கணம்தோறும் பிறக்கிறேன் 

Friday, December 3, 2021

பெயரில் என்ன இருக்கிறது?

பெயரில் என்ன இருக்கிறது?

ஒரு ரோஜாவை எந்த  பெயரிட்டு  அழைத்தால் என்ன?  அது  ரோஜாவாகத்தனே இருக்கும்  என்னும் ஷேக்ஸ்பியரின் பிரபலமான
வாசகத்தை எல்லோரும் ஒரு முறையாவது மேற்கோள் காட்டாமல்
இருக்க மாட்டோம். ஆனால் பெயர் அவ்வளவு சாதாரணமான விஷயம்
கிடையாது என்பது 18 .3 .12 அன்று 'நீயா நானா'வில் விவாதிக்கப்பட பொழுது
புரிந்தது. ராஜரத்தினம்,  புகழேந்தி  என்ற ஆண் பெயரைக்  கொண்ட  பெயரைக் கொண்ட பெண்களும், சிந்து,தேன்மொழி என்றெல்லாம் 
பெயர் கொண்ட ஆண்களும் விவாதத்தில் கலந்து கொண்டனர்.

பொதுவாக ஆண் பெயெர் கொண்ட பெண்களெல்லாம் தங்கள் பெயரால்
தங்களுக்கு நேர்ந்த அவமானத்தை கூறும் பொழுது அதிகம் உணர்ச்சி
வசப்படாமல் இயல்பாக பேசினார்கள்.மேலும் ஆண் பெயரைக்  கொண்டிருப்பது தங்களுக்கு தன்னம்பிக்கையை வளர்க்கிறது
என்று கூட கூறினார்கள். இதற்க்கு நேர் மாறாக பெண் பெயரைக் கொண்டிருக்கும் ஆண்கள் பேச்சில் கழிவிரக்கமும், கோபமும், தாபமும் 
வெளிப்பட்டன.

ஒரு இளைஞர் தனக்கு பெண் பெயரை வைத்த  தன் பெற்றோர்  மீது  வெறுப்பு  வருகிறது என்றார். மற்றொருவருக்கு பேசும் பொழுது துக்கம் தொண்டையை
அடைத்தது.

சிறப்பு விருந்தினராக வந்திருந்த சாரு நிவேதிதா(இவர்  நீயா  நானாவின்  நிலைய வித்வான்) இப்பொழுது பெயர்கள் தம் அடையாளங்களை இழந்து
விட்டன என்றார். உண்மைதான். முன்பெல்லாம் பெயரை  வைத்து  அவர்  தென் இந்தியரா, வட இந்தியரா என்று  கணிக்க  முடியும்.  ஏன்  தமிழ் நாட்டை  எடுத்துக் கொண்டாலே பெயரை வைத்து அவர் தமிழ் நாட்டின்  எந்த  பகுதியைச்  சார்ந்தவர்,  எந்த  குலத்திர்க்குரியவர்  என்றெல்லாவற்றையும்  அறிந்து கொண்டுவிட முடியும்.

குருசாமி, குருநாதன், சுவாமிநாதன் போன்ற பெயர்களை கொண்டவர்கள் என்றால் அவர்களுக்கு சுவாமி மலை முருகன் குல தெய்வமாக இருக்கும்.
மன்னார்குடியை சேர்ந்தவர்கள் ராஜகோபாலன், விமலா என்றெல்லாம் பெயர்
வைப்பார்கள்.  மாது என்னும் மாத்ருபூதம்,  சுகந்தா/சுகந்தி,  ஜம்புநாதன்,  அகிலா போன்ற பெயர்கள் திருச்சி மாவட்டகாரர்களுக்கு    உரியவை.  சப்த ரிஷி, ஸ்ரீமதி போன்ற பெயர்கள்  லால்குடி  வட்டத்தில்  உண்டு.  காந்திமதி, கோமதி, நெல்லையப்பன் போன்ற பெயர்கள்  நெல்லை  மாவட்டதிற்குரியவை  என்று  சொல்லத் தேவை இல்லை. 

தாங்கள் வைணவர்கள் என்று அப்பட்டமாக வெளிப்படுத்தும் கமலவல்லி, வேதவல்லி, குமுதவல்லி,உப்பிலி, கேசவன்,போன்ற பெயர்களும் மற்றும் ஆராவமுதன், வகுளாபரணன் என்ற அழகான தமிழ் பெயர்களும் போனதெங்கே?

உறவில் ஒரு குழந்தைக்கு இவியான் என்று பெயர். கூகுளில் தேடி வைத்திருக்கிறார்கள். இவியான் என்றால் சிவா என்று பொருளாம். நமக்கு இவியான் என்றால் வைட்டமின் இ மாத்திரைதான் நினைவுக்கு வரும். நிகிதா என்றால்  ரஷ்ய  மொழியில் 'சாந்தி' என்று  பொருளாம், அதனால்  தன்  மகளுக்கு நிகிதா என்று பெயர் வைத்திருப்பதாக எங்கள் நட்பு வட்டத்தில் ஒரு பெண்மணி கூறினார். சாந்தி என்றே வைத்திருக்கலாமே! எந்த ரஷ்யரும் சாந்தி என்று  பெயர்  வைப்பதாக  தெரியவில்லை.  ஏன்   நாம்  வட  இந்திய  பெயர்களை ஸ்வீகரித்திருக்கும்  அளவிற்கு அவர்கள்  செய்வதாக தெரியவில்லை. நாம்தான் நம் அடையாளங்களை தொலைத்து  விட்டு நிற்கிறோம்.

இந்திய பெயர்கள் வெளிநாடுகளில் படும் பாடு...! நான் அரபுநாடுகள் ஒன்றில்  மினிஸ்டரியில் பணிக்கு சேர்ந்த பொழுது உன் பெயர் என்ன என்று கேட்ட என் மேலதிகாரியிடம்,"பானுமதி" என்றதும்,"ஓ டிபிகல்ட்! இந்டியன் நேம்ஸ்" என்றார் அஹமத் பின் அப்துல் காதர் அல் கசானி" என்று பெயர் வைத்துக் கொண்டிருந்த அவர். 

பானுமதியே கஷ்டம் என்றால் கோவிந்தராஜபுரம் கிருஷ்ணமூர்த்தி வெங்கடேஸ்வரன் என்ற என் கணவரின் பெயரை நினைத்துப் பாருங்கள். ஜொவிந்தா ராகா என்பதற்கு மேல் தொடர முடியாமல் கஷ்டப்பட்ட அவர்கள் என் கணவரின் பெயரில் அவர்களுக்கு உச்சரிக்க சுலபமாக இருந்த மூர்த்தி என்பதை மட்டும் எடுத்துக் கொண்டார்கள்.  

இதற்காகவே சில நண்பர்கள் தங்கள் பெயரை சுருக்கிக்கொண்டார்கள். நீலகண்டன் நீல் ஆனதும் , பத்மநாபன் பாடி(Paddy) ஆனதும் ஓகேதான் தண்டபாணி டான் ஆனதுதான் மனதிற்கு கஷ்டமாக இருந்தது.   

எனிவே, ஒரு  ஜோக்கோடு  இதை  முடிக்கலாம்  என்று  நினைக்கிறேன்.  அருணஜடை என்னும் வித்தியாசமான பெயர்  கொண்ட  ஒரு நண்பர்  சொன்ன ஜோக் இது. 
ஒருவனுக்கு முதலில் பிறந்த பெண் குழந்தைக்கு பூஜா என்று பெயர்  வைத்தானாம் , இரண்டாவதாக பிறந்த பெண்ணுக்கு ஆர்த்தி என்று பெயர்  சூட்டி  விட்டான்.  மூன்றாவதாக  பிறந்தது  ஆண் குழந்தை,  என்ன  பெயர் வைக்கலாம்  என்று  நண்பரிடம்  ஆலோசனை  கேட்க,  குறும்புக்கார  அந்த  நண்பன்,  பேசாமல்  குருக்கள்  என்று  வைத்து  விடேன் என்றானாம். 

இது ஒரு மீள் பதிவு. மத்யமரில் உங்கள் பெயர் உங்களுக்கு கொடுக்கப்பட்டதன் காரணம் என்ன? நீங்கள் யாருக்காவது பெயர் வைத்திருக்கிறீர்களா? உங்களுக்கு பிடித்த ஐந்து பெயர்களை எழுதுங்கள் என்றெல்லாம் கேட்டிருந்தார்கள், அப்பொழுது நான் பெயரில் என்ன இருக்கிறது என்னும் தலைப்பில் ஒரு பதிவு எழுதியிருந்தது நினைவுக்கு வந்தது. மத்யமரில் நான் எழுதியது கீழே:

"உனக்கு யார் பானுமதி என்று பெயர் வைத்தார்கள்?" என்று ஒருவர் என்னை கேட்டபொழுது என்னால் பதில் சொல்ல முடியவில்லை. ஏனென்றால் எனக்கு இந்தப் பெயரை வைக்க வேண்டும் என்று யோசித்திருப்பார்களா என்பது சந்தேகம்தான். 

நான் என் வீட்டில் ஏழாவது குழந்தை, ஐந்தாவது பெண், என்னைப் பெற்றது என் அம்மாவுக்கு ஹை ரிஸ்க் டெலிவரி. அம்மா பிழைத்ததே தெய்வ அனுகிரஹம். குழந்தையின் முகத்தையே ஒரு மாதம் கழித்துதான் பார்த்தாளாம். இப்படியிருக்க எனக்கு என்ன பெயர் வைப்பது என்றெல்லாம் யோசித்திருப்பார்களா என்ன?  என் அக்காக்கள் யாராவது அப்போது பிரபலமாக இருந்த பானு என்று அழைத்திருக்க வேண்டும். பள்ளியில் சேர்த்தபொழுது அது பானுமதி ஆகிவிட்டது. வகுப்பில் எப்போதும் இரண்டு மூன்று பானுமதிகள் இருப்போம். 

இப்போது முதல் பாராவின் கேள்விக்கு வரலாம். "உனக்கு யார்  பானுமதி என்று பெயர் வைத்தார்கள்?" என்ற கேள்விக்கு பதில் இல்லாததால் "ஏன்?" என்று எதிர் கேள்வி கேட்டேன் 

"பானுமதி என்பது துரியோதனின் மனைவியின் பெயர், அந்தப் பெயரை வைக்கக்கூடாது" என்றதும் நான்," பானுமதி என்றால் துரியோதனன் மனைவி என்று ஏன் நினைக்க வேண்டும்? பானு என்றால் சூரியன், மதி என்றால் அறிவு, சூரியனைப் போல் பிரகாசிக்கும் அறிவை உடையவள் என்று எடுத்துக் கொள்ளலாமே? அல்லது பானு என்பதை ஒளி என்று கொண்டால் பானுமதி என்பதற்கு ஒளியுடையவள் என்று அர்த்தம் கொள்ளலாம்" என்றேன். அவர் "உடனே அதெப்படி?" என்கிறார்.
"ஸ்ரீமதி என்றால் செல்வம் உடையவள், வசுமதி என்றால் வளம் உடையவள்(பூமாதேவி) என்றெல்லாம் பொருள் கூறுகிறார்கள், அதனால் பானு என்பதை ஒளி என்று கொண்டால் பானுமதி  என்றால் ஒளி உடையவள் என்றுதான் அர்த்தம் கொள்ள வேண்டும்" என்றேன். 

அன்று முதல் எனக்கு என் பெயர் மிகவும் பிடித்து விட்டது. பானுமதி - ஒளியுடையவள் ஆஹா! எத்தனை பொருள் பொதிந்த பெயர்! அதுவும் எப்படிப்பட்ட ஒளி? தான் மாறாமல், தன் ஓளி எதன் மீது படுகிறதோ அந்தப் பொருளை தன் இயல்புக்கு மாற்றும் தன்மை கொண்டதாம் பானு என்னும் ஒளி என்று வேளுக்குடி கிருஷ்ணன் ஒரு முறை கூறினார். என் பெருமை இன்னும் கூடிவிட்டது. 

எங்களுக்கு மகன் பிறந்த பொழுது, என் கணவர் அவருடைய தந்தையின் பெயரான கிரிஷ்ணமூர்த்தியிலிருக்கும் கிருஷ்ணனோடு  சாயி பக்தர்களானதால்  சாய் என்பதை சேர்த்து சாய்கிருஷ்ணன்  என்னும் பெயரை தேர்ந்தெடுத்து விட்டு, வினு என்று கூப்பிடலாம் என்றார். அதற்கு அவர் கூறிய காரணம் வெங்கடேஸ்வரனில் இருக்கும் வி, பானுவில் இருக்கும் னு இரண்டையும் சேர்த்து வினுவாம். என்னிடம் உன் விருப்பம் என்ன? உனக்கு இந்த பெயர் பிடித்திருக்கிறதா? என்ற ஆலோசனை யெல்லாம் கிடையாது. அது எனக்கு கொஞ்சம் வருத்தம்தான். அதை சொல்லிக்கொண்டே இருந்ததால் மகள் பிறந்த பொழுது பெயரை தேர்ந்தெடுக்கும் பொறுப்பை என்னிடமே விட்டு விட்டார். 

எனக்கு பொன்னியின் செல்வனில் வரும் நந்தினி கதாபாத்திரம் மிகவும் பிடிக்கும். அதனால் நந்தினி என்று பெயர் வைக்க விரும்பினேன். ஆனால் நியூமராலஜி கைகொடுக்காததால் சுபாஷிணி என்னும் பெயரை தேர்ந்தெடுத்தேன். சுபாஷிணி என்றால் இனிமையாக பேசுகிறவள் என்று பொருள். அவள் அப்படிதான். மிகவும் தன்மையாகவும்,இனிமையாகவும் பேசுவாள். கோபத்தில் கூட நிதானமிழந்து வார்த்தைகளை கொட்ட மாட்டாள். 

அவளுடைய முதல் மகள் பிறந்தபொழுது அந்த குழந்தைக்கு சாய் ஷிவானி என்ற பெயரை  அவளுடைய மானார் தேர்ந்தெடுத்தார். காரணம் என் மகள் முதல் முதலாக வங்கியில் வேலை கிடைத்து சென்ற ஊர் திருவண்ணாமலை. திருமணமாகி சில மாதங்கள் அங்குதான் இருந்தாள். அதனாலோ என்னவோ என் மகளுக்கு  திருவண்ணாமலை மீது ஒரு தனி பற்று உண்டு.  குழந்தையின் நட்சத்திரம் சிவனுக்குகந்த  திருவாதிரை. எனவே சாய் ஷிவானி! 

என் மகனுக்கு சென்ற வருடம் சியாமளா நவராத்திரியில் பெண் குழந்தை பிறந்ததால் சரஸ்வதியின் பெயரோடு ஸ்ரீ சேர்த்து இருக்க வேண்டும் என்று நினைத்தோம். சரஸ்வதி அஷ்டோத்திரத்தை  படித்த பொழுது ரிதன்யா என்னும் பெயர் எனக்கு பிடித்தது. அதற்கு முன்பே நான் பேத்தியாக இருந்தால் எங்கள் ஊர் தெய்வமான ஹேமாம்பிகா என்னும் பெயரை வைக்க வேண்டும் என்றும், பேரனாக இருந்தால் ஹேமந்த் என்று பெயரிட வேண்டும் என்றும் நினைத்திருந்தேன்.  அக்ஷரா என்னும் பெயர் என் மருமகளின் பெற்றோர்களுக்குப் பிடித்தது. மருமகளின் தேர்வு நவ்யா. ஆக நான் விரும்பிய ஹேமாம்பிகா, சம்பந்திகளின் தேர்வான அக்ஷரா, என்ற இரு பெயர்களோடு மகன் மருமகளின் விருப்பமான நவ்யா என்பதோடு ஸ்ரீ சேர்த்து நவ்யாஸ்ரீ என்று மூன்று பெயர்களிட்டோம். நவ்யாஸ்ரீதான் அஃபிஷியல்!

பிடித்த பெண் பெயர்கள் 
ஹேமா 
பூர்ணா
அபர்ணா 
ராதிகா  

ஆண் பெயர்கள் 
க்ருத்திவாசன் 
வகுளாபரணன் 
ஆராவமுதன் 

        
 
  
      


                                

Monday, November 29, 2021

நயாகரா

நயாகரா


கனடா என்றாலே எல்லோருக்கும் நினைவுக்கு வருவது நயாகரா நீர்வீழ்ச்சி. கடந்த வெள்ளியன்று அங்கு ஒளியலங்காரங்கள் தொடங்க இருப்பதால் வெள்ளியன்று மதியம் அங்கு சென்றால் சூரிய வெளிச்சத்திலும் நயாகராவை பார்த்து பிரமிக்கலாம், இருட்டிய பிறகு ஒளியலங்காரங்களையும் ரசிக்கலாம் என்று நினைத்தோம். ஆனால் வெள்ளியன்று என் அக்கா பேத்திக்கு ஜலதோஷம், லேசான ஜுரம் என்பதால் செல்ல முடியவில்லை, சனிக்கிழமைதான்(27.11.21) செல்ல முடிந்தது. 

நயாகரா நீர்வீழ்ச்சி என்று அழைக்கப்பட்டாலும் ஹார்ஸ் ஷூ ஃபால்ஸ், அமெரிக்கன் ஃபால்ஸ், பிரைடல் வெய்ல் ஃபால்ஸ் என்னும் மூன்று நீர்வீழ்ச்சிகளை கொண்டது. நீர் வரத்து அதிகமாக இருக்கும் நாட்களில் ஒரு வினாடிக்கு 225,000 க்யூபிக் ஃபீட் நீர் விழுமாம். சராசரியாக 85000 கியூபிக் ஃபீட்.  இந்த நீர்நவீழ்ச்சியின் பெரும் பகுதி கனடாவிலும், சிறு பகுதி அமெரிக்காவிலும் இருக்கிறது. இந்த இரு நாடுகளையும் ரெயின்போ பிரிட்ஜ் என்னும் ஒரு பாலம் இணைக்கிறது.  இங்கிருக்கும் நீர்மின் நிலையம் கனடாவின் மின்சார தேவையை பூர்த்தி செய்வதில் பெரும் பங்கு வகிக்கிறது. 

அதுவும் சனியன்று நயாகரா செல்லலாம் என்று காலை பதினோரு மணிக்குத்தான் முடிவெடுத்தோம். எனவே நினைத்தது போல் சீக்கிரம் கிளம்ப முடியவில்லை. நயாகராவை அடைந்த பொழுதே மாலை ஐந்து மணி ஆகி விட்டது. இப்பொழுதெல்லாம் மாலை நாலரைக்கே இருட்டத் தொடங்கி விடுகிறது. ஐந்து மணிக்கு நல்ல இருட்டாகி அங்கு விளக்கு அலங்காரங்கள் ஒளிரத் தொடங்கி விட்டன. அருவிக்கு அருகில் வாண வேடிக்கைகளும் தொடங்கி விட்டன.

அருவியை அருகில் சென்று பார்த்தோம். வழியெங்கும் விளக்கு அலங்காரங்கள், செல்ஃபி எடுத்துக் கொள்ள ஸ்டாண்டுகள். 

 






















சுற்றுலா பயணிகள் அதிகம் வருவதால் அவர்களை கவர்ந்திழுக்கும் பல அம்சங்கள், கேசினோ எனப்படும் சூதாட்ட கேளிக்கை விளையாட்டுகள் நிறைய இருப்பதால் அந்த வீதியே ஜொலிக்கிறது. என்னதான் செயற்கை வெளிச்சத்தில் குளித்தாலும் பகல் வேளையில் பாக்கும் பொழுதுதான் அதன் பிரும்மாண்டத்தை உணர முடியும் என்பது என் மகளின் கருத்து. உணர்ந்தால் உங்களோடு பகிர்வேன்.