கணம்தோறும் பிறக்கிறேன் 

Wednesday, July 20, 2022

வாஷி (மலையாள திரைப்படம்)

வாஷி 

(மலையாள திரைப்படம்)


மலையாளத்தில் வாஷி என்றால் பிடிவாதம் என்று பொருள்.(அப்படித்தானே கீதா?)

இளம் வக்கீல்களான எபின் மாத்யூ
(டொவினோ தாமஸ்),  மது(கீர்த்தி சுரேஷ்) இருவரும் வெற்றிகரமான வக்கீல்களாக தங்களை நிலை நிறுத்திக் கொள்ள பாடுபடுகிறார்கள். அவர்களுடைய வெல்விஷர் மூலம் ஒரே அலுவலகத்தை இருவரும் பகிர்ந்து கொள்ளும் இருவருக்குமிடையே காதல் பூக்கிறது. 

சாராயக்கடை நடத்தும், அரசியல் செல்வாக்குள்ள சகோதரியின் கணவர் மூலம் எபினுக்கு பப்ளிக் பிராக்ஸிக்யூட்டர் பதவி கிடைக்கிறது. 

டொவினோ தாமஸ் பப்ளிக் பிராக்ஸிக்யூட்டராக வாதாடும் முதல் கேஸிலேயே அவருக்கு எதிராக அவருடைய மனைவியாகிவிட்ட கீர்த்தி சுரேஷ். இருவருக்குமே தங்களை நிலை நிறுத்திக் கொள்ள இது ஒரு முக்கியமான கேஸ். குற்றம் சாட்டப்பட்ட ஆணை காப்பாற்ற கீர்த்தி சுரேஷ் முயல, பாதிக்கப்பட்ட பெண்ணின் சார்பாக டொவினோ தாமஸ்.  இந்த வழக்கு சம்பவங்கள் அவர்கள் வாழ்க்கையையும் பாதித்து, இளம் தம்பதிகளான அவர்கள் தனித்தனியே உறங்கும் அளவிற்குச் செல்கிறது. கேஸில் யார் ஜெயித்தார்கள்? அவர்கள் வாழ்க்கை என்னவானது? என்பதையெல்லாம் மிகையில்லாமல், இயல்பாக, சுவாரஸ்யமாக சொல்லியிருக்கும் படம். 

கடைசியில் தன் வாதத்தை தொகுத்து வழங்கும் கீர்த்தி சுரேஷ்  எல்லா படங்களையும் போல உடைந்து போய் அழுது தன் வாதத்தை முடிக்கப் போகிறார் என்று நினைத்தால்.. அப்படியெல்லாம் இல்லை. 

நோ ஹீரோயிசம், நோ மெலோ டிராமா, நோ வயலென்ஸ், நோ டூயட், நோ தனி காமெடி டிராக்‌.

கட்டுக்கோப்பான திரைக்கதை, இயல்பான காட்சிகள், வசனங்கள் மற்றும் நடிப்பு.  நிச்சயமாக ஒரு முறை குடும்பத்தோடு பார்க்கலாம். 
Available in Netflix.