கணம்தோறும் பிறக்கிறேன் 

Wednesday, March 29, 2023

சேமிப்பு, சிக்கனம்

 சேமிப்பு, சிக்கனம்

சென்ற வாரம் மத்யமரில் கொடுக்கப்பட்ட வாராந்திர டாபிக் சேமிப்பு, சிக்கனம். 

இந்த தலைப்பில் பெரும்பாலானோர் பொருளாதார சிக்கனத்தைப் பற்றி மட்டும் எழுதியிருகிறார்கள். ஆனால் பொருளாதாரத்தை தாண்டி, தண்ணீர், எரி பொருள், மின்சாரம், போன்ற விஷயங்களிலும் சிக்கனத்தை கடை பிடிக்க வேண்டியது அவசியம்.

வீடுகளில் கிணறுகள் இருந்த காலத்தில் பாத்திரம் தேய்க்க, துணி தோய்க்க தண்ணீரை சிக்கனமாகத்தான் செலவு செய்வார்கள். எந்த அளவு தண்ணீர் செலவாகிறதோ அந்த அளவு காசு செலவாகும் என்று கூறுவார்கள். கிணற்றிலிருந்து நாம்தானே நீர் இரைக்க வேண்டும்? மோட்டார் போட்டு, தண்ணீர் இரைத்து, குழாயை திறந்தால் தண்ணீர் கொட்டும் என்னும் நிலை வந்த பிறகு தண்ணீர் சிக்கனம் என்பது இல்லாமல் போய் விட்டது.

குழாயைத் திறந்து வைத்துக் கொண்டு பல் தேய்ப்பது பலர் பழக்கம்(ரயில் பயணங்களிலும் சில பயணிகள் இப்படி நடந்து கொள்வார்கள்). 2015ல் சென்னையில் வெள்ளம் வந்த பொழுது எங்கள் குடியிருப்பில் வெள்ளம் புகுந்து, தரை தளத்தை ஆக்கிரமித்து விட்டது. தரை தளத்து வீடுகளில் இருந்தவர்களில் ஒரு பெங்காலி தந்தைக்கும், மகளுக்கும் எங்கள் வீட்டில் அடைக்கலம் கொடுத்தோம். Water water everywhere, not a drop to drink என்பது போன்ற நிலை. ஒவர்ஹெட் டாங்கில் தண்ணீர் இருந்ததால் குழாயில் தண்ணீர் வந்து கொண்டிருந்தது, மிகவும் ஜாக்கிரதையாக பயன்படுத்திக் கொண்டிருந்தோம். கீழ் வீட்டுக்காரரோ குழாயை திறந்து விட்டுக் கொண்டு பல் தேய்க்கிறார். “ஐயா, தயவு செய்து குழாயை மூடுங்கள், தண்ணீர் சிக்க்னம், தேவை இக்கணம்” என்றதும் அவர்,   “நான் கங்கை ஓடும் பிரதேசத்திலிருந்து வருகிறேன். எங்களுக்கு தண்ணீர் கஷ்டம் என்றால் என்னவென்றே தெரியாது” என்றார். சிக்கனம் என்பது ஒரு நாளில் வந்துவிடாது. பழக வேண்டும். சிலர் குளிக்கும் பொழுது சோப்பு தேய்த்துக் கொள்ளும் பொழுது கூட ஷவரை திறந்து வைத்துக்கொண்டு குளிப்பார்கள்.

எரி வாயு, மின்சாரம் போன்றவற்றை சிக்கனமாக பயன்படுத்த பல குறிப்புகள் வந்துகொண்டிருப்பதால் அவற்றை இங்கே விரிவாக கூறத் தேவையில்லை என நினைக்கிறேன்.

நாம் எல்லோரும் கடைபிடிக்க வேண்டிய இன்னொரு சிக்கனம் வார்த்தை சிக்கனம். வளவளவென்று பேசுகிறவர்களை விட சுருக்கமாக பேசுகிறவர்களுக்கு எப்போதுமே மரியாதை அதிகம். மிகச்சிறந்த உதாரணம் திருக்குறள். எவ்வளவு பெரிய விஷயங்களை இரண்டே அடிகளில் நச்சென்று சொல்லி விடுகிறது! நவீன எழுத்தாளர்களில் சுஜாதாவின் சிறப்பு சின்ன, சின்ன வாக்கியங்கள்.

இவ்வளவு ஏன்? மூச்சை சிக்கனமாக பயன்படுத்துவதன் மூலம் ஆயுளை நீடித்துக்கொள்ள முடியும் என்பதுதானே யோக சாத்திரம். வேக வேகமாக மூச்சு விடுவது மூச்சை விரயம் செய்வதற்கு ஒப்பானது. காமம், கோப வசப்படும்பொழுது மூச்சு விரயமாவதால்தான் அவற்றை கட்டுப்படுத்தச் சொல்கிறார்கள்.

இந்த கட்டுரைக்கு போஸ்ட் ஆப் தி வீக் கிடைத்தது. இதை நான் எழுதிக் கொண்டிருந்தபொழுது யூ டியூபில் எதையோ கேட்டுக் கொண்டிருந்தேன். அப்போது வந்த மிகவும் பொருத்தமான ஒரு விளம்பரம்.