கணம்தோறும் பிறக்கிறேன் 

Wednesday, January 13, 2021

கண்டு கொள்வோம் கூத்தாடிகளை!

 கண்டு கொள்வோம் கூத்தாடிகளை!


உலகமே ஸ்தம்பித்திருக்கிறது. தொழில்கள் முடங்கி யிருக்கின்றன, லட்சக்கணக்கில் மரணம், காட்டுத் தீயாய்  பரவிய நோய் இப்போதுதான்  கட்டுக்குள் வந்திருக்கிறது. அதற்குள் இரண்டாவது அலை என்கிறார்கள். சில நாடுகள் மீண்டும் பொது முடக்கம் அறிவித்திருக்கின்றன. இந்த நிலையில்  மாஸ்டர் என்று ஏதோ ஒரு சினிமாவாம் அது திரையரங்கில்தான் வெளியிடப்பட வேண்டுமாம், மக்களை பற்றியும், அவர்கள் நலனைப் பற்றியும், இதனால் சமூகமும், அரசாங்கமும் எதிர் கொள்ள வேண்டிய ஆபத்தை பற்றி கொஞ்சம் கூட கவலைப்படாமல் 100% ஆகுபன்சி வேண்டும் என்று அந்த நடிகர் முதலமைச்சரை பார்த்து பேசுகிறார். அவருடை ரசிகர்கள் ஏதோ அந்த படத்தை பார்க்காவிட்டால் தங்கள் ஜென்மம் கடைத்தேறாது என்பது போல மாஸ்க் அணியாமல், சமூக இடைவெளி என்ற பிரக்ஞை இல்லாமல் முன்பதிவுக்கு முட்டி மோதுகிறார்கள். என்ன கொடுமை இது? 

விஜய்க்கு சமூக பொறுப்பு என்பது கொஞ்சமாவது இருந்தால் தன்னுடைய  படத்தை OTTஇல் வெளியிட்டிருக்க வேண்டும். அல்லது தன் ரசிகர்களுக்கு ஆன் லைனில் மட்டுமே பதிவு செய்து படத்தை பாருங்கள் என்று அறிவுறுத்தியிருக்க வேண்டும். அவர் எப்படி செய்வார்? தன் கட் அவுட்டிற்கு பால் அபிஷேகம் செய்வதை தடுக்காதவர்கள்தானே இவர்கள்.  இவர்கள் ஒரு புறம் கோக கோலா  விளம்பரத்தில் நடிப்பார்கள், இன்னொரு புறம் கார்ப்பரேட் கம்பெனிகள் நம் நீராதாரத்தை சுரண்டுகின்றன என்று குரல் கொடுப்பார்கள்.  'ஒரு விரல் புரட்சியே..' என்று இவர்கள் பாடினால் போதுமா? மக்கள் மீதும், சமூகத்தின் மீதும் அக்கறை வேண்டாமா?

அரசாங்கத்தின் செயல்பாடும் மிகவும் வருத்தம் அளிக்கிறது.  திரை
யரங்குகளுக்கு ஆன் லைனில் மட்டுமே டிக்கெட்டுகளை விற்க வேண்டும் என்று சட்டம் போட்டிருக்க  வேண்டும். சுற்றுலா தளங்களிலும், விமான நிலையங்களிலும், ரயில் டிக்கெட் முன்பதிவுகளிலும் கடுமையான சட்ட திட்டங்களை செயல்படுத்தும் அரசாங்கம் சினிமா அரங்குகளை கண்டு கொள்ளாமல் விட்டது ஏன்? 



Tuesday, January 12, 2021

கலை,கைவினை கண்காட்சி

கலை, கைவினை கண்காட்சி!

ஞாயிறன்று கர்நாடகா சித்திரகலா பரிக்ஷித்தின் ஆதரவில் நடைபெற்ற ஆர்ட்ஸ் & க்ராப்ட்ஸ் எக்சிபிஷனுக்கு சென்றிருந்தோம். அங்கு என் செல்போனில் சிறை பட்டவை :

பழைய பித்தளை பாத்திரங்கள் 


                    





வெண்கல சிலைகள் பகுதியிலிருக்கும் விநாயகரை தனியாக ஃபோகஸ் செய்ய முடியவில்லை.  தலைப் பகுதி எந்த ஆதாரமும் இல்லாமல் தனியாக இருந்தது.   

ஒடிசா ஓவியங்கள் அற்புதம்! அங்கு துணியில் செய்யப்பட்டிருந்த தாய  கட்டத்தை விளையாடிவிட்டு மடித்து வைத்து விடலாம், பிரயாணங்களில் பயன்படும். 1500 ரூபாய் மட்டுமே. சீ! சீ! என்ன இருந்ததும் நாம் கையால் வரைவது போலாகுமா? 









Sunday, January 10, 2021

சார் போஸ்ட்!

 சார் போஸ்ட்!


'நிலவுக்கு வான் எழுதும் கடிதம், நீருக்கு மீன் எழுதும்கடிதம், மலருக்கு தேன் எழுதும் கடிதம், ..' என்று ஒரு பழைய பாடலில் வரும்.  இவையெல்லாம் கடிதம் எழுதுமா? என்று தெரியாது, ஆனால் நாம் எல்லோரும் கடிதங்கள் எழுதியிருக்கிறோம்.