கணம்தோறும் பிறக்கிறேன் 

Wednesday, April 12, 2023

பிரார்த்தனை, நேர்த்திக் கடன்

பிரார்த்தனை, நேர்த்திக் கடன்


நான் பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த பொழுது சப்ஸ்டிட்யூட்டாக வந்த ஒரு ஆசிரியை பாடம் எதுவும் எடுக்காமல், பொதுவாக எங்களோடு பேசிக்கொண்டிருந்தார். அப்போது எல்லோரிடமும்,” கடவுளிடம் என்ன வேண்டிக் கொள்வீர்கள்” என்று கேட்டார். பெரும்பான்மையோர் “நன்றாக படிக்க வேண்டும்” என்று வேண்டிக் கொள்வதாக சொன்ன பொழுது நான், “எதுவும் வேண்டிக்கொள்ள மாட்டேன்” என்றேன். அதற்கு அவர், “நிஜமாகவா? பெரிய விஷயம்” என்றார்.

ஆனால் நாம் எப்போதும் பத்தாம் வகுப்பு மாணவியாகவே இருந்துவிட முடியுமா என்ன? வளர, வளர நாம் எதிர்கொள்ளும் தோல்விகள், நிராசைகள், சந்திக்கும் துக்கங்கள் நம்மை வேண்டிக்கொள்ளத்தான் தூண்டுகின்றன. என்னுடைய பிரார்த்தனைகள் பெரும்பாலும் கோவிலுக்கு நடந்து செல்வது, எனக்கு பிரியமான ஏதாவது ஒன்றை அந்தக் காரியம் நடக்கும்வரை விட்டுக் கொடுப்பது என்றுதான் இருக்கும்.

என் மகன் சி.ஏ. தேர்வில் இரண்டாம் முறையும் தோற்றப் பொழுது மிகவும் மனமுடைந்து போய், “இனிமேல் என்னால் பரீட்சை எழுத முடியாது, நான் வேலைக்குச் செல்கிறேன்” என்றான். என் மகன் பட்டப் படிப்பு முடித்து விட்டுதான் சி.ஏ.வில் சேர்ந்தான். லயோலாவில் அவன் கோல்ட் மெடலிஸ்ட்! அவன் பள்ளித் தோழர்களில் பலர் ப்ளஸ் டூவிற்குப் பிறகு இஞ்ஜினீயரிங்க் முடித்து வேலையிலும் அமர்ந்து விட்டது அவனுக்கு மிகப்பெரிய மன அழுத்தத்தை தந்தது.

அப்போது எனக்கு, அவன் சி.ஏ.வில் தேர்ச்சி அடையும் வரை நமக்கு பிடித்த ஏதாவது ஒன்றை விடுகிறேன் என்று ஷிர்டி பாபாவிடம் வேண்டிக் கொள்ளலாம் என்று தோன்றியதால் எனக்கு மிகவும் பிடித்த விஷயம் எது என்று யோசிக்க ஆரம்பித்தேன்.

சாப்பாட்டு விஷயத்தில் இதுதான் பிடிக்கும், இது பிடிக்காது என்பது கிடையாது. சாக்லேட் கொஞ்சம் அதிகமாக பிடிக்கும். ஆனால் எல்லாவற்றையும் விட ரொம்ப ரொம்ப பிடித்தது புத்தகங்கள் படிப்பதுதான். அதிலும் கதைகள் படிக்க மிகவும் பிடிக்கும். எனவே, என் மகன் சி.ஏ.முடிக்கும் வரை கதைகள் படிப்பதில்லை என்று முடிவு செய்தேன். அப்போது பார்த்து பாலகுமாரன் ஃபோன் செய்து, “நான் கங்கை கொண்ட  சோழன் என்று ஒரு புத்தகம் எழுதியிருக்கிறேன். படித்து விட்டு எப்படி இருக்கிறது என்று சொல். நீ நல்ல ரீடர், நன்றாக இருந்தால் நன்னா இருக்கு என்பாய், நன்றாக இல்லாவிட்டால், நன்றாக இல்லை என்று சொல்லி விடுவாய்” என்கிறார். எப்படி இருக்கும் எனக்கு? “கொஞ்ச நாள் கதைகள் படிக்க வேண்டாம் என்று இருக்கிறேன் சார்” என்றேன் கொஞ்சம் வருத்தத்தோடு.



என் மகள், “இவ்வளவு பெரிய ரைட்டர் உன்னிடம் அபிப்ராயம் கேட்பதெல்லாம் சாதாரணமான விஷயம் கிடையாது. நீ கண்டிப்பாக அந்த புத்தகத்தை படித்து அதைப் பற்றி அவரிடம் சொல்லத்தான் வேண்டும்” என்று கூறி எனக்கு ‘கங்கை கொண்ட சோழன்’ எல்லா பகுதிகளையும் வாங்கித் தந்தாள். என் மகனும் அந்த முறை சி.ஏ.வில் தேர்ச்சி அடைந்து விட்டான். நான் கங்கை கொண்ட சோழன் புத்தகத்தை படித்து முடித்து, பாலகுமாரனிடம் அதைப் பற்றிய என் கருத்தை பகிர்ந்து கொண்டேன்.   

16 comments:

  1. வணக்கம் சகோதரி

    பதிவு அருமை. தாங்கள் சொன்ன பிரார்த்தனைகளின் விபரம் மெய் சிலிர்க்க வைத்தது. பிரபல எழுத்தாளரின் அன்புக்கும் ஒரு வித இடைஞ்சல் வராமல், அதே சமயம் தங்கள் மகனைப் பற்றிய கனவையும் நிறைவேற்றி வைத்த சாய்பாபாவின் திருவடிகளை பக்தியுடன் வணங்கிக் கொள்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
    Replies
    1. என் பிரார்த்தனையை சரியாக புரிந்து கொண்டிருக்கிறீர்கள். மிக்க நன்றி__/\__ __/\__

      Delete
  2. பாலகுமாரனிடம் என்ன அபிப்ராயம் சொன்னீர்கள், அவர் என்ன சொன்னார்?

    ReplyDelete
    Replies
    1. கல்கியின் கதையில் கற்பனை அதிகம் இருக்கும், உங்கள் கதையில் நிஜம் அதிகம் இருக்கிறது என்று சொன்னது மட்டும் நினைவில் இருக்கிறது.

      Delete
  3. இது நல்லவகை பிரார்த்தனையாக இருக்கிறது.  சுலபமாக இருக்கும், வசதியாகவும் இருக்கும்!!  காரியம் நடக்கும்வரை மட்டுமே பிடித்த பொருளை விட்டுக்கொடுப்பது!

    ReplyDelete
    Replies
    1. அவ்வளவு சுலபம் இல்லை, நம் வைராக்கியத்தை சோதிக்கும்படி நிகழ்வுகள் இருக்கலாம். என்னிடம் பாலகுமாரன் கதையின் கருத்து கேட்டது போல.

      Delete
  4. இதுவும் நல்ல கதையாக உள்ளது... அருமை...

    ReplyDelete
    Replies
    1. நம்புகிறவர்களுக்கு நிஜம். நம்பாதவர்களுக்கு கதை. நன்றி.
      கற்றதனால் ஆய பயனென் கொல் வாலறிவன்
      நற்றாள் தொழார் எனின்

      Delete
  5. பாலகுமாரன் அவர்களிடம் கலந்து கொண்ட விடயத்தை பதிவு செய்யுங்கள்.

    ReplyDelete
    Replies
    1. கல்கியின் கதையில் கற்பனை அதிகம் இருக்கும், உங்கள் கதையில் நிஜம் அதிகம் இருக்கிறது என்று சொன்னது மட்டும் நினைவில் இருக்கிறது. நன்றி

      Delete
  6. ஆஹா பாலகுமாரன் அழைத்துச் சொன்னது பெரிய விஷயம்...உங்கள் அபிப்ராயமாக என்ன சொன்னீர்கள் அக்கா? அவர் பதில் என்ன?

    சுவாரசியமாக இருக்கும் போல இருக்கிறதே!

    கீதா

    ReplyDelete
    Replies
    1. மேலே எழுதியிருகிறேன், பாருங்கள்.

      Delete
  7. முகநூலிலும் படிச்சேனே! அது சரி, கங்கை கொண்ட சோழன் யாரைப் பற்றிய நாவல்? ரொம்பப் பெரிய நாவலா? உங்கள் கருத்தாக என்ன சொன்னீர்களோ அதையும் பதிவு செய்திருக்கலாம்.

    ReplyDelete
    Replies
    1. //அது சரி, கங்கை கொண்ட சோழன் யாரைப் பற்றிய நாவல்?// இது ரொம்ப ஓவர். பாலகுமரனை பிடிக்காமல் இருக்கலாம், அதற்காக கங்கை கொண்ட சோழன் யார் என்று கூடவா தெரியாது? ராஜேந்திர சோழன். பெரிய நாவல்தான். கப்பல் கட்டுவதைப் பற்றி மிக விரிவாக எழுதியிருப்பார். அந்த பகுதிகள் கொஞ்சம் போரடிக்கும்.

      Delete
  8. நான் வேண்டுதல், நேர்த்திக்கடன் என்று வைத்துக் கொண்டதில்லை.

    நீங்கள் சிறுவயதில் சொன்னதேதான் நானும். இப்போது வரை பிரார்த்திக்கும் போது இறைவன் மட்டுமே மனதிற்குள்...இதுவரை கடந்து வர நீதான் காரணம் என்று நன்றி சொல்லி எனக்கு ஒன்றுமே தெரியாது இனியும் நீதான் நீயே துணை என்று சொல்லிவிட்டு எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் அவ்வளவுதான் பிரார்த்தனை...

    கீதா

    ReplyDelete