கணம்தோறும் பிறக்கிறேன் 

Showing posts with label Harsha Vardhana. Show all posts
Showing posts with label Harsha Vardhana. Show all posts

Friday, October 20, 2017

தயிர் வடை மஹாத்மியம்

தயிர் வடை மஹாத்மியம்



"தயிர் வடை ஒரு பிளேட்" என்று நான் ஆர்டர் கொடுத்தவுடன், என் கணவர் வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டு முகத்தை திருப்பிக் கொண்டதும் நான்," என்ன சிரிப்பு?" என்றேன்.

இல்ல..நேத்துதான் ஏதோ தயிர் வடை சாப்பிட்டால் ஞாபக சக்தி குறையும்னு ஏதோ கதையெல்லாம் சொன்ன, இன்னிக்கு தயிர் வடைன்னு ஆர்டர் குடுக்கற.." என்றார்.

என்னது.. தயிர் வடை சாப்பிட்டால் ஞாபக சக்தி குறையுமா? என்றான் என் மகன்.

ஆமாம்டா..

என்ன கதை? சொல்லு சொல்லு, எப்படியும் தயிர் வடை வர நேரமாகும். 

ஹர்ஷவர்தனர் தெரியுமா?

ஹர்ஷவர்தனர்..ஹர்ஷவர்தனர்  ? நார்த் இந்தியா முழுவதையும் ஆண்டவர், நாளாந்த யூனிவர்சிட்டி அவர் காலத்துலதானே இருந்தது...??

அவரேதான். அவர் சிறந்த வீரர் மட்டுமில்லை, நல்ல படிப்பாளியும் கூட. பெரிய ஸ்காலர். ஆனால் அவருக்கு தனக்கு நண்பர்கள் இல்லையேன்னு ஒரு மனக்குறை.

ஆமாம் அறிவுஜீவிகளோடு நட்பு பாராட்டுவது கொஞ்சம் கஷ்டம்தான். ரொம்ப டீடைலா பேசி போரடிப்பார்கள், இல்லைனா மற்றவர்கள் சொல்லும் விஷயங்களில் குற்றம் கண்டு பிடித்துக் கொண்டே இருப்பார்கள்.."

"ம்ம்.. இருக்கலாம்.. ஹர்ஷர் தன்னோட குருவிடம் சென்று நண்பர்கள் கிடைக்கனுன்னா நான் என்ன பண்ணனும்? என்று கேட்டார். அவரோட குரு நீ சொன்னதைத்தான் சொன்னார்."

அதாவது நீ நிறைய படிச்சிருக்க, அதனால் உன்னோட பேசவே எல்லோரும் பயப்படுகிறார்கள். நீ படித்ததை எல்லாம் கொஞ்சம் மறந்தால் உனக்கு நண்பர்கள் கிடைக்கலாம்.." என்றாராம்.

எப்படி மறப்பது என்று ஹர்ஷர் கேட்க, உளுந்தை தயிரில் ஊற வைத்து 48 நாட்கள் சாப்பிடு, மறதி வரும். என்றாராம்.

ஹர்ஷரும் அதன்படி 48 நாட்கள் உளுந்தை தயிரில் ஊற வைத்து சாப்பிட்டு விட்டு குருவை சென்று சந்தித்திருக்கிறார். அவர் இவருக்கு ஒரு பரீட்சை வைத்தாராம். அதில் ஹர்ஷர் வழக்கம்போல முதல் மார்க் வாங்கி விட, அவருடைய குரு," உனக்கு விமோசனமே கிடையாது. 48 நாட்கள் தயிரில் ஊறவைத்த உளுந்தை சாப்பிட்டும்  கூட உனக்கு மறதி வரவில்லை. நட்பு வட்டம் என்னும் ஆசையை மறந்து விடு என்றாராம்.

அடக்கடவுளே! இது தெரிஞ்சும் நீ ஏன் தயிர் வடை சாப்பிடுகிறாய்?

என் மகன் கேட்டுக் கொண்டிருக்கும் பொழுதே தயிர் வடை வந்து விட்டது. அதன் மேல் காரா பூந்தி தூவ வேண்டாம் என்று சொல்ல மறந்து விட்டேன். எனக்கு என்னவோ மிருதுவாக இருக்கும் தயிர் வடை மேல், காரா காரா கர கரப்பான காரா பூந்தி தூவினால் பிடிக்காது. சில சமயம் அந்த காரா பூந்தி சிக்கு வாடை வேறு அடிக்கும். காரட் துருவல் ஓகே.!

நான் ஹர்ஷ வர்தனரைப் போல அறிவு ஜீவியும் அல்ல, தவிர 48 நாட்கள் தொடர்ந்து சாப்பிடப் போவதில்லையே.. சர்வர் கொண்டு வைத்த தயிர் வடையை ஸ்பூனால் விண்டு வாய்க்குள் தள்ளினேன்.

படம்: நன்றி கூகிள்!