2024 ல் முக்கிய நிகழ்வுகள்
இந்த ஆண்டின் சிறந்த நிகழ்வு என்றால் நான் ஒன்றை மட்டும் சொல்ல முடியாது. இரண்டை சொல்லுவேன். முதலாவது, பிரேக் தரிசனம் எனப்படும் ஸ்ரீவாணி தரிசனத்தில் திருப்பதி பெருமாளை மிக அருகில் தரிசித்ததும், இரண்டாவது மாதா அமிர்தானந்தமயிக்கு ஆரத்தி எடுக்கும் பாக்கியம் வாய்த்ததுமே. ஆனால் அந்த நிமிடங்களில் நான் எப்படி உணர்ந்தேன் என்பதை விவரிக்கும் திறமை எனக்கிருக்கிறதா? என்பது சந்தேகமே. முடிந்த அளவு என் உணர்வுகளை பகிர்ந்து கொள்கிறேன்.
பல வருடங்களுக்கு முன்பு திருப்பதியில் அங்க பிரதட்சினம் செய்த பிறகு பெருமாளை அருகே தரிசித்தேன். அதன் பிறகு சென்ற பொழுதெல்லாம் பெருமாளை எட்டி இருந்துதான் தரிசிக்க முடிந்தது. அதிலும், ஜருகண்டி விரட்டல், நமக்கு முன்னால் இருப்பவர் உயரமாக இருந்து விட்டால் வரிசையில் நகரும்பொழுதே பெருமாளை தரிசிக்கும் சான்ஸ் அவுட்! எல்லா கோவில்களிலும் சுவாமியை பார்ப்பது போல் திருப்பதி பெருமாளை தரிசிக்க முடியுமா? என்ற ஏக்கம் உள்ளுக்குள் கணன்று கொண்டிருந்தது. நாம் எதற்காவது அடி மனதில் ஆசைப்பட்டால் அதை இந்த பிரபஞ்சம் நிறைவேற்றும் என்பார்களே அப்படி என்னுடைய இந்த ஆசையும் 2024 ஜூலையில் நிறைவேறியது.
என்னுடைய பெரிய அக்காவின் மகளுக்கு திருமணமாகி ஜூலையில் 25வது வருடம்,வெள்ளிவிழா ஆண்டு. இந்த வருடம் அவளுக்கு 50 அகவை முடிகிறது. இவை இரண்டிற்காகவும் அவளுடைய மகனும்,மகளும் இந்த ஸ்ரீவாணி தரிசனதிற்கு ஏற்பாடு செய்திருக்கிறார்கள் என்பதை அறிந்து கொண்டதும், என் அக்கா பெண்ணிடம், “எனக்கும் டிக்கெட் கிடைக்குமா? என் மகனும் மகளும் எனக்காக ஸ்பான்ஸர் செய்ய ரெடி, என்றதும், அவள் அவர்கள் ஏஜெண்டிடிடம் கேட்டு "எட்டாம் தேதிதான் கன்ஃபர்ம் பண்ண முடியும்” என்றாள். எட்டாம் தேதி மதியம் “உங்களுக்கும் டிக்கெட் கிடைத்து விட்டது, சென்னைக்கு கிளம்பி வாருங்கள், பத்தாம் தேதி திருப்பதிக்கு காரில் போகலாம் என்றாள்”
நான் ஜூலை ஒன்பதாம் தேதி பெங்களூரிலிருந்து பஸ்ஸில் புறப்பட்டு சென்னை சென்று பத்தாம் தேதி திருப்பதிக்கு கிளம்பினோம். அங்கு ஸ்ரீவாணி சேவைதாரர்களுக்கு தங்கும் இடம் ஒதுக்குகிறார்கள். அறை விஸ்தாரமாகவும்,சுத்தமாகவும் இருந்தது. 11ஆம் தேதி காலை, எழுந்து, குளித்து, அருகில் இருந்த ஒரு ரெஸ்டாரெண்டில் சிற்றுண்டியை சாப்பிட்டு விட்டு கிளம்பினோம்.
வழக்கமாக செல்லும் பாதைதான், ஆதார் கார்ட், ஸ்ரீவாணி டிக்கெட் செக்கிங் போன்ற ஃபார்மாலிடிகளை முடித்துக் கொண்டு கூண்டுகளிள் அமர்ந்து கொண்டோம். சிறிது நேரத்தில் காபி, பால் போன்றவை வழங்கப்பட்டன. அதை அடுத்து பொங்கலும், தயிர் சாதமும். நாங்கள் ஏற்கனவே சிற்றுண்டி சாப்பிட்டு விட்டதால் காபியோடு நிறுத்திக் கொண்டோம்.
சற்று நேரத்தில் கூண்டுகளை திறந்து விட்டார்கள். நீளமாக நடந்து, ஏறி, இறங்கி, கோவிலின் பிரதான வாயிலில் காலை நனைத்துக் கொண்டு, பலி பீடத்தை தாண்டி, இதோ பெருமாள் சன்னதியை நெருங்கி விட்டோம். கருடாழ்வாரை சேவித்துக் கொண்டோம். கொஞ்சம் கொஞ்சமாக சன்னதியை நெருங்கிக் கொண்டிருக்கிறோம். மனது கோவிந்தா, கோவிந்தா என ஸ்மரிக்க, கோவிந்தனை நெருங்கி விட்டோம். பச்சை பட்டாடை உடுத்தி அந்த மாதவன் நம்மை உற்றுப் பார்க்கிறான். ‘தோள் கண்டார் தோளே கண்டார்’ என்பது போல அந்த அழகு முகத்தைப் பார்த்த நமக்கு வேறு எதையும் பார்க்கத் தோன்றவில்லை. எப்படியோ உற்சவரையும் சேவித்துக் கொண்டேன். பெருமாளுக்கு காட்டிய தீபாராதனையை ஒத்திக் கொள்ளச் சொல்கிறார் அர்ச்சகர். பிறகு வாழைப்பழ பிரஸாதம், தீர்த்தம், சடாரி எல்லாம் சாதிக்கப்படுகின்றன. வெளியே வந்த பிறகுதான் பெருமாளின் சங்கு, சக்கரங்கள் நம் கண்ணில் படவேயில்லையே? என்று தோன்றியது. மற்றுமொரு வாய்ப்பு வாய்க்காமலா போய் விடும்? பெருமாளின் அந்த அழகு முகம் நிறை கொண்டது என் நெஞ்சினில்.
அமிர்தபுரியில் ஆரத்தி:
ஒரு வேண்டுகோள்: மாதா அமிர்தானந்தமயி மீது நம்பிக்கை இல்லாதவர்கள் தயவு செய்து கடந்து போய் விடுங்கள்.
ஜூலையில் தன் திருமண நாளுக்கு திருப்பதி சென்ற என் அக்கா மகள் செப்டம்பரில் அவளுடைய பிறந்த நாளுக்கு அமிர்தபுரி சென்று மாதா அமிர்தானந்தமயியிடம் ஆசி பெற விரும்பினாள். இப்போதும் நான் அவளோடு சேர்ந்து கொண்டேன். இரண்டு அக்காக்கள், ஒரு அக்கா பெண், ஒரு அக்காவின் பேத்தி இவர்கள் சென்னையிலிருந்து கொச்சிக்கு விமானத்தில் வர, நான் பெங்களூரிலிருந்து விமானம் மூலம் கொச்சியை அடைந்து அவர்களுடன் சேர்ந்து கொண்டேன். அங்கிருந்து இன்னோவா காரி்ல் அமிர்தபுரியை அடைந்தோம்.
என்னுடைய பெரிய அக்கா அடிக்கடி அமிர்தபுரி செல்பவர் என்பதால் அங்கு நிறைய பேர்களைத் தெரியும். எங்களுக்கு ரூம் ஒதுக்கிய பெண் அக்காவை வரவேற்றார். அன்று இரவு தொலைபேசியில் அக்காவை அழைத்து மறுநாள் மாலை அம்மாவிற்கு (அமிர்தானந்தமயி) ஆரத்தி எடுக்க ஒரு ஸ்லாட் இருப்பதாகவும், எங்களில் ஒருவர் அதற்கு வரலாம் என்றும் கூறினார். அமிர்தபுரிக்கு முதல் முறை வந்திருந்த என் கடைசி அக்காவிற்கு அந்த வாய்ப்பை கொடுத்தோம்.
சாதாரணமாக அம்மாவிற்கு ஆரத்தி எடுக்க வேண்டுமென்றால் முன்னாலேயே பதிவு செய்து கொள்ள வேண்டும். இப்படி திடீரென்று கிடைப்பது அதிர்ஷ்டம்தான்.
அடுத்த நாள் முன்பே பதிவு பண்ணி வைத்திருந்த என் அக்கா பெண் அம்மாவிற்கு ஆரத்தி எடுத்தாள். அவர்கள் என்னையும் பதிவு பண்ண சொன்னார்கள். நான் நம்பிக்கை இல்லாமல்தான் பதிவு பண்ணினேன். அதற்கு அடுத்த நாள் காலை ஆரத்திக்கு ஒருவர் தேவைப்படுவதாகவும், என்னால் வர முடியுமா என்றும் தொலைபேசியில் கேட்ட பொழுது ஆச்சரியமாகவும், சந்தோஷமாகவும் இருந்தது.
ஆரத்தி எடுக்கப் போகிறவர்களுக்கு சிறிய பயிற்சி கொடுத்தார்கள். அந்த பயிற்சியின் பொழுதே என்னோடு ஆரத்தி எடுத்த பெண்மணிக்கு உணர்ச்சி வசப்பட்டதால் கைகள் நடுங்கின. ஆரத்தி எடுத்த பொழுது அந்தப் பெண்ணின் கண்களிலிருந்து தாரை தாரையாக கண்ணீர் பெருகியது. எனக்கும் கூட, ஏன் ஆரத்தி எடுத்த அத்தனை பேருக்கும். ஒருவர்கூட அழாமல் இல்லை. அதை அழுகை என்பது தவறு, நம் உள்ளுக்குள் ஏதோ உடைந்து கண்களின் வழியே வழிகிறது என்றுதான் தோன்றுகிறது. ஆரத்தி எடுக்கும் பொழுது நாம் அம்மாவை பார்க்காமல் இருக்கலாம், நம்மை அம்மா பார்த்துக் கொண்டே இருக்கிறாரே, அது எவ்வளவு பெரிய பாக்கியம்! குரு பார்க்க கோடி பாவம் தீரும்.