கணம்தோறும் பிறக்கிறேன் 

Wednesday, September 1, 2021

மசாலா சாட்

மசாலா சாட் 


கம்சன் தன் தங்கை தேவகிக்கு பிறக்கும் எட்டாவது குழந்தையால் தன் உயிருக்கு ஆபத்து என தெரிந்தவுடன் கணவன் ,மனைவி இருவரையும் சிறையில் அடைத்தான்...*

இவர்களுக்கு  குழந்தை பிறக்கும் சமயம், ஒரு கழுதையை சிறை வாசலில் கட்டி வைத்தான்.சிறைக்காவலர்களை அவன் நம்பவில்லை.கழுதைக்கு நுகரும் சக்தி மிக அதிகம்..குழந்தை பிறந்ததும் கத்த துவங்கி விடும்.கம்சன் வந்து கொன்று விடுவான்.இப்படி ஏழு குழந்தைகள் இறந்தன..*

எட்டாவது குழந்தையாக கிருஷ்ணர் பிறக்கிறார் ..உடனே தேவகி கணவன் வசுதேவன்...தயவு செய்து கத்தி விடாதே என கழுதை காலில் விழுந்து கெஞ்சினான்..கழுதையும் கத்தவில்லை..கிருஷ்ணர் அவதாரம் நிகழ்ந்தது

எனவேதான் காரியம் ஆகனும்னா கழுதையானாலும் காலை பிடி என்ற பழமொழி வந்தது..!!*

கர்நாடகாவில் அமிர்தாபுரத்து அமிர்தேஷ்வரான கோவிலில் வெளிச்சுவரில் வசுதேவர் கழுதை காலில் விழும் சிற்பம் உள்ளது.

மேற்படி செய்தி வாட்ஸாப்பில் வந்தது. 

ஜென்மாஷ்டமிக்காக என் மாப்பிள்ளையும், பேத்தியும் பாடியிருக்கும் கிருஷ்ணாஷ்டகம் 


ஞாயிறன்று மதிய உணவருந்திய பின் ஐஸ் க்ரீம் சாப்பிட்டால் நன்றாக இருக்கும் என்று எனக்கு மட்டுமல்ல, என் மருமகளுக்கும் தோன்ற ஸ்விக்கியில் ஐஸ் க்ரீம் ஆர்டர் கொடுத்தாள். ஐஸ்க்ரீமோடு ஒரு சிறிய பாட்டில் கோக்க கோலா, ஒரு பார் சாக்லேட், நாலு பலூன்கள் எல்லாம் வந்தன. அன்று ஸ்விக்கிக்கு பிறந்த நாளாம், அதனால் இந்த எக்ஸ்ட்ரா பிட்டிங்ஸ். 


நூறாவது நாள் படம் வெளியான பொழுது நான் திருச்சியில் இருந்தேன். அந்தப் படத்திற்கு சென்றபொழுது(சிவாலயா காம்ப்ளெக்ஸ்) இயக்குனர் மணிவண்ணன் ரசிகர்கள்,"நூறாவது நாள் படத்திற்கு இன்று நூறாவது நாள் என்று இனிப்பு வழங்கியது நினைவிற்கு வந்தது.  

'யவனிகா என்னும் சுஜாதாவின் கதை தொடராக விகடனில் வந்ததை சேகரித்து பைண்ட் பண்ணிய புத்தகம் கிடைத்தது. அப்பொழுது விகடன் குட்டியாக இருந்திருக்கிறது. எந்த வருடத்திலிருந்து இந்த பெரிய சைஸுக்கு மாறியது என்று நினைவில் இல்லை. அதில் ஒரு குட்டி கதை. 

ஒரு காக்கை மரத்தின் உச்சிக்கிளையில் எந்த வேலையும் செய்யாமல் ஒரு நாள் முழுவதும்  அமர்ந்திருந்தது. அதை பார்த்த ஒரு குட்டி முயல்,"நானும் உன்னைப் போல எந்த வேலையும் செய்யாமல் அமர்ந்திருக்கட்டுமா?" என்று கேட்டது. அதற்கு காகமும் "சரி" என்றது. அந்த முயல் குட்டி மரத்தின் அடியில் பேசாமல் உட்கார்ந்திருந்தது. திடீரென்று எங்கிருந்தோ வந்த ஒரு நரி அந்த முயலை கவ்விக் கொண்டு போய் விட்டது. மாரல் ஆஃப் தி ஸ்டோரி: எந்த வேலையும் செய்யாமல் சும்மா உட்கார்ந்திருக்க வேண்டுமென்றால் நாம் ரொம்ப ரொம்ப உயரத்தில் இருக்க வேண்டும்.   

வெட்டியாக ஒரு கேள்வி:

உணவின் பெயரைக் கொண்ட உணவகங்களை குறிப்பிடுங்கள் பார்க்கலாம் உதாரணம் 'தலப்பாகட்டி பிரியாணி'   

சந்திக்கலாம். 







👇