இண்டலக்சுவல் குண்டா!
நாடகம், சினிமா, பத்திரிகையுலகம், அரசியல் என்ற பல்வேறு துறைகளிலிலும் அவர் பழகிய பலதரப்பட்ட மனிதர்களின் நல்ல குணாதிசயங்களை விவரித்திருக்கிறார். குமுதத்தில் தொடராக வந்ததாம்.
சிவாஜி கணேசனிடம் இவர் துக்ளக் பத்திரிகை ஆரம்பிக்கப் போவதாக சொன்னதும், "ஏற்கனவே உன்னுடைய கிறுக்குத்தனத்தைப் பற்றி கேட்க வேண்டாம், பத்திரிகை வேற ஆரம்பிக்கப் போற.. ஒரு குரங்கு கள்ளை குடிச்சு, அதுக்கு தேளும் கொட்டி, அது கண்ணிலே மிளகாய்ப் பொடியையும் தூவிகிட்டா என்ன ஆகுமோ அப்படி இருக்கப் போவுது உன் பத்திரிகை" என்றாராம்.
ஒரு முறை சிவாஜி அழுது நடித்த காட்சி மிகையாக இருந்தது என்று இவர் கூற, இவருக்கு அந்தக் காட்சியில் கதறி அழாமல் சட்டிலாக(subtle) எப்படி நடிப்பது என்று நடித்துக் காண்பித்த பொழுது தனக்கு உடல் சிலிர்த்தது என்கிறார்.
காமராஜைப் பற்றியும், மொரார்ஜி தேசாயைப் பற்றியும் இவர் எழுதியிருப்பதை படித்த பொழுது கண்கள் கலங்குகின்றன. எப்படிபட்ட தலைவர்கள்!
முகமது பின் துக்ளக் நாடகத்தை பார்த்த திரைப்பட இயக்குனர் பீம்சிங், அந்த நாடகத்தில் சமஸ்கிருதம் இறந்து விட்டது என்று வரும் வசனம் எழுதியது மிகவும் தவறு, அதில் எத்தனை தத்துவங்கள் இருக்கின்றன, எத்தனை விஷயங்கள் இருக்கின்றன? மரியாதையா அந்த வசனத்தை எடு என்று கோபப்பட்டராம்.
அந்த நாடகத்தை திரைப்படமாக எடுத்த பொழுது நிறைய பிரச்சனைகளை சந்தித்தார்களாம். இருபத்தியாறு முறைக்கு மேல் காமிராமேன்கள் மாற்றப்பட்டர்களாம். இத்தனை இடஞ்சல்களையும் மீறி படம் முடிக்கப்பட்டு சென்சாருக்கு அனுப்பினால் அங்கு 22 கட் கொடுத்தார்களாம். அதை ஒப்புக் கொண்டு வெளியிட படம் ஹிட்டாம். இத்தனைக்கும் அந்தப் படத்தை எடுத்தது எம்.ஜி.ஆரின் மானேஜராக இருந்த நாராயணன் என்பவராம்.
அவருடைய சில நாடகங்களில் சித்தரிக்கப்பட்டிருந்த சில சம்பவங்கள் அப்படியே நிஜமானதாம்.
சோ என்னதான் வலதுசாரியாக இருந்தாலும் கம்யூனிஸ்டுகளை பற்றி, "கம்யூனிஸ்டுகளுடைய சித்தாந்தத்தை நான் சுத்தமாக ஒப்புக் கொள்ளவில்லை.கம்யூனிசம் சுத்தமாக பிடிக்காது,ஆனால் கம்யூனிஸ்டுகள் நேர்மையானவர்கள்" என்கிறார்.
ஜோதி பாசுவை இவர் சந்தித்ததை இவர் விவரித்திருப்பது மிகவும் சுவாரஸ்யம்.
எம்.ஜி.ஆர். உடல் நிலை சரியில்லாமல் போன பொழுது ஜானகி இவரை அழைத்து எம்.ஜி.ஆரின் ஜாதகத்தை இவரிடம் கொடுத்து, "உங்களுக்குத் தெரிந்த நல்ல ஜோசியரிடம் இவருடைய உடல் நிலை பற்றி கணித்து சொல்லச் சொல்லுங்கள், அது மற்றவர்களுக்கு தெரிய வேண்டாம், எனக்கு ரொம்ப கவலையாக இருக்கிறது " என்று கேட்டுக் கொண்டாராம். இத்தனைக்கும் அது சோ, எம்.ஜே.ஆரை கடுமையாக விமர்சித்து வந்த நேரமாம்.
கருணாநிதியை கடுமையாக விமர்சித்த பொழுதும் அவரோடு இருந்த நட்பு பாதிக்கப் படவில்லை என்கிறார். இந்தியன் எக்ஸ்பிரஸ் கோயங்கா இவரை இன்டலக்சுவல் குண்டா என்பாராம். ஜெயலலிதாவையும், ரஜினியையும் பற்றி பேசும்பொழுது சற்று பட்சபாதமாக பேசுகிறாரோ என்று தோன்றுகிறது.
சுவையான அனுபவங்களின் தொகுப்பு.
*********
என்னுடைய முந்தைய பதிவில் மேலே இருக்கும் புகைப்படத்தில் இருக்கும் அரசியல்வாதி யார் என்று கேட்டிருந்தேன், அதற்கு மனோ சுவாமிநாதன் அவர்கள் எல்.கே. அத்வானி என்ற சரியான விடையைக் கூறி விட்டார். அவருக்கு பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி.