கணம்தோறும் பிறக்கிறேன் 

Saturday, April 15, 2023

கனவு பலித்தது

 கனவு பலித்தது



என் படைப்புகளை புத்தகமாக பதிப்பிக்க வேண்டும் என்று ரொம்ப நாட்களாக ஆசை. ஆனால் நமக்கு அது சாத்தியப்படுமா? என்று ஒரு சந்தேகம் அடி மனசில் இருந்து கொண்டே இருந்தது. நிச்சயமாக முடியும் என்று நம்பிக்கை தந்து குவிகம் பதிப்பகத்தை  திரு. ராய செல்லப்பா அவர்கள் அறிமுகம் செய்வித்தார்.  அதோடு மட்டுமல்லாமல் என் கதைகளில் வெளியிடக் கூடிய தகுதிக்கு ஏற்ற கதைகளை தேர்ந்தெடுத்துக் கொடுத்ததோடு, அவற்றில் சிறு திருத்தங்களும் கூறினார். 



என் தோழியான கீதா ரங்கன் ப்ரூஃப் ரீடிங் செய்து தர, நம் ரேவதி பாலாஜி அழகான அட்டைப் படம் வரைந்து தர, சகோதரர் அனந்த நாராயணன் அவர்களும், இனிய தோழியான ஆன்சிலா பெர்னாண்டோவும் அணிந்துரை எழுதித் தர, குவிகம் பதிப்பகம் தரமாக அச்சிட்டு என் கனவை நனவாக்கி விட்டார்கள். இதற்கு முன் நான்கு மின் நூல்கள் வெளியிட்டிருந்தாலும் நம் புத்தகத்தை அச்சில் பார்க்கும் பொழுது அலாதி சந்தோஷம்.  

உணவை சமைத்தால் மட்டும் போதுமா? எல்லோரும் சாப்பிட்டு நன்றாக இருக்கிறது என்று சொன்னால்தானே சமைத்தவருக்கு சந்தோஷம். அதைப் போல் என்னுடைய இந்த நூலை நீங்கள் எல்லோரும் வாங்கி, படித்தால்தான் இந்த என் பணி பூரணமடையும். புத்தகத்தின் விலை பிரதி ஒன்று ரூ.100/- மட்டுமே. விருப்பமுள்ளவர்கள் என்னை 9841178728 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள்.  நன்றி. 



Wednesday, April 12, 2023

பிரார்த்தனை, நேர்த்திக் கடன்

பிரார்த்தனை, நேர்த்திக் கடன்


நான் பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த பொழுது சப்ஸ்டிட்யூட்டாக வந்த ஒரு ஆசிரியை பாடம் எதுவும் எடுக்காமல், பொதுவாக எங்களோடு பேசிக்கொண்டிருந்தார். அப்போது எல்லோரிடமும்,” கடவுளிடம் என்ன வேண்டிக் கொள்வீர்கள்” என்று கேட்டார். பெரும்பான்மையோர் “நன்றாக படிக்க வேண்டும்” என்று வேண்டிக் கொள்வதாக சொன்ன பொழுது நான், “எதுவும் வேண்டிக்கொள்ள மாட்டேன்” என்றேன். அதற்கு அவர், “நிஜமாகவா? பெரிய விஷயம்” என்றார்.

ஆனால் நாம் எப்போதும் பத்தாம் வகுப்பு மாணவியாகவே இருந்துவிட முடியுமா என்ன? வளர, வளர நாம் எதிர்கொள்ளும் தோல்விகள், நிராசைகள், சந்திக்கும் துக்கங்கள் நம்மை வேண்டிக்கொள்ளத்தான் தூண்டுகின்றன. என்னுடைய பிரார்த்தனைகள் பெரும்பாலும் கோவிலுக்கு நடந்து செல்வது, எனக்கு பிரியமான ஏதாவது ஒன்றை அந்தக் காரியம் நடக்கும்வரை விட்டுக் கொடுப்பது என்றுதான் இருக்கும்.

என் மகன் சி.ஏ. தேர்வில் இரண்டாம் முறையும் தோற்றப் பொழுது மிகவும் மனமுடைந்து போய், “இனிமேல் என்னால் பரீட்சை எழுத முடியாது, நான் வேலைக்குச் செல்கிறேன்” என்றான். என் மகன் பட்டப் படிப்பு முடித்து விட்டுதான் சி.ஏ.வில் சேர்ந்தான். லயோலாவில் அவன் கோல்ட் மெடலிஸ்ட்! அவன் பள்ளித் தோழர்களில் பலர் ப்ளஸ் டூவிற்குப் பிறகு இஞ்ஜினீயரிங்க் முடித்து வேலையிலும் அமர்ந்து விட்டது அவனுக்கு மிகப்பெரிய மன அழுத்தத்தை தந்தது.

அப்போது எனக்கு, அவன் சி.ஏ.வில் தேர்ச்சி அடையும் வரை நமக்கு பிடித்த ஏதாவது ஒன்றை விடுகிறேன் என்று ஷிர்டி பாபாவிடம் வேண்டிக் கொள்ளலாம் என்று தோன்றியதால் எனக்கு மிகவும் பிடித்த விஷயம் எது என்று யோசிக்க ஆரம்பித்தேன்.

சாப்பாட்டு விஷயத்தில் இதுதான் பிடிக்கும், இது பிடிக்காது என்பது கிடையாது. சாக்லேட் கொஞ்சம் அதிகமாக பிடிக்கும். ஆனால் எல்லாவற்றையும் விட ரொம்ப ரொம்ப பிடித்தது புத்தகங்கள் படிப்பதுதான். அதிலும் கதைகள் படிக்க மிகவும் பிடிக்கும். எனவே, என் மகன் சி.ஏ.முடிக்கும் வரை கதைகள் படிப்பதில்லை என்று முடிவு செய்தேன். அப்போது பார்த்து பாலகுமாரன் ஃபோன் செய்து, “நான் கங்கை கொண்ட  சோழன் என்று ஒரு புத்தகம் எழுதியிருக்கிறேன். படித்து விட்டு எப்படி இருக்கிறது என்று சொல். நீ நல்ல ரீடர், நன்றாக இருந்தால் நன்னா இருக்கு என்பாய், நன்றாக இல்லாவிட்டால், நன்றாக இல்லை என்று சொல்லி விடுவாய்” என்கிறார். எப்படி இருக்கும் எனக்கு? “கொஞ்ச நாள் கதைகள் படிக்க வேண்டாம் என்று இருக்கிறேன் சார்” என்றேன் கொஞ்சம் வருத்தத்தோடு.



என் மகள், “இவ்வளவு பெரிய ரைட்டர் உன்னிடம் அபிப்ராயம் கேட்பதெல்லாம் சாதாரணமான விஷயம் கிடையாது. நீ கண்டிப்பாக அந்த புத்தகத்தை படித்து அதைப் பற்றி அவரிடம் சொல்லத்தான் வேண்டும்” என்று கூறி எனக்கு ‘கங்கை கொண்ட சோழன்’ எல்லா பகுதிகளையும் வாங்கித் தந்தாள். என் மகனும் அந்த முறை சி.ஏ.வில் தேர்ச்சி அடைந்து விட்டான். நான் கங்கை கொண்ட சோழன் புத்தகத்தை படித்து முடித்து, பாலகுமாரனிடம் அதைப் பற்றிய என் கருத்தை பகிர்ந்து கொண்டேன்.