கணம்தோறும் பிறக்கிறேன் 

Wednesday, June 14, 2023

அருகி வரும் பழக்கங்கள்

 அருகி வரும் பழக்கங்கள்

 

சென்ற திங்களன்று நெருங்கிய உறவில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட எனக்கு ஒரு பேரதிர்ச்சி! டிரஸ்ட் மீ அங்கு ஒரு பெண் தாவணி அணிந்து கொண்டு வந்திருந்தாள். “பாவாடை தாவணியில் பார்த்த உருவமா?..” என்று ஒரு பழைய பாட்டு உண்டு. இப்போது அதை, “பாவாடை தாவணியில் பார்க்க முடியுமா?..” என்றுதான் பாட வேண்டும். தாவணி என்பது வழக்கொழிந்து போய் விட்டது. கிராமங்களில் கூட இளம் பெண்கள் தாவணி அணிவதில்லை. சூடிதார்தான்”. என்றேன்.

 

அந்தப் பெண்ணின் தாய், “ஆமாம், கடைகளில் தாவணி கிடைப்பதில்லை. ஒன்று மிகவும் ட்ரான்ஸ்பரெண்டாக இருக்கும் அல்லது ஜகஜகவென்று இருக்கும். நான் புடவை வாங்கி, அதை தாவணியாக கிழித்துத் தருகிறேன். உங்களுக்கு ஏதாவது தாவணி கிடைக்கும் கடை தெரிந்தால் சொல்லுங்கள்” என்றார். யாரவது தெரிந்தால் சொல்லுங்கள்.

 

அப்படி வழக்கொழிந்துகொண்டே வரும் ஒரு நல்ல பழக்கம் பெரியவர்களை வணங்குவது. என் அம்மாவுக்கு பிறந்த வீடு, புகுந்த வீடு இரண்டுமே ஒரே ஊர். தெற்குத் தெருவில் பிறந்த வீடு, வடக்குத் தெருவில் புகுந்த வீடு. ஆனாலும், புகுந்த வீட்டிலிருந்து பிறந்த வீட்டிற்குச் செல்லும் போதெல்லாம் இங்கிருக்கும் பெரியவர்கள் எல்லோரையும் நமஸ்கரித்து விட்டுதான் செல்வார். அம்மா நமஸ்காரம் பண்ணும் பொழுது, கூடவே நாங்களும் நமஸ்காரம் செய்வோம்.

 

தீபாவளி அன்று, எண்ணெய் தேய்த்து குளித்து விட்டு, புத்தாடை அணிந்து கொண்டதும், ஸ்வாமிக்கு நமஸ்காரம் செய்து விட்டு, வீட்டு பெரியவர்களை வணங்கிய பிறகுதான் பட்டாசு வெடிக்கச் செல்வோம். கார்த்திகை அன்று விளக்கேற்றியதும் பெரியவர்களுக்கு நமஸ்காரம் செய்வோம். காரடையான் நோன்பு அன்றும் நோன்பு சரடு கட்டிக் கொண்டதும் பெரியவர்களுக்கு நமஸ்காரம் செய்வதுண்டு. கனுப்பொங்கல் அன்று மஞ்சள் கீறிக் கொண்டதும், மஞ்சள் கீறி விடுபவர்களுக்கு நமஸ்காரம் செய்வோம். பிறந்த நாள், திருமண நாட்களில் நிச்சயம் நமஸ்காரம் செய்வோம். வெளியூர்களுக்குச் செல்லும்பொழுது ஸ்வாமிக்கும், வீட்டுப் பெரியவர்களுக்கும் நமஸ்காரம் செய்து விட்டுதான் கிளம்புவோம். என் அக்காவின் ஸ்நேகிதியின் வீட்டில் தினமுமே அம்மாவிடம் தலை பின்னிக் கொண்டதும் நமஸ்கரித்து விட்டுதான் எழுந்திருப்பார்கள்.

 

நம் வீட்டுக்கு வரும் பெரியவர்களுக்கும், நாம் செல்லும் வீடுகளில் உள்ள பெரியவர்களுக்கும் நமஸ்காரம் செய்வதுண்டு. எங்கள் அத்தைப்பெண் வேடிக்கையாக, “ யாரோ கல்யாணத்தில் என் அப்பா, தூரத்து சொந்தக் காரரை அறிமுகப்படுத்தி, அவருக்கு நமஸ்காரம் பண்ணச் சொல்றார், அது சரியா தாலி கட்டும் நேரம், எல்லோரும் தூவும் அட்சதையெல்லாம் என் தலையில் விழுகிறது” என்பாள்.


இப்போது நமஸ்காரம் செய்யும் பழக்கம் வெகுவாக குறைந்து விட்டது. இதற்கு காரணம் நாம்தானோ? நாம் நடுத்தர வயதில் இருக்கும்பொழுது யாராவது நமஸ்கரிக்க வந்தால், “சீ சீ! நமஸ்காரமெல்லாம் வேண்டாம்” என்று மறுத்து, அந்த நல்ல பழக்கத்தை வேரறுத்து விட்டு, எல்லோரும் ஹை, ஹை என்று மாடு மேய்க்கிறோம் வட இந்தியயர்களிடம் பெரியவர்களை வணங்கும் பழக்கம் இன்னும் இருக்கிறது.