சேமிப்பு, சிக்கனம்
சென்ற வாரம் மத்யமரில் கொடுக்கப்பட்ட வாராந்திர டாபிக் சேமிப்பு, சிக்கனம்.
இந்த தலைப்பில் பெரும்பாலானோர்
பொருளாதார சிக்கனத்தைப் பற்றி மட்டும் எழுதியிருகிறார்கள். ஆனால் பொருளாதாரத்தை தாண்டி,
தண்ணீர், எரி பொருள், மின்சாரம், போன்ற விஷயங்களிலும் சிக்கனத்தை கடை பிடிக்க வேண்டியது
அவசியம்.
வீடுகளில் கிணறுகள் இருந்த காலத்தில் பாத்திரம் தேய்க்க, துணி தோய்க்க தண்ணீரை சிக்கனமாகத்தான் செலவு செய்வார்கள். எந்த அளவு தண்ணீர் செலவாகிறதோ அந்த அளவு காசு செலவாகும் என்று கூறுவார்கள். கிணற்றிலிருந்து நாம்தானே நீர் இரைக்க வேண்டும்? மோட்டார் போட்டு, தண்ணீர் இரைத்து, குழாயை திறந்தால் தண்ணீர் கொட்டும் என்னும் நிலை வந்த பிறகு தண்ணீர் சிக்கனம் என்பது இல்லாமல் போய் விட்டது.
குழாயைத் திறந்து வைத்துக் கொண்டு பல் தேய்ப்பது பலர் பழக்கம்(ரயில் பயணங்களிலும் சில பயணிகள் இப்படி நடந்து கொள்வார்கள்). 2015ல் சென்னையில் வெள்ளம் வந்த பொழுது எங்கள் குடியிருப்பில் வெள்ளம் புகுந்து, தரை தளத்தை ஆக்கிரமித்து விட்டது. தரை தளத்து வீடுகளில் இருந்தவர்களில் ஒரு பெங்காலி தந்தைக்கும், மகளுக்கும் எங்கள் வீட்டில் அடைக்கலம் கொடுத்தோம். Water water everywhere, not a drop to drink என்பது போன்ற நிலை. ஒவர்ஹெட் டாங்கில் தண்ணீர் இருந்ததால் குழாயில் தண்ணீர் வந்து கொண்டிருந்தது, மிகவும் ஜாக்கிரதையாக பயன்படுத்திக் கொண்டிருந்தோம். கீழ் வீட்டுக்காரரோ குழாயை திறந்து விட்டுக் கொண்டு பல் தேய்க்கிறார். “ஐயா, தயவு செய்து குழாயை மூடுங்கள், தண்ணீர் சிக்க்னம், தேவை இக்கணம்” என்றதும் அவர், “நான் கங்கை ஓடும் பிரதேசத்திலிருந்து வருகிறேன். எங்களுக்கு தண்ணீர் கஷ்டம் என்றால் என்னவென்றே தெரியாது” என்றார். சிக்கனம் என்பது ஒரு நாளில் வந்துவிடாது. பழக வேண்டும். சிலர் குளிக்கும் பொழுது சோப்பு தேய்த்துக் கொள்ளும் பொழுது கூட ஷவரை திறந்து வைத்துக்கொண்டு குளிப்பார்கள்.
எரி வாயு, மின்சாரம் போன்றவற்றை சிக்கனமாக பயன்படுத்த பல குறிப்புகள் வந்துகொண்டிருப்பதால் அவற்றை இங்கே விரிவாக கூறத் தேவையில்லை என நினைக்கிறேன்.
நாம் எல்லோரும் கடைபிடிக்க வேண்டிய இன்னொரு சிக்கனம் வார்த்தை சிக்கனம். வளவளவென்று பேசுகிறவர்களை விட சுருக்கமாக பேசுகிறவர்களுக்கு எப்போதுமே மரியாதை அதிகம். மிகச்சிறந்த உதாரணம் திருக்குறள். எவ்வளவு பெரிய விஷயங்களை இரண்டே அடிகளில் நச்சென்று சொல்லி விடுகிறது! நவீன எழுத்தாளர்களில் சுஜாதாவின் சிறப்பு சின்ன, சின்ன வாக்கியங்கள்.
இவ்வளவு ஏன்? மூச்சை சிக்கனமாக பயன்படுத்துவதன் மூலம் ஆயுளை நீடித்துக்கொள்ள முடியும் என்பதுதானே யோக சாத்திரம். வேக வேகமாக மூச்சு விடுவது மூச்சை விரயம் செய்வதற்கு ஒப்பானது. காமம், கோப வசப்படும்பொழுது மூச்சு விரயமாவதால்தான் அவற்றை கட்டுப்படுத்தச் சொல்கிறார்கள்.
இந்த கட்டுரைக்கு போஸ்ட் ஆப் தி வீக் கிடைத்தது. இதை நான் எழுதிக் கொண்டிருந்தபொழுது யூ டியூபில் எதையோ கேட்டுக் கொண்டிருந்தேன். அப்போது வந்த மிகவும் பொருத்தமான ஒரு விளம்பரம்.
அருமை - விளம்பரமும்...
ReplyDeleteநன்றி.
Deleteதண்ணீர் சிக்கனம் என்ன என்றே அறியாத நிறையபேர் இருக்கிறார்கள். அதேபோல வார்த்தை சிக்கனமும்!
ReplyDeleteவிளம்பரம் பயமுறுத்துகிறது!
ஆமாம் என்னதான் தண்ணீர் கஷ்டம் பட்டாலும் திருந்துவதில்லை. நன்றி.
Deleteசித்தர்கள் மூச்சை நிறுத்தி தியானம் செய்துதான் பல நூறு ஆண்டுகள் வாழ்கிறார்கள் என்று படித்தேன். நமக்கா, கொஞ்சம் நடந்தாலே மூச்சிரைக்கிறது, வேகமாய் வருகிறது!
ReplyDeleteநாமெல்லாம் போக வேண்டிய தூரம் நிறைய இருக்கிறது.
Deleteஅக்கா அருமையான பாயின்ட்ஸ்!
ReplyDeleteதண்ணீர் அதிகம் செலவழித்தால் பணம் விரயமாகும் என்று சொல்வதுண்டு. சென்னையில் இருந்ததால் நம் வீட்டில் தண்ணீர்ச் சிக்கனம் கண்டிப்பாகக் கடைபிடிப்பதுண்டு. அது போல எரிபொருள் சிக்கனம். வெற்றுக் காகிதம் கூட நான் நோட் பேட் போன்று ஆக்கிவிடுவதுண்டு.
மூச்சு பற்றி சொன்னது சூப்பர். உண்மைதானே....ஒரு நிமிடத்திற்கு விடும் மூச்சு குறைவாக இருந்தால் வாழ்நாள் அதிகரிக்கும் என்று சொல்வதுண்டு.
வார்த்தைச் சிக்கனம்...ஹாஹாஹா எனக்கு அது நான் கற்றுக் கொள்ள வேண்டிய விஷயம்.
நான் ஒன்றும் கூடச் சேர்த்துக் கொள்வேன், நேரச் சிக்கனம்!
கீதா
நேரச்சிக்கனம் என்றால் நேரத்தை வீணடிக்கக்கூடாது, வெட்டி அரட்டை, தூக்கம் இவையெல்லாம் கூடாது எங்கிறீர்களா?
Deleteநான் சோப் இல்லாமல் கழுவும் தண்ணீர், அடுக்களையில் கை கழுவும் தண்ணீர், சும்மா பாத்திரம் கழுவும் நீர், அரிசி காய் கழுவும் நீர் இவற்றை எல்லாம் ஒரு பாத்திரத்தில் எடுத்து செடிகளுக்கு விடுவதுண்டு. முன்பிருந்த வீட்டில் குளியலறையிலேயே வாஷிங்க் மெஷின் என்பதால் அதில் வெளிவரும் தண்ணீர் வைத்து குளியலறையைக் கழுவி விட்டுவிடுவதுண்டு. சென்னையில் இருந்த பல வீடுகளில் இப்படி யோசித்துச் செய்தவை இப்போதும் பயன்படுகிறது.
ReplyDeleteபலரும் குழாயைத் திறந்து வைத்துக் கொண்டே பாத்திரம் தேய்ப்பார்கள். முன்பு இருந்த வீடுகள் இரண்டும் நாங்கள் மட்டும் என்பதால் தண்ணீர் மின்சாரச் செலவு குறைவாகவே ஆகிக் கொண்டிருந்தது. இப்போது இருக்கும் வீட்டில் மேலே இரு குடும்பங்கள். தண்ணீர் மீட்டர் தனியாக இல்லை...எனவே அதன் செலவும், பொது மின்சாரச் செலவும் (மோட்டார், பொதுவாகப் போடும் விளக்குகள் என்று) கூடுதலாக இருக்கு
கீதா
நல்ல சிக்கன செயல்பாடுகள்.
Deleteவணக்கம் சகோதரி
ReplyDeleteசிக்கனப்பதிவு நன்றாக உள்ளது. சிக்கனத்தைப்பற்றி நன்றாக சொல்லியிருக்கிறீர்கள். தண்ணீரை அளவுக்கதிகமாக வாரி இறைத்தால் பணம் கையில் நிற்காது என அந்தக் காலப் பெரியவர்கள் சொல்வதுண்டு.
அடுத்து வார்த்தை சிக்கனம்... வளவளவென்று பதிவும், கருத்தும் தருபவள் நான்.இனி முடிந்தால் சிக்கனத்தில் நான் இதை முதலில் கற்றுக் கொள்ள வேண்டும். :)))) பார்க்கலாம். காணொளி நன்றாக உள்ளது பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்க கமலா, கருத்திற்கு நன்றி.
Deleteஅருமையான பதிவு.
ReplyDeleteகோடை காலம் வந்து விட்டால் தண்ணீர் சிக்கனம்
நிறைய பேசப்படும்.
அவசியம் வேண்டும் சிக்கனம்.
வார்த்தை சிக்கனம் இப்போது மிகவும் அவசியம்.
விளம்பரமும் நன்றாக இருக்கிறது.
நன்றி.
Deleteசிக்கனம் நல்ல பகிர்வு அவசியம் கூட.
ReplyDeleteநன்றி மாதேவி.
Deleteஉங்கள் வார்த்தைச் சிக்கனம் மிகவும் பிரபலமாச்சே. அநேகமாகப் பள்ளில் preci writing ல் நீங்க முழு மதிப்பெண்கள் எடுத்திருப்பீங்க. :D
ReplyDelete