கணம்தோறும் பிறக்கிறேன் 

Sunday, January 10, 2021

சார் போஸ்ட்!

 சார் போஸ்ட்!


'நிலவுக்கு வான் எழுதும் கடிதம், நீருக்கு மீன் எழுதும்கடிதம், மலருக்கு தேன் எழுதும் கடிதம், ..' என்று ஒரு பழைய பாடலில் வரும்.  இவையெல்லாம் கடிதம் எழுதுமா? என்று தெரியாது, ஆனால் நாம் எல்லோரும் கடிதங்கள் எழுதியிருக்கிறோம். டெலிபோன் என்பது ஒரு ஆடம்பர வஸ்துவாக இருந்த காலத்தில் கடிதங்கள்தான் முக்கியமான தொலைத்தொடர்பு சாதனம்.  

அந்த நீல நிற இன்லேண்ட் கவர் நினைவு இருக்கிறதா? நீலப் பறவை என்று இந்துமதி ஒரு கதையில் குறிப்பிட்டிருப்பார். எங்கள் தாத்தா(அம்மாவின் அப்பா) அம்மாவுக்கு அந்த இன்லென்ட் கவர் முழுக்க எழுதி, மேலே மடிக்கும் பகுதிகளிலும் எழுதுவார். "நாந்தான் கடிதம் எழுதுகிறேன், நீங்கள் யாராவது பதில் போடுகிறீர்களா?" என்று கேட்ட அவரின் ஆதங்கம் அப்போது புரியவில்லை. 

நான் பிறந்த பொழுது என் தந்தை வழி பாட்டனார்,"குழந்தை பிறந்த நேரம் நன்றாக இருக்கிறது" என்று எழுதி,  என்னுடைய ஜாதகத்தையும்  ஒரு போஸ்ட் கார்டில் குறித்து அனுப்பியிருந்தார். அதை என் அப்பா நீண்ட நாட்கள் பத்திரமாக வைத்திருந்தார்.  



அப்போதெல்லாம் வளைகாப்பு, சீமந்தம், ஆயுஷ்யஹோமம் போன்ற சிறிய விசேஷங்களுக்கு சிலர் போஸ்ட் கார்டில் கையால் எழுதி நான்கு மூலைகளிலும் மங்கள் குங்குமம் தடவி அனுப்பி விடுவார்கள். 

துக்க செய்திகளை போஸ்ட் கார்டில் மட்டுமே அனுப்புவார்கள். அந்த கார்டு நான்கு மூலைகளிலும் கருப்பு மை தடவப் 
பட்டிருக்கும். 

போஸ்ட் கார்டில் கடிதம் எழுதும் சிலர் மத்தியில் எழுதி முடித்து விட்டு,  ஓரங்களையும் விட மாட்டார்கள். நுணுக்கி, நுணுக்கி ஓரங்களிலெல்லாம் எழுதி, கொடுத்த பத்து பைசாவை முழுக்க வசூல் செய்வார்கள்.  ஆமாம், அப்போதெல்லாம் போஸ்ட் கார்ட் பதினைந்து பைசா, இன்லெண்ட் கவர் 25 பைசா. ஏரோகிராம்  பதினைந்து ரூபாய். 
நமக்கு வருடத்திற்கு ஒரு முறை ஒரு கார்ட் வரும், அது பள்ளியிலிருந்து வரும் ரிசல்ட் கார்ட்! அதை விட்டால் நமக்கு யார் கடிதம் போடுவார்கள்? ரிசல்ட் வரும் அன்று அந்த தபால்காரர் அவரை சுற்றி நின்று கொண்டிருக்கும் எல்லா குழந்தைகளிடமும்,"பாஸ், பாஸ்..", என்று கூறி கார்டைத் தருவார்.  

ஸ்ரீரெங்கத்தில் நாங்கள் வசித்த பகுதிக்கு வரும் தபால்காரரிடம்,  "எங்களுக்கு லெட்டர்  இருக்கா?" என்று கேட்டால், "இல்லை"  என்று சொல்ல மாட்டார். "நாளைக்கு". என்பார். அவருடைய சைக்கிள் மணி ஓசை அப்போது நிறைய எதிர்பார்புகளை உண்டாக்கும். காரணம் நான் அந்த சமயத்தில்  பத்திரிகைகளுக்கு எழுத ஆரம்பித்திருந்தேன். நான் எழுதியது பத்திரிகையில் பிரசுரமாகி காம்பிளிமெண்ட் காபி வராதா? என்ற ஆவல்தான். 

வேலைக்கான நேர்முக தேர்வுக்கு அழைப்பு, அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டர், பெண் பார்த்து விட்டுச் சென்ற மாப்பிள்ளை வீட்டாரிடமிருந்து "பெண் பிடித்திருக்கிறது, மேற்கொண்டு பேசலாம்" என்ற தகவல் போன்ற  எல்லாமே அப்போதெல்லாம் தபாலில்தான் வரும். 

திருமணம் ஆகும்வரை எனக்கு கடிதங்கள் வந்ததில்லை. திருமணத்திற்குப் பிறகு நான் இங்கும், என் கணவர் மஸ்கட்டிலும் இருந்த மூன்று வருடங்களில் ஒவ்வொரு புதன் கிழமையும் எனக்கு அவரிடமிருந்து கடிதம் வரும். அவர் வாரம் ஒரு கடிதம் எழுதினாலும் நான் இரண்டு வாரங்களுக்கு ஒரு முறைதான்  எழுதுவேன். அதைத் தவிர விடுமுறையில் வந்திருப்பவர்களிடம் கடிதம் கொடுத்தனுப்புவதும் உண்டு.   

அப்போதெல்லாம் அங்கிருந்து விடுமுறைக்கு வருபவர்கள் ஒவ்வொருவர் கையிலும் ஒரு கத்தை கடிதங்கள் இருக்கும். எல்லாம் நண்பர்களால் கொடுக்கப்பட்டு  இந்தியாவில் வந்து போஸ்ட் பண்ண வேண்டிய கடிதங்கள். சிலவற்றில் ஸ்டாம்ப் ஓட்டப் பட்டிருக்கும், சிலவற்றில் ஸ்டாம்ப் இருக்காது. ஸ்டாம்ப் ஒட்டப்பட்ட கடிதங்களை பம்பாயிலேயே போஸ்ட் பண்ணி விடுவோம். மற்றவைகளை சென்னை  வந்ததும் முதல் வேலையாக  போஸ்ட் ஆபீஸ் சென்று ஸ்டாம்ப் ஒட்டி போஸ்ட் பண்ணுவோம்.  நாங்கள் விடுமுறைக்கு வந்துவிட்டு மஸ்கட் திரும்பும் பொழுது மும்பையில் செக் இன் செய்த பிறகு கையில் மிச்சமிருக்கும் பணத்தில் அங்கிருக்கும் தபால் நிலையத்தில் ஸ்டாம்ப், கவர் முதலியவை  வாங்கிக்  கொள்வோம். இந்தியாவிற்கு லெட்டர் கொடுத்தனுப்ப உதவுமே. 

தந்தி என்பது மிகவும் அவசரமான, செய்திகளை தெரிவிக்க மட்டுமே பயன்படுத்த பட்டதால் தந்தி வந்திருக்கிறது என்றால் எல்லோரும் பயப்படுவார்கள். இப்போது தந்தி என்பதே  இல்லையே. இப்போதைய தலைமுறையினரிடம் டெலிகிராம் என்றால் ஆப்(செயலி) என்று நினைத்துக் கொள்வார்கள். 

இப்போது ஒரு வீட்டில் இருப்பவர் ஒவ்வொருவரும் தனித்தனியாக செல்போன் வைத்திருக்கிறோம். அப்போதெல்லாம் எங்கள் தெருவில் முதல் வீடு ஒரு டாக்டர் வீடு , அவர்கள் வீட்டிலும், நடுவில் மிதிலா விலாஸ் என்று பெயர் பொறிக்கப்பட்ட ஒரு வீட்டிலும்தான் டெலிபோன் இருந்தது. மிகவும் அவசரம், என்றால் அவர்கள் வீட்டிலிருந்து கால் புக் பண்ணி பேச முடியும். ஓவர்சீஸ் கால்களுக்கு தபாலாபீஸ் சென்று கால் புக் பண்ணி விட்டு தேவுடு காக்க வேண்டும். சில  சமயங்களில் அங்கிருப்பவர்கள்,  "இன்னிக்கு  லயன் ரொம்ப பிசியா இருக்குமா, வீட்டிற்கு சென்று விட்டு மூன்று மணிக்கு மேல் வாருங்கள்"  என்று கூறுவார்கள். 

எனக்கு திருமணமாகி ஒரு வருடத்தில் எங்கள் வீட்டிற்கு இரண்டு வீடுகள் தள்ளி இருந்தவர்கள் வீட்டில் டெலிபோன் வந்தது. அந்த நம்பருக்குத் தான் என் கணவர் வாரம் ஒரு முறை அழைப்பார். இந்தியாவிற்கும் ஓமானுக்கும் ஒன்றரை மணி நேரம் வித்தியாசம். அங்கே மாலை 7:30 என்றால் இங்கே இரவு 9:00. அந்த நேரத்தில் சில சமயம் அவர்கள் படுக்கை கூட போட்டு விடுவார்கள். எனக்கு சங்கடமாக இருக்கும். மன்னிப்பு கேட்டுக் கொண்டு பேசி விட்டு வருவேன். இன்றோ வெளிநாடுகளில் வசிக்கும் நம் குழந்தைகளோடு தினமும் வீடியோ காலில் பேசுகிறோம்.   

இப்போதுதான் புது வருடத்தை கடந்திருக்கிறோம், பொங்கல் நெருங்கி வந்து கொண்டிருக்கிறது, அப்போதெல்லாம் இந்த சமயத்தில் புதுப் பானை, கரும்பு, வாழைப் பழம் விற்பனைக்கு ஈடாக வாழ்த்து அட்டைகள் குறிப்பாக பொங்கல் வாழ்த்துகளின் விற்பனையும் இருக்கும். விதம் விதமான, அழகான வாசகங்கள் எழுதப்பட்ட பொங்கல் வாழ்த்து அட்டைகளை மறக்க முடியவில்லை. 




பொங்கல் சம்பந்தமான ஓவியங்கள் வரைய பட்டவை, ஸ்வாமி படங்கள், அரசியல் தலைவர்கள், எம்.ஜி.ஆர்., சிவாஜி படங்கள் என்று எத்தனை விதம்! என் அண்ணாவிற்கு ஒரு நண்பர் இருந்தார் அவர் சிவாஜி ரசிகர் மன்ற தலைவர், எல்லா வருடமும் பெரிய சிவாஜி படம் போட்ட பொங்கல் வாழ்த்துகளைத்தான் அனுப்புவார். இப்போது பொங்கல் வாழ்த்துகள் இருக்கின்றதா என்றே தெரியவில்லை. நான் எல்லா வருடமும் என் தோழிக்கு பொங்கல் வாழ்த்து அனுப்புவேன், அவள் நன்றி என்று கார்டு அனுப்புவாள். அந்த முறை மாறியதே இல்லை. 

எங்கள் குடியிருப்பில் ஒவ்வொரு வீட்டிற்கும் தபால்களைப் போட ஒரு போஸ்ட் பாக்ஸ், சாவியோடு தந்திருக்கிறார்கள். அதில் எப்போதாவது ஏதாவது பத்திரிகை வரும். 

21 comments:

  1. சுவையான நினைவுகள்.  இரண்டாவது பாராவில் நீங்கள் சொல்லோ இருப்பது என் அப்பாவுக்கும் பொருந்தும்.  நாங்களும் அப்படி எழுதி பழகினோம்!  இப்போது படத்தில் காட்டப்பட்டிருக்கும் இன்லேண்ட் கூட புதுசுதான்.  அப்பழைய இன்லேண்ட் லெட்டர் ஒன்று உண்டு!

    பொங்கல் வாழ்த்தும் அப்படியே.  அதைத் தெரிவு செய்ய கடைக்குச் செல்வதே ஒரு தனி உவகை.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், பொங்கல் வாழ்த்துக்களை தேடித்தேடி பொறுக்குவோம். என் அக்கா எல்லோருக்கும் சுவாமி படங்கள் போட்ட படங்களைத்தான் தெர்ந்தெடுப்பாள். நான் இயற்கை காட்சிகளுக்கும், வாசகங்களுக்கும் முக்கியத்துவம் கொடுப்பேன்.

      Delete
    2. படத்தில் இருக்கும் இன்லேன்ட் கவர் பழைய கவர்தான். புது கவர் மடித்தால் ஏரோகிராம் போல நீளமாக இருக்கும்.

      Delete
  2. வணக்கம் சகோதரி

    பதிவு அருமை. பழைய கால நினைவுகளை சுகமாக மீட்டுத் தந்தது உங்கள் பதிவு. படங்கள் அருமை. போஸ்ட் கார்டில், இன்லேண்ட் கவரில் இருக்கும் இடத்திலெல்லாம் நுணுக்கி நுணுக்கி எழுதி, படித்து ரசித்தது நினைவுக்கு வருகிறது. நாமெல்லாம் இயற்கையாகவே நம்முள் எழும் எழுத்துத் திறமையை அப்போதுதான் நிறைய வளர்த்துக் கொண்டோம் எனவும் தோன்றுகிறது.

    அந்த காலங்கள் இனி திரும்பி வரக்கூடாதா என்ற ஆதங்கமும் மனதில் எழுகிறது. ஆனால்,இன்றைய கைப்பேசிகளின் செளகரியங்களை கண்டு வளர்ந்த இளைய தலைமுறைகளுக்கு பழைய நினைவுகளை எடுத்துச் சொன்னாலும் புரியாது. முதலில் நமக்கே இது பழகி விட்டது. வருடங்களில் வரிசையாக வரும் வாழ்த்துக்கள், இல்லத்தின் அனைத்து விஷேடங்களுக்கு அழைப்புக்கள்,இன்ப,துன்ப செய்திகள் என எல்லாமே இப்போது நம் "கைகளுக்குள்" என்று அடங்கி விட்டது. விஞ்ஞான முன்னேற்றத்தை விரும்பும் நாம் இந்த மாதிரி பழைய நினைவுகளையும் மறக்காமல் அசை போடும் போது ஒரு சுகானுபவம் கிடைக்கிறது. இந்த அனுபவ பாடங்கள் நம் சந்ததிகளுக்கு இல்லை. தங்கள் பதிவில் ஒவ்வொரு வரிகளையும் ரசித்துப் படித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
    Replies
    1. கடிதங்கள் ஒரு வகையில் எழுத்துப் பட்டறை. நான் எழுதும் கடிதங்களை என் பெரிய நாத்தனாரும், அவர் கணவரும் மிகவும் சிலாகிப்பார்கள். உங்களின் அழகான விமர்சனத்திற்கு நன்றி.

      Delete
  3. எனக்கு விவரம் தெரிஞ்ச காலம் காலணா கார்டு (பழுப்பு நிறம்) அரையணா இங்கிலாந்து லெட்டர் ( பச்சை கலர் inland letter card) ஓரணா கவர். அது ஒரு கனாக்காலம். காலணா பஜ்ஜியிலும் காலணா பஞ்சு முட்டாயிலும் சொர்க்கத்தையே அனுபவித்த காலம்.

     Jayakumar

    ReplyDelete
    Replies
    1. நாம் கார்ட், கவர் இவற்றை கொண்டாடுகிறோம். நமக்கு அடுத்த தலைமுறை இ.மெயில், ஃபேஸ் புக்கிற்கு மாறினார்கள். நாமும் அதை கற்றுக் கொண்டோம். அதற்கு அடுத்த தலைமுறை ஃபேஸ்புக் உபயோகிப்பவர்களை ஓல்டீஸ் என்கிறார்கள். மாற்றங்கள் மட்டுமே மாறாதது.நன்றி ஐயா.

      Delete
  4. சில பழைய கடிதங்களைப் பாதுகாத்து வைத்திருந்தேன். பொடிப்பொடியாகி விட்டது. ஐந்து பைசாவிற்குக் கார்டு வாங்கிப் போட்ட காலம் ஒன்று உண்டு. 10 பைசாவாய்க் கொடுத்தால் ரிப்ளை கார்டுடன் வரும்! கார்டு வாங்க முடியாதவர்களுக்கு இன்னொரு கார்டில் நம் விலாசத்தை எழுதி இரண்டையும் அனுப்பினால் அவங்க அதில் பதில் கொடுக்க சௌகரியமா இருக்கும். இப்போல்லாம் ரிப்ளை கார்ட் இருக்கானு தெரியலை. ஆனால் தபால் சேவை இன்னமும் நன்றாகவே இருக்கிறது. தபாலில் அனுப்பும் பார்சல்கள் விரைவாகவும் பத்திரமாகவும் போய்ச் சேர்கின்றன/வருகின்றன. செலவும் குறைவு. எக்ஸ்ப்ரஸ் தபால் என ஒன்று உண்டு. இன்று கடிதம் எழுதித் தபாலில் சேர்த்து எக்ஸ்ப்ரஸ் தபாலுக்கு உள்ள ஸ்டாம்பை ஒட்டினால் மறுநாளே போய்ச் சேர்ந்துவிடும். எழுபதுகளில் இது ரொம்பப் பிரபலம். நாங்க ராஜஸ்தானில் இருக்கும்போது அனுப்பும் தபால்கள்/பார்சல்கள் எல்லாம் பத்திரமாய்க் கருவிலி கிராமத்தைப் போய் அடைந்துவிடும். என்னென்னவோ அனுப்பி இருக்கேன். கூடை பின்னும் வயர், மணிப்பின்னல் பின்னும் மணிகள், அதற்கான வயர், துணிமணிகள், காஃபிப் பௌடர் என அனுப்பி இருக்கேன். எனக்கு மதுரையிலிருந்து எங்க நெருங்கிய நண்பர்கள் பெண் கல்யாணத்து பக்ஷணங்கள் எல்லாம் தபாலில் நசிராபாதுக்கு வந்து சேர்ந்தன. என் அப்பாவும் காஃபிக்கொட்டை (அப்போல்லாம் ரேஷனில் கிடைக்கும்/கொடுப்பார்கள். இந்தியா காஃபி போர்டில் ரேஷன் கார்டைக் காட்டி வாங்கிக்கணும்) சாம்பார்ப் பொடி என அனுப்புவார்.

    ReplyDelete
    Replies
    1. நான்கூட சில கடிதங்களை பத்திரமாக வைத்திருந்தேன். பத்து பைஸாவிற்கு ரிப்ளை கார்டா? it is a news for me.
      தகவல்களுக்கு நன்றி.

      Delete
  5. அருமையாக எழுதியிருக்கிறீர்கள்! அதெல்லாம் ஒரு கனாக்காலம்! துபாயிலிருந்துஒவ்வொருத்தர் ஊருக்குப்போகும்போதும் அவர்களிடம் ஒரு பை நிறைய கடிதங்கள் அடுத்தவருக்கு சேர்ப்பிக்கவும் தபாலில் அனுப்பவும் சேர்ந்திருக்கும். இதில் நேரில் கொடுக்கவென்றே டிராஃப்ட்களூம் இருக்கும். என் மாமியாரிடமிருந்து தபாலில் துபாய்க்கு வரும் கடிதங்களில் நலம் விசாரிக்கவென்றே முதல் பக்கம் முழுவதும் வாசகங்கள் இருக்கும். அடுத்த பக்கங்களில் தான் செய்திகளே வரும். பல பக்கங்களுக்கு நுணுக்கு நுணுக்கி எழுதியிருப்பார்.
    ' ஒருவர் மனதை ஒருவர் அறிய உதவும் சேவை இது, உறவை இணைக்கும் பாலமிது' என்று ஜெயசங்கர் பாடியபடி சைக்கிளில் வரும் கட்சி நினைவுக்கு வருகிறது. இப்போது தான் உறவுகளே குறுகிக்கொண்டே வருகிறதே, அப்புறம் பாலம் எதற்கு?

    ReplyDelete
    Replies
    1. வெளிநாடுகளில் வசிக்கும் பொழுது உறவினர்களிடமிருந்து வரும் கடிதங்கள் தரும் மகிழ்ச்சி அலாதி. நன்றி மனோஜி!

      Delete
  6. ம்... அவை இனிமையான நாட்கள்...

    ReplyDelete
    Replies
    1. எதையுமே கொஞ்சம் கஷ்டப்பட்டு அடைந்தால்தான் சந்தோஷம் இல்லையா?

      Delete
  7. கடிதங்கள்... அப்பாவுக்கு மிகவும் பிடித்தமானது கடிதம் எழுதுவது. தினம் தினம் கடிதம் எழுதிக் கொண்டே இருப்பார். போஸ்க் கார்டில், இன்லேண்ட் லெட்டரில், கவரில் என அவர் எழுதிய கடிதங்கள் எண்ணிலடங்காதவை. பல சமயங்களில் அவர் எழுதிய கடிதங்களே அவருக்கு எதிராகப் பயன்படுத்தப் பட்டதுண்டு! தில்லி வந்த புதிதில் நானும் கடித வழி போக்குவரத்தினை வைத்துக் கொண்டிருந்தேன். இப்போதெல்லாம் கடிதம் எழுதுவதே இல்லை! நினைத்த நொடியில் செய்தியைச் சொல்லி விட எத்தனை வழிகள் இப்போது! நெய்வேலியில் எங்கள் பகுதியில் வரும் தபால்காரரும் இல்லை என்று சொல்ல மாட்டார் - நாளைக்குத் தருகிறேன் என்று தான் சொல்வார். அவர் நினைவுகளை பதிவாகவும் என் பக்கத்தில் எழுதியதுண்டு.

    ReplyDelete
    Replies
    1. எங்கள் அப்பாவும் நிறைய கடிதங்கள் எழுதுவார். கோபத்தையும்,வருத்தத்தையும் கூட உடனே தெரிவித்து அதனால் மற்றவர்களின் கோபத்திற்கு ஆளாவார். நன்றி வெங்கட்.

      Delete
  8. அன்பு பானுமா,
    தபாலோடு பிறந்து தபாலோடு வாழ்ந்த நாட்களே அதிகம்.

    சகலமும் கார்ட், இன்லண்ட் லெட்டர் பச்சைக் கலர், என்வெலொப்,

    இவைகள் வந்த வண்ணம் இருக்கும். 1996இல் கணினி
    வந்த பிறகு அனைத்தும்.

    மாயமாயின.

    ReplyDelete
  9. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அனுபவம். நான் கடிதம் எழுதாத நாட்களே கிடையாது.

    திருமணமான பிறகு தினம் அம்மா கடிதம் எழுதுவார்.
    பள்ளி முடிந்த பிறகு தோழிகளிடமிருந்து
    கடிதங்கள்.
    கீதா எழுதி இருப்பது போல புடவை, பக்ஷணம்,
    எல்லாம் வரும். அப்பா பாக் பண்ணுவதில் வல்லவர்.

    எத்தனை அருமையான பதிவு பானுமா.
    அழகாக எழுதி இருக்கிறீர்கள்.

    டாக்கியா டாக் லாயா பாடல் தான் நினைவுக்கு வருகிறது.
    மிக மிக நன்றி.

    ReplyDelete
  10. நான் கடிதம் எழுதிவிட்டு பதிலுக்காக ஆவலாக காத்திருப்பேன். பெரும்பாலும் வராது. அது கடிதம் போடும் ஆசையைக் குறைக்கும். இப்போது வாட்ஸாப்பிற்கு உடனே பதில் வருகிறது.
    நீங்கள் குறிப்பிட்டிருக்கும் பாடல் கேட்டதில்லை. உங்கள் பதிவில் பகிருங்கள். நன்றி அக்கா.

    ReplyDelete
  11. அதெல்லாம் கனவாகிப் போனது..
    கடிதங்களைப் பற்றிய பதிவினால் மனம் கனத்து விட்டது...

    ReplyDelete
  12. பழைய நினைவுகளை மீட்டி விட்டது இப்பதிவு. அன்று தந்தி என்றாலே எல்லோரது மனதிலும் கிலி உண்டாகும் அதை சொல்ல மறந்து விட்டீர்களே...

    ReplyDelete