ஜன கண மன
ஆசிரியர் - மாலன்
புஸ்தகா வெளியீடு
எண்பதுகளில் மாலன் அவர்கள் சாவியில் தொடராக எழுதிய நாவல். மகாத்மா காந்தி சுடப்பட்ட நிகழ்ச்சியை சுவையான நாவலாக்கியிருக்கிறார். அந்த துயர சம்பவம் நடந்ததற்கு அரசின் மெத்தனம் எப்படி காரணமாக இருந்திருக்கிறது என்று கதையின் முடிவில் உணர்கிறோம்.
இந்தக் கதையின் ஒரே கற்பனை கதாபாத்திரம் ரமணன் என்னும் போலீஸ் அதிகாரி. மகாத்மா சுட்டுக் கொல்லப்படுவதாக கனவு காண்கிறான் ரமணன். அவனுடைய கனவுகள் பலித்த அனுபவம் அவனுக்கு இருந்ததால், அந்தக் கொலையை தடுக்க வேண்டும் என்று முயற்சிக்கிறான். ஆனால் அவன் பரிகசிக்கப்பட்டு புறக்கணிக்கப் படுகிறான். காந்தி கொல்லப்படுகிறார்.
ஆனால் மாலன் சொல்ல வந்த விஷயம் இதற்குப் பின்னால் இருந்த அரசியல். பிரிட்டிஷ் ஓவர்சீஸ் ஏர்வேஸ் கார்ப்பரேஷன் என்னும் இங்கிலாந்து அரசுக்கு சொந்தமான விமான கம்பெனிக்கு பாகிஸ்தானிய அரசாங்கம் கொடுத்த செக் திரும்பி வந்து விடுகிறது. கஜானாவோ காலி. அரசை நடத்த பணம் வேண்டுமே? என்ன செய்யலாம்? என்று யோசித்தவருக்கு இந்தியா பாகிஸ்தானுக்கு தர வேண்டிய 55 கோடி ரூபாயை கேட்கிறார்.
"அந்த 55 கோடியை பாகிஸ்தானுக்கு உடனே தந்துவிட வேண்டும், அது அவர்கள் பணம், அதை வைத்துக் கொள்ள நமக்கு எந்தவித தார்மீக உரிமையும் இல்லை" என்னும் காந்தி, அந்தப் பணம் திருப்பித் தரப்படும்வரை உண்ணாவிரதமிருக்கப் போவதாக அறிவிக்கிறார். பணம் தராமல் இருப்பதற்கான காரணத்தை சர்தார் பட்டேல் விளக்கியும் காந்தி அதை ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லை. அவருடைய உடல் நலத்தை கருத்தில் கொண்டு பணத்தை கொடுத்து விடலாம் என்று நேருவும், பட்டேலும் முடிவு செய்கிறார்கள். அதற்குப் பிறகு நடந்த பிரார்த்தனை கூட்டத்தில்தான் அவர் சுட்டுக் கொல்லப் படுகிறார்.
காந்தியின் பேச்சைக் கேட்டு ஒத்துழையாமை இயக்கத்தில் கலந்து கொண்டு, சிறைக்குச் சென்ற நாதுராம் கோட்ஸே என்னும் இளைஞனுக்கும், அவன் தோழர்களுக்கும் காந்தியின் இந்த செயல் ஆத்திரமூட்டுகிறது. அவரைக் கொல்ல முடிவு செய்கிறார்கள், திட்டம் தீட்டுகிறார்கள், செயல் படுத்துகிறார்கள். முதல் முறை அவர்கள் திட்டம் சொதப்பியபோதே நிர்வாகம் கொஞ்சம் விழிப்போடு இருந்திருந்தால் காந்தியை காப்பாற்றியிருக்கலாம், ஆனால் அரசாங்கத்தின் மெத்தனத்தால் இரண்டாம் முறை அவர்கள் தங்கள் எண்ணத்தை நிறைவேற்றிக் கொண்டு விட்டார்கள். காந்தியை கொன்றது கோட்ஸே அல்ல, அந்தக் கூட்டம் அல்ல, அரசாங்கம், அதன் மெத்தனம் என்று கோபமாகவும், வருத்தமாகவும் குறிப்பிட்டிருக்கிறார்.
நாவல் விறுவிறுப்பாக செல்கிறது. பெரும்பாலான அத்தியாயங்கள் அந்தாதி முறையில் அதாவது முதல் அத்தியாயம் முடியும் வார்த்தையில் அடுத்த அத்தியாயம் தொடங்கும் வண்ணம் அமைக்கப்பட்டிருப்பது ரசனை. நடு நிலைமையில் நின்று ஒரு பார்வையாளராக நிகழ்ச்சிகளை விவரித்திருப்பதால் காந்தியை வானளாவ உயர்த்தவும் இல்லை, கோட்ஸேயை கீழே தள்ளி மிதிக்கவும் இல்லை. தன் முன்னுரையில் காந்தியையும், கோட்ஸேயையும் சமமாகவே கூறுகிறார்.
//தங்கள் மனத்துக்குச் சரி என்று பட்டவைகளை எத்தனை எதிர்ப்புக்கும், இகழ்ச்சிக்கும், உயிருக்கும்கூட அஞ்சாமல் பகிரங்கமாகச் சொல்கிற நேர்மை இருவரிடத்தும் இருந்தது. காந்தி பிரம்மச்சரியத்தை வற்புறுத்தினார். கோட்சேயும் மிக எளிய ஆடைகளையே அணிந்தார். காந்தி தனக்கென்று எதுவும் சொத்து வைத்துக்கொள்ளவில்லை. கோட்சே தனக்கு உரிமையான சொத்துகளையும் உறவினர்களுக்கும், மற்றவர்களுக்கும் விட்டுக் கொடுத்தார். இருவரும் சந்தேகத்துக்கு அப்பாற்பட்ட தேசபக்தர்கள். ஒரு கோணத்தில் கோட்சே, காந்தியின் கானல்' பிம்பமாக இருந்தான். மேதமைக்கும், பைத்தியக்காரத்தனத்துக்கும் ஒரு நூலிழைதான் வித்தியாசம். ஒரு கொலைகாரனுக்கும், அகிம்சைவாதிக்கும் வித்தியாசம் அதுவே.// என்ற வரிகள் மாலனின் நேர்மைக்கும், தைரியத்திற்கும் சான்று.
இந்தக் கதைக்காக பல விஷயங்களை திரட்டியிருக்கும் மாலன் அவற்றை சரியாக பயன்படுத்தியிருக்கிறார். கோட்ஸே மர்ரும் அவன் கூட்டாளிகளின் பின்புலம், தங்கள் நோக்கத்தை நிறைவேற்ற அவர்கள் திட்டமிட்டவிதம், அவர்கள் தூக்கிலிடப்பட்டதும் கழுத்து எலும்பு முறிந்து உடனே ஆப்தே இறந்து போனதும், அவ்வாறில்லாமல் கொஞ்சம் கொஞ்சமாக நிதானமாக 15 நிமிடங்களில் கோட்ஸே உயிர் விட்டதையும் கூட விடவில்லை. மேலும் தன்னுடைய அஸ்தி கங்கையில் கரைக்கப்படக் கூடதென்றும், இப்போது பாகிஸ்தானில் ஓடிக்கொண்டிருக்கும் சிந்து நதி இந்தியாவிற்கு மீண்டும் கொண்டுவரப்பட்டு, அதில்தான் கரைக்கப்படவேண்டுமென்று கூறியுள்ளதால் இந்தக் கதை எழுதப்பட்ட காலம் வரை அது கரைக்கப்படவில்லை என்னும் தகவல்கள் பிரமிப்பூட்டுகின்றன.
சரித்திர கதை எழுதுவதே கடினம். அதிலும் சமீப காலத்தில் நடந்த ஒரு நிகழ்வை, கதையாக்க திறமை அதிகம் வேண்டும். திறமையோடு மட்டுமல்ல, நேர்மையோடும் இதை அணுகியிருக்கும் திரு.மாலன், கடைசியில் காந்தியின் தத்துவங்கள் விஞ்ஞானப் பூர்வமானதா? நம்பிக்கைகள் ந்டைமுறை சாத்தியமா இல்லையா? என்பதை நாம்தான் யோசிக்க வேண்டும் என்கிறார்.
புஸ்தகாவில் கிடைக்கிறது. அவசியம் படிக்க வேண்டிய புத்தகம்.

No comments:
Post a Comment