கணம்தோறும் பிறக்கிறேன் 

Friday, April 26, 2019

விளக்கெண்ணெய் வைபவம்


விளக்கெண்ணெய் வைபவம்


எங்கள் காலத்தில், கோடை விடுமுறை என்றால் ஒரு விஷயத்திற்கு யாரும் தப்ப முடியாது. அது எண்ணெய் குடித்தல். விடுமுறைக்கு கிராமத்திற்கு சென்றாலும் சரி, இருக்கும் இடத்திலேயே இருந்தாலும் சரி, ஒரு நாள் விளக்கெண்ணெய் கொடுக்காமல் விட மாட்டார்கள்.

ஒரு நல்ல நாள் பார்த்து(நிஜமாகத்தான்) அன்று எண்ணெய் கொடுக்கலாம் என்று முடிவு செய்வார்கள். மாமா திருக்காட்டுப்பள்ளியிலிருந்து அதற்கான சாமான்கள் வாங்கி வரச்செல்வார். நாங்கள் சாமான்கள் விற்கும் கடை திறந்திருக்க கூடாது, என்று சாமியிடம் வேண்டிக் கொள்வோம். ஏனோ சாமி ஒரு முறை கூட எங்கள் வேண்டுதலுக்கு செவி சாய்த்ததில்லை.

எண்ணெய் கொடுப்பதற்கு முதல் நாள் எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும். மறு நாள் எங்களை எழுப்பி, பல் தேய்த்து விட்டு வரச் சொல்வார்கள். நோ காபி. எண்ணையில் சேர்க்க வேண்டிய கஷாயம் அதற்குள் ரெடியாகியிருக்கும். அதில் சதகுப்பை என்று ஒன்று சேர்ப்பார்கள் என்று தெரியும். அதன் நாற்றம் சகிக்காது. அதைத் தவிர வேறு சில பொருள்களும் சேர்ப்பார்கள். கஷாயம், எண்ணெய் இவைகளை ஸ்வாமிக்கு முன் வைத்து விட்டு, பின் முற்றத்திற்கு கொண்டு வருவாள் அம்மா. உடன் மாமா, மாமிகளும் நார்த்தங்காய் சகிதம் வருவார்கள். எங்களோடு, மாமா குழந்தைகள், அத்தை குழந்தைகள் எல்லோரும் உண்டு.

முதல் போணியை மாமா பையன் ராமகிருஷ்ணன் செய்வான், அடுத்தது நான், பிறகு எங்கள் மூன்றாவது அக்கா. பிறகு மாமாக்கள் மகள்கள். நாங்களெல்லாம் சமர்த்து குழந்தைகள். அதிகம் படுத்தாமல் குடித்து விடுவோம். கொஞ்சம் உவ்வே என்றால் உடனே, "ஊம்ம், நார்த்தங்காயை சாப்பிடு" என்பார்கள்.  எண்ணெய்  குடித்து விட்டு, படுத்துக் கொள்ளக் கூடாது. குதிக்கச் சொல்வார்கள். நாலைந்து முறை வடவண்டை தாழ்வார திண்ணையில் ஏறி கீழே குதிப்போம்,மாமாவின் பெரிய பையன் சம்பத், எங்கள் பெரிய அக்கா போன்றவர்கள் கடகடவென்று குடித்து விட்டு,வாந்தி எடுப்பார்கள். அவர்களுக்கு மீண்டும் வழங்கப்படும்.  

அடுத்த லாட் படுத்தல் லாட். வாந்தி எடுப்பது, முற்றத்தை சுற்றி ஓடுவது, அழுவது, போன்ற அலப்பறைகள் அரங்கேறும். எங்கள் அத்தை குழந்தைகளுக்கு எங்கள் அம்மாவிடம் பயம் உண்டு என்றாலும், ரகளை பண்ணுவார்கள். அதிகம் படுத்துவது அத்தை பையன் கிருஷ்ணன், மற்றும் எங்கள் அண்ணா. பயங்கரமாக அலறி, குடிக்க முடியாது என்று ஓடுவார்கள், மாமாவும், அம்மாவும் விசிறி கட்டை சகிதம் துரத்துவார்கள்.

இரண்டாவது அக்கா, கடைசி அக்கா போன்றவர்கள் ஓட மாட்டார்கள், அழுவார்கள், ஒவ்வொரு மடக்கு முழுங்கிய பிறகும் வாந்தியெடுக்க முயலுவார்கள், யாராவது ஒருவர் அவர்களின் முதுகை தடவி, சரி செய்வார்கள்.

ஒரு வழியாக குடித்து முடித்ததும் சிறுவர்கள் எதிரே இருக்கும் தென்னந் தோப்பிற்கு விரட்டப் படுவார்கள்.  ஒன்பது மணிக்கு சூடாக காபி. பதினோரு மணிக்கு பருப்புத் துவையலோடு ஜீரக ரசம் சாதம். நோ மோர் சாதம்.  இதனாலேயே ஜீரக ரசம், பருப்புத் துவையல் என்றால் அப்போதெல்லாம் பிடிக்காது. எத்தனை முறை வயிற்றை காலி செய்தோம் என்று கணக்கு வேறு சொல்ல வேண்டும். மதியம் மூன்று மணிக்கு மேல் எட்டு முறை ஆகி விட்டது  என்றால் குளிக்கலாம்.

சும்மா சொல்லக்கூடாது, குளித்த பிறகு நிஜமாகவே உடல் லேசானது போல் ஒரு உணர்வு வரும்.

நாங்கள் பத்தாம் வகுப்பு படிக்கும் பொழுது ஒரு முறை எங்களுக்கு விளக்கெண்ணெய் கொடுக்க ஏற்பாடு செய்தார்கள். "வீட்டிற்கு விலக்கான சமயத்தில் எண்ணெய் குடிக்க கூடாது" என்று நான் என் அத்தைப் பெண்ணிடம் கூற, அவள்,"அப்படியா? நான் வீட்டில் இல்லை", என்று ஒதுங்க,அத்தை அவளை,"இந்தா உனக்கு எப்போ நாள் என்று எனக்கு தெரியும், யார் கிட்ட பொய் சொல்ற?' என்று உள்ளே இழுத்தது ஒரு கிளை கதை.