கணம்தோறும் பிறக்கிறேன் 

Monday, January 24, 2022

மசாலா சாட்
ரொம்ப நாட்களாக பார்க்க ஆசைப்பட்ட ராமானுஜன் படத்தை யூ ட்யூபில்  பார்த்தேன்.  ஹூம்! இருந்தாலும் அந்த படத்தை விமர்சிக்க விருப்பம் இல்லை.  

நம் நாட்டில் வாழ்ந்த ஒரு மேதையின்
வாழ்க்கையை திரைப்படமாக எடுக்க முன் வந்திருப்பதை பாராட்டத்தான் வேண்டும். என்றாலும் சில நெருடல்கள். 

ஒரு டாகுமெண்ட்ரி போல எடுக்கப் பட்டிருந்த இந்த படம் தராத ஸ்வாரஸ்யத்தை அவரைப் பற்றிய ஒரு ஆங்கில டாகுமெண்ட்ரி தந்தது.

அந்தக் கால படங்களைப் போல ஆங்கிலேயர்களை கொச்சைத் தமிழில் பேச வைத்திருக்க வேண்டாம்.  

வறுமையில் உழல்வதாக  காட்டப் பட்டிருக்கும் ராமானுஜத்தின் தாயார் (சுஹாசினி) ராமானுஜம் அவர்களின் திருமணத்தின் பொழுது காசு மாலையும், கல் அட்டிகையுமாக காட்சி அளிப்பதும், சில காட்சிகளில்  ஜரிகை வைத்த மாட்சிங் ப்ளவுஸ் அணிந்திருப்பதும் கொஞ்சம் உறுத்துகிறது. பின்னால் இயல்பாக மாறி விடுகிறார். நடிப்பும் இயல்பு. நடித்திருந்த பலரும் தங்கள் பாத்திரத்தை சிறப்பாகவே செய்திருந்தார்கள்.

ராமானுஜத்தின் குல தெய்வமான நாமகிரித் தாயார் ராமானுஜம், அவருடைய தாயார் இரண்டு பேரின் கனவிலும் ஒரே சமயத்தில் தோன்றி அவர் லண்டன் செல்ல உத்தரவு அளித்ததை வெறும் வசனத்தில் கடந்து போகாமல் விஷுவலாக காண்பித்திருக்கலாம், ஏனெனில் அது நிஜமாகவே நடந்த விஷயம். 

கணிதத்தின் பயன்பாடு கட்டிடங்கள் கட்டவும், இயந்திரங்களை படைத்து, இயக்கவும்தான் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். ராமானுஜம் அவர்களின் நம்பர் தியரி சாலை போக்குவரத்திற்கும் பயன்படுகிறது.  நெடுஞ்சாலைகளில் டிராஃபிக் ஜாம் ஏற்படும் பொழுது மாற்று வழி கண்டு பிடிக்க GPSக்கு உதவுகிறது என்பது ஆச்சர்யமாக இருந்தது. 

******†**********************************


தனுஷ் ஐஸ்வர்யா பிரிவு செய்தி வந்தவுடன் இது அவர்களின் சொந்த விஷயம் மற்றவர்களுக்கு கருத்து சொல்ல உரிமை கிடையாது என்று சொல்லிக் கொண்டே யூ ட்யூபில் அத்தனை பேரும் இதையே பேசினார்கள். 

ராஜன் என்னும் சினிமா பிரமுகர் சினிமா நட்சத்திரங்கள் மக்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டாமா? என்று கோபித்தார். சிரிப்பு வந்தது. இப்போதெல்லாம் யார் சினிமா நட்சத்திரங்களை முன் மாதிரியாக கொள்கிறார்கள்? யோசித்துப் பார்த்தால் எம்.ஜி.ஆர்., சிவாஜிக்கு முன்னாலும் சினிமாக்காரர்களுக்கு சமூகத்தில் மரியாதை கிடையாது.  நம் கில்லர்ஜி போல பலரும் அவர்களை கூத்தாடிகள் என்றே குறிப்பிட்டனர்.

இப்போது சினிமா சண்டைக் காட்சிகள் எவ்வளவு தூரம் நிஜம், எவ்வளவு கிராஃபிக்ஸ் என்பது சிறு குழந்தைகளுக்குக் கூடத் தெரியும். அதனால் எம்.ஜி.ஆர்., சிவாஜி காலத்தில் நட்சத்திரங்கள் மீது இருந்த பிரமிப்பு இப்போது கிடையாது. மேலும் இப்போது ஊடகங்கள் நடிகர், நடிகைகளின் அந்தரங்கங்களை படத்தோடு அம்பலப்படுத்தி விடுவதால் அவர்கள் மீது மரியாதையும் கிடையாது. தவிர முன்னோடியாக கொள்ளக்கூடிய பாத்திரங்களையா இன்றைய கதாநாயகர்கள் செய்கிறார்கள்? 

அப்போது கட் அவுட் டிற்கு பால் அபிஷேகம் செய்வது என்னவாம் என்கிறீர்களா? அது ஒரு வகை ஏமாற்று.

**********************************************
கீதா ரங்கன் தயவில் 'வெண்ணிலா'வின் ஒரு கதையை படித்தேன். பெண்ணின் விரக தாபத்தை விலாவாரியாக விவரித்திருக்கும் கதை. கத்தி மேல் நடக்கும் வித்தை. கொஞ்சம் அசந்தாலும் ஆபாசமாகிவிடும் அபாயம். நேர்மையாகவும், திறமையாகவும் கையாண்டிருக்கிறார். 

நம் சமூகத்தில் பெண் எழுத்தாளர்களுக்கும் பல கட்டுப்பாடுகள் உண்டு. ஒரு முறை வாசந்தி தன் கதை ஒன்றில்," அவளின் சட்டை பட்டன்களை அவிழ்த்தான்" என்று எழுதியிருந்ததை படித்த பத்திரிகை ஆசிரியர் ஒருவர் அதிர்ந்து போய் "நோ! நோ! ஒரு பெண் எப்படி இப்படி எழுதலாம்?" என்றாராம். அதற்கு வாசந்தி, "சட்டை பட்டனை அவிழ்க்காமல் எப்படி காதல் பண்ணுவீர்கள்?" என்று கேட்டாராம். இவரோ பல விஷயங்களை அனாயசமாக கடந்து சென்றிருக்கிறார்.

அப்போதெல்லாம் பெண் எழுத்தாளர்கள், "நாங்கள் புடவை கட்டிக் கொள்கிறோம், எங்கள் எழுத்துக்களுக்கு புடவை கட்டி விடாதீர்கள்" என்பார்கள். புடவைக்குப் பின்னால் உணர்வும், மனமும் உண்டு என்பதை நேர்த்தியாக உணர்த்தியிருக்கிறார் வெண்ணிலா. அந்த வகையில் அவரை பாராட்டலாம். 
சுட்டியை இணைத்திருக்கிறேன். கதையை படிப்பதோடு நிறுத்திக் கொள்ளாமல் அதன் பின்னூட்டங்களையும் படியுங்கள்.

https://kanali.in/indira-neelam/


Wednesday, January 19, 2022

குளிரும் நானும்


குளிரும், நானும்


"உங்களுக்கு அந்த குளிர் தாங்குமா? பெங்களூர் குளிரே பொறுக்காதே..?"உங்களுக்கு  அக்டோபரில் கனடா செல்லலாம் என்று நான் முடிவெடுத்ததும் என் மருமகள் கேட்டாள். 

உணமைதான். எனக்கு குளிர் தாங்காது.திருச்சியில் இருந்த பொழுது அந்த குளிருக்கே, "குளிருகிறது.." என்றால் வீட்டில் எல்லோரும் கேலி செய்வார்கள். 

மஸ்கட்டில் டிசம்பர்,ஜனவரியில்தான் குளிரும். பிப்ரவரியில் இரவுகள் தான் குளுமையாக இருக்கும். மார்ச் மாதத்திலிருந்து போர்வை தேவையிருக்காது. ஆஹா! என்ன சுகம்!

பெங்களூர் வந்ததும் வருடம் 365 நாட்களும் வீட்டிற்குள்ளேயே செருப்பு அணிந்து கொள்வேன். சென்னையில் செய்வது போல் தரையில் ஒரு துணியை விரித்து படுத்துக் கொள்ள முடியவில்லையே என்று தாபமாக இருக்கும். ஜனவரியில் , "என்ன கிளைமேட் இது? அனீசியாக இருக்கிறது"என்று புலம்புவேன்.

பல்வேறு காரணங்களால் அக்டோபர் இறுதியிலேயே கனடா வந்து விட்டேன். அப்போது இங்கு 10°C இருந்திருக்கும். ஊரிலிருந்து வந்த இரண்டாம் நாள் என் மகள் மாலையில் கொஞ்சம் நடந்துவிட்டது வரலாம் என்று அழைத்துச் சென்றாள். என்னதான் ஓவர் கோட் அணிந்திருந்தாலும் சிலீர் என்று குளிர் தாக்கியது. 

நவம்பர் மாதத்திலேயே பனி பொழிவு இருந்தது என்றாலும் வீட்டிற்குள் குளிர் தெரியவில்லை.  சுளீர் என்று வெய்யலடித்த ஒரு நாள் நான்,"நல்ல வெய்யில் இருக்கிறதே..? நான் கீழே போய் வெய்யிலில் கொஞ்சம் நடந்து விட்டு வருகிறேன்" என்று வெளியே வந்தேன்" 

வெய்யிலா..? அது பாட்டுக்கு இருந்ததே ஒழிய உடம்பில் உரைத்தால் தானே வம்பு? தவிர சீறும் காற்றில் விரல்கள் மறத்து விடும் போலாயிற்று. ஐந்து நிமிடங்கள் கூட தாக்கு பிடிக்க முடியவில்லை. "இப்போ புரிஞ்சுதா? சொன்னால் கேட்க மாட்ட.. அதனால்தான் நாங்க எதுவும் சொல்லவில்லை. வெய்யிலில் நிற்கணும்னா ஜன்னல் வழியாக வரும் வெய்யிலில் காய்ந்து கொள்" என்றாள். 

என்னிடம் எல்லோரும் "குளிர் எப்படி இருக்கிறது?" என்றால் நான் ஜம்பமாக வீட்டிற்குள் தெரியவில்லை" என்றேன். "அப்படியா சொல்ற? இரு இரு.." என்று இயற்கை நினைத்துக் கொண்டது எனக்குத் தெரியவில்லை.

அப்போதெல்லாம் என் மகள், " குளிர் தொடங்கி விட்டால், லேயர்ஸ் அணிந்து கொள்ள வேண்டும் " "குளிர் தொடங்கி விட்டால் குளித்து விட்டு உடை அணிந்து கொள்வதற்குள் அப்படி குளிரும்.." என்றெல்லாம் சொல்லும் பொழுது "இப்போதே குளிராகத்தானே இருக்கிறது? இன்னும் என்ன குளிர் தொடங்கி விட்டால்..?" என்று நினைத்துக் கொண்டேன். 

என்னுடைய அந்த கேள்விகளுக்கு ஜனவரியில் விடை கிடைத்தது. டெம்பரேச்சர் கிடுகிடுவென்று கீழே இறங்க, கூடவே காற்றும் சேர்ந்து கொள்ள, நான் சினிமாக்களில் வரும் திமிர் பிடித்த பணக்கார மாமியார்கள் போல, எப்போதும் ஒரு ஷாலை போர்த்திக்கொண்டு நடந்தேன். 

அப்போதுதான் பிரும்மரீ பிராணாயாமம் செய்தால் குளிரை உணராமல் இருக்கலாம் என்று எப்போதோ படித்தது நினைவுக்கு வந்தது. யோகா டீச்சராக இருக்கும் எங்கள் உறவினர் ஒருவரிடம் பிரும்மரீ பிராணாயாமம் செய்வதை கேட்டு தெரிந்து கொண்டு செய்ய ஆரம்பித்தேன். ஷால் தேவையாக இல்லை. 

சகோதரிகளின் வீடியோ கான்ஃப்ரன்ஸின் பொழுது, என்ன பானு இன்னிக்கு ஸ்வெட்டர் போட்டுக்கல? குளிர் இல்லையா? என்றதும் நான் பிரும்மரி பிராணாயாமத்தின் மகிமையை அவிழ்த்துவட என் மகள் சிரித்தாள் "இன்றைக்கு சூரியன் இருக்கிறது. சன் வரும் நாட்களில் வீட்டிற்குள் அவ்வளவாக குளிர் தெரியாது. சில நாட்களில் சூரியன் இல்லாமல் இருண்டு கிடக்கும் அந்த நாட்களில் நீ பிரம்மரி பிராணாயாமம் செய்து குளிரை உணர வில்லை என்றால் ஒப்புக்கொள்கிறேன் என்றாள். எப்படியோ குளிர் தெரியாமல் சந்தோஷமாக இருந்தேன். 

இப்படி இருக்க 16ஆம் தேதி ஞாயிறு அன்று மறுநாள் திங்கள் முதல் குழந்தைக்கு பள்ளியில் இன் பெர்சன் வகுப்புகள் துவங்க இருப்பதால் அதற்கான ஏற்பாடுகளை மகள் செய்த பொழுது, மாப்பிள்ளை,"நாளை கடுமையான பனிப்புயலை எதிர்பார்ப்பதால் பள்ளி இயங்குமா? இருக்காதா?  என்பது குறித்து நாளை காலை ஆறு மணிக்கு மெயில் அனுப்புகிறோம் என்று பள்ளியிலிருந்து மெயில் வந்திருப்பதாகக் கூறினார். 

அன்று இரவே பனிப்பொழிவு தொடங்கி விட்டது. காலை எழுந்து பார்த்தால் கடுமையான பனிப்பொழிவு. மரங்கள் மீதெல்லாம் கொத்து கொத்தாக பனிப்படலம். மகள் வீட்டு பால்கனியில் சிறு பனிக்குன்று. எதிரே இரண்டு கார்கள் பனியில் மாட்டிக்கொண்டிருப்பதை பார்க்க முடிந்தது. 20செ.மீட்டரிலிருந்து 30 செ.மீ.வரை பனிப்பொழிவு இருக்கும், மிகவும் அத்தியாவசியம் என்று இருந்தாலே யொழிய பயணம் மேற் கொள்ள வேண்டாம் என்று அரசு அறிவுறுத்தியிருந்தது. சாலையில் போக்குவரத்து இல்லை என்றே கூறலாம். ஓடிக்கொண்டிருந்த ஒன்றிரண்டு வாகனங்களும் மிகவும் மெதுவாகச் சென்றன.

பதினோரு மணி வாக்கில் சற்று நின்றது போலத் தோன்றிய பனிப்பொழிவு மீண்டும் உக்கிரமாகத் தொடங்கியது. அறிவித்திருந்த 30 செ.மீ.யையும் தாண்டி 60 செ.மீ.வரை சென்றதாக செய்திகள் வந்தன. 

எப்படி இருந்தாலும் இவ்வளவு தூரம் வந்துவிட்டு புகைப்படம் எடுக்காமல் இருக்க முடியுமா? அதற்கேற்ற முஸ்தீபுகளோடு சென்று சில புகைப்படங்கள் எடுத்தேன். 

இந்த ஊரில் கொஞ்சம் கடியான விஷயம் ஒன்றன் மேல் ஒன்றாக உடைகள் அணிய வேண்டியிருப்பதும், குப்பையை போட வேண்டும் என்றால் கூட கோட், தலைக்கு குல்லாய், காலில் பூட்ஸ் என்று அணிந்து கொள்ள வேண்டியிருப்பதும்தான். 

இங்கு வந்ததும் தான் இதைப் போன்ற குளிர் தேசங்களில் இருப்பவர்கள் ஏன் தரையில் அமர்வதில்லை? ஏன் டாய்லெட் டிஷ்யூ பேப்பர் பயன்படுத்துகிறார்கள்? ஆண்கள், பெண்கள் அத்தனை பேரும் ஏன் நீண்ட கால் சராய் அணிகிறார்கள்? என்பதெல்லாம் புரிகிறது. வருடத்தில் முக்கால் வாசி நேரம் ஏகப்பட்ட உடைகள் அணிய வேண்டி இருப்பதால்தான் கோடை வந்தவுடன் மினிமம் உடைக்கு வந்து விடுகிறார்கள் போலிருக்கிறது.

திருச்சி வெய்யிலில் பிறந்து வளர்ந்து, மஸ்கட் வெய்யிலில் வாழ்ந்து, சென்னை வெய்யிலில் புழுங்கி, திருவண்ணாமலை வெய்யிலில் கூட சில வருடங்கள் இருந்த, வெய்யில் தவிர வாழ்க்கையில வேற எதுவும் தெரியாமல், வெய்யிலோடு விளையாடி, வெய்யிலோடு உறவாடிய எனக்கு how fortunate are we to born in India! என்று தோன்றுவது நியாயமான விஷயம்தானே? 

எங்கள் அப்பா அடிக்கடி "இந்தியா போல ஒரு இடம் கிடையாது. என்ன இயற்கை வளம்! கன்ட்யூசிவ் கிளைமேட்.. எப்படி இருக்க வேண்டிய தேசம், அரசியல்வாதிகளால் பாழாகிறது" என்பார். அதுதான் நினைவுக்கு வந்தது.

Friday, January 14, 2022

வைகுண்ட ஏகாதசி

வைகுண்ட ஏகாதசி

போகிப் பண்டிகையாகிய இன்றுதான் அதாவது 13.01.2022 தான் வைகுண்ட ஏகாதசி. ஆனால் ஸ்ரீரங்கத்தில் சென்ற ஏகாதசியையே வைகுண்ட ஏகாதசி யாக கொண்டாடி விட்டதால் சிலருக்கு குழப்பம் வந்தது. சென்ற ஏகாதசி குருவாயூர் ஏகாதசி அல்லது கைசிக ஏகாதசி எனப்படும். திருக்குறுங்குடி ஏகாதசி என்றும் சொல்வார்கள்.

நம் நாட்டில் பின்பற்றும் எல்லா கேலண்டர்கள் அல்லது பஞ்சாங்கங்கள் படியும் ஒரு மாதத்திற்கு வளர்பிறையில் ஒன்று, தேய்பிறையில் ஒன்று என இரண்டு ஏகாதசிகள் வரும். மார்கழி மாத வளர்பிறையில் வரும் ஏகாதசியே வைகுண்ட ஏகாதசி. 

ஸ்ரீரங்கத்தை பொறுத்தவரை ஒவ்வொரு மாதமும் ஒரு திருவிழா உண்டு.  அந்த கோவிலின் மிகச் சிறப்பான விழா வைகுண்ட ஏகாதசி. ஏகாதசிக்கு முன்னால் பகல் பத்து என்று பத்து நாட்கள், ஏகாதசிக்கு பின்னர் ராப்பத்து என்று பத்து நாட்கள் என்று மிகவும் விமரிசையாக இருபது நாட்கள் நடக்கும். இந்த வருடம் வைகுண்ட ஏகாதசி மார்கழி மாதத்தின் கடைசி நாளான போகியன்று வருகிறது. அதை கடைபிடித்தால் தை மாதத்தில் வரும் உற்சவம் நடத்துவதில் பிரச்சனை வரும்.

அதனால் கோவில் ஒழுகுமுறைக்காக கார்த்திகை மாதம் வந்த ஏகாதசியையே வைகுண்ட ஏகாதசியாக ஸ்ரீரங்கம் கோவிலில் மட்டும் அனுஷ்டித்து விட்டார்கள். மணவாள மாமுனிகள் செய்த ஏற்பாடாம் இது. பதினெட்டு வருடங்களுக்கு ஒரு முறை இப்படி நிகழும் என்கிறார்கள்.

சித்திரை தொடங்கி பங்குனி வரை வளர்பிறையிலும், தேய்பிறையிலும் வரும் ஏகாதசிகள்

காமதா, பாபமோசனிகா

மோகினி, வரூதினி

நிர்ஜலா, அபரா 

சபனீ, யோகிணி 

காமிகா, புத்திரதா 

பத்மநாபா,  அஜா 

பாபாங்குசா, இந்திரா 

ப்ரபோதினி, ரமா 

மோக்ஷ, உற்பத்தி

புத்ரதா, சபலா

ஜயா, ஷட்திலா

ஆமலகி, விஜயா

சில வருடங்களில் மட்டும் கமலா ஏகாதசி என்று இருபத்தைந்தாக ஒன்றும் வரும்.

ஹிந்து வாக பிறந்த ஒவ்வொருவரும் கண்டிப்பாக அனுஷ்டிக்க வேண்டிய விரதம் ஏகாதசி விரதம் என்று நம்பப்படுகிறது. எட்டு வயது பூர்த்தியானவர் முதல் எண்பது வயது நிறைந்தவர் வரை கடைப்பிடிக்க வேண்டும்.  எந்த நிலையிலும் கடைபிடிப்பதை நிறுத்தி விடக்கூடாது என்று அறிவுறுத்தப்படுகிறது.

இதில் ஒரு ஸ்வாரஸ்யமான விஷயம் வைகுண்ட ஏகாதசி என்று அறியப்படும் ஏகாதசிக்கு மோக்ஷ ஏகாதசி என்றுதான் பெயர். வைகுண்ட ஏகாதசி என்னும் பெயர் பின்னாளில் வந்திருக்கும்.

ஏகாதசி விரதத்தை முறையாக அனுஷ்டித்து முக்தி அடைந்த அரசன் அம்பரீஷன் என்பது பலருக்கும் தெரியும்.

நாங்கள் கார்த்திகை மாத வளர்பிறை ஏகாதசி அன்று கனடாவில் இருக்கும் திருப்பதி வெங்கடாசலபதி கோவிலுக்குச் சென்றிருந்தோம். 

பெயர் என்னவோ திருப்பதி வெங்கடாசலபதி கோயில் என்றிருந்தாலும், அங்கு விநாயகர், முருகன், சிவன், துர்க்கை, நவகிரகங்கள் என எல்லா சன்னதிகளும் இருந்தன. மூலவர் திருப்பதி பெருமாள். அன்று அங்கு ஏதோ சிறப்பு பூஜை இருந்ததால் நல்ல கும்பல். செல்லும் வழியில் பூசை சாமான்கள் என்று தமிழில் பெயர் பலகையோடு கடை கண்ணில் பட்டது. கும்பலாக இருந்ததால் அருகில் சென்று புகைப்படம் எடுக்க முடிவதில்லை.

Tuesday, January 11, 2022

தேடல்

தேடல்

கடந்த இரண்டு வியாழன்களாக ஸ்ரீராம் பொருள்களை மறந்து விட்டு தேடுவதைப் பற்றி எழுதியதை படித்த பொழுது தேடல் என்பது பற்றி என் சிந்தனை ஓடியது. 

வாழ்க்கை என்பதே தேடல்தான். சிறு வயதில் அறிவைத் தேடுகிறோம், பின்னர் வேலை, அதன் பிறகு அல்லது அதனிடையே துணையைத் தேடும் வாலிபம். எதையோ தேடுகிறோம், ஓடுகிறோம்  தேடியது கிடைத்து விட்டால் மகிழ்ச்சி இல்லாவிட்டால் துக்கம், ஏக்கம், பொறாமை போன்ற எதிர்மறை உணர்வுகள். 

சரி அப்படி தேடியது கிடைத்து விட்டால் மட்டும் நின்று விடுகிறோமா? அடுத்த கட்ட தேடல் துவங்குகிறது. அதுதானே வளர்ச்சி. தேடல் நின்று விட்டால் தேங்கல்.  புதுப்புது உணவுகள், உடைகள், மாறும் ஃபேஷன்கள், ரசனைகள் எல்லாமே தேடலின் விளைவுகள்தான். 

ரொம்ப பாடுபட்டு தேடியதை அடைந்த பிறகு மிஞ்சுவது இவ்வளவுதானா? இதற்குதானா இத்தனை கஷ்டப்பட்டோம் என்னும் லேசான ஏமாற்றம். மெட்டீரியல் உலகின் வெற்றியில் இந்த உணர்வு வராதவர்கள் வெகு குறைவு. அதனால்தான் அவர்களில் பலர் ஆன்மீகத்திற்கு திரும்புகிறார்கள்.

ஆன்மீகத் தேடல்கள்தான் புதுப்புது தத்துவங்கள், குருமார்கள். ஆனால் அதன் முடிவு என்னவோ கண்டவர் விண்டிலர்தான். 

ஓடி ஓடி ஓடி ஓடி உள் கலந்த ஜோதியை
நாடி நாடி நாடி நாடி நாட்களும் கடந்து போய்
தேடி தேடி தேடி தேடி மாண்டு போன மாந்தர்கள்
கோடி கோடி கோடி கோடி எண்ணிறந்த கோடியே.
என்பது சித்தர் வாக்கு. 

ரொம்ப சீரியஸாகி விட்டதோ? 
வாட்ஸாப்பில் வந்த ஒரு ஜோக்கோடு முடித்துக் கொள்ளலாம். Thursday, January 6, 2022

படமா? காசா?

 படமா? காசா?

அசோக் நகர் ஆஞ்சநேயர்

ஒவ்வொரு வருடமும் ஹனும ஜெயந்தி அன்று சென்னை அசோக் நகரில் இருக்கும் ஆஞ்சநேயர் கோவிலில் நடைபெறும் லட்சார்ச்சனைக்கு கோவிலுக்கு மிக அருகில் வசிக்கும் என் சகோதரி எங்கள் குடும்ப உறுப்பினர்கள் எல்லோருக்கும் அர்ச்சனை டிக்கெட் வாங்கி அவரவருக்கு தோதான நேரத்திற்கு டோக்கனும் வாங்கி வைத்து விடுவாள். நாங்கள் போய் அர்ச்சனை செய்து விட்டு வருவோம்.  கோவிலில் பிரசாதமாக லட்டு, பூக்கள் தவிர ஒரு ஆஞ்சநேயர் படமும் தருவார்கள். அப்படி என்னிடம் மூன்று படங்கள் சேர்ந்து விட்டன. 

2017 ஆம் வருடம் என்று நினைக்கிறேன். கோவிலுக்கு கிளம்பும் பொழுது, "ஏற்கனவே நம்மிடம் மூன்று படங்கள் இருக்கின்றன, இந்த வருடம் வேறு ஒரு படத்தை கொடுத்தால் என்ன செய்வது? எத்தனை படங்களை வைத்துக் கொள்ள முடியும்?" என்று நினைத்தேன்.

கோவிலில் வழங்கப்பட்ட படங்களில் ஒன்று

அந்த வருடம் எங்கள் சகோதரிகள் எல்லோருக்கும் காலை பத்து மணி ஸ்லாட் டில் புக் பண்ணியிருக்கார் என் அக்கா. அர்ச்சனை முடித்து அவள் வீட்டில் மோர் குழம்பு, பீன்ஸ் பருப்பு உசிலி, சீரக ரசம் என்று சாப்பிட்டு விட்டு கோவிலில் கொடுத்த பையை பிரித்து பார்த்தேன். ஆஞ்சநேயர் படம் இல்லை. 'இந்த வருடம் படத்திற்கு பதிலாக ஆஞ்சநேயர் உருவம் பொறித்த வெள்ளி காசு கொடுத்திருக்கிறார்கள் என்றாள் என் சகோதரி. ஒரு சிறிய ஜிப் லாக் பையில் இருந்த அந்த வெள்ளி காசை "நல்ல வேளை, படம் கொடுக்கவில்லை" என்ற நினைப்போடு மீண்டும் பைக்குகள் வைத்தேன்.

வீட்டிற்கு வந்ததும், ஸ்வாமி அலமாரியில் வைப்பதற்காக பையில் கை விட்டால் வெள்ளி காசு இல்லை. பையை கவிழ்த்து பொறுமையாக ஒவ்வொன்றாக பிரித்துப் பார்த்தேன். ம்ஹும்! என் கைப்பையிலும் தேடினேன். இல்லை. என் சகோதரிக்கு ஃபோன் பண்ணி அவள் வீட்டில் இருக்கிறதா? என்று கேட்டேன். அங்கும் இல்லை என்று கூறி விட்டாள். 

"படமாக வந்தால் என்ன செய்வது என்று யோசித்தாயே..? வெள்ளிக் காசு என்றால் மட்டும் வரவேற்பாயா? உன் வீட்டிற்கு நான் ஏன் வர வேண்டும்?" என்று ஆஞ்சநேயர் அந்தர்த்யானமாகி விட்டாரோ? 

அதற்குப் பிறகு ஊர் மாற்றம், குடும்பத்தில் சில இழப்புகள், கொரோனா போன்ற காரணங்களால் ஹனும ஜெயந்தி விழாவில் கலந்து கொள்ள முடியவில்லை. இந்த வருடம் கனடா வந்து விட்டேன். பார்க்கலாம் அடுத்த வருடமாவது ஹனும ஜெயந்தி பூஜையில் கலந்து கொள்ள அசோக் நகர் ஆஞ்சநேயர் அருள் வேண்டும். 🙏🙏


Tuesday, January 4, 2022

திருவெம்பாவை - 20

திருவெம்பாவை - 20


போற்றி அருளுக நின் ஆதியாம் பாதமலர்
போற்றி அருளுக நின் அந்தமாம் செந்தளிர்கள்
போற்றி எல்லா உயிர்க்கும் தோற்றமாம் பொற்பாதம்
போற்றி எல்லா உயிர்க்கும் போகமாம் பூங்கழல்கள்
போற்றி எல்லா உயிர்க்கும் ஈறாம்
இணையடிகள்
போற்றி மால் நான்முகனும் காணாத புண்டரீகம்
போற்றி யாம் உய்ய ஆட்கொண்டருளும் பொன்மலர்கள்
போற்றி யாம் மார்கழி நீராடேலோர் எம்பாவாய்.

பாவை நோன்பை முடிக்கும் பெண்கள் சிவபெருமானை போற்றி வணங்குவதாக அமைந்திருக்கிறது திருவெம்பாவையின் கடைசி பாடல்.

அனைத்திற்கும் மூலமான மலர்ப் பாதங்களை போற்றுகிறோம்.
அனைத்திற்கும் முடிவான செம்மை பொருந்திய தளிர் பாதங்களை போற்றுகிறோம்.
எல்லா உயிர்களின் எதிலிருந்து தோன்றுமோ அந்த பொற் பாதங்களை  போற்றுகிறோம்.
இவ்வுலகில் உள்ள உயிர்களும் அனுபவிக்கும் போகங்களாக விளங்கும் கழலணிந்த மலர் பாதங்களை போற்றுகிறோம். எல்லா உயிர்களின் முடிவாக விளங்கும் பாதங்களை போற்றுகிறோம்.
திருமாலும், நான்முகனான பிரம்மனும் காண முடியாத தாமரைப் பாதங்களை போற்றுகிறோம்.
நாங்கள் உய்யும் பொருட்டு எங்களை ஆட்கொண்டு அருளும் பொற்பாதங்களை வணங்கி மார்கழி நீராடுகிறோம். 

இத்துடன் திருவெம்பாவை முற்றுப்பெறுகிறது. திருச்சிற்றம்பலம்.

Monday, January 3, 2022

திருவெம்பாவை - 19

திருவெம்பாவை - 19

உங்கையிற் பிள்ளை உனக்கே அடைக்கலமென்று
அங்கு அப்பழஞ் சொற் புதுக்குமெம் அச்சத்தால்
எங்கள் பெருமான் உனக்கொன்று உரைப்போம் கேள்
எம் கொங்கை நின் அன்பரல்லாதோர் தோள் சேரற்க
எம் கை உனக்கல்லாது எப்பணியும் செய்யற்க
கங்குல் பகலெங்கண் மற்றொன்றும் காணற்க
இங்கு இப்பரிசே எமக்கு எம்கோன் நல்குதியேல்
எங்கெழிலன் ஞாயிறு எமக்கேலோர் எம்பாவாய்.

பாவை நோன்பை நிறைவு செய்யும் பெண்கள் சிவ பெருமானிடம் தங்கள் கோரிக்கையை வைக்கிறார்கள். பெண்களுக்கு திருமணம் செய்து கொடுக்கும் பொழுது, அவள் கையை பிடித்து மாப்பிள்ளையாக வரும் ஆண் மகனிடம், "இனி இந்தப் பெண் உன்னுடைமை" என்று ஒப்படைப்பது காலம் காலமாக இருந்து வரும் பழக்கம்.  அதை நினைத்தாலே எங்களுக்கு அச்சமாக இருக்கிறது. எங்கள் பெருமானே உன்னிடம் நாங்கள் ஒன்று சொல்ல விரும்புகிறோம், கேட்பாயாக. நாங்கள் ஒரு சிவ பக்தனுக்கு மனைவியாகி அவனால் தழுவப் படுவதையே விரும்புகிறோம். எங்கள் கரங்கள் சிவத்தொண்டிலேயே ஈடுபட வேண்டும். இரவும், பகலும் எம் கண்கள் உன்னையே தரிசிக்க வேண்டும். இந்த பரிசை மட்டும் எங்களுக்கு நீ தந்து விட்டால் சூரியன் எந்த திசையில் உதித்தாலும் எங்களுக்கு கவலை இல்லை. 

பாவை நோன்பு நோர்ப்பது நல்ல மண வாழ்க்கை அமைய வேண்டும் என்பதற்காகத்தான். அதற்காக  யாரோ ஒருவனை மணந்து கொள்வதில் இந்த பெண்களுக்கு விருப்பமில்லை என்பதை 'உன்கையிற் பிள்ளை உனக்கே அடைக்கலம் எனும் அங்கு அப்பழஞ்சொற் புதுக்கும் எம் அச்சத்தால்' என்னும் வரிகளும், இறைத்தொண்டு வாய்த்து விட்டால் வேறு எதுவும் பொருட்டில்லை என்பதை இறுதி வரிகளும் தெளிவு படுத்துகின்றன. திருவெம்பாவையின் மகுடமாக விளங்கும் பாடல் இது.