வண்டிப் பயணமும், வாழ்க்கைப் பயணமும்
நூறு புத்தகங்கள் படிப்பதால் பெறும் அறிவை ஒரு பயணம் தந்துவிடும் என்பார்கள். பயணங்கள் மூலம் நான் பெற்ற அறிவை விட, பயணங்களுக்கும் நம் வாழ்க்கைப் பயணத்திற்கும் உள்ள ஒற்றுமையை அலசுவதே என் நோக்கம்.
என் நாற்பதாவது வயதில்தான் டூ வீலர் ஒட்டக் கற்றுக் கொண்டேன். என்னைவிட இளையவர்களைவிட நான் சீக்கிரம் கற்றுக் கொள்வதாகவும், தைரியமாக ஓட்டுவதாகவும் எனக்கு பயிற்சி அளித்தவர் சொன்னாலும், எனக்கு அடி மனதில் ஒரு பயம் இருந்து கொண்டே இருக்கும். "நமக்குப் பின்னால் ஒரு குடும்பம் இருக்கிறது, நாம் ஏதாவது விபத்தில் சிக்கிக் கொண்டால் மிகவும் கஷ்டம்" என்னும் அச்சம் இருந்ததால் மெதுவாகத்தான் செல்வேன், சாலை விதிகளை மீற மாட்டேன்.
நம் நாட்டில் சாலையில் மாட்டு வண்டி, மீன் பாடி வண்டி, சைக்கிள், ஆட்டோ, சிட்டி பஸ், தண்ணீர் லாரி, நவீன ரக டூ வீலர்கள், பென்ஸ் கார், டாட்டா சுமோ என்று எல்லா வகை வாகனங்களும் அதனதன் வேகத்தில் விரையுமே. இதில் சைக்கிளையோ, மாட்டு வண்டியையோ முந்துவதால் நமக்கு எந்த பெருமையும் கிடையாது. டாட்டா சுமோவோடு போட்டி போடுவது அறிவீனம். நம் சௌகரியத்திற்க்காக நாம் வண்டியில் செல்கிறோம், நாம் போக வேண்டிய இடத்திற்கு பாதுகாப்பாக செல்வதுதான் நம் வேலை.
இதைப் போலத்தான் வாழ்க்கையும். அவரவர்க்கு வாய்த்த இடம் அவன் போட்ட பிச்சை. நம் வாழ்க்கையைத்தான் நாம் வாழ வேண்டுமே தவிர, மற்றவர்களோடு ஓப்பிட்டுக் கொள்ளுதல் சரியில்லை என்னும் மிகச்சிறந்த வாழ்க்கை பாடத்தை புரிந்து கொண்டேன்.
இது ஒரு விதம் என்றால், வெளிநாட்டுப் பயணங்கள் வேறு விதமாக வாழ்க்கை தத்துவத்தை புரிய வைத்தன.
நம் நாட்டிலிருந்து வேறு ஒரு நாட்டிற்கு செல்லும்பொழுது அங்கு தங்குவதற்கு மூன்று மாதமோ, ஆறு மாதமோ, இரண்டு வருடங்களோ தங்கும்படி விசா கிடைக்கும். அத்தனை நாட்கள்தான் அங்கு தங்க முடியும். அதே போல நாமும் இந்த பூமியில் குறிப்பிட்ட நாட்கள் மட்டுமே வாழ அனுமதிக்கப் படுகிறோம். விசா முடிந்து விட்டால் தங்க முடியாதது போல நமக்கான காலம் முடிந்து விட்டால் இங்கிருந்து கிளம்ப வேண்டியதுதான். சில சிறப்பு காரணங்களுக்காக விசாவை நீட்டித்துக் கொள்ளலாம் என்பது போல, நம்மால் இங்கு ஏதாவது நன்மை விளையும், என்றால் குருவின் அருளோடு ஆயுளை நீட்டித்துக் கொள்ளலாம்.
சரி நம் காலம் முடிந்து நாம் கிளம்புகிறோம், நண்பர்கள் வீட்டிலேயே பை சொல்லி விடை கொடுத்து விடுவார்கள். மகனோ, மகளோ ஏர்போர்ட் வரைதான் நம்மோடு வர முடியும். அதன் பிறகு பாவ,புண்ணியம் போல லக்கேஜ், கேபின் பேகேஜ் என்னும் இரண்டு சுமையையும் நாம் மட்டும் தனியாகத்தான் சுமந்து செல்ல வேண்டும். எத்தனைக்கெத்தனை குறைவாக லக்கேஜ் இருக்கிறதோ, அத்தனைக்கத்தனை பயணம் சுகமாக இருக்கும். ஆனால் நாம் எங்கே குறைவாக லக்கேஜ் வைத்துக் கொள்கிறோம்? செல்லும் இடங்களிலெல்லாம் எதையாவது வாங்கி அதிக சுமையோடுதானே திரும்புகிறோம். அப்போது அதற்கு எக்ஸெல் பேகேஜ் கட்டணம் கட்டித்தான் ஆக வேண்டும். இந்த எக்செஸ் பேகேஜ் கட்டணத்தை நாம் வியாதிக்காக செலவிடும் தொகையோடு ஒப்பிடலாமா?
லக்கேஜ், அல்லது கேபின் பேகேஜ் குறைவாக இருந்தால், சில சமயம் நாம் எகானமி வகுப்பு டிக்கெட் வாங்கியிருந்தாலும், நம்மை முதல் வகுப்பிற்கு உயர்த்துவார்கள். இதனால் என்ன பயன்? என்று கேட்கலாம். பேகேஜ் அதிகம் எடுத்துச் செல்ல முடியும், விரைவாக வெளியே சென்று விடலாம்.
நம் நாட்டை அடைந்ததும் இங்கு சுங்க வரி(கஸ்டம்ஸ்) கட்ட வேண்டிய பொருள்களை நாம் வைத்திருந்தால் அதை கட்டாமல் இருக்க முடியாது. அப்படி எதுவும் இல்லை என்றால் க்ரீன் சேனல் வழியே விரைவாக வெளியேறி விடலாம். அரசை ஏமாற்றி விலக்கப்பட்ட பொருள்களை கடத்த நினைத்தால் கடுமையான தண்டனை நிச்சயம்.
அதைப்போலவே வரம்பு மீறாமல் வாழும் பொழுது நமது அடுத்த பிறவி நன்றாக அமைந்து விடும். நாலு பேருக்கு நல்லது செய்வதற்காக சில பாவங்களை செய்தால், அதற்கான கூலியை கொடுத்தேயாக வேண்டும். பேராசையால் பெரும் குற்றங்களை செய்யம் பொழுது, தண்டனையிலிருந்து தப்ப முடியாது.
எப்படி பார்த்தாலும் லெஸ் லக்கேஜ், மோர் கம்ஃபார்ட் என்பது வண்டிப் பயணம், வாழ்க்கைப் பயணம் இரண்டுக்குமே நல்லது. என்ன என் கருத்து சரியா? நீங்கள் நினைப்பதை சொல்லுங்கள்.