கோலாகலப் பொங்கல்!
எங்கள் குடியிருப்பில் பொங்கல் விழாவை 12.01.2020 அன்றே கொண்டாடி விட்டார்கள். கர்நாடகா, ஆந்திரா இங்கெல்லாம் சங்கராந்தி என்கிறார்கள்.
காலையில் பட்டம் விடும் போட்டி, மதியம் கோலப்போட்டி, இரவில் லோடி என்று களை கட்டியது. ஸ்டால்களும் இருந்தன. இரவு உணவை அங்கேயே முடித்துக் கொண்டோம்.
அவ்வளவாக காற்று இல்லையே பட்டம் எப்படி பறக்கும்? என்று நினைத்ததற்கு மாறாக இரண்டு பட்டங்கள் மிக நன்றாகப் பறந்தன. அவற்றை என் செல்ஃபோனில் படம் பிடிக்க எனக்குத் தெரியவில்லை. அத்தனை பெரிய குடியிருப்பில் நாலு க்ரூப்புகள்தான், கலந்து கொண்டன. ஒரு அணியில் இரண்டு பேர் கலந்து கொள்ளலாம் என்ற அனுமதி இருந்த போதிலும் மூன்று அணிகளில் இரண்டிரண்டு பேர்களும் ஒரு பெண்மணி தனியாகவும் மொத்தம் ஏழு பேர்கள்தான் கோலப்போட்டியில் கலந்து கொண்டார்கள்.
இரவு லோரி! பஞ்சாபியர்கள் போல் இரண்டு மூன்று மரத்துண்டுகளை முக்கோணமாக நிறுத்தி அதை எரிய விட்டு, அதைச்சுற்றி ஹிந்தி சினிமா பாடல்களுக்கு ஆடினார்கள். கேக், சமோசா, பாணிபூரி, பேல்பூரி போன்றவை சாப்பிடக் கிடைத்தன. ஆக பொங்கல் தவிர மற்ற விஷயங்களோடு பொங்கலைக் கொண்டாடினோம்.


