கணம்தோறும் பிறக்கிறேன் 

Showing posts with label ஆடிப்பெருக்கு. Show all posts
Showing posts with label ஆடிப்பெருக்கு. Show all posts

Sunday, August 11, 2024

ஆடிப் பெருக்கும் ஆதி ரங்கநாதரும்

 

ஆடிப் பெருக்கும் 

ஆதி ரங்கநாதரும்

 

ஸ்ரீரங்கபட்ணம், நிமிஷாம்பாள் கோயில்கள்


ஸ்ரீரங்கபட்டணம் பாலத்திலிருந்து காவேரி

சென்ற வாரம் சகோதரிகளுடன் பேசிக்கொண்டிருந்த பொழுது ஆடிப்பெருக்கை பற்றி நினைவு கூர்ந்தோம். திருச்சியில் வசித்தவர்களுக்கு ஆடிப்பெருக்கு ஒரு மறக்க முடியாத கொண்டாட்டம். பேசி முடித்த பொழுது “அப்போதெல்லாம் காவேரிக்குச் சென்றோம், இப்போது எங்கே போவது?” என்று ஏக்கத்தோடு முடித்தோம்.


எனக்கு, நாம் ஏன் ஸ்ரீரெங்கப்பட்டிணம் செல்லக்கூடாது? என்று தோன்றியது. என் மகனிடம் சொன்ன பொழுது, “பார்க்கலாம்..” என்றான். ஆடிப்பெருக்கு சனிக்கிழமை வந்ததால் மகன், மருமகள் இருவருக்கும் அலுவலகம் விடுமுறைதான். மருமகளின் பெற்றோரும் வருவதாக சொன்னார்கள். கலந்த சாதம் பிடிக்காத மகன் வெல்லசாதம், புளியஞ்சாதம், தயிர்சாதத்திற்கு தடா போட்டு விட்டதால் எதுவும் எடுத்துக் கொள்ளாமல் கிளம்பினோம்.


சனிக்கிழமை காலை எட்டு மணிக்கு கிளம்ப வேண்டும் என்று திட்டம். ஆனால் அப்படி இப்படி 8:45 ஆகி விட்டது. வழியில் அன்று பா.ஜ.க. ஏற்பாடு செய்திருந்த பாத யாத்திரை தொடங்கும் இடத்தில் ஏகப்பட்ட கார்கள். வேகமாக செல்ல முடியவில்லை. ஒரு வழியாக நீந்தி நெரிசலை கடந்து பாக சாலாவில் பகல் உணவுக்காக நிறுத்தினோம். நாங்கள் கேட்ட அக்கி ரொட்டி, நீர் தோசை எதுவுமே இல்லை. பகாளாபாத் காலை உணவாம்!! வேறு வழியில்லாமல் வழக்கமான இட்லி, தோசை, பூரிதான். என் மகன் கேட்ட மைசூர் மசாலா தோசையை வெஜிடெபிள் ஸ்பிரிங்க் ரோல் போல கொடுத்து அவனை ஏமாற்றதிற்கு உள்ளாக்கினார்கள். காபி நன்றாகத்தான் இருந்தது. அதை கொண்டு வந்த டம்ப்ளரை ஒரு சின்ன கிண்ணத்தில்(அதுதான் டபராவாம்) வைத்து கொண்டு வந்தார்கள். அதற்கு பக்கத்தில் இருந்த சென்னபட்ணா விற்பனை அங்காடியில் ஒரு குட்டி ஷாப்பிங் முடித்துக்கொண்டு ஸ்ரீரங்கப்பட்ணம் நோக்கி விரைந்தோம்.


நாம் ஸ்ரீரெங்கப்பட்டிணம் என்றாலும் உள்ளூர்வாசிகள் சிரங்கப்பட்ணம் என்கிறார்கள். தென்னிந்திய பாணியில் அமைந்திருக்கும் கோவில். சனிக்கிழமை என்பதாலோ என்னவோ ஓரளவு கும்பல் இருந்தது. ஆனால் தேங்காமல், நகரும் வரிசை. கோவில் ரொம்ப பெரியதும் இல்லை, சிறியதும் இல்லை, மீடியம் சைஸ். கொடிமரம் அமைந்திருக்கும் இடம் வித்தியாசமாக முற்றம் போல் திறந்தவெளி அருகில் பெரிய வட்ட வடிவ தூண்கள். பெரிய துவார பாலகர்களை பார்த்து பயந்த என் பேத்தி, “வொய் ஆங்க்ரி ஃபேஸ்?” என்றாள்.


 


கருவறையில் ஆதிசேஷன் மீது வலது கையை மடக்கி மலர்ந்த முகத்தோடு சயனித்திருக்கிறார். சாளகிராம விக்கிரகம் என்றார் பட்டாசாரியார். காலடியில் மகாலட்சுமியும், பூமா தேவியும். உள்சுற்றில் தனி சன்னதிகளில் லட்சுமி நரசிம்மர், யானையின் மீது கை வைத்து ஆசிர்வதித்தபடி அழகான கரி வரதர், கிருஷ்ணர் காட்சியளிக்கிறார்கள். வலதுபுற பிரகாரத்தில் பெருமாளின் பாதம். பிரகாரம் முடியும் இடத்தில் திருப்பதி வெங்கடேஸ பெருமாள், எதிரே ஆஞ்சநேயர் சன்னிதிகள். கொடிமரத்திற்கு அருகில் வணங்கி வெளியே வந்தோம். இரண்டு வாரங்களுக்கு முன்பு, திருவண்ணாமலைக்கு அருகில் இருக்கும் ஆதி ரங்கம் சென்றும் பிரும்மாணடமான ரங்கநாதரை தரிசித்தேன், இப்போது இந்த ஆதி ரங்கன்! அவன் அருள்தான்.


வெளியே பரப்பியிருந்த கடைகளில் ஒன்றில், ஸ்ரீரங்கத்தில் கொள்ளை விலை சொன்ன கல் சட்டி, சகாயமாக கிடைத்தது. பல வருடங்களாக தேடிக் கொண்டிருந்த மாக்கல் சொப்புகளும் கிடைத்தன. பானு ஹேப்பி!


கோவிலுக்கு அருகில் திப்பு சுல்தான் சமாதி இருக்கிறதாம். அங்கே செல்லவில்லை. காவேரிக்கு செல்ல விரும்பி எப்படி செல்வது என்று கேட்டபொழுது, “காவேரியில் தண்ணீர் அதிகமாக செல்வதால் அங்கு மக்களை அனுமதிப்பதில்லை, பாலத்திலிருந்து பாருங்கள்” என்றார்கள். பார்த்துவிட்டு திப்புசுல்தான் அரண்மனை கம் மியூசியம் சென்றோம்.


அரண்மனை என்றதும் பாஹூபலி, பொன்னியின் செல்வன் ரேஞ்சுக்கு கற்பனை செய்து கொண்ட எனக்கு கொஞ்சம் ஏமாற்றமாகத்தான் இருந்தது. திப்புவின் கோடைகால வாசஸ்தலமாம். சுவர்களில் ஹைதர் அலி, மற்றும் திப்பு சுல்தான் கலந்து கொண்ட போர்களின் காட்சிகள் வரையப்பட்டுள்ளன. பெரும்பாலான படங்களில் அவர் ஒரு ரோஜாவை முகர்ந்தபடி இருக்கிறார். மரத்தாலான பால்கனிகள். மரத்தாலான மாடிப்படிகள் கீழ்தளத்தில் மறைவாக இருக்கிறதாம். எங்கே என்று கண்டுபிடிக்க முடியவில்லை.






 

திப்பு சுல்தான் கால வாள், கத்தி, அவர் சிரங்கப்பட்ண கோவிலுக்கு வழங்கிய வெள்ளி கிண்ணங்கள், பிரிட்டிஷ் ராணுவ மெடல்கள், திப்புவின் உடை, அவர் கால ஃபர்னிட்சர்கள் வெளியே அவர் காலத்து பீரங்கி முதலியவை காணக்கிடைக்கின்றன.


திப்புவால் ஸ்ரீரங்கநாதர்
 கோவிலுக்கு வழங்கப்பட்ட வெள்ளி கிண்ணங்கள்
திப்பு சுல்தான் பயன்படுத்திய வாள்

திப்பு சுல்தான் கால மரச்சாமான்கள்





ஈட்டி, சுருள் கத்தி போன்றவை

 

அருங்காட்சியகத்தின்

 வாசலில் கல் உருண்டைகள்

வெளியே வந்து பார்த்தால், காரின் இரண்டு புற கண்ணாடிகளிலும் இரண்டு உணவகங்களின் விசிட்டிங் கார்ட். அவற்றில் சுக் சாகர் என்ற பெயர் இருந்த உண்வகத்திற்குச் சென்றோம். வாயில் வைக்க வழங்காத உணவை விழுங்கி விட்டு, நிமிஷாம்பாள் கோவிலுக்குச் சென்றோம்.


சின்ன கோவில்தான். வழியெங்கும் காய்கறிகள் விற்றுக் கொண்டிருந்தார்கள். இங்கேயும் கும்பல் இருந்தாலும், தேங்காமல் நகர்ந்து கொண்டேயிருந்தது. சௌந்தர்யமே உருக்கொண்ட அம்மன். சிரித்த முகம். இவளிடம் நாம் செய்து கொள்ளும் பிரார்த்தனைகளை நிமிஷத்தில் நிறைவேற்றித் தருவதால் நிமிஷாம்பாள் என்ற பெயராம்.


அம்மன் சன்னதியை அடுத்து சிவ பெருமான், லக்ஷ்மி நாராயணர் சன்னதிகள். வணங்கி வெளியே வருகிறோம். பிராகாரம் துவங்கும் இடத்தில் சூரிய பகவான், அவருக்கு நேர் எதிரே விநாயகர், பிரகாரம் முடியும் இடத்தில் ஆஞ்சனேயர். வணங்கி வெளியே வருகிறோம்.


 விநாயகர்,அம்பாள், சிவ பெருமான், மஹாவிஷ்ணு, சூரிய பகவான் என்று பஞ்ச மூர்த்திகளையும் வழிபடும் பஞ்சாயாதன வழிபாட்டு முறையில் அமைந்திருக்கும் கோவில்.



வெளியே வந்தால் கரை புரண்டோடும் காவேரி. படித்துறையும் கண்ணில் பட்டது, ஆனால் அங்கே செல்லக் கூடாது என்று பாதையை அடைத்து வைத்திருந்தார்கள். காவேரிக் கரையில் அமைந்திருக்கும் கோவில். பல நாட்களாக செல்ல வேண்டும் என்று நினைத்திருந்த கோவிலை தரிசிக்க முடிந்ததில் மிக்க மகிழ்ச்சியோடு வீடு திரும்பினோம்