கணம்தோறும் பிறக்கிறேன் 

Sunday, February 7, 2021

சித்திரமும்...

சித்திரமும்...

எனக்கும் நுண் கலைகளுக்கும் வெகு தூரம். அதுவும் ட்ராயிங்..?சுத்தம்!  பள்ளி நாட்களில் ட்ராயிங் வகுப்புகளில் பென்சில் சீவியே நேரத்தை ஓட்டுவேன். வரைய வேண்டியவைகளை எங்கள் வீட்டிற்கு பக்கத்தில் இருந்த ராதா என்னும் அக்கா வரைந்து கொடுப்பார். அவர் ஊர் மாறி மதுரைக்குச் சென்றதும் என் அக்காவிடம் கெஞ்சிக் கூத்தாடி வரைந்து கொள்வேன். சயின்ஸ் பரீட்சையில் படம் வரைந்து பாகங்களைக்குறி என்னும்  கேள்விகளை தவிர்க்கப் பார்ப்பேன். என் நினைவில் நானே வரைந்த முதல்படம் முதுகெலும்பின் படம். 

எனக்கு குழந்தைகள் பிறந்ததும்,"இவர்கள் பள்ளியில் ப்ராஜக்ட் பண்ண சொன்னால் என்ன செய்வது?" என்று கவலை வந்தது. ஆனால் என் குழந்தைகள் இரண்டு பேருமே நன்றாக வரைந்து என் கவலையைத் தீர்த்தார்கள். 

இந்த லட்சணத்தில் நான் போடும் கோலம் எப்படி இருக்கும்? ஒரு முறை நான் மஸ்கட் போய் விட்டு திரும்பியவுடன் என் வீட்டில் வேலை செய்த பெண்மணி,"பொண்ணு நல்லா கோலம் போடுதம்மா.." என்றாள். அதோடு நிறுத்திக் கொண்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும், "நீ நல்லாவே போட மாட்ட.." என்று உண்மையைக்கூறி என்னை நோகடித்தாள்.கொஞ்சம் கொஞ்சமாக கோலம் போடுவதிலும் என் திறமையை வளர்த்துக் கொண்டேன். 

இவை நான் போட்ட ரங்கோலி, நீர் மேல் கோலம்,மற்றும் மாக்கோலம் 

இந்த வருடம் கொலு பொம்மையில் வைத்திருந்த வெங்கடாஜலபதி,பத்மாவதி தாயாரின் பொம்மைகள் கலர் மங்கியிருப்பதாக தோன்றியதால், அதை பெயிண்ட் பண்ணி வைத்தேன். பார்த்தவர்கள் அழகாக இருப்பதாக கூறினார்கள். 

சில நாட்களுக்கு முன்பு என் மகன் ஒரு மண் பானையில் தயிர் வாங்கி வந்தான். தயிர் தீர்ந்ததும் அதிலேயே மீண்டும் தயிர் தோய்க்க முயற்சி செய்தோம். இந்த பெங்களூர் குளிரில் அதில் தயிர் சரியாக தோயவில்லை. அழகாக இருந்த அந்த குட்டிப் பானையை தூக்கிப் போட மனமில்லை. அதில் பெயிண்ட் பண்ணி பூ ஜாடியாக பயன் படுத்தலாம் என்று தோன்றியது. எனக்கு தெரிந்த வகையில்  அதை கொஞ்சம் சிம்பிளாக பெயிண்ட் பண்ணினேன். எப்படி இருக்கிறது சொல்லுங்கள்.