கணம்தோறும் பிறக்கிறேன் 

Monday, April 26, 2021

சில விமர்சனங்கள்

சில விமர்சனங்கள்

கர்ணன்

பார்க்க வேண்டும் என்று மிகவும் ஆசைப் பட்ட படம் பிரம்மாண்டமான தயாரிப்பு. நடிகர்களின் தேர்வும் சிறப்புதான். அவர்களும் நன்றாகவே நடித்திருக்கிறார்கள். பாடல்கள் சற்று அதிகம் தான் இருந்தாலும் இனிமை. என்ன? கொஞ்சம் அசந்தால் கதாநாயகியின் தோழிகள் கையில் ஒரு தட்டோடு நடனமாட வந்துவிடுகிறார்கள். இத்தனை சிறப்புகள் இருக்கும் இந்த படத்தினை கொஞ்சம் உண்மையாகவும் எடுத்திருந்தால் நன்றாக ரசித்திருக்கலாம் என்ன செய்வது பெரிய ஹீரோக்களை போட்டு படங்கள் எடுக்கும் பொழுது கதைகள் அவர்களுக்கு ஏற்றார் போல் மாற்றப்படுகின்றன. 

பரசுராமரிடம் பாடம் கற்கச் சென்ற கர்ணன் அவரிடம் சாபம் பெற்று திரும்பும் வரை ஒழுங்காக சென்றுகொண்டிருந்த கதை  சுபாங்கி(தேவிகா)யை கர்ணன்(சிவாஜி)  சந்தித்ததும் அவர்கள் பின்னால் சென்று விடுகிறது. காதல் டூயட் கல்யாணம் குழந்தை பிறப்பு என்று கதை பாதை மாறி விடுகிறது. 

கர்ணனும் குந்தியும் சந்திக்கும் இடம் நெகிழ்ச்சி. சிவாஜி நடிப்பதற்கு என்ன நம் கண்களை குளமாக்கி விட்டார். அதேபோல  இந்திரனுக்கு தன் கவச குண்டலங்களை தானமாக கொடுக்கும் இடத்திலும் சிவாஜியின் நடிப்பு சிறப்பு, ஆனால் மாமனாரால் அவமானப் படுத்தப்படும் பொழுது சிங்கம் போல் கர்ஜித்தார், அந்த காட்சியை அந்த காலத்தில் அவருடைய ரசிகர்கள் கைதட்டி ரசித்திருப்பார்கள் இப்பொழுது அரங்கமே கொல்லென்று சிரிக்கிறது. 

என்டிஆர் கொஞ்ச நேரம்தான் வருகிறார் ஆனால் ஆனால் கருத்தைக் கவர்ந்து விடுகிறார்.  "செத்த பாம்பை அடித்து விட்டு நான் அடித்தேன்,நான் அடித்தேன் என்கிறாயே" போன்ற வசனங்கள் ஷார்ப்.

எதிர்பார்ப்புகள் அதிகம் நிறைவேறியது குறைவு

பி.கு.

தனுஷ் நடித்த கர்ணனை பார்க்க முடியாததால்,சிவாஜி நடித்த கர்ணனுக்கு விமர்சனம் எழுதி விட்டேன். ஹி ஹி!

−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−

பரமபதம் விளையாட்டு


கதாநாயகியாக நடித்த நடிகைகளுக்கு வயது ஆக ஆக வாய்ப்புக் குறைகிறது. தங்களை நிலை நிறுத்திக் கொள்ள தங்களுக்கு முக்கியத்துவம் இருக்கும் படங்களில் நடிக்க விரும்புகிறார்கள். அப்படி திரிஷா நடித்திருக்கும் ஒரு படம்தான் பரமபத விளையாட்டு. முதல் பாதியில் ஆங்கிலப் படத்திற்கு இணையாக விறுவிறுப்பாகவும் புத்திசாலித்தனமாகவும் செல்லும் இந்த படம் இரண்டாம் பாதியில் தொப்பென்று கீழே விழுந்து விடுகிறது. படத்தின் குறிப்பிடத்தக்க ஒரு அம்சம் இதுவரை காமெடி நடிகராக இருந்த சாம்ஸ், இந்தப் படத்தில் காமெடி வில்லனாக மாறி இருக்கிறார். 

இடைவேளைக்குப்பிறகு தேவையே இல்லாமல் ஒரு குத்துப்பாட்டோடு ஆரம்பிக்கும் அந்த படம் காட்டில் சுற்றி சுற்றி வருகிறது பெரும்பாலும் சேசிங் என்பதுதான் காட்சிகள் என்பதால் அதை திறமையாக கொண்டு செல்ல முடியாமல் திணறி இருக்கிறார் இயக்குனர் ஒரு அரசியல் படமாக ஆரம்பித்து திரில்லர் படமாக மாறி காட்டிற்குள் காணாமல் போய்விடுகிறது கதை. வில்லன் யார் என்பதையும் யூகிக்க முடிந்து விடுவதால் நமக்கு மிஞ்சுவது அலுப்பும், ஆயாசமும்.