கணம்தோறும் பிறக்கிறேன் 

Sunday, August 15, 2021

சேமிப்பு

சேமிப்பு


சேமிப்பு என்பது நம் ரத்தத்திலேயே உள்ள ஒரு விஷயம். 90களில் உலகமே மிகப் பெரிய பொருளாதார சரிவை சந்தித்த பொழுது, இந்தியா மட்டும் காப்பாற்ற்ப் பட்டதற்கு நம்முடைய சேமிக்கும் பழக்கம்தான் காரணமாக இருந்து வந்தது. 

ஊதாரித்தனத்தை கண்டித்தும், சேமிப்பை வலியுறுத்தியும் விதம் விதமான கதைகளும், பாடல்களும் சிறு வயது முதற்கொண்டே நமக்கு கற்றுக் கொடுக்கப் பட்டிருக்கின்றன. அவற்றுள் பிரதானமானது 

ஆனா முதலில் அதிகம் செலவானால் 
மானம் இழந்து மதிகெட்டு போனதிசை 
எல்லார்க்கும் கள்ளனாய் ஏழ்பிறப்பும் தீயனாய்  
நல்லாருக்கும் பொல்லனாம் நாடு 

என்னும் ஒளவையாரின் நல்வழி வெண்பா. அதைப் போலவே கம்ப ராமாயணத்தில் இறுதியில் கலக்கமுற்று நிற்கும் ராவணன் நிலையை "கடன் பட்டார் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தன்" என்று கடன் பட்டவர்களோடு இலங்கேஸ்வரனை ஒப்பிட்டு பேசியிருப்பதிலிருந்தே கடன் வாங்குவது எத்தனை தவறு என்று புரிய வைத்திருக்கிறார்கள். 

நம் பெரியவர்கள் சிறு துளி பெரு வெள்ளம் என்பார்கள். எங்கள் பாட்டி அடிக்கடி,"ஒண்ணொன்னா சேர்த்தா காசா? ஒருமிக்க சேர்த்தா காசா?" என்று கேட்பார். காசை சேர்ப்பது பற்றி நிறைய பேர்கள், நிறைய விஷயங்கள் எழுதி விட்டார்கள். நான் சேமிப்பின் அடுத்த கட்டத்தைப்பற்றி பேச விரும்புகிறேன். 

பேச்சிலும், எழுத்திலும் சிக்கனத்தை கடைபிடிப்பது நமக்கு மட்டுமல்ல நம் பேச்சை கேட்பவர்களுக்கும், படிப்பவர்களுக்கும் கூட நிலம் பயக்கும். திருக்குறளின் பெருமை என்ன? சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல்தானே?  மற்றவர்கள் ஒரு பாராவில் எழுதும் விஷயத்தை ராஜாஜி ஒரே வரியில் சொல்லி விடுவார் என்பது அவருடைய பெருமைகளில் ஒன்று. 

நாம் எல்லோரும் கண்டிப்பாக செய்ய வேண்டியது, நம் சக்தியை வீணாக்காமல் இருத்தல். நம்முடைய எனர்ஜி ஒன்பது துவாரங்கள் வழியே மிகவும் பொறுப்பற்ற முறையில் நம்மால் வீணடிக்கப் படுகிறது. அதை நெறி படுத்தவும், சேமிக்கவும்தான் நம்முடைய மதம் உண்ணா நோன்பு, மௌன விரதம் போன்றவற்றை வலியுறுத்துகிறது. 

எந்த புலனை சிக்கனமாக பயன்படுத்துகிறோமோ அந்த புலன் தன்னுடைய வீர்யத்தை இழக்காது. மஹாபாரதத்தில் தன்னுடைய கண்களை கட்டிக்கொண்டதால் காந்தாரியின் பார்வைக்கு மிகுந்த தீட்சண்யம் உண்டாகிவிடுகிறது. அதனால்தான் தன்னுடைய மகனான துரியோதனனின் உடலை தான் பார்ப்பதன் மூலம் வஜ்ஜிரம் போல் உறுதியாக்குகிறாள். 

மூச்சு பயிற்சிகளில் கற்றுக் கொடுப்பது என்ன? நிதானமான மூச்சு!
ஒருவன் தன வாழ் நாளில் இவ்வளவு மூச்சுதான் விட வேண்டும் என்று இருக்கும், பிராணாயாமம் போன்ற பயிற்சிகளின் மூலம் நமக்கென்று வழங்கப்பட்டிருக்கும் மூச்சை வைத்துக் கொண்டே அதிக நாட்கள் வாழ முடியும். உதாரணமாக நீங்கள் ஒரு நாளைக்கு நூறு முறை ஸ்வாசிக்கிறீர்கள் என்றால் அதை எண்பதாக உங்களால் குறைக்க முடியும் என்னும் பொழுது நீங்கள் ஒரு நாளைக்கு இருபது மூச்சுகளை சேமிக்கிறீர்கள்,அதற்கேற்றார் போல் உங்கள் ஆயுள் நீட்டிக்கப்படும்.  கோபப்படும் பொழுதும், காம வசப்படும் பொழுதும் மூச்சு தாறுமாறாக போவதால் அவற்றை குறைக்க வேண்டும் என்கிறார்கள்.  இதற்காகத்தான் நம் நாட்டில் ஆரோக்கியமான வாழ்விற்கு நாளிரண்டு, வாரம் இரண்டு, மாதம், இரண்டு, வருடம் இரண்டு என்ற பழக்கத்தை பின்பற்ற வேண்டும் என்று சொல்லி வைத்தார்கள். 

அதாவது ஒரு நாளைக்கு இரண்டு முறை மலம் கழிக்க வேண்டும், வாரத்திற்கு இரண்டு முறை எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும், மாதத்திற்கு இரண்டு முறைதான் தாம்பத்ய கொள்ள வேண்டும், வருடத்திற்கு இரண்டு முறை வயிற்றை சுத்தம் செய்து கொள்ள வேண்டும். 

நம் மதத்தை பொறுத்த வரை நாம் இந்த பிறவியில் வாழ்வதற்கு தேவையான செல்வத்தை சேர்ப்பதுஎவ்வளவு முக்கியமோ, அவ்வளவு முக்கியம் அடுத்த பிறவிக்கான புண்ணியங்களை தேடுவதும். அதையும் நாம் இப்போதே சேர்க்க வேண்டும். 

பெரியாழ்வாரின் சரித்திரத்தில் வரும் ஒரு சுவையான சம்பவம் பொற்கிழி அறுத்தல். பெரியாழ்வார் அவதரித்தது பாண்டிய நாடு. அவர் வாழ்ந்த காலத்தில் பாண்டிய நாட்டை ஆண்ட மன்னன் ஒரு முறை நகர் வலம் வந்த பொழுது,வடக்கிலிருந்து வந்த பைராகி ஒருவர் ஒரு பாடலை பாடிக் கொண்டு செல்கிறார். அதில், "இரவிற்கான உணவை பகலிலேயே தயார் செய்து கொள்ள வேண்டும், மழை காலத்திற்கு தேவையான உணவை வெய்யில் காலத்திலேயே தேடிக்கொள்ள வேணும், முதுமைக்கு தேவையான  செல்வத்தை இளமையிலேயே சம்பாதித்துக் கொள்ள வேண்டும். அடுத்த பிறவியில் சுகத்தை பெறுவதற்கு இந்த பிறவியியிலேயே புண்ணியத்தை சம்பாதித்துக் கொள்ள வேண்டும்" என்று பொருள்பட அமைந்திருக்கிறது. அதைக் கேட்ட அரசனுக்கு மற்ற விஷயங்கள் புரிந்தாலும், அடுத்த பிறவிக்கான புண்ணியத்தை இந்த ஜென்மத்திலேயே எப்படி சேர்த்துக் கொள்வது என்பதில் சந்தேகம் வர, அதற்கான வழியை சொல்பவர்க்கு பரிசாக  வழங்குவதற்காக பொற்காசுகளை ஒரு மூட்டையாக கட்டி, சரியான விடை சொல்பவருக்கு அது பரிசாக வழங்கப்படும் என்று அறிவிக்கிறான். அதை பெரியாழ்வார் சரியான விடை கூறி பெற்றுக் கொண்டார் என்று கதை செல்லும். இங்கே விஷயம், அடுத்த பிறவிக்கான புண்ணியத்தை இந்த பிறவியிலேயே தேடிக் கொள்ள வேண்டும் என்பதுதான். 

அந்த புண்ணியத்தை எப்படி சேர்ப்பது என்று திருமூலர் மிகவும் சுலபமாக வழி காட்டுகிறார்.
யாவர்க்குமாம் இறைவனுக்கொரு பச்சிலை 
யாவர்க்குமாம் பசுவிற்கொரு வாயுறை 
யாவர்க்குமாம் உண்ணும் உணவில் ஒரு கவளம் 
யாவர்க்குமாம் இனிய வார்த்தை கூறுதல் 
எவ்வளவு எளிய முறை! தினசரி கடவுளுக்கு ஒரு அருகம் புல்லோ, துளசி தளமோ, வில்வ தளமோ சாற்றலாம். பசுவிற்கு ஒரு கையளவு புல் கொடுக்கலாம், (இங்கே பசு என்பதை கால்நடை என்று கொண்டு ஏதாவது ரூ விலங்கிற்கு உணவளிக்கலாம்), பெரிய அளவில் அன்னதானம் செய்ய வேண்டும் என்பதில்லை, நாம் சாப்பிடும் சாப்பாட்டில் ஒரு கவளத்தை யாருக்காவது தரலாம், இவை எதுவுமே செய்ய முடியாதென்றால் இனிமையாக பேசலாம் என்கிறார். செய்ய முடியாதா என்ன? 

சில வாரங்களுக்கு முன்பு மத்யமரில் சேமிப்பு என்பதை பற்றி எழுதச் சொல்லியிருந்தார்கள். மற்றவர்கள் ஆர்.டி., இன்சூரன்ஸ், நகைச்சீட்டு என்பவை பற்றி எழுதிய பொழுது நான் சேமிப்பை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல விரும்பி இந்த கட்டுரையை எழுதினேன். குறைவான பேர்களே வாசித்திருந்தார்கள் ஆனாலும் POTW( Post of the week) கிடைத்தது.