நாட்களும் சிறப்பானவைதான். மாணிக்கவாசகர் தன்னை பெண்ணாக கருதி நாயகி பாவத்தில் திருவெம்பாவை பாடிய இடம் திருவண்ணாமலை. இங்கு கிரிவலம் செய்வது சிறப்பாக கருதப்படும் மாதங்களுள் மார்கழியும் ஒன்று. திருவாதிரைத் திருநாள் சிறப்பாக கொண்டாடப்படும். கார்த்திகை தீபத்தன்று ஏற்றிய தீபத்தின்  சுடலை மை திருவாதிரை அன்றுதான் பிரசாதமாக கிடைக்கும்.  எங்கள் மகள் திருவண்ணாமலையில் வங்கிப் பணியில் இருந்ததால் நாங்களும் அவளோடு ஒன்றரை வருடங்கள் அங்கு இருந்தோம், அதனால் அருணாச்சலேஸ்வரர் கோவில் உற்சவங்களை காணவும், சில முறை கிரிவலம் செய்யவும் பாக்கியம் கிடைத்தது. 

மற்றபடி கச்சேரிகளுக்கு அதிகம் போனதில்லை. டி.வி.யில் கேட்பதோடு சரி.   

* சர்ப்பகதி: ரெங்கநாதர் நடை அழகை சிம்மகதி என்றும் சர்ப்பகதி என்றும் இரண்டு விதமாக சொல்வார்கள். காலையில் அவர் படியில் இறங்குவது ஒரு சிம்மம் படியில் இரங்குவதைப் போல் நிதானமாக இருக்கும். இரவில் படியேறுவது பாம்பு படியில் ஏறுவதை போல் சரட்டென்று விரைவாக ஏறிச் சென்று விடுவார்.  



Tuesday, December 10, 2019

மசாலா சாட் - 14

மசாலா சாட் - 14

என்னுடைய சென்ற பதிவில் எனக்கு வாட்ஸாப்பில் வந்த  பஞ்சம் போக்கிய ஐ.ஆர் 8 என்னும் ஃபார்வர்ட் மெசேஜை பகிர்ந்திருந்தேன். அதற்கு மறுப்பு இயற்கை விவசாயம் என்னும் குழுவிலிருந்து வந்திருக்கிறது.
இரண்டாம்  உலகப்போர் அத்தனை சீக்கிரம் முடிந்து விடும் என்று அதில் ஈடுபட்ட நாடுகள் எதிர்பார்க்கவில்லையாம். வெடிகுண்டுகள் செய்வதற்காக தயாரிக்கப்பட்ட ரசாயன கலவையை விவசாய நிலத்தில் போடும்பொழுது அதில் விளையும் பயிர்கள் நல்ல விளைச்சலை தந்ததைக் தற்செயலாக கண்டு பிடித்த அமெரிக்க கம்பெனிகள் அதை காசாக்குவதற்காக  உரமாக பயன் படுத்தினார்களாம். நார்மென்ஃபோர்லாக் ஒன்றும் நல்ல எண்ணத்தில் செய்யவில்லை என்கிறார் அதை அனுப்பியவர்.  ஐ.ஆர்.8 பஞ்சத்தை போக்க பயன் பட்டது என்பது ஆகச் சிறந்த பொய் என்பது அவரது கருத்தாக இருக்கிறது. நம் நாட்டில் அரிசி எல்லோருடைய உணவாகவும் இருந்ததில்லை. புன்செய் தானியங்களைத்தான் பெரும்பான்மையோர் பயன்படுத்தினார்கள். அரிசி என்பது மேட்டுக்குடியினரின் உணவு என்கிறார்.

இதற்கான ஆடியோ க்ளிப்பிங்கை எப்படி பகிர்வது என்று தெரியாததால் பகிரவில்லை. .

என்னுடைய தோழி சமீபத்தில்,"இப்போதைய இளைய தலைமுறை நம்மோடு பேசுவதில்லை. நாம் சொல்வதை கேட்பதில் அவர்களுக்கு ஆர்வமும் இல்லை, எப்போதும் செல்ஃபோன், கூகுள் சொல்வதைத்தான்
கேட்கிறார்கள்." என்றாள்.  எனக்கு கூட இதில் ஒரு அனுபவம் இருக்கிறது. என் மருமகளிடம் நான் பலமுறை கோலம் போடச் சொல்லியும் அவளுக்கு அதில் ஏதோ தயக்கம் இருந்தது. ஆனால் எங்களுடைய யூ டியூப் சேனலில் தினசரி கோலங்கள் என்று என் அக்கா போட்டிருந்ததை பார்த்து விட்டு, அதை ஒரு நோட்டில் போட்டுக்கொண்டு இப்போது தினசரி சாமிக்கு முன் போடுகிறாள்.
"தாங்கள் சொல்வதை மற்றவர்கள் கேட்பதில்லை என்று கூறுகிறவர்கள், மற்றவர்கள் கேட்கும் வண்ணம் கூற கற்றுக் கொள்ள வேண்டும்" என்று பாண்டிச்சேரி அன்னை கூறியிருப்பதின் தாத்பர்யம் இதுதானோ?


எனது சமீபத்திய சென்னை விஜயத்தின் பொழுது, கிருஷ்ணகிரியில் காலை சிற்றுண்டிக்காக நிறுத்தினார்கள். அங்கு சிறுண்டியை சாப்பிட்டுவிட்டு கேஷ் கவுண்டர் அருகே வைக்கப்பட்டிருந்த  டெரகோட்டா பொருள்களை பார்வையிட்டேன். அங்கிருந்த ஒரு சிறு குருவி பொம்மை என்னைக் கவர்ந்தது. ஊதுபத்தி ஸ்டாண்ட் போல இருந்த அது விசில் என்றார் விற்பனை பெண்மணி. அது இரண்டு விதமாக விசில் அடிக்கும் என்று ஊதியும் காட்டினார். முதலில் ஊதிய பொழுது எல்லா விசில்களையும் போல கீச்சென்ற ஒலியைத்தான் எழுப்பியது. அதில் நீர் நிரப்பி விட்டு ஊதினால் பறவை கத்துவது போல ஒலி வருகிறது. அந்த விசிலடிச்சான் குஞ்சு ஒன்றை அக்காவின்  பேத்திக்காக வாங்கினேன்.

துக்ளக்கில் நான் ரசித்த கார்ட்டூன்



நான் ஒரு விளம்பர பிரியை. தவறாக நினைக்க வேண்டாம், தொலைகாட்சியில் வரும் விளம்பரங்களை ரசித்துப் பார்ப்பவள். கற்பனைத்திறன் மிக அதிகமாக தேவைப்படும் ஒரு துறை விளம்பரத்துறை. ஒரு பொருளைப்பற்றி நச்சென்று சுருக்கமாக கூறி பார்ப்பவர் மனதில் ஆசையைத்தூண்ட வேண்டும்.



சின்ன வயதில் ரேடியோவில் விவிதபாரதியில் கேட்ட "இன்பமூட்டிடும் கோககோலா இன்பமூட்டிடும் கோக்.." பாடல் திடீரென்று ஒரு நாள் நினைவுக்கு வந்தது. அதை முகநூலில் நான் பகிர்வதற்கு முன் ஸ்ரீராம் கேட்டு விட்டார். நினைவில் நிற்கும் வேறு சில விளம்பரங்கள்:

"கரகரப்ரியா ராகத்தில் எவரெடி ட்ரான்ஸிஸ்டர் பேட்டரி..." பாடல்.

 "மம்மி மம்மி மாடர்ன் ப்ரெட்..."

"வானவில்லும் மெய் சிலிர்க்கும் எதனைக்கண்டு?
வண்ண வண்ண கீதா சேலைகளின் அழகைக் கண்டு" என்று எங்கள் ஊர்(திருச்சி) கீதாஸ் விளம்பரத்திற்காக ரதி அக்னிஹோத்ரி, மஞ்சு பார்கவி  நடித்த விளம்பர படம்+ பாடல். இப்பொழுது கீதாஸ் கடையே இல்லை.

"வாஷிங் பவுடர் நிர்மா..."

"சொட்டு நீலம் டோய்! ரீகல் சொட்டு நீலம் டோய்.."

பலராலும் மறக்க முடியாத,மிகப் பிரபலமான "என்னாச்சு? குழந்தை அழுதது" என்னும் க்ரைப் வாட்டருக்கான விளம்பரம்.

இதயம் நல்லெண்ணெய் வந்த புதிதில் ஒளி பரப்பப்பட்ட,"இதுல காரல் இல்ல, கசப்பு இல்ல, போய் வாங்கிட்டு வாங்கன்னா வாங்களேன், இதெல்லாம் பொம்பளைங்க விஷயம்" என்னும் விளம்பரம் மிகவும் பிரபலமாகி அதில் நடித்த நடிகைக்கு 'நல்லெண்ணய் சித்ரா' என்ற பட்ட பெயரே கிடைத்தது.

ஹார்லிக்ஸுக்கான விளம்பரத்தில் ஒரு நடன மாது, "ஒரு தில்லானா ஆடிட்டு ஒரு கப் ஹார்லிக்ஸ் குடிச்சா அது தரும் தெம்பே தனி" என்பார்.
ஒரு மருத்துவர் எல்லாருக்கும் ப்ரிஸ்க்ரைப் பண்றேன், நானும் குடிக்கிறேன், தினமும் ரெண்டு வேளையும் என்பார்.
எனக்கு நினைவு தெரிஞ்ச நாளிலிருந்து ஹார்லிக்ஸ்தான், எங்கம்மாவும் அதே குடிச்சா" என்று ஒரு மூதாட்டி சொல்லுவார்.
ஒரு பொடியனோ,"குடிக்க வேண்டாம் அப்படியே சாப்பிடலாம்" என்பான்.

இதை அடிப்படையாக வைத்து, ஒரு முறை சென்னை ஸ்டான்லி மருத்துவ கல்லூரி மாணவர்கள் தங்கள் ஆண்டு மலரில் பிட் அடிப்பதை பற்றி,
"நானும் பிட் அடிக்கிறேன், எல்லோருக்கும் சொல்றேன், எல்லா பரீட்சைக்கும்"
"எனக்கு நினைவு தெரிஞ்ச நாளிலிருந்து பிட் தான், எங்கம்மாவும் அதே அடிச்சா"
"படிக்க வேண்டாம், அப்படியே அடிக்கலாம்" என்று ஜோக் எழுதியிருந்ததாக குமுதத்தில் எடுத்து போட்டிருந்தார்கள்.

மீண்டும் சந்திக்கும்வரை உங்களிடமிருந்து வணக்கம் கூறி விடை பெறுவது உங்கள் நண்பன், மன்னிக்கவும் விளம்பரம் என்றதும் ஒரு ஃப்ளோவில் வந்து விட்டது. ஹி ஹி!





















Monday, December 2, 2019

மசாலா சாட் 13 - சில அனுபவங்கள்

மசாலா சாட் - 13

சில அனுபவங்கள்:




நவம்பர் 24 அன்று சென்னையில் இருந்த நான் மாம்பலத்தில்,பக்தவத்சலம் சாலையில் உள்ள மதர் சென்டருக்கு சென்றிருந்தேன். நான் உள்ளே நுழைந்ததும் அங்கிருந்து ஒரு சிறுவன் என்னிடம் சாக்லெட் டப்பாவை நீட்டினான். பிறந்த நாளா? என்று கேட்டதற்கு ஆமாம் என்றான். பிறந்த நாள் என்று சொல்லும் குழந்தைக்கு வெறும் வாழ்த்தை மட்டும் வழங்க மனமில்லாமல் இருபது ரூபாய் கொடுத்தேன். உடனே அருகிலிருந்த அவன் தங்கை, "எனக்கு மார்ச் 10th பிறந்த நாள் வரும் என்றது"(ராஜ பார்வை ஜோக் நினைவுக்கு வருகிறதா?) உடனே அந்த குழந்தைக்கும் பணம் கொடுத்தேன். அதை வாங்கி கொண்டு, "மார்ச் 10th நீங்க இங்க வாங்க" அழைப்பு விடுத்தது. பூஸாருக்கு உறவாக இருக்குமோ? இல்லையில்லை, அப்படி இருந்தால் பச்சைக் கல் அட்டிகை அல்லவா கேட்டிருக்கும்.


கைதி படத்தின் விமர்சனத்தை படித்து விட்டு என் மகன் அந்த படத்திற்கு டிக்கெட் புக் பண்ணினான். தியேட்டரில் நுழையும் பொழுது, "ரெக்லினெர் சீட்,  படுத்துக் கொண்டு படம் பார்க்கலாம்" என்றான். அடக் கடவுளே! என்று நினைத்துக் கொண்டேன். நான் சீட்டில் உட்கார்ந்து கொண்டு படம் பார்க்கும் பொழுதே தூங்கும் ஆசாமி, இன்னும் படுத்துக் கொண்டா..? சுத்தம்! என்று நினைத்துக் கொண்டேன்.

முதல் வரிசை மட்டும்தான் ரெக்லினெர் சீட்டுகள். விளக்குகள் அணைக்கப்படும் வரை, படுத்துக்க கொள்ள பிடிக்கவில்லை(பொது இடத்தில் எப்படி படுப்பது?) பின்னர் படுத்துக் கொண்டால், படம் எங்கேயோ தெரிவது போல் இருந்தது. சற்று நேரம் கழித்துதான் புரிந்தது, அந்த சீட்டில் படுத்துக்க கொள்ளக் கூடாது, சாய்ந்து கொள்ள வேண்டும். பின்னால் நகர்ந்து உட்கார்ந்து ஈஸி சேரில் அமர்வது போல சாய்ந்து கொண்டதும், சரியான கோணம் கிடைத்தது.

படம் எப்படி என்று கேட்கிறீர்களா? அதுதான் நீலச்சட்டை உட்பட எல்லா விமர்சகர்களும் "ஆஹா! ஓஹோ ! என்று புகழ்ந்து தள்ளி விட்டார்களே? சண்டை, சண்டை, சண்டை, சண்டையைத்தவிர வேறு எதுவும் இல்லை. லாஜிக்கில் ஏகப்பட்ட ஓட்டை, காதில் பூ அல்ல, பூக்கடையையே கவிழ்த்திருக்கிறார்கள். ஒரே மாதிரியான கார்த்தியின் நடிப்பு, என்னத்தை சொல்ல? டெக்நிக்கலி பிரமாதமாம்! அதையெல்லாம் கொண்டாட கிட்னி வேண்டுமே?
ரொம்ப நாட்களாக சிசிலர் ஐஸ் க்ரீம் சாப்பிட வேண்டும் என்ற ஆசை சமீபத்தில் நிறைவேறியது.  பிரௌனி கேக்கின் மீது கொதிக்கும் சாக்லேட் குழம்பை(சாக்லேட் சாஸ் என்பதை சரியாக மொழிபெயர்த்திருக்கிறேனா?) ஊற்றி, அதன் மீது வென்னிலா ஐஸ் க்ரீம் வைத்து ஆவி பறக்க கொண்டு தருவார்கள்.  அதை நான் சாப்பிடுவதைப் பார்த்த, "என் மகன் 30 கிலோ மீட்டர் நடக்க வேண்டும்" என்றான்.  கிடக்கிறான்..!

வாட்ஸாப்பில் வந்த ஒரு தகவல்:
நவம்பர் 29,
வரலாற்றில் இன்று.

பஞ்சம் போக்கிய நெல் ரகம்
 IR 8 உருவான தினம் இன்று.

இரண்டாம் உலகப் போருக்குப் பின் உலகெங்கும் அடிக்கடி ஏற்பட்ட பஞ்சத்துக்குத் தீர்வாகக் கண்டுபிடிக்கப்பட்ட அருமருந்து இந்த ஐ.ஆர்.8 ரகம்.

அரிசியை வெறும் உணவு என்று மட்டும் கடந்து சென்றுவிடமுடியாது. அரிசியின் வரலாற்றில் அவல அரசியலும் சுயநலம் மிகுந்த துரோகமும் கறுப்பின அடிமைகளின் துயர் மிகுந்த வாழ்வும் ஒருங்கே இழையோடியுள்ளன.

நாகரிகம் வளர வளர எதை உண்பது என்பதை மனிதன் தேர்ந்தெடுத்து உண்ணத் தொடங்கினான். காட்டிலும் மேட்டிலும் இயற்கையாக முளைத்ததைச் சாப்பிட்ட மனிதன், தனக்கு வேண்டியதைத் தான் வசிக்கும் இடத்திலேயே விளைவிக்கத் தொடங்கினான். உணவைச் சார்ந்து நாடோடியாகத் திரிந்த மனிதன், ஓர் இடத்தில் நிலைபெறத் தொடங்கினான். விவசாயம் அவனுக்கு வேண்டிய உணவை மட்டும் அளிக்கவில்லை,

மனிதனின் உணவில் அரிசியைத் தவிர்க்க முடியாத அங்கமாக மாற்றியது. அரிசி ஒரு புல் வகையைச் சேர்ந்த தாவரமாகும். ஈரநிலங்களில் வளரக்கூடிய இது தென்கிழக்காசியாவில் தோன்றியது. நெற்பயிர் சராசரியாக ஐந்து மாதங்கள்வரை வளரக்கூடிய  தாவரமாகும். இந்தியாவைப் பொறுத்தவரை இமயமலை அடிவாரத்தில் அரிசி தோன்றியதாகக் கருதப்படுகிறது. ஔவையார் போன்ற பல பழந்தமிழ் புலவர்களின் பாடல்களில் அரிசி பற்றிய குறிப்புகள் வருகின்றன. அலெக்சாண்டர் இந்தியாவுக்கு வருவதற்கு முன்புவரை, அரிசியைப் பற்றி ஐரோப்பியர்களுக்குத் தெரியாது என்று அறிஞர்கள் கூறுகின்றனர்.

பஞ்சங்களால் கொத்துக் கொத்தாக மனித வாழ்வு உதிர்வது அன்று வாடிக்கையாக இருந்தது. 1876இல் சென்னையில்கூட ஒரு கடும் பஞ்சம் ஏற்பட்டது. இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு வந்தபோது, 'உணவுப் பற்றாக்குறை ஏராளமாகப் பெருகியது. உணவுப் பஞ்சம் பூதாகரமாக உருவெடுத்து மனிதனின் வாழ்வைப் பெரும் இன்னலுக்கு உள்ளாக்கியது. வீரிய ஒட்டு ரகங்களை உருவாக்கும் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

விஞ்ஞானிகளின் தீவிர முயற்சியின் பலனாக, 1960களில் அதிக மகசூல் தரும் நெல் இனம் உருவாக்கப்பட்டது. இந்தோனேசிய அரிசி இனத்தையும் வியட்நாம் அரிசி இனத்தையும் இணைத்து உருவாக்கப்பட்ட கலப்பின அரிசி அது. சர்வதேச நெல் ஆராய்ச்சிக் கழகம் அதற்கு IR-8 என்று பெயரிட்டு, 1966, நவம்பர் 29 அன்று பிலிப்பைன்ஸ் நாட்டு விவசாயிகளுக்கு வழங்கியது. 88 கிலோ விதை நெல்லைப் பயிரிட்டு அவர்கள் 71 டன் அரிசியை மகசூல் செய்தனர். இந்த அற்புத அரிசியைப் பற்றிய பேச்சு உலகெங்கும் பரவியது.

நார்மனின் முயற்சி:

அந்தக் காலகட்டத்தில் பிஹாரில் கடுமையான பஞ்சம் நிலவியது. உணவு உற்பத்தியை அதிகரிக்க, அப்போது வேளாண் துறை அமைச்சராக இருந்த சி.சுப்ரமணியன் கடுமையாக முயன்றார். நோபல் பரிசு பெற்ற வேளாண் விஞ்ஞானியான நார்மன் போர்லக்கை (Norman Borlaug) இந்தியாவுக்கு அழைத்து, விவசாய உற்பத்தியைப் பெருக்க உதவுமாறு கேட்டார்.

கோதுமை உற்பத்தியில் நார்மன் ஒரு பெரும் புரட்சியையே உருவாக்கினார் என்றுதான் சொல்ல வேண்டும். இந்தியாவின் பிரதான உணவு அரிசியாக இருந்த காரணத்தால், நார்மனின் முயற்சி இந்தியாவின் உணவுப் பற்றாக்குறையைத் தீர்ப்பதற்குப் போதுமானதாக இல்லை. பாலைவனத்தில் பெய்த பெருமழை போன்று அப்போதுதான் இந்த ‘ஐ,ஆர்-8’ அரிசி இந்தியாவுக்கு வந்தது.

மறுமலர்ச்சி ஏற்படுத்திய சுப்புராவ்:

29 வயது சுப்புராவுக்குத் தான் இந்தியாவின் உணவு உற்பத்தியில் பெரும் மறுமலர்ச்சியை ஏற்படுத்துகிறோம் என்று அப்போது தெரியாது. ஆம், இந்தியாபில் முதன் முதலில் ஐ.ஆர்.8 வகை அரிசியைப் பயிரிட்ட விவசாயி அவர்தான். 1967-ல் சர்வதேச நெல் ஆராய்ச்சி கழகத்திடமிருந்து ஐ.ஆர்.8 விதை அரிசியை வாங்கி, ஆந்திராவின் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் இருந்த தனது 2,000 ஹெக்டேர் நிலத்தில் பயிரிட்டார்.

பாரம்பரிய நெல் விதைகள் ஹெக்டேருக்கு இரண்டு டன் மட்டுமே மகசூல் தரும். இந்த ஐ.ஆர்.8 அவருக்கு ஹெக்டேருக்கு ஏழு டன் மகசூல் அளித்தது. சுப்புராவின் இந்த அபரிமித மகசூல், மற்ற விவசாயிகளையும் ஐ.ஆர்.8 நோக்கிப் படையெடுக்க வைத்தது.

ஐ.ஆர்.8 இனத்தின் வெற்றிக்கு அதிக மகசூல் மட்டும் முக்கியக் காரணமல்ல. குறைந்த காலத்தில் அது அளித்த அதிக மகசூலும் முக்கியக் காரணம். திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த கணேசன் எனும் விவசாயி ஒரு ஹெக்டேரில் 16 டன் மகசூல் பார்த்தார்.

அந்த நன்றியின் பலனாக, தனது மகனுக்கு ‘ஐ.ஆர்.எட்டு’ என்று அவர் பெயரிட்டது மிகுந்த பேசுபொருளாக அன்று இருந்தது. ஐ.ஆர்.8-ன் வெற்றி இந்திய வேளாண் விஞ்ஞானிகளுக்குப் புதிய பாதை அமைத்துக் கொடுத்தது. அவர்கள் அந்தப் பாதையில் சென்று ஐ.ஆர்.20, ஐ.ஆர்.36, ஐ.ஆர்.50 போன்ற பல புது அரிசி வகைகளை உருவாக்கினர்.


பழசு மறந்து போச்சு

வாடன் சம்பா, முடு முழுங்கி, களர் சம்பா, குள்ளக்கார், நவரை, குழிவெடிச்சான், கார், அன்னமழகி, இலுப்பைப்பூ சம்பா, மாப்பிள்ளைச் சம்பா, கருங்குறுவை, கல்லுண்டை, கருடன் சம்பா, பனங்காட்டு குடவாழை, சீரக சம்பா, வாசனை சீரக சம்பா, விஷ்ணுபோகம், கைவரை சம்பா, அறுபதாம் குறுவை, பூங்கார், காட்டு யானம், தேங்காய்ப்பூ சம்பா, கிச்சடி சம்பா, நெய் கிச்சிலி போன்ற நமது பாரம்பரிய அரிசி ரகங்கள் எல்லாம் விவசாயிகளுக்கு இன்று மறந்தேவிட்டன.

வித விதமான பூச்சி, புழுக்கள் தாக்கும் புதிய ரகங்களை அதிக ரசாயன உரங்களைப் பயன்படுத்தி அவர்கள் விளைவித்து வருகிறார்கள். பாரம்பரிய அரிசி ரகங்களுக்கு இந்தப் பிரச்சினையே இல்லை என்பதை நினைத்துப் பார்க்கக்கூட நேரமின்றி அவர்கள் வணிகப்பிடிக்குள் சுழன்று வருகின்றனர். எது எப்படியோ பஞ்சத்தால் உணவின்றி மனிதன் மடியும் அவலத்தை நிறுத்தியதில் ஐ.ஆர்.8 ரக அரிசிக்குப் பெரும் பங்குண்டு.

Monday, November 18, 2019

ஒரு இட்டிலியும், ஆறு சட்டினிகளும்

ஒரு இட்டிலியும், ஆறு சட்டினிகளும் 


வாழ்க்கை வாழ்வதற்கே என்னும் தலைப்பில் திரு. சுகி சிவம் அவர்களின் சொற்பொழிவை  யூ டியூபில் கேட்டேன். அதில் அவர் அவருடைய தாயாரைப் பற்றி கூறும் பொழுது, ஆறு பேர்கள் இருந்த அவருடைய வீட்டில் ஒருவருக்கு தேங்காய், பச்சை மிளகாய் சேர்த்து அரைத்த சட்டினியும், ஒருவருக்கு வெங்காய சட்டினியும், ஒருவருக்கு மிளகாய்ப் பொடியும்,  ஒருவருக்கு சாம்பாரும் இருந்தால்தான் இட்லி சாப்பிடுவார்களாம். அவருடைய தாயாரும் அவரவருக்கு தேவையானவற்றை செய்து கொடுப்பார்கள் என்று கூறியவர், அதோடு நிறுத்திக் கொண்டிருந்தால் பரவாயில்லை. "இப்போதெல்லாம் சில வீடுகளில் என்ன இலையில் விழுகிறதோ அதை சாப்பிட வேண்டும் என்று கூறுகிறார்கள். இலையில் விழுவதை சாப்பிடும் இடத்திற்கு மிலிட்டரி என்று பெயர். நாம் என்ன மிலிட்டிரியா நடத்துகிறோம்? குடித்தனம் நடத்துகிறோம். என்ன சாப்பிட வேண்டும் என்று நினைக்கிறோமோ அது கிடைக்கும் இடம்தான் வீடு" என்கிறார். இதையெல்லாம் மேடையில் கை தட்டல் வாங்குவதற்காக பேச நன்றாக இருக்கும்.  ஆனால், குழந்தை வளர்ப்பில் இது ஒரு மோசமான முறை. வீடு என்பது குழந்தைகளுக்கு விரும்பியதையெல்லாம், அல்லது விரும்பியதை மட்டும் சமைத்து கொடுத்துக்கொண்டே இருக்கும் இடம் மட்டும்தானா? எல்லாவற்றையும் சாப்பிடுவதற்கும், எல்லோருடனும் அனுசரித்து போவதற்கும் கற்றுக் கொடுக்கும் இடமும் அல்லவா? இப்படி பிடித்ததைத்தான் சாப்பிடுவேன் என்று பிடிவாதம் பிடிக்கும் குழந்தைகள் பின்னாளில் அந்த சாப்பாட்டு பழக்கத்தாலேயே பல்வேறு பிரச்சனைகளை சந்திப்பார்கள், மற்றவர்களுக்கு தொந்தரவாக இருப்பார்கள்.  

ஒரே நாளில் ஆறு பேருக்கு ஆறு விதமான சட்னி, செய்து கொடுக்கும் அம்மாவை விட, "நேற்று உனக்கு பிடித்த தேங்காய் சட்னி செய்து கொடுத்தேன், அதை அப்பா,அண்ணன்கள் எல்லோரும் சாப்பிட்டார்கள், இன்று அண்ணனுக்கு பிடித்த வெங்காயச் சட்டினியை நீ சாப்பிடு" என்று சொல்லும் அம்மாதான் நல்ல அம்மாவாக இருக்க முடியும். வாழ்க்கை முழுவதும் நமக்கு பிடித்த விஷயங்கள் எல்லாம் எப்போதும் கிடைத்துக் கொண்டே இருக்காது. எது கிடைக்கிறதோ அதை ஏற்றுக் கொள்ள பழக்க சாப்பாட்டிலிருந்துதான் ஆரம்பிக்க வேண்டும். 

ஹாஸ்டல் சாப்பாடு நன்றாக இல்லை என்பதற்காக கல்லூரியிலிருந்து வெளியேறிய மாணவனையும், நல்ல சாப்பாடு கிடைக்கவில்லை என்று வெளியூர் செல்ல மறுத்த இளைஞனையும், "நாற்பது வருடங்களாக சமைத்துப் போடுகிறேன், ஒரு நாள் கூட குறை சொல்லாமல் சாப்பிட்டதில்லை" என்று புழுங்கும் மனைவிகளையும் நான் அறிவேன். ஏன் இன்றைக்கு பல விவகாரத்துகளுக்கு அனுசரித்து போக முடியாத, விட்டு கொடுக்க முடியாத மனப்பாங்குதான் காரணம். அனுசரித்துப் போகும் குணமும், அனுசரித்து போவதும், வீட்டிலிருந்துதான் தொடங்க வேண்டும். அதற்கு எளிய வழி பிடித்ததை மட்டுமே சாப்பிடுவேன் என்று கூறாமல், இலையில் விழுவதை சாப்பிட குழந்தைகளை பழக்குவதுதான். 

தவிர காலம் இருக்கும் இருப்பில் இப்போதைய பெண்கள் வீட்டில் இட்டிலிக்கு மாவு அரைத்து, வார்ப்பதே பெரிய விஷயம். அதில் இருக்கும் நான்கு பேருக்கு, அல்லது மூன்று பேருக்கு விதம் விதமாக சட்டினி அரை என்றால் முதலுக்கே மோசமாகி விடாதா?

இவருக்கு நேர் மாறான கருத்தை வழக்கறிஞர் சுமதி கூறியிருக்கிறார்.
இந்த சுட்டியை சொடுக்கி கேளுங்கள்.
https://youtu.be/8tjkIYlXW50










Tuesday, November 12, 2019

மசாலா சாட் - 13

மசாலா சாட்  - 13

இந்த வருடம் ஆஸ்திரேலியாவில் குடியுரிமை வாங்கியவர்களில் 65%
இந்தியர்களாம். சென்ற வருடமும் அங்கு குடியுரிமைக்கு அதிகம் விண்ணப்பித்தது இந்தியர்கள்தானாம். அதற்கு அடுத்த இடத்தில் சீனா.

அமெரிக்க வாழ் இந்தியர்களில் பெரும்பான்மையோர் பேசும் மொழி ஹிந்தியாம். அதற்கடுத்த இரு இடங்களை குஜராத்தியும், தெலுங்கும் பிடித்துக் கொள்ள, நான்காம் இடத்தில் நம் தாய் மொழி.


முன்னாள் எலெக்க்ஷன் கமிஷனர் டி.என். சேஷன் 10.11.19 1அன்று காலமானார். அரசியல்வாதிகளுக்கு எலெக்க்ஷன் கமிஷனின் சக்தியை உணர்த்தியவர். அதனால் கிடைத்த பிராபல்யத்தில் தேர்தலில் நின்றதையும், விளம்பர படங்களில் நடித்ததையும் எல்லோரும் மறந்திருப்பார்கள்.


முன்னாள் கிரிக்கெட் வீரரும் ஆல் ரவுண்டருமான இர்பான் பத்தான் விக்ரமோடு இணைந்து தமிழ்ப்படம் ஒன்றில் நடிக்கிறாராம். ஆரம்ப காலத்தில் சுருள் சுருளாக தொங்கும் அவருடைய தலையலங்காரம் எனக்கு பிடிக்கும்.

"பட்டு முக பத்தான்
வீசும் பந்து வேகம்
அவன் கேசப் பந்தோ
சுழலும்"

என்று கவிதை எழுதியிருக்கிறேன். யாருடைய துர் போதனையோ அவர் அதை மாற்றிக்கொண்டு விட்டார்.

திரை அரங்குகள், விமான நிலையங்கள், மால்கள் போன்ற இடங்களில் டாய்லெட்டுகளில், ஆண், பெண், என்ற பிரிவுகள் மட்டும்தான் இருக்கும். சமீபத்தில் விமான நிலையங்களில் family toilet என்ற அறிவிப்பை பார்த்தபொழுது தூக்கிவாரிப் போட்டது.  அதன் சூச்சுமம் பிறகுதான் புரிந்தது. யாருக்காவது ஃபேமிலி டாய்லெட்டின் அவசியம் தெரிகிறதா? தெரியாவிட்டால் இந்த கட்டுரையின் கடைசி பாரா வரும் வரை காத்திருக்கவும்.

பெங்களூரின் போக்குவரத்து நெரிசலை சமாளிக்க பேருந்துகளை மக்கள் அதிகம் பயன்படுத்தும் விதமாக அதன் கட்டணத்தை குறைக்கவும், பி.எம்.டி.சி. பஸ்களின் எண்ணிக்கையை அதிகரிக்கப் போவதாகவும்  எடியூரப்பா அறிவித்திருக்கிறார்.  நல்லதுதான், ஆனால், அந்த பஸ்கள் செல்ல சாலையில் இடம் வேண்டுமே? சாலையில் ஒரு லேனை(lane) பேருந்துகளுக்காக மட்டும் ஒதுக்கப் போகிறார்களாம்.

சமீப காலங்களில் நிறைய தொலைக்காட்சி பார்க்கிறேன். பொறுமையை சோதிக்கும் பொழுது நிறுத்தி விட்டு, யூ டியூபிற்கு மாறுவேன். சேனல்களை மாற்றிய பொழுது, முப்பது வருடங்களுக்கு முன்னால் வெளியான ஏதோ ஒரு படப்பாடலுக்காக கமல்,அம்பிகாவை தூக்கி சுழற்றுவதை பார்க்க நேர்ந்தது. கமல் திறமையான நடிகராக இருப்பதால் கொஞ்சம்  கஷ்டப்பட்டு கஷ்டப்படுவதை மறைத்துக் கொண்டார்.

ஏதோ ஒரு படத்தில் பாடல் காட்சியில் கதா நாயகியை தூக்கியபடி பாட்டு பாட வேண்டிய காட்சியில் நடித்த சிவகுமாரிடம் அந்த படத்தின் கேமிராமேன் கொஞ்சம் சிரியுங்கள் என்றாராம், உடனே சிவகுமார், "இத்தனை எடையை தூக்கிக் கொண்டு உங்களால் சிரிக்க முடியுமா? என்னால் இவ்வளவுதான் முடியும்" என்றாராம்.

நம்பியாரின் அனுபவம் இது: ஏதோ ஓர் படத்தில் சரோஜாதேவியை தூக்கிக் கொண்டு மலை மேல் ஏற வேண்டிய காட்சியில் நடிக்க வேண்டியிருந்தபொழுது,  அவர் கன்னடத்து கிளியிடம், "நான் உங்களை தூக்கும் பொழுது மூச்சை தம் பிடித்துக் கொள்ளுங்கள், அப்போது எடை தெரியாது, எனக்கு கஷ்டமில்லாமல் இருக்கும்"  என்றாராம். மண்டையை ஆட்டிய சரோஜா தேவி அப்படி செய்யாததால் நம்பியாருக்கு கஷ்டமாக இருந்ததாம். இரண்டு டேக் எடுத்தும் சரியாக வரவில்லையாம். நம்பியார் சரோஜா தேவியிடம்,"அடுத்த முறை நீங்கள் மூச்சை பிடித்துக் கொள்ளாவிட்டால் நான் உங்களை கீழே போட்டு விடுவேன்" என்று எச்சரித்தும் கதாநாயகி அவர் சொன்னதை கேட்கவில்லையாம், கடுப்பான நம்பியார் நிஜ வில்லனாக மாறி, சொன்னதை செய்ய, அதன் பிறகுதான் சரோஜாதேவி ஒத்துழைப்பு கொடுத்து, அந்த காட்சி ஓ.கே. ஆனதாம்.

இப்போது ஹீரோயின்கள் சைஸ் ஸீரோ என்பதில் கவனம் செலுத்துவதால் ஹீரோக்களுக்கு கவலை இருக்காது.

சில வாரங்களுக்கு முன் ஸ்ரீராம் எந்த சினிமாவின் க்ளைமாக்ஸ் காட்சி பிடிக்கும்  என்று கேட்டிருந்தார்.  பொதுவாக நம் இயக்குனர்கள் க்ளைமாக்சில் சொதப்புவதில் வல்லுநர்கள். சமீபத்திய சொதப்பல் திலகம் ஏ.ஆர்.முருகதாஸ்.

பாக்யராஜ் படங்களில் க்ளைமாக்ஸ் நன்றாக இருக்கும். அந்த ஏழு நாட்களையும், டார்லிங்,டார்லிங்,டார்லிங்கையும் மறக்க முடியுமா?

ஜிகிர்தண்டா 
அவரைப் போலவே எதிர்பாராத, ஸ்வாரஸ்யமான க்ளைமாக்ஸை கார்த்திக் சுப்புராஜ் அமைக்கிறார். ஜிகிர் தண்டா, பேட்ட இரண்டிலேயும் க்ளைமாக்ஸ் 
ரசிக்கும்படி இருந்தது.

பரியேறும் பெருமாள் 
இப்போது புதிதாக வரும் பல இளம் இயக்குனர்கள் திறமையான திரைக்கதையையும், சுவாரஸ்யமான க்ளைமாக்ஸையும் அமைக்கிறார்கள். மாநகரம், நானும் ரௌடிதான் போன்ற படங்களின் க்ளைமாக்ஸ் கூட ரசிக்கும்படி இருக்கும். பரியேறும் பெருமாள் படத்தின் இயல்பான க்ளைமாக்ஸும் நன்றாக இருந்தது.

மேலை நாடுகளில் சிங்கிள் பேரண்ட் என்பது சகஜம். அப்படிப்பட்டவர்கள் ஆணோ, பெண்ணோ குழந்தையை டாய்லெட்டிற்கு அழைத்துச் செல்ல வேண்டும், அல்லது சிறு குழந்தைக்கு டயபர் மாற்ற வேண்டும்
என்றால் பயன்படுத்த தோதாக இப்படிப்பட்ட பேமிலி டாய்லெட்டுகள்.

இப்பொழுது மூன்றாம் பாலினத்தவர்கள் படித்து, வேலைக்கு வருவது அதிகரித்திருப்பதால் அலுவலகங்களிலும், பொது இடங்களிலும் தங்களுக்கு தனி டாய்லெட் வேண்டும் என்று கேட்கத் தொடங்கியிருக்கிறார்கள் நியாயமான கோரிக்கைதான்.












Tuesday, November 5, 2019

கோலங்கள்

கோலங்கள்



வீட்டு வாசலிலும், பூஜை அறையிலும் தினசரி கோலம் போடுவது நம் மரபு. மண் அடுப்புகளில் சமைத்துத்துக் கொண்டிருந்த பொழுது, தினசரி அடுப்பை பசு மாட்டின் சாணி போட்டு மெழுகி விட்டு அதில் கோலம் போட்டு வைப்பார்கள்,அதை பார்ப்பதற்கே லக்ஷ்மிகரமாக இருக்கும்.  எங்கள் வீட்டில் மண் அடுப்பு போய், காஸ் அடுப்பு வந்த பிறகும், அந்த பழக்கம் தொடர்ந்து கொண்டிருந்தது. இப்பொழுது பொங்கலுக்கு முதல் நாள் மட்டுமே அடுப்பில் கோலம் போடுகிறோம்.

அதே போல தீபாவளிக்கு முதல் நாள் வெந்நீர் தவலையை தேய்த்து, அதில் சந்திரன், சூரியன் வரையும் பழக்கமும் இருந்தது. வெந்நீர் தவலையை எலக்ட்ரிக் ஹீட்டர்கள் பிடித்துக் கொண்டுவிட்ட இந்த காலத்தில் சந்திரனாவது, சூரியனாவது?

கோலங்கள் வெறும் அழகுக்காக மட்டும் போடப்படுவதில்லை. அதில் ஆன்மீகமும் மறைந்திருக்கிறது. ஒரு வார்த்தையை ஒரு குறிப்பிட்ட மீட்டரில் உச்சரிக்கும் பொழுது, அது சக்தி வாய்ந்த மந்திரமாக மாறுவது போல, சாதாரண கோடுகளும், வளைவுகளும் திட்டமாக வரையப்படும் பொழுது சக்தி பெற்றவைகளாக மாறுகின்றன.



நாம் பிள்ளையார் கோலம் என்று கூறும் மேலும் கீழுமாக இரண்டு முக்கோணங்கள் அமைந்த கோலம் முருகனை குறிப்பது. இதில் மேலிருந்து கீழே இறங்கும் முக்கோணம் மண்ணுலக இச்சைகளையும், கீழிருந்து மேலே செல்லும் முக்கோணம் விண்ணுலகு ஏகும் விருப்பத்தையும் குறிக்கின்றது. மனித வாழ்க்கை இந்த இரண்டும் இணைந்தது என்பதே இதன் உட்பொருள் என்று சான்றோர்கள் கூறுகிறார்கள்.

அதே போல் ஹ்ருதய கமலம் கோலமும், ஐஸ்வர்ய கோலமும் அம்பிகையின் வடிவமாகவே கருதப்படுகின்றன. அதனால் அவைகளை வாசலில் போடக்கூடாது என்பார்கள்.



மஹாலக்ஷ்மியின் கருணைக்கு பாத்திரமாவது எப்படி என்பதை விளக்க வரும் ஒரு கதை இப்படி தொடங்கும்; தன்னுடைய அருளை யாருக்காவது வழங்க வேண்டும் என்று விரும்பிய லட்சுமி தேவி ஒரு முறை பூமிக்கு இறங்கி ஒரு கிராமத்திற்குள் நுழைகிறாள். அங்கு ஒரு வீட்டில் காலை வேளையில் வாசல் திண்ணையில் தலையை விரித்து போட்டுக் கொண்டு பேன் பார்த்துக் கொண்டிருந்தார்களாம் அந்த காட்சியில் அருவருத்து அந்த வீட்டிற்குள் நுழையாமல் தாண்டிச் சென்று விடுகிறாள். அடுத்த வீட்டில் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொண்டிருந்தனராம். அதுவும் அமங்கலமான சொற்களால் ஒருவரை ஒருவர் திட்டிக்கொண்டும், சபித்துக் கொண்டும் இருந்ததை கேட்ட திருமகள் அந்த இடத்தை வெகு விரைவாக கடந்து சென்று விடுகிறாள். இன்னொரு வீட்டிலோ சூரியன் உதித்த பிறகும் எழுந்திருந்து வாசல் தெளித்து கோலம் கூட போடாமல் தூங்கிக் கொண்டிருந்தனராம். அதற்கடுத்த வீட்டில் புழுத்த சாணத்தால் வாசல் தெளிப்பதை பார்த்து அங்கிருந்தும் நகர்ந்து விடுகிறாள். கடைசியாக ஒரு வீட்டில் ஏழ்மை நிலையில் இருந்தாலும் அதிகாலையில் எழுந்து, வாசல் தெளித்து அழகாக கோலமிட்டு, வீட்டிற்குள் பூஜை அறையிலும் கோலமிட்டு, விளக்கேற்றி வைக்கப்பட்டிருந்ததாம். அதனால் கவரப்பட்ட ஸ்ரீதேவி,"இந்த இடம்தான் நான் வாசம் செய்ய தோதான இடம்" என்று அந்த வீட்டிற்குள் பிரவேசித்து அங்கு வசிக்க தொடங்கியதும் அந்த குடும்பத்தினரின் வறுமை நீங்கி செல்வ செழிப்பு ஏற்பட்டது என்று அந்த கதை முடியும்.  இதிலிருந்து முக்கிய நிகழ்வுகளுக்கு மட்டுமல்லாமல் தினசரி கோலமிடுவதும் நமக்கு எத்தனை முக்கியத்துவம் வாய்ந்தது என்று தெரிந்து கொள்கிறோம்.

துளசி வழிபாட்டில் சொல்லப்படும் ஸ்லோகத்தில்,
'அன்புடனே நல்ல அருந்துளசி கொண்டு வந்து
முற்றத்தில் தான் வளர்த்து, முத்துப் போல் கோலமிட்டு..' என்று வரும். நம்முடைய வழிபாட்டில் கோலதிற்கு முக்கிய பங்கு உண்டு. கார்த்திகை மாதம் கோவில்களை சுத்தம் செய்து கோலமிடுவது ஒரு மிகச்சிறந்த புண்ணிய காரியமாகவே கருதப்படுகிறது.

பகவதி சேவையின்பொழுது போடப்படும் கோலம்(பத்மம்) 
கேரளீயர்களுக்கு பகவதி சேவை என்னும் அம்பிகை வழிபாடு
முக்கியமானது. அந்த பூஜையில் முக்கியமானது பத்மம் எனப்படும் கோலம் வரைவது. அதை பூஜாரிதான் வரைவார். கலர் பொடிகள் கொண்டு மிக அழகாக காட்சி தரும் அந்த கோலத்தை வரையவே இரண்டு மணிநேரங்கள் பிடிக்கும். கோலத்தின் நடுவில் பெரிய குத்து விளக்கை ஏற்றி வைத்து அதில் அம்பிகையை ஆவாஹனம் செய்து பூஜிப்பார்கள்.

மஸ்கட்டில் இருக்கும் கிருஷ்ணர் கோவிலில் விசேஷ தினங்களில் கலர்
பொடி கொண்டு போடப்படும் ரங்கோலி தவிர, பழங்கள், காய்கறிகள், உலர் பழங்கள், நவதானியங்கள் என்று ஒவ்வொரு நாளும் விதம் விதமாக பெரிய பெரிய கோலங்களை போடுவார்கள். அதை விரைவாகவும் போட்டு விடுவார்கள் என்பது சிறப்பு. 

சில பண்டிகைகளுக்கென்று தனி கோலங்களும் இருக்கின்றன. சுமங்கலி பிரார்த்தனை, சமாராதனை போன்றவைகளுக்கு ஒவ்வொரு குடும்பத்திலும் ஒரு குறிப்பிட்ட கோலம்தான் போட வேண்டும் என்ற வழக்கம் கூட இருக்கும்.  மதுரையைச் சேர்ந்த பிராமணர்கள்  திருமணங்களில் மணமகன், மணமகள் அமர வேண்டிய இடத்தில்  போட வேண்டிய மணை கோலம் போடும்பொழுது தனித்தனியாக இரண்டு கோலங்கள் போடாமல், இரண்டும் ஒன்றையொன்று ஒட்டிக்கொண்டிருப்பதை போல போடுவார்கள்.

அப்பொழுதெல்லாம் ஸ்ரீரங்கத்தில் மார்கழி மாதம் என்றால் அதிகாலை மூன்றரை மணிக்கு எழுந்து போட்டி போட்டுக் கொண்டு தெருவை அடைத்து பெரிய பெரிய கோலங்களை போடுவார்கள். எங்கள் அம்மா மிக அழகாக கோலம் போடுவார். நான் சிறுமியாக இருந்த பொழுது எங்கள் வீட்டிற்கு எதிர் வீட்டில் இருந்த மாமி, "நீதான் அழகாக கோலம் போடுகிறாய். இரண்டு வீட்டிற்கும் பொதுவாக நீயே கோலம் போட்டு விடு" என்று என் அம்மவிற்கு இடம் ஒழித்து கொடுத்து விடுவார்.  

குனிந்து கோலம் போடுவது நல்ல உடற்பயிற்சி மட்டுமல்ல, மூளைக்கும் நல்ல பயிற்சி. கோடுகளை எப்படி வளைப்பது, எங்கே இணைப்பது என்பதையெல்லாம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டாமா? இதைப் போன்ற செயல்களை செய்து கொண்டிருந்ததால்தான் முன்பு டிமென்ஷியா போன்றவை அதிகம் பேர்களை தாக்கவில்லையோ என்னவோ.

இப்போதெல்லாம் திருமணம் போன்ற விசேஷங்களில் கேட்டரிங்காரர்களே கோலமும் போட்டு விடுகிறார்கள். சமீபத்தில் நான் கலந்து கொண்ட ஒரு திருமணத்தில், "ஒரு கோலம் போட வேண்டும்" என்று சாஸ்திரிகள் கூறியதும்  மேடைக்கு விரைந்தது 50+ வயதுக்காரர்கள்தான். இளைய தலைமுறையினர் யாரும் முன்வரவில்லை என்றாலும் கோலம் போடும் கலை அறவே ஒழிந்து போய் விடவில்லை என்பது ஒரு ஆறுதல். அது பழையபடி செழிக்க வேண்டும் என்பது ஆசை.  அத்தனைக்கும் ஆசைப்படுகிறோமோ இல்லையோ, இத்தனைக்கு ஆசைப் படலாமே.






கோலங்களுக்கு கூகுளுக்கு நன்றி.



Wednesday, October 30, 2019

மாலைப் பொழுதினிலே

மாலைப்  பொழுதினிலே 

ராமகிருஷ்ண பரமஹம்சருக்கு முதல் முதலில் தெய்வீக அனுபவம் ஏற்பட்டது ஒரு மாலை நேரத்தில்தான். அஸ்தமன நேரத்தில் வயல்காட்டில் நடந்து வந்து கொண்டிருந்த அவர் கண்ணில் கூட்டமாக கூடு திரும்பி கொண்டிருந்த பறவை கூட்டம் ஒன்று பட்டது. துல்லியமான வான பின்னணியில் அந்த பறவை கூட்டத்தை கண்டவர் பரவச நிலைக்கு ஆட்பட்டாராம். மாலை நேர வானம் மோனமானதுதான்.

எங்கள் வீட்டிற்கு கிழக்கு பார்த்த வாசல். ஆகவே வரவேற்பு கூடத்தை ஓட்டிய பால்கனியிலிருந்து சில சமயங்களில் வெகு அழகான மாலை நேர வானத்தை பார்க்க முடியும். அவற்றில் சில உங்கள் பார்வைக்கும்.