கணம்தோறும் பிறக்கிறேன் 

Showing posts with label Toy bank. Show all posts
Showing posts with label Toy bank. Show all posts

Tuesday, March 26, 2019

மூர்த்தி சிறிதானாலும்...

மூர்த்தி சிறிதானாலும்...


டீன் ஏஜ் இளைஞர்களும், யுவதிகளும் என்ன செய்வார்கள்? எப்போதும் காதில் இயர் ஃபோனை சொருகிக்கொண்டு, நடப்பார்கள், சதா செல்லை நோண்டிக்கொண்டே இருப்பார்கள். மால்களிலும், பப்களிலும் கடலை போடுவார்கள்.  ஆனால் இங்கே சில வித்தியாசமான இளைஞர்கள் மற்றும் யுவதிகள். 

அப்படி என்ன செய்து விட்டார்கள் அவர்கள் என்கிறீர்களா?  முதலில் கர்விதா குல்ஹாதி என்னும் 19 வயது பெண்னின் செயலைப்  பார்க்கலாம்.

"2015இல்   பெங்களூரில் கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு நிலவிய பொழுது,  உலகம் முழுவதும் வீணாகும் தண்ணீரில், கணிசமான அளவு 
உணவகங்களில் குடிக்காமல் மீதி வைக்கப்படும் தண்ணீர் ஆகும் என்பது தெரிந்தது. ஒருவருக்கு  வைக்கப்பட்ட ஒரு முழு க்ளாஸ் நீரில் அவர் சிறிதளவு குடித்து விட்டு மிச்சம் வைக்கும் நீரை அப்படிய கொட்டி விடுவார்கள் இதன் அளவு ஏறத்தாழ 14 மில்லியன் லிட்டர்  என்னும் செய்தி அறிந்து இதை குறைந்த பட்சம் பெங்களூரில் மட்டுமாவது தடுக்க முடியுமா என்று நினைத்து, அதற்காக ஏதாவது செய்ய வேண்டும் என்று என் தோழர்களோடு 'WHY WASTE' நிறுவனத்தை தொடங்கினேன்.  அதன் முதல் முயற்சியாக ஆரம்பித்ததுதான் 'GLASS HALF FULL' என்னும் திட்டம்." 

"இதற்காக பெங்களூரில் இருக்கும் பல உணவகங்களுக்குச் சென்று வாடிக்கையாளர்களின் டம்பளர்களில் பாதியளவு மட்டும் நீர் நிரப்புமாறு வேண்டுகோள் விடுத்தோம், மிகவும் சிறியவர்களாக இருந்த எங்கள் பேச்சை  கேட்கத் யாரும் தயாராக இல்லை, என்றாலும் விடாமல் முயற்சி செய்து இப்போது தேசிய உணவகங்களின் அமைப்போடு இணைத்துள்ளோம். அதன்கீழ் ஒரு லட்சம் உணவகங்கள் வருகின்றன. இதனால் எங்கள் குறிக்கோள் எளிதாக நிறைவேறும் என்று நினைக்கிறோம்." 

பத்தொன்பது வயதாகும் கர்விதாவின் 'வொய் வேஸ்ட்'? நிறுவனத்தில் எல்லோருமே 20 வயதிற்கு உட்பட்டவர்கள்தானாம்.

அனு வர்மா என்னும் ஹரியானவைச் சேர்ந்த  பெண் 500 குழந்தை தொழிலாளர்களை படிப்பை தொடர உதவியிருக்கிறார். இவர் வகுப்புத் தோழிகள் வீட்டு வேலைகளுக்குச் செல்வதால் சரியாக படிக்க முடியமால் இருந்ததால் அது குறித்து பெற்றோர், ஆசிரியர் சந்திப்பில் பேசச் சொன்னாராம். தங்கள் குழந்தைகள் படிப்பில் மிகவும் பின்தங்கி உள்ளனர் என்பதை கேட்ட அந்தப் பெண்களின் பெற்றோர்கள் அதை ஒரு  மானப் பிரச்னையாக கருதி தங்கள் குழந்தைகளை வீட்டு வேலைகளுக்கு அனுப்பாமல் படிப்பில் மட்டும்  கவனம் செலுத்த வைத்தார்களாம்.  இரண்டு பெண் குழந்தைகளுக்கு உதவ முடிந்தது போல் மற்ற பெண் குழந்தைகளுக்கும் உதவலாமே என்று தன்  பெற்றோர்களுக்குத் தெரியாமல் கிராமத்தில் பல பெற்றோர்களை சந்தித்து பேசி அவர்களின் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பச்செய்தாராம்.

அவருடைய என்.ஜி.ஓ.வான 'புலன்ட் உடான்' உதவியால்  இப்போது இவர் கிராமத்தில் குழந்தை தொழிலாளர்கள் கிடையாதாம். ஹரியானாவை குழந்தை தொழிலாளர் இல்லாத மாநிலமாக்க வேண்டும் என்பதுதான் பதினாரே வயதான இவர் கனவாம். பதினாறு வயதினிலே என்ன ஒரு ஒரு சிந்தனை பாருங்கள்!

சம்பா குமாரி என்னும் ஜார்கண்டை சேர்ந்த பதினான்கு வயது பெண் மைக்கா சுரங்கத்தில் வேலை பார்த்து வந்தார். பஜ்பன் பச்சாவோ அந்தோலன்(BBA) என்னும் என்.ஜி.ஓ.உதவியால் படிக்கும் வாய்ப்பை பெற்றார். இவர் தந்தை முதலில் அதற்கு ஒப்புக் கொள்ளவில்லை, அவருடைய சகோதரர்கள் தந்தையோடு வாதாடி இவரை படிக்க சொன்னார்களாம். பால பஞ்சாயத்தின் தலைவர் பதவிக்கு போட்டியிட்டு ஜெயித்த இவர்,உள்ளூர் தலைவர்களோடு சேர்ந்து குழந்தை தொழிலாளர் ஒழிப்புக்கும், குழந்தை திருமணங்களை தடுக்கவும் பாடுபட்டு வருகிறாராம்.

பெண்கள் கொஞ்சம் தீவிரமாக இருக்க ஆண்கள் மக்களின் மென்மையான உணர்வுகளுக்காக சில விஷயங்களை செய்கிறார்கள்.

ஆரியமான் லஹோட்டியா என்னும் கொல்கத்தாவை சேர்ந்த பதினேழு வயது  இளைஞர் குழந்தைகளுக்காக 'டாய் பேங்க்'(toy bank)ஒன்றை தன் வயதையொத்த உறவினரோடு சேர்ந்து   துவங்கி யிருக்கிறார்.  

"எனக்கு 14 வயதும் என் அத்தை மகளுக்கு 16 வயதும் இருந்த பொழுது, தான் விளையாடி அலுத்த தன்னிடம் இருக்கும் நல்ல பொம்மைகளை பிறருக்கு அளிக்க விருப்புகிறவர்களுக்கு ஒரு வாய்ப்பு தர வேண்டும் என்று விரும்பினோம். ஆனால் எங்கே, எப்படி துவங்குவது என்று தெரியவில்லை. முகநூலில் உங்களிடம் நல்ல நிலையில் உள்ள பொம்மைகள் உள்ளதா? எங்களுக்கு தெரிவியுங்கள் என்று ஒரு விளம்பரம் கொடுத்தோம். அப்படி இருக்கும் பட்சத்தில் அதை எங்கே சேர்ப்பிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டோம். உள்ளூர் என்.ஜி.ஓ.க்கள், மற்றும் அனாதை ஆஸ்ரமங்கள் இவற்றோடு தொடர்பு கொண்டு இதுவரை 15000 பொம்மைகளை விநியோகித்துள்ளோம். பிறந்த குழந்தைகளுக்கான பொம்மைகளிலிருந்து , டீன் ஏஜ் பருவத்தினருக்கான பொம்மைகள் வரை இதில் அடக்கம். இந்தியா முழுவதிலும் எங்களுக்கு ஏழு சென்டர்கள் இருக்கின்றன. விரைவில் இன்னும் இரண்டு நகரங்களில் இரண்டு சென்டர்களை துவங்க உள்ளோம்." என்கிறார். இதை யாரும் என்ன விளையாட்டுத்தனமா இருக்கு? என்று கூறி விட முடியாது. 

ஹைதராபாத்தை சேர்ந்த இருபத்தியொரு வயதாகும் சபி கான் என்னும் இளைஞர் தன பாக்கெட் மணியைக் கொண்டு நாய்கள் காப்பகம் ஒன்றை துவங்கி உள்ளார். 

"பிராணிகள் மீது உள்ள பிரியத்தால் பதிமூன்று வயதிலிருந்தே மிருகங்களின் நலனுக்காக போராடும் என்.ஜி.ஓ. ஒன்றில் தொண்டாற்றி வந்தேன். எனக்கு 16 வயது ஆனா பொழுது, கவனிக்கப்படாத, மற்றும் பாதிக்கப்பட்ட நாய்களுக்கான சரணாலயம் ஒன்றை தொடங்க வேண்டும் என்று தோன்றியது. என் 18வது பிறந்தநாள் அன்று, 'A PLACE TO BARK' என்னும் நிறுவனத்தை தொடங்கினேன். 

எங்கள் வீட்டிற்கு அருகிலேயே ஒரு இடத்தை வாடகைக்கு எடுத்து அங்கு கவனிக்கப்படாத, தாக்கப்பட்ட நாய்களை வைத்து பராமரிக்க தொடங்கினேன். தினசரி காலை 4 மணிக்கு எழுந்து ஏதாவது நாய் தெருவில் அடிபட்டு கிடக்கிறதா என்று பார்க்க கிளம்புவேன். பின்னர் பள்ளிக்கு செல்லும் முன் அவைகளுக்கு உணவளித்து விட்டு செல்வேன். எனக்கு பொறியியல் கல்லூரியில் இடம் கிடைத்த பொழுது, இவை பாதிக்கப் பட்டதால் என் காப்பகத்தை கல்லூரிக்கு அருகிலேயே வைத்துக் கொள்ள அனுமதி கேட்டேன், அவர்களும் என் தீவிரத்தை உணர்ந்து அதற்கு அனுமதி அளித்தனர். என்று கூறும் இவர், விரைவில் ஹைதராபாத்தில் விலங்குகளுக்கான சரணாலயம் ஒன்றை அமைக்க இருக்கிறாராம். 

நல்லது செய்ய வயது ஒரு தடையல்ல என்பதைத்தானே இவர்கள் உணர்த்துகிறார்கள்?  


Courtesy: Times of India