கணம்தோறும் பிறக்கிறேன் 

Saturday, February 19, 2022

ரைட்டர் (திரை விமர்சனம்)

 ரைட்டர் (திரை விமர்சனம்)




திருவெறும்பூர் போலீஸ் ஸ்டேஷனில் ரைட்டராக பணியாற்றும் சமுத்திர கனி காவலர்களுக்கு யூனியன் ஏற்படுத்த முயற்சி எடுப்பதால் பனிஷ்மெண்ட் டிரான்ஸ்ஃபரில் சென்னைக்கு மாற்றப்படுகிறார். அங்கு ஒரு ஆராய்ச்சி மாணவன் எந்த காரணமும் இல்லாமல் கைது செய்யப்பட்டு தனியாக ஒரு லாட்ஜில் காவலில் வைக்கப்படுகிறான். சமுத்திர கனி எழுதிக் கொடுக்கும் கிரைம் சீன் உதவியால் அவனை வெளியே விடுவது போல விட்டு, அவன் மீது குற்றத்தை ஏற்றி மடக்கி பிடிக்கிறது போலீஸ். குற்ற உணர்ச்சியால் தவிக்கும் சமுத்திரகனி அவனுக்கு உதவுவதற்காக ஒரு வழக்கறிஞரை நாட, அந்த மாணவனைப் பற்றிய விவரங்கள் தெரிய வருகிறது. போலீஸில் பணியில் இருந்த பொழுது தற்கொலை செய்து கொண்டு இறந்தவர்களைப்பற்றி அவன் ஆராய்ச்சி செய்வதுதான் பிரச்சனைக்கு மூல காரணம். அதோடு தான் செய்யும் செயலின். வீரியம் தெரியாமல் "ஏதாவது ஸ்கூப் கொடுங்கள்" என்று கேட்கும் பத்திரிகை ஆசிரியருக்கு சமுத்திரகனி கொடுக்கும் ஒரு தகவல் எப்படிப்பட்ட விளைவுகளை ஏற்படுத்துகின்றன என்பதை மிகவும் யதார்த்தமாகவும், அதிகார வர்க்கம் நினைத்தால் என்ன வேண்டுமானாலும் செய்ய முடியும் என்பதையும் தீர்மானமாக சொல்லியிருக்கிறார்கள். இந்தப் படத்தில் நாம் பார்க்கும் கதா பாத்திரங்கள் எல்லோரும் நிஜ வாழ்க்கையில் நாம் சந்திப்பவர்கள். ரத்தமும் சதையுமாக நம் முன் உலவுகிறார்கள். 

சமுத்திரகனியின் மற்றொரு முக்கியமான படம். மிகவும் நன்றாக நடித்திருக்கிறார். ஆராய்ச்சி மாணவராக வரும் ஹரிகிருஷ்ணன் கிராமத்திலிருந்து வரும் அப்பாவி இளைஞனை அப்படியே கண்முன் கொண்டு நிறுத்துகிறார். அவர் சகோதரனாக நடித்திருப்பவர், பெண் போலீஸாக வரும் இனியா,  போலீஸ் ஸ்டேஷனிலேயே வசித்துக் கொண்டு அஙகுள்ளவர்களுக்கு எடுபிடி வேலைகள் செய்து கொண்டு வாழும் முன்னாள் கைதியாக வருபவர் எல்லோருமே குறிப்பிடத்தக்க வகையில் தங்கள் பங்கை செய்திருக்கிறார்கள். 

"பிரிட்டிஷ்காரன்  காலத்தில் அரசாங்கத்திற்கு எதிராக யாரும் செயல்பட கூடாது என்பதற்காக தோற்றுவிக்கப்பட்டது காவல்துறை. இன்னும் அப்படியேதான் இருக்கு. இங்கே நீ ஒரு அடியாள், நான் ஒரு அடியாள். இதற்காக இதை விட்டு ஓடக்கூடாது. நமக்கிருக்கும் அதிகாரத்தை வைத்துக் கொண்டு மக்களுக்கு உதவ வேண்டும்" என்று சமுத்திரகனி ஒரு காட்சியில் சொல்கிறார். 

பிரும்மாண்டம் என்ற பெயரில் படாடோபமான செட்டுகள், வெள்ளை வெளேர், சைரஸ் சீரோ கதாநாயகிகள், கையை நீட்டிய மாத்திரத்தில் வில்லன்களை பறந்து போகச் செய்யும் ஹீரோயிசம் இப்படிப்பட்ட படங்களுக்கிடையே யதார்த்தமாக வரும் ரைட்டர் போன்ற படங்களும் வருவது ஆறுதல்.